Friday, September 13, 2024

பழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக தட்டிய அனுர

மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த யாழ் மாவட்டத்திற்கான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் வலுவானதொரு இளைஞர் அணி தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேபோல, எங்களுக்குச் செவிமடுக்கவும், எங்களுடன் உரையாடவும் இந்த இடத்தில் கூடியிருக்கிற உங்களனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனுமதியையும் கோருகின்றேன்…

இந்தச் செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தலொன்று நடைபெறவுள்ளதென்பதை நாமனைவரும் அறிவோம்… பிரசார நடவடிக்கைகளுக்காக எஞ்சியிருப்பது இரு வாரங்கள் எனப்படும் குறுகிய காலம் மட்டுமே… இந்தப் பிரதேசங்களின் தேர்தல் களம் தென்பகுதி அளவிற்கு சூடுபிடித்துக் காணப்படவில்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்…

எனினும், இந்த 21 ஆம் திகதி தேர்தலில் தெரிந்தெடுக்கப்படவிருப்பது முழு நாட்டுக்கும் தேவைப்படும் ஒரு தலைமைத்துவம்… உங்களுடைய வாழ்க்கைக்கும், உங்களுடைய எதிர்காலத்துக்கும் இந்த செப்டெம்பர் 21 இல் நீங்கள் எடுக்கப் போகும் தீர்மானமானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்… நீங்கள் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவைத் தோற்கடிக்க வாக்களித்திருந்தீர்கள்… எனினும், அவர் தோல்வியடையவில்லை… 2015 இல் நீங்கள் பெருவாரியாக மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்திருந்தது தெரிகிறது… எனினும், அவரது ஐந்து வருட கால ஆட்சியில் நாடு பாரிய சரிவுநிலைக்குத் தள்ளப்பட்டது… 2015 - 19 கால ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவிருந்தார்… அந்தக் காலகட்டத்தில் சஜித் பிரேமதாச அமைச்சரவை அமைச்சராகவிருந்தார்… அந்தத் தலைவர்கள் வடக்குக்கு மட்டுமல்ல தெற்கிற்கு அளித்த வாக்குறுதிகளையும் அலட்சியம் செய்து, மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

மக்களை ஏமாற்றும் இந்த அரசியலை நிறுத்தவே நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்… எங்கள் நாட்டுக்கு பாரியதொரு சமூக மாற்றமொன்று அவசியம்… அரசியல் மாற்றமொன்று அவசியம்… பொருளாதார ரீதியிலான மாற்றமொன்று அவசியம்… இன்று இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த மாற்றத்தை வேண்டி நிற்கிறார்கள்… யாழ்ப்பாண மக்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்… மாற்றமொன்றிட்காக முன்னிற்கும் தேசிய மக்கள் சக்தியை தெரிந்தெடுப்பதா…. அல்லது பழைய பாதையிலேயே பயணத்தைத் தொடர நினைக்கும் சஜித் அல்லது ரணிலை தெரிந்தெடுப்பதா… நீங்கள் எதனைத் தெரிந்தெடுக்கப் போகின்றீர்கள்… பழைய பாதையையா? அல்லது புதிய பாதையையா? புதிய பாதையை!...

சரி… நான் உங்களுக்கு பழைய பாதை மற்றும் புதிய பாதைக்கிடையிலான வேறுபாடுகள் சிலவற்றைக் கூறுகிறேன்… பழைய பாதை தான் இனவாதத்தை தூண்டிவிடும் பாதை… உங்களுக்குத் தெரியும் ராஜபக்சவின் ஆட்சி இனவாதத்தின் ஆழத்திற்கே சென்றிருந்தது… அந்த ராஜபக்ச முகாம் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது.. அதுதான் இலங்கையின் இனவாத முகாம்… அந்த மொட்டுக் கட்சியில் இருந்தோர் இன்று எங்குள்ளனர்? மொட்டுக் கட்சியின் பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்கவுடன்… மொட்டுக் கட்சியின் இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவுடன்… மொட்டுக் கட்சியின் சிறியளவிலானோர் நாமல் ராஜபக்சவுடன்… அப்படித் தானே… அந்த நாமல் ராஜபக்சவின் இனவாத முகாம் இன்று மூன்றாகப் பிரிந்துள்ளது.. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பத்து வருடங்கள் அமைச்சராகவிருந்த…. கோட்டாபயவின் அரசாங்கத்தில் இரண்டரை வருடங்கள் அமைச்சராகவிருந்த… மஹிந்தவின் கட்சியின் தவிசாளராகவிருந்த ஜீ எல் பீரிஸ் தற்போது சஜித்துடன் இருக்கிறார்…. அங்கு புதிதாக என்ன இருக்கிறது? மொட்டுக் கட்சியின் ஏனைய இனவாதக் குழுக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன்… மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த… கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த…. டலஸ் அழகப்பெரும இப்போது சஜித்துடன் இருக்கிறார்…. கோட்டாபயவுடன் இணைந்து வியத்மக வை உருவாக்கிய…. ஜெனீவாவுக்குச் சென்று தமிழ் மக்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாளக்க கொடஹேவா இன்று சஜித் பிரேமதாசவுடன்… அப்படித் தானே…

ஆகவே, எமது நாட்டில் இனவாத முகாமில் இருந்தவர்கள் மூன்று நான்கு குழுக்களாகப் பிரிந்து இன்று ஒன்றாக இருக்கிறார்கள்… ஆனால், எந்த காலகட்டத்திலும் இனவாதத்துக்கு எதிராக ஒரு கட்சி இருந்து வருகிறது… அது தேசிய மக்கள் சக்தி தான்… அவ்வாறெனில், இனவாத முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையா அல்லது இனவாத முகாமுக்கு எதிரானவர்களையா நீங்கள் தெரிவுசெய்ய வேண்டும்? பழைய பாதை இனவாதத்துக்கான பாதை… புதிய பாதை தேசிய ஒற்றுமைக்கான பாதை.. அதனையே நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்… அப்படியானால், அந்தக் கேள்விக்கான பதிலாக நாங்கள் யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? தேசிய மக்கள் சக்தியை…

எங்கள் நாட்டின் பொருளாதாரமும், பொது மக்களின் வாழ்க்கையும் சீர்குலையக் காரணமாக அமைந்தவை பாரியளவிலான ஊழல் மோசடிகள் மற்றும் வீண் விரயங்களே என்பது உங்களுக்குத் தெரியும்… நாட்டின் இன்றைய பின்னடைவுக்கு இயற்கை காரணம் ஏதுமுண்டா? எமது நாட்டின் பின்னடைவுக்குக் காரணம் இயற்கை வளங்கள் இல்லாமையா? இல்லை… எமது நாட்டின் சரிவுக்குப் பிரதான காரணம், ஊழல் மோசடிகளும், வீண் விரயங்களுமே… அப்படியாயின், ரணில் விக்ரமசிங்ஹ, சஜித் பிரேமதாச என்போர் பிரதிநிதித்துவப்படுத்துவது எந்த முகாமை? ஊழல் மோசடிகள், வீண் விரயங்கள் நிறைந்த பழைய பாதையை… ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கிறார்கள் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க போன்றோர்… அதே போல ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான மஹிந்தானந்த, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் மத்திய வங்கியைக் கொள்ளையிட்ட ரணில் விக்ரமசிங்க போன்றோர் ஒரு குழுவாக…

சஜித் பிரேமதாசவுடன் இருப்போர் யார்? பெருந்தெருக்கள் அமைச்சைப் பொறுப்பெடுத்து பொது மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரிஎல்ல… நான் பார்த்தேன் நேற்று பாராளுமன்றத்தில் நாளக்க கொடஹேவாவின் மோசடிகள் குறித்து சுசில் பிரேமஜயந்த கதைக்கிறார்… நாளக்க கொடஹேவா இருக்கிறார் சஜித் பிரேமதாசவுடன்… கலாசார அமைச்சில் பல பில்லியன்களை வீணடித்த சஜித் பிரேமதாசவுடன்… அவர்கள் இருவரும் செல்வது ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களைக் கொண்ட பழைய பாதையில்… எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஊழல், மோசடிகள் மற்றும் வீண் விரயமற்ற பாதையொன்று அவசியமென்றால்…. அந்த பாதை தான் தேசிய மக்கள் சக்தியின் புதிய பாதை… நீங்கள் தெரிவு செய்யப் போவது பழைய பாதையையா? அல்லது புதிய பாதையையா? என்ன சொல்கிறீர்கள்?

எந்த காலகட்டத்திலும் இந்த நாட்டு மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, அது திருடர்கள் தண்டிக்கப்படவும், திருடப்பட்டவற்றை மீளக் கையகப்படுத்திக் கொள்ளவும்… 2015 - 19 காலப் பகுதி ஆட்சியில் ரணில் சஜித் இருவரும் மோசடிகாரர்களைப் பாதுகாத்தனர்… ஆகவே, புதிதாக எமக்குத் தேவை இந்த மோசடிகாரர்களையும், திருடர்களையும் தண்டிக்கக் கூடிய ஓர் அரசாங்கம்… திருடப்பட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்திக்கொள்ளக் கூடியதோர் அரசாங்கம்… யார் அந்த அரசாங்கம்? திருடர்களைப் பாதுகாக்கும், திருட்டில் ஈடுபடும் பாதை…. ரணில் சஜித் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய பாதை… திருட்டினை ஒழிக்கும்…. திருடியவர்களைத் தண்டிக்கும்… திருடப்பட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்திக் கொள்ளும் புதிய பாதை… தேசிய மக்கள் சக்தியின் பாதை… இவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள்? எதனை? பழைய பாதையையா அல்லது புதிய பாதையையா?

அது போல தான் பழைய பாதை எமது நாட்டின் வளங்களை விற்பனை செய்து… எமது நாட்டின் உற்பத்திகளை வீழ்ச்சியடையச் செய்து… எமது நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய பாதை… ஆனால், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதை தான் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு… நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் பாதை… நீங்கள் தெரிவுசெய்ய வேண்டிய பாதை எது? வளங்களை விற்பனை செய்த… இடங்களை விற்பனை செய்த… மன்னாரின் இடங்களை இந்தியாவுக்குத் தாரை வார்த்த… அவ்வாறான பழைய பாதையையா? நாட்டை புதிய திசை நோக்கிப் பயணிக்கச் செய்யும்… தேசிய மக்கள் சக்தியின் பாதையையா? என்ன சொல்கிறீர்கள்? எது மாற்றமடைய வேண்டும்?

உங்களுக்குத் தெரியும் இப்போது இந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பிரதேசங்கள் அனைத்திலுமே போதைப் பொருளானது படிப்படியாக பரவிக் கொண்டு வருகிறது… இந்த யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதில்லை… இந்த இலங்கையில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதில்லை… அவை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன… வான் வழியாகவோ… அல்லது கடல் வழியாகவோ… இன்று என்ன நடந்திருக்கிறது? எமது நாடு போதைப் பொருட்களின் மாபெரும் சொர்க்கபுரியாக மாறியுள்ளது… இவை எல்லாவற்றிட்கும் அரசியல்வாதிகளே பாதுகாப்பளிக்கின்றனர்…

நீங்கள் பார்த்திருப்பீர்கள் சமீபத்தில் சக்தி தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது… ஒரே கூட்டணியில் இருந்த வேலு குமாரும், திகாம்பரமும் அதில் பங்குபற்றியிருந்தனர்… 2020 தேர்தலில் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டிருந்தனர்… வேலு குமார் ஐமச சார்பில் கண்டியில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தார்… திகாம்பரம் நுவரெலியாவில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தார்… இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவளிக்கிறார்… வேலு குமார் ரணிலுக்கு ஆதரவளிக்கிறார்… இருவருக்குமிடையில் விவாதம் நடைபெற்றது… திகாம்பரம் வேலு குமாரைப் பார்த்து, ‘பார் குமார்‘ என்கிறார்… வேலு குமார், திகாம்பரத்தைப் பார்த்து ‘குடு திகா‘ என்கிறார்… அவ்வாறாயின், இந்த போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அரசியல்வாதிகள்… அந்தக் கட்சிகளுக்கு பணத்தை வாரியிறைப்பவர்கள் இந்தப் போதைப் பொருள் வியாபாரிகளே… நீர்கொழும்பில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதி ஒருவர் தான் ரணிலுக்கு ஆதரவளித்து வருகின்றார்… அவர்கள் யார்? போதைப் பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கும், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு உதவி செய்யும்… அவர்கள் தான் பழைய பாதையில் இருப்பவர்கள்… நாங்கள் யார்? போதைவஸ்து வியாபாரிகளுடன் தொடர்புபடாத, போதைப் பொருள் வியாபாரத்துக்கு பங்களிப்புச் செய்யாத… போதைவஸ்து வியாபாரத்தை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்கக் கூடிய சக்தி தான் தேசிய மக்கள் சக்தி… ஆகவே, தெரிவு செய்யப்பட வேண்டியது எது? போதைவஸ்துவைக் கொண்டு வரும் பழைய பாதையையா? போதைவஸ்துவை இல்லாதொழிக்கும் புதிய பாதையையா? எது வேண்டும்?

புதிய பாதை… எமது நாட்டில் சட்டம் இருக்கின்றது… எமது நாட்டு அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லர்… ரணில் விக்ரமசிங்க, சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார்… நாட்டின் அடிப்படை அரசியமைப்பை மீறுகிறார் நாட்டின் ஜனாதிபதி… பதில் பொலிஸ் மா அதிபரொருவரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்குக் கட்டளையிட்டது… ஜனாதிபதி அதனை நிறைவேற்றவில்லை… நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்காத ஜனாதிபதி தான் ரணில்…. அவர்கள் சட்டத்தை அமுல்படுத்தப் போவதில்லை…

அதுமட்டுமல்ல… நீங்கள் பார்த்திருப்பீர்கள்... சஜித் பிரேமதாசவின் தங்கை 20 இலட்ச ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வங்கியொன்றில் வைத்து பிடிபட்டார்… கடந்த நாட்களில் மஹிந்த ராஜபக்ச கூறினார், அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் சஜித்தின் தங்கை பிடிபட்டார் என்று.. மஹிந்த ராஜபக்ச என்ன கூறினார்… பிரேமதாசவின் மகள் என்பதால் காப்பாற்றியதாகக் கூறினார்… அவர்களுக்கு மோசடிகளிலும், சட்ட விரோத காரியங்களிலும் ஈடுபட்டு விட்டு சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது…

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக… கலாசார நிதிய மோசடிக்கு எதிராக… சிஐடி யில் விசாரணையொன்று நடந்து வந்தது… அந்த விசாரணை இடை நிறுத்தப்பட்டது…. காரணம் என்ன? அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை… அவர்கள் சட்டத்தை விட மேலான நிலையில் இருப்பவர்கள்… எனவே, பழைய பாதையென்பது எப்படிப்பட்டது? நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஜனாதிபதிகள்… நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்க்கப்பட்ட ஜனாதிபதிகள்… சட்டத்தை அசட்டை செய்யும் அரசியல்வாதிகள்… அது தான் பழைய பாதை… நாங்கள் அமைக்கப் போகும் புதிய பாதை எது? அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்… அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர்…. அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள்… சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்… இன்று எமது நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களா? அதிகாரத்திலிருப்போருக்கு ஒரு சட்டம்… ஏழை எளியோருக்கு இன்னொரு சட்டம்… அது தான் சஜித், ரணில் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய பாதை…

நாங்கள் பரிந்துரைக்கும் புதிய பாதை எது?

இனம், மதம்…. ஏழை, பணக்காரன்… அதிகாரத்திலிருப்பவர், இல்லாதவர்… எந்த பேதங்களுமின்றி.. சகலருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் ஒரு நாடு… எது அவசியம்? பழைய பாதையா? புதிய பாதையா? புதிய பாதை… அப்படியென்றால், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி… இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொள்ளும் போது நீங்கள் புரிந்து கொள்வதென்ன? இந்த நாட்டில் மாற்றமொன்று அவசியமென்றால்… இனவாதத்திற்குப் பதிலாக இன நல்லிணக்கம் அவசியமென்றால்… களவு, ஊழல், மோசடி மற்றும் வீண் விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டுமென்றால்… திருடர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால்… எமது நாட்டு சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமானவர்களாக நடத்த வேண்டுமென்றால்… யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? தேசிய மக்கள் சக்தியை…

இன்று முழு நாட்டிற்குமான புதியதொரு கோரிக்கை உள்ளது… எமது நாட்டிற்கு மாற்றமொன்று அவசியமென்று… எமது நாடு தொடர்ந்தும் இதே விதமாகச் செல்ல இடமளிக்க வேண்டாமென்று… இன்று தென்னிலங்கை மக்கள்…. இலட்சக்கணக்கான மக்கள்... இந்த மாற்றத்திற்காக முன்னிற்கிறார்கள்… நேற்று மற்றும் இன்று அஞ்சல் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டது… நீங்கள் அறிந்த ஒரு நண்பரிடம் கேட்டுப் பாருங்கள்… பொலிஸார் எப்படி… ஆசிரியர் எப்படி… கச்சேரியில் எப்படி என்று… 75, 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள்… அந்த மாற்றத்திற்காக… தேசிய மக்கள் சக்திக்காக… தென்பகுதி மக்கள் ஓரணியாக திரண்டிருக்கிறார்கள்… இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என… தென்பகுதி மக்கள் பெருமிதத்துடன் எழுந்து நிற்கிறார்கள்… நான் வடக்கு வாழ் மக்களிடம் கேட்கிறேன்… நீங்கள் அந்த மாற்றத்தை எதிர்ப்பீர்களா அல்லது அதற்கு ஆதரவு தருவீர்களா? என்ன நினைக்கிறீர்கள்?

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிக்கை எனது நினைவுக்கு வருகிறது… அது முழு நாடும் எதிர்பார்த்திருக்கும் அந்த மாற்றத்தை எதிர்ப்பதாகக் காணப்படுகிறது… ஏனைய நாட்களில் நடப்பதைப் போன்றதொரு தேர்தலல்ல இது… ஏனைய நாட்களில் வடக்கு வாழ் மக்கள் யோசித்ததெல்லாம், ராஜபக்ச அணியினருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றியே… 2010 இல் அவர்கள் ராஜபக்சவினருக்கு எதிராக பொன்சேகாவுக்கு வாக்களித்தனர்… 2015 இல் ராஜபக்ச படையணிக்கு எதிராக மைத்ரிபாலவுக்கு வாக்களித்தனர்… 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்… நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வடக்கு மக்களிடமிருந்து… நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் சுமந்திரன் ஐயாவிடமிருந்து… யாருக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறீர்கள்? யாருக்கு எதிராக? ராஜபக்சவின் ஒரு பகுதி அவரிடமா இருக்கிறது? அப்படியென்றால், யாருக்கு எதிராக இந்த தமிழ் மக்களை அழைக்கிறீர்கள்? இந்த தமிழ் மக்களை வேறொன்றுக்கும் எதிராக அல்ல…. தெற்கில் இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆதரிக்கும் அந்த மாற்றத்திற்கு எதிராக…. சமூகம் வேண்டி நிற்கும் புதிய மாற்றத்திற்கு எதிராக… முழு நாட்டிற்கும் தேவை புதியதொரு மாற்றம்… அந்த மாற்றத்திற்காக நாமனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம்… தெற்கில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி… மக்கள் ஒன்றுதிரண்டுள்ளார்கள்… இந்த நாட்டிற்கு புதியதொரு மாற்றம் தேவை… பழைய பாதையில் செல்ல வேண்டுமா? பழைய பாதையில் முன்னேறிச் செல்ல வடக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமா? நாங்கள் வடக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்… புதிய பாதைக்காக பழைய பாதையைக் கைவிட்டு விட்டு ஒன்று திரளுங்கள்…

ஆகவே, இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த அந்த தீர்மானம்… இந்த புதிய மாற்றத்திற்கு எதிரானதொரு தீர்மானம்… 2010, 15, 19 காலப்பகுதியில் ராஜபக்சக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம்… ஆனால், 2024 இல் எடுத்திருக்கும் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரானதொரு தீர்மானம்… இந்த நாட்டில்… இந்தப் பகுதியில் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் :
தொழில்வல்லுனர்களாகிய நீங்கள் அந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கின்றீர்களா?
புத்திஜீவிகள் மற்றும் பேராசிரியர்கள் போன்றோர் இங்கு சமூகமளித்துள்ளீர்கள்… நீங்கள் மாற்றத்திற்கெதிரான இந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கின்றீர்களா?
வடக்கு வாழ் மக்களிடம் நான் தயை கூர்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம்… இந்த மாற்றத்திற்கான பங்குதாரர்களாக நீங்கள் மாறுங்கள்…

இந்த மாற்றத்திற்கு எதிரானவர்களல்லாதிருங்கள்…
இந்த மாற்றத்தை அரவணைக்கிறவர்களாயிருங்கள்…
இந்த மாற்றத்திற்காக பெருமிதத்துடன் உழைக்கிறவர்களாக இருங்கள்…

அதுவல்லவா இங்கு நடந்தேற வேண்டும்… நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்… நாட்டின் பெரும்பாலான மக்கள் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் போது யாழ் மக்களாகிய நீங்கள் மட்டும் அதற்கு முரணாக எவ்வாறு செயற்பட முடியும்?
இலங்கை தமிழரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்?
நாங்கள் இந்த யாழ்ப்பாணத்தின் புத்திஜீவி சமூகத்திடம் கேட்டுக் கொள்வது…. இந்த புத்திஜீவிகள் யாழ் மக்களின் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பாரியளவிலான பணிகளை மேற்கொள்ள முடியும்…
இவ்வாறான மாற்றத்திற்கெதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் அனுமதிக்காதீர்கள்… அந்தத் தீர்மானம் தவறானது என இந்த மக்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள்…

நாங்கள் வெற்றி பெறுவோம்… தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறுவோம்… இந்த வெற்றியின் பங்குதாரர்களாக யாழ் மக்களும் மாறுங்கள்… அந்த மாபெரும் மாற்றத்திற்கு எதிரானவர்கள் என நீங்கள் முத்திரைக் குத்தப்பட வேண்டாம்... நீங்களும் அந்த மாற்றத்தின் பங்குதாரர்களாகுங்கள்…
புதிய பாயொன்றை முனைவது போல நாங்கள் இந்த நாட்டை புதிதாகப் பின்னுவோம்…
அனைத்தையும் நாங்கள் புதிதாக ஆரம்பிப்போம்… சில வருடங்கள் கடந்த பின்பு உலகின் ஒரு செல்வந்த நாடாக இந்த நாட்டை நாம் மாற்றிக் காட்டுவோம்…
மலர்ந்த முகத்துடனான மக்களைக் கொண்ட ஒரு நாடாக இதை நாம் மாற்றுவோம்…
யுத்த பிணக்குகளற்ற… ஏனைய மக்கள் கூட்டத்துடன் சந்தேகம், பகையுணர்வு, கோபங்கள் போன்றவையற்ற ஒற்றுமையான ஒரு நாடாக இதனை மாற்றுவோம்…
கல்வியை மேம்படுத்தக் கூடிய… விவசாயிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடாத்திச் செல்லக் கூடிய.. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்யக் கூடிய.. இந்த யாழ்ப்பாணத்திலிருக்கும் மீனவர்களுக்கு அச்சமின்றி, சந்தேகமின்றி நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்…

நீங்கள் உங்கள் வடக்குப் பகுதி கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றீர்கள்…. ஆனால் இந்தியாவின் ரோலர் படகுகளினால் உங்களது வலைகள் போன்றவை நாசம் செய்யப்படுகின்றன… நாம் நமது வடக்கின் மீனவ சமுதாயத்திற்கு தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்வோம்… நாங்கள் யாருக்கும் அடிபணியும் ஓர் அரசாங்கமல்ல…. நாங்கள் வலுவான இராஜதந்திர உறவுகளை விரும்பும் ஓர் அரசாங்கமாகும்… எனினும், எமது பங்கிற்கான முழு உரிமை எமக்கிருக்க வேண்டும்… அந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசாங்கத்தையே நாங்கள் அமைக்கப் போகிறோம்… அதற்கான ஒத்துழைப்பு வழங்குவது தான் இன்று யாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகவுள்ளது… இந்த அரசியலை வெற்றி கொள்வது தான் யாழ் மக்களின் பொறுப்பாக இருந்து வருகிறது என நாங்கள் நினைக்கிறோம்… நீங்கள் இந்த வெற்றிக்கு எதிரானவர்களாக மாற வேண்டாம்… நீங்கள் இந்த வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிப்பவராக, இந்த வெற்றியின் பங்குதாரர்களாக மாறுங்கள்… நீங்கள் அதற்கு ஆயத்தமாக இல்லையா? நீங்கள் இந்த வெற்றிக்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? இந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? நீங்கள் தேசிய ஒற்றுமைக்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? நீங்கள் ஊழல், மோசடிகார்களின் பாதுகாவலர்களாக மாறுவீர்களா? நீங்கள் சட்டத்தைப் புறந்தள்ளி அதிகாரத்திலிருப்பவர்களுக்கு பாதுகாவலராக மாறுவீர்களா? அப்படியாயின் நீங்கள் 21 ஆம் திகதி ரணிலுக்கு அல்லது சஜித்துக்கு வாக்களிக்கலாம்….

ஆனால் நீங்கள் மாற்றத்திற்கான பங்குதாரர்களாக மாறினால், நீங்கள் மாற்றத்திற்கான பங்காளிகளாக மாறினால்… நீங்கள் வாக்களிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்திக்கே… நான் உங்கள் முன் ஒரு வியாபாரியாக வரவில்லை.. நான் உங்கள் முன் ஒரு தரகராக வரவில்லை… நான் இதைத் தருகிறேன் எனக்கு அதைத் தாருங்கள் எனக் கூறி வாக்குக் கேட்பதற்கு நான் வரவில்லை… எமக்கிருப்பது யாழ்ப்பாண தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தெற்கு அரசியலுடன் செய்து கொள்ளும் ஒரு கொடுக்கல் வாங்கல் முறையல்ல… தெற்கின் அநேகமான அரசியல்வாதிகள் வடக்குடன் மேற்கொள்வது ஒரு கொடுக்கல் வாங்கலைத் தான்…. நீங்கள் வாக்களியுங்கள்… 13 ஐத் தருகிறோம்… நீங்கள் வாக்களியுங்கள்… 13 ப்ளஸ் தருகிறோம்.. நீங்கள் வாக்களியுங்கள்… காணி அதிகாரத்தைத் தருகிறோம்… எவ்வளவு காலமாக இதையே சொல்லி வருகிறார்கள்…. நான் வந்தது அதற்காகவல்ல… நான் உங்களுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள வரவில்லை… நான் உங்களுடன் பேரம் பேச வரவில்லை… நான் உங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்காக வந்தால் நீங்கள் கூறுவீர்கள் 13 போதாது ப்ளஸ் கொடுங்கள் என்று…. நான் அவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்காக வரவில்லை… எனது முதலாவது நோக்கம் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதே…

எமது நாட்டில் அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டது இன்னுமொருவருக்கு எதிராக.. தெற்கில் அரசாங்கம் அமைக்கப்படுகிறது வடக்கிற்கு எதிராக…. சிங்கள அரசாங்கம் அமைக்கப்படுகிறது தமிழ் மக்களுக்கு எதிராக… எனது முதலாவது முயற்சி, மற்றொருவருக்கு எதிரான அரசியல் என்பதை மாற்றியமைப்பது.. மற்றொருவருக்கெதிராக அரசாங்கம் அமைத்தல் என்பதை மாற்றியமைப்பது.. இலங்கையில் முதன் முறையாக வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்து வருகிறது. சிங்கள் தமிழ் முஸ்லிம் பறங்கியர் மலே என அனைத்து மக்களினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் அரசாங்கத்தை உருவாக்குவது… அவ்வாறானதொன்றை உருவாக்குவோம்… அதன் பின்னரான கொடுக்கல் வாங்கலாக அந்த அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமொரு பொறுப்பு காணப்படுகிறது…. கொடுக்கல் வாங்கலின் போது அவ்வாறானதொரு பொறுப்பு காணப்படாது…. முதலில் வாக்கினைப் பெற்றுக் கொண்டு பின்னர் வழங்குவதாகத் தான் உடன்பாடு காணப்படும்.. வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பின்பு கொடுக்கவும் முடியும் கொடுக்காமலிருக்கவும் முடியும்.. கொடுக்கல் வாங்கல் என்பது அவ்வாறானதே…. கடன்களைத் திருப்பிச் செலுத்தாத எத்தனையோ பேர் உள்ளனர்… கொடுக்கல் வாங்கல் என்பது அவ்வாறானதே… தேர்தல் காலங்களில் வருவார்கள்… 13 ஐத் தருவோம் என்பார்கள்… 13 ப்ளஸ் தருவோம் என்பார்கள்… உங்களுக்கு அதனை நீட்டுவார்கள்… வெற்றுக் காசோலையொன்றைத் தருவார்கள்.. உங்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள்… சில நாட்கள் கடந்த பின்னர் காசோலை காலாவதியாகி விடும்… பெறுமதியிழந்து விடும்… அதில் பிரயோசனம் இருக்கிறதா? நான் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்காக இங்கு வரவில்லை என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்…

நாங்கள் ஒன்றிணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்குவோம்… நாம் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து தீர்வுகளைத் தேடுவோம்… அவை தான் வெற்றிகரமான தீர்வுகளாக அமையும்… இந்த கொடுக்கல் வாங்கல்கள் ஒருபோதும் வெற்றிகரமானவையாக அமையாது… அவை எம்மை ஏமாற்றத்திற்குட்படுத்துபவையாகவே காணப்படும்.. நீங்கள் எத்தனை முறை ஏமாற்றத்திற்குட்பட்டுள்ளீர்கள்… இல்லை… நாம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவோம்… வடக்கு, தெற்கு, கிழக்கு அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாடுவோம்… அது அனைவரின் ஒத்துழைப்புடனும் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்கம் என்றதன் அடிப்படையில்…. அங்கு அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதொரு பொறுப்பு காணப்படுகிறது.. அதற்கான ஒரு வழிகாட்டலுக்காக…. நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில் அது தொடர்பான சில விடயங்களை உள்ளடக்கியுள்ளோம்… நான் அதிலுள்ள சில விடயங்களை இப்போது உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.. எமது நாட்டில் நீண்ட காலமாக ஒரு புதிய அரசியமைப்புக்கான தேவை இருந்து வருகின்றது… 2000 ஆம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.. ரணில் விக்ரமசிங்க அதனை பாராளுமன்றத்தில் தீயிட்டுக் கொளுத்தி முடிவுக்குக் கொண்டு வந்தார்… மீண்டும் 2015 - 19 காலப் பகுதியில் அரசியலமைப்புக் குறித்து ஒரு உரையாடல் இருந்து வந்தது… எனினும் அது ஒரு முடிவுக்கு வரவில்லை.. நாங்களனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கவிருக்கும் அரசாங்கத்தில் 2015 - 2019 காலகட்டத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காகக் கடைபிடிக்கப்பட்ட செயற்பாட்டினை துரிதமாக நிறைவேற்றி சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக் கூடியவாறு ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்துக்கும், மாவட்டத்துக்கும் மற்றும் மாகாணத்துக்கும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கின்ற அரச ஆளுகைக்கான அனைத்து இனத்தவர்களையும் அரசியலில் பங்காற்றுவதனை உறுதி செய்கின்ற புதிய அரசியலமைப்பொன்றை நாங்கள் தயாரித்து நிறைவேற்றுவோம்….

அதாவது நாங்கள் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை பரிந்துரைத்துள்ளோம்.. அந்த முன்மொழிவுகளின் வரைபுகளை சமர்ப்பித்துள்ளோம்… இந்த அரசியலமைப்பை மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புடன் இலங்கையின் முதன்மையானதொரு சட்டமாக நிறைவேற்றுவோம்.. மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளாக நடாத்தப்படவில்லை… உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இரண்டு வருடங்களாக நடாத்தப்படவில்லை.. ஆகவே… தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஒரு வருடத்திற்குள் நடாத்தி ஆட்சியில் பங்குபற்றுவதற்கான மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம்…

எமது நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலே எனும் இனக் குழுமங்கள் காணப்படுகின்றன… பௌத்தம் இந்து கத்தோலிக்கம் இஸ்லாம் என பல்வேறு மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்… சிங்கள மற்றும் தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுபவர்கள் காணப்படுகின்றனர்… இவ்வாறான பல்வகைத்தன்மையுடைய மக்கள் எமது நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்… ஆகையால் நாங்கள் இனவாதம் முற்று முழுதாக இல்லாமல் ஆக்கப்படும் வரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் ஏதேனும் நிச்சயமற்றத் தன்மை மற்றும் ஓரங்கட்டப்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயமுள்ளது… ஆகவே நாங்கள் ஒரு ஆணைக்குழுவை நிறுவ உள்ளோம்… பாரபட்சத்துக்கெதிரான சட்ட ரீதியான அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை நாம் அமைக்கவுள்ளோம்.. அதன்படி எவரேனும் தான் கடைபிடிக்கும் மதத்தின் அடிப்படையில்... தான் பேசும் மொழியின் அடிப்படையில்… தான் பின்பற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினால் அது குறித்து இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்…. இனவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல் போகச் செய்வித்தல் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவோம்…

இனக்கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல்… அரசியலமைப்பின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்துதல்.. இவ்வாறு சகல மக்களினதும் உரிமைகளை உறுதிசெய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.. ஆகவே நாங்கள் நினைக்கின்றோம்…. இலங்கையில் மக்களிடையேயான நம்பிக்கையில் ஏதும் பழுது ஏற்பட்டிருந்தால்.. அவ்வாறு பழுதுபட்ட நம்பிக்கையை சரிசெய்து மீளக் கட்டியெழுப்பக் கூடிய இயலுமை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது… இப்போது உங்கள் முன் இருப்பது ஒரே ஒரு கேள்வி தான்.. இந்த மாற்றங்களுடன் கூடிய புதிய அரசாங்கமொன்றை செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அமைக்கப் போகிறோமா…. அல்லது இந்த இனவாத, ஏமாற்று அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கப் போகின்றோமா… அது தான் செப்டெம்பர் 21 ஆம் திகதி உங்கள் மேசை மீதிருக்கும் கேள்வி….

கடந்த காலங்களில் வட பகுதி மக்களுக்கு தென் பகுதி மக்களைக் குறித்த ஒரு சந்தேகம் நிலவி வந்தது பற்றி நான் அறிவேன்… தென் பகுதி மக்களுக்கு வடக்கு மக்களைக் குறித்த ஒரு சந்தேகம் நிலவி வந்தது.. எனினும், அது இப்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது… எனினும் தெற்கு மக்கள் மாற்றத்திற்காக ஒன்றிணைந்திருக்கும் பொழுது அந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக நீங்கள் மாறினால் தெற்கு மக்களிடையே என்ன மாதிரியானதொரு மனோநிலை ஏற்படும் என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்… அந்த மாற்றத்திற்கு முரண்பட்டவர்களாக.. அந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக… யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்படுவதனை நீங்கள் விரும்புகிறீர்களா? வடக்கு அடையாளப்படுத்தப்படுவதனை நீங்கள் விரும்புகிறீர்களா? நான் மீண்டும் உங்களுக்கு உறுதிப்படுத்துகின்றேன்….. நாங்கள் வெற்றி பெறுவோம்… எனினும், அந்த வெற்றியின் பங்காளர்களாக நீங்கள் மாற வேண்டும்… அதற்கு எதிரானவர்களாக நீங்கள் மாற வேண்டாம்….

சுமந்திரன், சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய ஆதரவினை நாம் ஒருபோது இனவாதமாகப் பார்க்கவில்லை.. எனினும், உங்களுக்கு நினைவிருக்கிறதா 2015 இல் ரீஎன்ஏ மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த பொழுது…. இன்று சஜித்தின் தேசிய அமைப்பாளராக இருக்கும் திஸ்ஸ அத்தநாயக்க அன்று மஹிந்தவுடன் இருந்தார்.. மஹிந்தவுடன் இருந்து சம்பந்தன் மற்றும் மைத்ரிபாலவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி ஒரு உடன்படிக்கையைத் தயாரித்தார்.. போலி உடன்படிக்கையொன்றை தயாரித்தார்.. அன்று ரீஎன்ஏ மைத்ரிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய பொழுது அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்… போலி ஆவணங்களைத் தயாரித்தார்கள்… திருட்டு ஒப்பந்தங்களை தயாரித்தார்கள்…. மைத்ரிபால நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காக ரீஎன்ஏ வுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்தார்கள்.. அந்த திஸ்ஸ அத்தநாயக்க… இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்…. ஆனால் நாங்கள்.. சுமந்திரன் மற்றும் சஜித்துக்கிடையில் ரகசிய ஒப்பந்தமொன்றிருக்கிறது என நாங்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அவ்வாறான இனவாத அணுகுமுறைக்குள் நாங்கள் செல்ல மாட்டோம்… எனினும், இதற்கு முன்னரான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ரீஎன்ஏ ஏதாவதொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போது தென்பகுதியில் அதற்கெதிராக மாபெரும் கோஷங்களை உருவாக்கினர்.. நாங்கள் அவ்வாறான இழிவான அரசியலுக்குள் செல்ல மாட்டோம்.. ரீஎன்ஏ ஏதேனுமொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போதெல்லாம் தெற்கில் அச்சத்தை உண்டு பண்ணினர்.. நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியினது சஜித்துக்கு ஆதரவளிக்கும் இந்தத் தீர்மானத்தை, தெற்கில் இனவாதத்தை தூண்டுவதற்காக மிகச் சிறிய அளவிலேனும் பயன்படுத்தப் போவதில்லை….

எனினும் நாங்கள் மிகவும் நேர்மையாக தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.. எவருக்கும் ஆதரவளிப்பதற்கான ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கிறது… அது அவர்களுடைய உரிமை…. அவர்கள் தனியொரு கட்சியாக செயற்படுவது இவ்வாறான தீர்மானங்களை எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு இருப்பதனால் தான்… ஆகையால், தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அவர்களது ஜனநாயக உரிமைக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம்… எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறோம்…. அது ஜனநாயகம்…

ஆகவே நான் வடக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்… நீங்கள் அந்த பழைய அரசியல் பாதையை விட்டு விலகி புதிய அரசியல் மாற்றத்திற்காக ஒன்று சேருங்கள்…. எனக்குத் தெரியும் வடக்கு தெற்கு கிழக்கு என்ற பேதங்களின்றி புதிய தலைமுறை எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்… இன்று இந்த மேடையில் ஏறி அதிகளவானோர்… இளைஞர் யுவதிகள் அதிகளவானோர்.. எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்… நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்…. நீங்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்… ஆகவே இளம் தலைமுறையினரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்… புத்திஜீவிகள் கல்விமான்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.. இந்த மாற்றத்தை மேற்கொள்வதா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்…. தூர கிராமங்களில் வசிக்கும் தாய்மார் தந்தைமாரிடம் நான் கேட்கிறேன்… இனிமேலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வசதியில்லாத.. வைத்தியசாலைகளில் மருந்துபொருட்கள் இல்லாத…. விவசாயத்தை மேற்கொள்ள முடியாத…. உங்கள் துன்பகரமான வாழ்க்கை முறையை விட்டு விட்டு முன்னேற வேண்டாமா இல்லையா என உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்… அதனால் நான் இங்கு குறிப்பிடும் விடயங்கள் அனைத்தையும் நீங்கள் கவனத்திலெடுத்துக் கொண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்தை நீங்கள் மேற்கொள்வதற்கான அறிவு உங்களுக்குக் கிடைக்கட்டும்… ஞானம் பிறக்கட்டும்…. என வேண்டிக் கொண்டு நான் நிறைவு செய்கிறேன்… நன்றி….



Read more...

Thursday, August 29, 2024

'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' நந்தன வீரரத்ன

இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் ஆதாரங்களை கொண்டு விடயங்கள் குறித்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன.

சம்பவம் இடம்பெற்று 40 வருடங்களின் பின்னர் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இப்புத்தகமானது, மூத்த ஊடகவியலாளர் செல்லையா மனோரஞ்சன் அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

புத்தகத்தினை வாசிக்க இங்கே அழுத்தவும்..


Read more...

Monday, March 25, 2024

சிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு வருகின்றதென்றால் பிரச்சினை இருக்கிறதாம். கனடாவில் அனுர

நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த அச்சந்திப்பில் பேசிய அவர் இலங்கையில் சிறுபாண்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அனுபவ ரீதியான உதாரணங்களுடன் உணர்த்தினார். அவர் அங்கு பேசுகையில்,

திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில் சிலகலமாக அமர்ந்திருந்த காலத்தில் எனது இருகரங்களையும் பற்றிப்பிடித்து இப்படி சொன்னார்: 'அனுர, நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன்.'

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார்: 'அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான்' என்று சொன்னார்.

அவருடைய இனத்துவ அடையாளத்தின் காரணமாக தன்னுடைய வாழ்க்கையில் அடையக்கூடிய ஆகக்கூடிய உயரம் இவ்வளவுதான், என்று அவர் நினைக்கின்றார் என்றால் அந்த உணர்வின் பின்னால் தேடவேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்றும் அவை எந்த விதத்திலும் நியாயமற்றவை என்றும் கூறினார் அனுர குமார திஸாநாயக்க.

சந்திப்பின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சிரேஸ்ட ஊடவியலாளரான திரு. மனோரஞ்சன் தெரிவித்த கீழ்காணும் கருத்துக்கு ஒரு நீண்ட நெடிய பதிலளிக்குபோதே மேற்கண்ட விடயத்தினை அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

மனோரஞ்சனின் கருத்து,

கனடாவுக்கு வருகை தந்த தோழர் அநுர குமாரவை மாற்றுத் தமிழ் அரசியல் சமூகத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.

முதலாவது நானும் நாங்களும் இலங்கையில் எம்மைத் தமிழர்களாக உணர்ந்ததும், உணர்வதும் ஒரு தவறுமல்ல/குற்றமுமல்ல . அதேபோல்தான் இஸ்லாமியர்களும் தம்மை இஸ்லாமியர்களாக உணர்வதும் தவறுமல்ல/குற்றமுமல்ல. சிங்கள பவுத்தவர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் தம்மை சிங்கள பவுத்தர்களாக நினைப்பதும், உணர்வதும் தவறுமல்ல/ குற்றமுமல்ல. இதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என நினைக்கிறோம்.

ஆனால் இலங்கையில் நாம் தமிழர்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்கள் என்றும் பிரிந்து நின்று எம்மை நினைக்கவும் உணரவும் தூண்டிய தவறைச் செய்ததது யார்? யார் அந்த ஆட்சியாளர்கள்? ஏன் அப்படி செய்தார்கள்? என்பதெல்லாம் உங்களுக்கும் எங்களுக்கும் இப்போது நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் செய்த அந்த மாபெரும் அநியாயத்திற்கு நாம் எவ்வளவு இழப்பீடு கொடுத்திருக்கிறோம் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். நம்மில் இரண்டு தலைமுறையினருக்கு இன்னும் அந்த இரத்த வாடையை உணர முடிகிறது. கடந்த காலத்தின் தாக்கம் எமது மூன்றாம் தலைமுறையினரின் இதயங்களிலும் உணரப்படுகிறது. ஆனால் இன்று, அதை உங்களால் மாற்ற முடியும் என்று நாமும் நினைக்கிறோம். 1948 இல் செய்ய வேண்டியதை இன்று 2024 இல் செய்ய வேண்டும் என்று நாங்களும் நம்புகிறோம், ஆம் ஒரு முறை முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக, இலங்கையின் முழு அரசியல் கலாசாரத்தையும் முற்றாகச் சீரழித்த இந்த மேல்தட்டு வர்க்கப் பிரபுத்துவ ஆட்சி ஒரு முறையாவது உடைக்கப்பட்டு, சாதாரண மனிதர்களின் இதயத்துடிப்பை உணருகின்ற, மானுட ஈரம்கொண்ட அரசியல் இலங்கைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அது உங்களாலும் முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

மூன்றாவதாக, இலங்கை மக்கள் இன்று உண்மையான ஒரு மாற்றத்தைக் கோருகின்றனர். 2022ல் வீதிக்கு வந்த மக்களின் அரகலய போராட்டம் அந்த உண்மையை எமக்கு உணர்த்தியதாக நாங்கள் நம்புகின்றோம். அதனால்தான், சுதந்திரம் அடைந்து 75 வருடங்களின் பின்னர், உங்கள் ஐம்பது வருடகால அரசியல் பயணத்தில் முதன் முறையாக இலங்கையின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் மாற்ற மக்கள் இன்று உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால்தான் முன்பை விட இன்று மக்கள் உங்களை நோக்கி வருவதை நாங்கள் காண்கிறோம். உங்களின் பொதுக்கூட்டங்களுக்கு சுனாமியைப் போல திரண்டு வரும் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்களின் அமைதியான கண்களில், அமைதியான முகங்களில் மற்றும் அமைதியான இதயங்களிலிருந்து ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞயை நீங்கள் பெறுகிறீர்கள். அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். மக்களின் மவுனமாகிப்போன அந்த இதயங்களில் புதைந்து கிடைக்கும் வலியிலிருந்து வரும் செய்தியையும் அதன் உணர்வையும், துடிப்பையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் அது உங்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.- நன்றி.

பதிலளித்து பேசிய அனுரகுமார திஸாநாயக்க,

எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மக்களிடையே மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமயைச் சேர்ந்தவன். எங்களுடைய புகையிரத நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தமிழர். நான் போன வைத்தியசாலையில் வைத்தியர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவர் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கிருந்த பொறியாளரும் தமிழர் திரு. கனகரட்ணம். நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் வைத்தியரிடம் செல்லுகின்ற பொழுது ஒரு தமிழ் வைத்தியரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு ஒரு காலமும் வந்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமணங்கள் சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப் பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது. ஆனால் எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்கு, தமக்கான வாக்குகளை பெறுவத்ற்கு குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன்.

நாங்கள் பிறந்த சமூக பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் பண்பாடு என்பது எங்களுக்குள் இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்ற பொழுது எனக்கு நல்லது கெட்டது என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே. இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அதில் தலை தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார். எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார். அப்போது என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்த்து வளர்கின்றது.

ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது அல் குர்ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, அவர் மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குரானில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடக போதிக்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக... அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ராமசான் பண்டிகை. அவருடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது. அதாவது ஒரு இசுலாமியராக. ஒரு முஸ்லீமாக வளர்க்கப்படுகிறார்.

ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரை பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது போதிக்கப்படுவது ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் ஆலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவருடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவருடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள் அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது.

நாங்கள் தொழில் ரீதியாக பொறியாளராக, தொழிலாளர்களாக, வைத்தியர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால் எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு இந்த எங்கள் ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள். 'வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது... எங்களுடைய தேரவாத பௌத்ததிற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்.... எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள். 2050 ஆண்டில் முஸ்லிம் மக்கள் எல்லாம் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்’. இப்படியாக அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள். ஏன்?

அவர்களால் எமது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி பேசமுடியாது, நமது நாட்டின் கல்வி வளர்ச்சியை பற்றி பேச முடியாது, நமது நாட்டின் அபிவிருத்தியை பற்றி, நமது நாட்டில் ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு முறை பற்றி அவர்களால் பேசவும் முடியாது. நாட்டில் நடக்கின்ற குற்றச்செயல்களை குறைப்பது குறித்து அவர்களால் பேச முடியாது. நாட்டில் ஒரு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன? செய்திருப்பது என்ன? என்பதைப் பற்றி அவர்கள் பேச முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் அது எல்லாவற்றிலும் அவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அந்த தோல்விகளை எல்லாம் அப்படியே இருக்க அவர்கள் என்னத்தைப் பற்றி பேசுகிறார்கள்? ‘இனத்தைப் பாதுகாக்க வேண்டும்...’ ‘எமது இனம் ஆபத்துக்குள் சிக்கியிருக்கிறது’. இப்படியான சுலோகங்களை 2015 ந்தாம் ஆண்டுக்கு பின்னரும் நாம் கேட்டோம். சில சுலோகங்களை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ‘தேசியம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது’ என்ற சுலோகம் வந்தது. இரண்டாவது, ‘மீண்டும் புலிகள் புத்துயிர் பெற விரும்புகிறார்கள்’ என்ற சுலோகம் வந்தது. அடுத்தது, 2050தாம் ஆண்டு ஆகின்றதபோது முஸ்லிம் மக்கள் இலங்கையின் பெரும்பான்மையாக இருப்பார்கள் எண்டு சுலோகம் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் என்ன செய்கிறார்கள். எமக்குள் அடங்கி கிடக்கின்ற அந்த ஆன்ம ரீதியான பண்பாட்டை அவர்கள் கிண்டி தூண்டிவிடுகிறார்கள். அதை தூண்டி விட்டதன் பின்பு நாங்கள் எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, எங்களுக்கு கல்வி தேவையில்லை, சாப்பிட உணவு இருக்கிறதா, எங்கள் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை இருக்கிறதா என்பது பற்றியும் அவசியம் இல்லை, எங்களுக்கு தொழில் இருக்கிறதா என்பது அவசியமில்லை, எங்களுடைய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதா என்பதும் பிரச்சினை இல்லை, எங்கள் இனத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் தூண்டிவிடப்படுகின்றன. அந்த அடிப்படையில் எங்களுக்குள்ளேயே அதற்கு தேவையான மேலும் அதிக சுலோகங்கள் உருவாக்கப்படும்.

மதங்களை வைத்து மக்களை பந்தாடும் தலைமைகள்.

கிழக்கில் முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்வார்கள்? நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாத சுலோகங்கள் மேலே வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டுமென்றால் திரு. ஹக்கீமின் கட்சிக்காரர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அங்கும் இது போசிக்கப்படுகிறது. இதேபோல் வடக்கிலும் இவ்வாறானவை போசிக்கப்படுகின்றன. அப்போது இறுதியில் நடப்பது என்ன? ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்தார்களா என்ற அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போவதில்லை. மாறக தங்களுடைய இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு போய் வாக்குகளை கொடுக்கின்றார்கள். இப்படியும் சொல்வார்கள். ‘சாப்பிட இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் போதும். நமது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டும்..’. இவ்வாறாக எங்களுடைய உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இந்த எங்களுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதை இந்த தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உணர்வுகள் அதிகம் திட்டமிட்டு பரப்பப்பட்டு பின் அது இனவாதமாக உருவெடுக்கிறது. ஆகவே எங்களுடைய நாட்டில் இந்த இன வாதம் என்பது வரும் சாதாரண மக்களுக்கு இருக்கின்ற விடயம் அல்ல. அது ஒரு அரசியலாகும். எங்களுடைய நாட்டின் இனவாதம் என்பது ஒரு அரசியல் இனவாதம்.

சாதாரண பொதுமக்கள் இந்த இனவாதம் இருக்கிறது என்று சொன்னால், எமது நாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் சிங்கள கிராமங்கள் இடையே பரவி வாழ்கிறார்கள். வடக்கில் மிகப் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதும் கூட கொழும்பு பகுதியில் பெரும்தொகையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். எனக்கு தெரியும்... அங்கே பாதுகாப்பு கெடுபிடிகள் பரிசோதனைகள் போன்ற பல பிரச்சினைகள் எல்லாம் அவர்களுக்கு இருந்தது. அப்படி அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அங்கு முழுமையான அமைதியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொதுமக்களிடையே இருந்த இன்வாத்தத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. 1958 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடந்தன. 1983ல் கலவர சம்பவங்கள் நடந்தது உண்மை. ஆனால் நாளாந்த வாழ்க்கையில் பொதுமக்களிடம் அந்த இனவாதம் இருக்கவில்லை. நமது நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியலே. ஆகவே நாங்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இந்த இனவாத அரசியலை தோல்விகாணச் செய்ய வேண்டும். இனவாதம் ஒரு அரசியலாக இருக்கிறது என்றால் அதற்கு எதிர்மாறாக இன ஐக்கிய அரசியலை கட்டியெழுப்புவதைத்ததான் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அடுத்து தமிழ், முஸ்லிம் மக்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு அவர்களும் கொடுக்கிறார்கள். அதே வேளை நாங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கே உரித்தான தனித்துவமான பிரச்சனைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமது நாட்டின் பிரதான இரண்டு அரச மொழிகள் தான் சிங்களமும் தமிழும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும். ஒரு கடைக்கு போய் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தமிழிலே பேசுகிறோமா சிங்களத்தில் பேசுகிறோமா என்பது அந்த வியாபாரியோடு இருக்கின்ற கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் ஒரு அரசோடு கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தங்களுடைய தாய் மொழியிலேயே அவர்கள் அந்த கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தங்கள் தாய்மொழியிலேயே கொடுக்கல் வாங்கல் செய்யும் அவருடைய உரிமை அங்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு தமிழ் குடிமகனுக்கு போலீஸ் நிலையத்திற்கு போய் தன்னுடைய தமிழ் மொழியிலே ஒரு முறைப்பாடு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், மொழிக்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

அவ்வாறுதான் எங்களுக்கு இன்று நன்றாக தெரியும் ஒரு முஸ்லிம் நபர் போய் ஒரு முறைப்பாடு செய்கின்ற பொழுது அந்த முறைப்பாடு செய்த பின்பு கீழே வாசித்து அறிந்து புரிந்துக் கையெழுத்திடுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கும். அனால் உண்மையில் அவர் வாசிக்கவும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை, அது அவருக்கு புரியவுமில்லை. ஆனால் சிங்களத்தில் எழுதப்பட்டட்ட அந்த முறைப்பாட்டை வாசித்துப் பார்த்து புரிந்து கொண்டேன் என்று முஸ்தபா கையெழுத்து இடவேண்டும். இது சரியா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கத்தோடு செயற்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை அவருடைய சுய தாய்மொழியிலேயே அவர்கள் செய்வதற்கான அந்த உறுதியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு இருக்கின்ற தடைகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

சகலருடைய மத, மொழி, கலாச்சார விழுமியங்கள் மதிக்கப்படல்வேண்டும்.

அடுத்தது, அவர்களுடைய கலாச்சாரத்தில் தனித்துவமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன. சிலருக்கு தங்களுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்துவது அச்சம் தருவதாக இருக்குமானால் அது பிரச்சினை. என்னுடைய கலாச்சார அடிப்படையில் உடைகளை உடுத்திக்கொண்டு மினுவாங்கொட நகரத்துக்கு போவது ஆபத்தாக அல்லது அச்சம் தருவதாக இருக்கும் என்று அவர் உணர்கிறார்களா இருந்தால் அது ஒரு பிரச்சனை. எனக்கு தெரியும் இவ்வாறான நிலைமைகள் இருக்கின்றன. நான் இப்படி உடுத்திக்கொண்டு போனால் ஆபத்து இருக்கிறது, ஆகவே நான் இப்படி உடுத்திக்கொண்டு போக கூடாது, என்னுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை ஒளித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற உணர்வு ஒருவருக்கு வருவது சரியா? அப்படியானால் என்ன செய்யப்பட வேண்டும்? அவர்களுடைய கலாச்சார பண்பாட்டுக் கலை கலாச்சாரங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் மூலம், கல்வியின் மூலம், சமூக கருத்துக்களின் மூலம் அவை பாதுகாக்கப்பட வேண்டும், உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

ஆனால் இந்த கலாச்சார பண்பாடுகள் அல்லது கலாச்சார தனித்துவங்களை நாங்கள் ஏற்றுக் கொள்வது அவை நாங்கள் பிரிந்து இருப்பதற்கான ஒரு காரணி என்ற அடிப்படையிலிருந்து அல்ல. ஒரு தமிழ் சகோதரி நெற்றியிலே வைக்கின்ற பொட்டு தன்னை சிங்களவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்கான ஒரு காரணியாக இருக்க வேண்டுமா? சிங்கள சகோதரி உடுத்துகின்ற மேல் நாட்டுப் பண்பாட்டு சேலை கட்டும் முறை தமிழர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு கலாச்சார அடையாளமாக இருக்க வேண்டுமா? ஒரு முஸ்லிம் பெண்மணி அணிகின்ற பர்தா சிங்களவர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு காரணியாக காட்ட முனைவது தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எங்களுடைய கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களுடைய அடையாளங்களை விட உயர்ந்தது என்று காண்பிக்க முயற்சிக்கின்றோம். அது தவறானது.

நான் சிங்களவன், நான் தமிழன், என்று காட்டிக்கொண்டு போக வேண்டுமா? நாங்கள் எங்களுடைய கலாச்சார விழுமியங்களை, பண்பாடுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் அவை காப்பாற்றப்பட வேண்டியது ஏனையவர்களுக்கு அது எதிரானதாக காட்டுவதற்காக அல்ல. 'நான் இப்படி உடுத்திக் கொண்டு ஒரு நிகழ்வுக்கு பொகிறேன், அப்படிப் போய் மற்றவர்கள் மனங்களை நோகப் பண்ணப்போகிறேன்' என்று சொன்னால் அது சரியா? அப்படியல்ல. அந்த கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களோடு மோதுவதற்காக கடைப்பிடிக்கப்படுவதல்ல.

மூன்றாவது நாங்கள் விரும்பிய மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை. எந்த ஒரு மனிதனுக்கும் தான் விரும்புகின்ற மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்திற்காக அது தனக்கு ஒரு ஆபத்து என்ற உணர்வு வராமல் இருக்க வேண்டும். மதங்கள் என்பது அவரவருடைய நம்பிக்கை. நான் புத்த பகவான் போதித்த தர்மத்தை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன். நபிகள் நாயகத்தினால் போதிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் பின்பற்றலாம். அதேபோல் கிறிஸ்தவர்களை எடுத்தால் இயேசு கிறிஸ்வினுடைய வாழ்க்கையை அல்லது பைபிளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் என்னுடைய மதம் உன்னுடைய மதத்தைவிட உயர்ந்தது என்று எங்களால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லமுடியாது. அது அவரவர்களுடைய நம்பிக்கை. என்னால் சொல்ல முடியுமா அவருடைய நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையை விட தரம் குறைந்தது? முடியாது. அது அவருடைய நம்பிக்கை. அது மட்டுமல்ல ஒரு மதத்தை பின்பற்றுவது, அல்லது ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகள் தடுக்கப்படுமானால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கலாச்சார உரிமைகள், அவருடைய மத வழிபாட்டுக்கான உரிமைகள், அவருடைய மொழிக்கான உரிமைகள் இவற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல்தான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை நான் சொல்லுகிறேன் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில்தான் சிலகலமாக அமர்ந்திருந்தார். அவருடைய சில சில அரசியல் கருத்துக்களோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நாள் என்னுடைய இரண்டு கரங்களைப் பிடித்துக் கொண்டு இப்படி சொன்னார். ‘அனுர,நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன். இந்தக் கருத்து நியாயமானது இல்லையா.

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார், அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான் என்று சொன்னார். அவருடைய இனத்துவ அடையாளத்தின் அடிப்படையில் அவருக்கு தோன்றுகிறதா தன்னுடைய வாழ்க்கையில் அடைய கூடிய ஆகக் கூடிய உயரம் இவ்வளவுதான், இவ்வளவுதான் என்னால் அடைய முடியும் என்று. அது நீதியானது அல்ல. அவரால் பிரதம மந்திரியாக வரமுடியுமா ஒரு ஜனாதிபதியாக வரமுடியுமா என்பது வேறு கதை. ஆனால் அவருக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால், தான் வழிபடுகின்ற மதம் அல்லது தான் பேசுகின்ற மொழி அல்லது தான் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தின் அடிப்படையில் என்னால் இந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரியாக வர முடியாது, எனக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக வர முடியாது என்று ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால் அது அவ்வளவு நீதியானது அல்ல.

நாங்கள் அவரிடம் போய் 'உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை' என்று கேட்கலாம். ஆனால், ஒருவருக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது என்றால், தாம் இந்த நாட்டில் என்னதான் இருந்தாலும் ஒரு இரண்டாம் தர பிரஜைகள் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றாலே அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அல்லவா? அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு அரசியலுக்குள், ஆட்சி அதிகாரத்துக்குள், சமூக செயற்பாட்டுக்குள் நியாயமான முறையில் பங்கேற்க அவர்கள் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும். உள்வாங்கப் படுவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். (கை தட்டல்)

அவர்களுடைய மத உரிமை, மொழி உரிமை, கலாச்சார உரிமை மட்டுமல்ல, அவருடைய அரசியல் உரிமைகளும் கூட உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.

மாகாண சபைகள் அவர்களது உரிமையாக கருதப்படுகின்றபோது நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

அடுத்தது, இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அல்ல, என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல் செய்ய முடியாது. அப்படியானால் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மாகாண சபை என்பது தங்களுடைய உரிமை என்று ஏற்றுக் கொள்கிறார்களாக இருந்தால், அதில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து அதை அவர்களுடைய உரிமையாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். அது தீர்வா இல்லையா என்பதைப் பற்றி எதிர்காலம் முடிவெடுக்கட்டும். அது அவர்களின் பிரைச்சினைகளைத் தீர்த்ததா இல்லையா என்பதை அவர்களுடன் பேசுவோம். ஆனால் தற்போது அவர்கள் அந்த அமைப்புக்குள் தங்களுடைய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று நம்புகிறார்களாக இருந்தால் அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஆகவே, அவர்களுக்கு அரசியலுக்குள் அரசியல் முறைமைக்குள் நியாயமான முறையில் கலப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது, ஏனைய பொதுவான விடயங்கள். அவற்றில் சில விஷயங்கள் அரசியல் விஷயங்கள். நான் உங்களுக்கு முன்பும் சொல்லியிருக்கிறேன். உண்மையான விஷயங்கள் என்ன? நான் முதல் விடயமாக சொல்ல விரும்புவது, இனிமேல் வடக்கில் எக்காலத்திலும் ஒரு யுத்தம் ஏற்பட போவதில்லை. ஆனால், வடக்கிலே இருக்கின்ற பெற்றொர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே யுத்தம் செய்வதற்காகத்தான் என்று தெற்கில் ஒரு படத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். 'மீண்டும் புலிகள் உருவாகுகிறார்கள், புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறார்கள்'...அதெல்லாம் நடக்க போவதில்லை. அது ஏன்? யுத்தத்தால் தென்னிலங்கையில் நடந்த வற்றையெல்லாம் நாம் வெறும் சம்பவங்களாக பட்டியலிடலாம். மத்திய மத்திய வங்கியின் மீதான தாக்குதல், எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் மீதான தாக்குதல், கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டது, பஸ்களில் குண்டுகள் வெடித்தன என்று சம்பவங்களை ஒரு அப்பியாச புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களில் எழுதலாம். ஆனால் வடக்கிற்கு 30 வருடங்களாக யுத்தம் தான் இருந்தது. வடக்கிலே இயக்கங்களுக்கு இடையிலான மோதலும் இருந்தது. இந்திய ராணுவம் வந்தபொழுது யுத்தம் இருந்தது. நாங்கள் வடக்கிற்கு சென்ற பொழுது அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். ‘இதோ இது இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பாதிப்பு, இது இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட அடையாளம்.’ ஒரே வீட்டில் காட்டினார்கள். ஏன் என்றால் அங்கே 30 வருடங்களாக யுத்தம்தான் இருந்தது. தென் இலங்கையில் யுத்தத்தோடு தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவும் பெரும் பாதிப்புக்களை கொடுத்துத்தான் இருக்கின்றன. ஆனால் வடக்கில் இருந்தது முழு யுத்தம். வடக்கின் தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெற்று வளர்ப்பது யுத்தத்துக்கு அனுப்புவதற்காக அல்ல. தென்னிலங்கை தாய்மார்கள் தந்தைமார்கள் போலவே அவர்களுக்கு நல்ல கல்வி, நல்ல தொழில் தேடி கொடுத்து, நல்லதொரு திருமண வாழ்க்கையை அமைத்து கொடுத்து, வீடு வாசலைக் கட்டிக்கொடுத்தல் போன்ற எதிர்பார்ப்புத்தான் அவர்களுக்கும் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கான கதவுகளை நாங்கள் அவர்களுக்கு மூடிவைத்திருக்கிறோம். எனவே உண்மையிலேயே அடி மட்டத்தில் வாழும் அந்த தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த கடந்த 30 வருட கால யுத்தத்தின் காரணமாக வடக்கிற்கு அவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அவருடைய வாழ்க்கைக்கான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன ஆகவே அந்த வடக்கை குறிப்பாக மையப்படுத்தி அந்த மக்களுடைய நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவகையில் மிக வேகமான அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் அந்த மக்களுக்கு 30 வருட வாழ்க்கை இல்லாமல் போயிருக்கிறது. எனவே நாங்கள் இந்த பிரச்சினையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். மேற்தளத்தில் அரசியல் பிரச்சினை, அடித்தளத்தில் மக்களின் நாளாந்த பிரச்சினை. இந்த இரண்டுக்கும் தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. இதையேதான் நாங்கள் வடக்கிலும் சென்று சொல்லுகிறோம் தெற்கிலும் சொல்லுகிறோம். நாங்கள் பல்வேறு வடகிழக்கு அரசியல்வாதிகளோடு கலந்துரையாடி கொண்டிருக்கின்றோம். அவர்களோடு பேசுகிறோம். ‘நாங்கள் 30 வருடமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டோம். இறுதியாக கிடைத்த பலன் என்ன? இன்னும் 30 வருடம் மோதிகொள்வதா? இன்னும் 30 வருடம் சண்டை பிடிப்பதா? அல்லது நாங்கள் சேர்ந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணப்போகின்றோஂமா?’ ஆவே நாங்கள் இவை தொடர்பாக அந்தந்த அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

வறுமையில் வாடும் ஒரு குழந்தை இழப்பது ஒரு நேர உணவு மாத்திரமல்ல அதன் சுய கௌரவத்தையும் சேர்த்துத்தான். இதை நான் அனுபவித்தவன்.

அடுத்ததாக மனோரஞ்சன் அவர்கள் கூறிய அடுத்த விடயம். அதாவது மக்களுடைய மனங்களில் இருக்கின்ற அந்த எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக எங்களுக்கு உணர்வு பூர்வமாக புரிதல் இருக்கிறதா என்பதே? எங்களுக்கு மக்களுடைய வேதனைகள் தூக்கம் என்பது ஒரு ஃபேஷன் அல்ல. நாங்கள் வாழ்க்கையின் வேதனைகளை நன்றாக உணர்ந்த மனிதர்கள். ஒரு பிள்ளை வறுமையில் இருக்கும் பொழுது அந்த பிள்ளைக்கு இல்லாமல் போவது வெறும் ஒரு நேர உணவு மட்டுமல்ல. நாங்கள் நினைக்கலாம் ஒரு குடிமகன் ஏழையாக இருப்பதால் ஒரு வேளை உணவு மட்டும்தான் கிடப்பதில்லை என்று…. அப்படி இல்லை. இந்த சமூகத்தில் பல்வேறு விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன. ஒரு மனிதன் என்கின்ற கௌரவமும் இல்லாமல் போகின்றது. ஒரு பாடசாலையில் ஆசிரியர் மிகவும் விரும்புவது நல்ல வெள்ளை நிறம் கொண்ட கொழு கொழுன்னு இருக்கும் பிள்ளையைத்தான். வறுமையால் காய்ந்து சுருங்கிப் போன குழந்தையை அல்ல. அவர்கள் கல்வியிலும் ஒதுக்கப்படுகிறார்கள். போலீசுக்கு போய் ஒரு முறைப்பாடு செய்யப் போனாலும் அங்கே போலீசார் நீண்ட நேரம் தாமதிப்பது ஒரு வறுமைப்பட்டவரின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்குத்தான். ஒரு வங்கியில் போனால் வரிசையில் இறுதியாக நிக்க வைக்கப்படும் ஒருவர் வறுமையானவராகத்தான் இருப்பார்.

எனவே வறுமை என்பது வெறும் பொருளாதார பிரச்சனை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சனை. இது நாங்கள் அனுபவப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் அனுபவப்பட்டது. இந்த வறுமை என்பது சாதாரண சமூக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. எனவே சாதாரண குடிமக்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு அவற்றை அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதைப் போலவே எங்களாலும் அவற்றை உணர முடிகின்றது. மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இந்த நாட்டில் தலைவர்களை உருவாக்கினார்கள், அரசாங்கங்களை உருவாக்கினார்கள். நாட்டில் இரண்டு முறை மக்கள் அந்த சந்தர்ப்பத்தை எமது நாட்டில் தலைவர்களுக்கு கொடுத்தார்கள். அதாவது எமக்குத் தெரிந்த காலத்தில். ஒருமுறை சந்திரிக்காவுக்கு கொடுத்தார்கள். 17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை தோற்கடித்து சந்திரிக்கா அதிகாரத்துக்கு வருகின்ற பொழுது மக்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பும் புத்தெழுச்சியும் காணப்பட்டது. ஆனால் சந்திரிகா மிகக் குறுகிய காலத்திலேயே அந்த மக்களின் எதிர்கால எதிர்பார்ப்பையும் புத்தெழுச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். இரண்டாவது கோத்தபாய அவர்களுக்கு 2019ல் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் அவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள் கோத்தபாயவின் மேடையில் ஏறினார்கள். அவ்வளவு காலமும் இலங்கை அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டாத வெளிநாட்டில் வாழ்ந்த இலங்கையர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்தி இலங்கைக்கு வந்தார்கள். மிக பெரிய துறைசார் நிபுணர்கள் கோத்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். ஆனால் கோத்தாபய ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எல்லாம் சிதறடித்தார்.

அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் நாட்டின் மக்கள் பாவம். அவர்கள் பாவம்... நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? எவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்குப் பின்னால் போய் அந்த எதிர்பார்ப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளன? எனவே எங்களுக்கு அந்த மக்களுடைய உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அவர்களுடைய இதயத்தில் உள்ள இதயத் துடிப்பு நன்றாக விளங்குகின்றது. அந்த இதயங்களின் வலி அதனுடைய பிரச்சனைகள் எல்லாம் எங்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பதற்கான விடயங்கள் அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசுவது வெறும் பென்ஷனுக்காக அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசும்போது எங்களுடைய வாழ்க்கையிலே உண்மையாக நாங்கள் முகம் கொடுத்து அனுபவித்த அந்த உணர்வோடுதான் பேசுகிறொம்.

ஆகவே மனோரஞ்சன் சொன்ன விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் சொல்கிறோம் எங்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமையும் கிடையாது அந்த மக்களுடைய அந்த உணர்வுகளை எதிர்பார்ப்புகளை சிதறடிப்பதற்கு. அந்த மக்களை ஒரு சிறிய அளவில்கூட ஏமாற்றுவதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. (கைதட்டல்) அது போதும்.. அது போதும்...அந்த மக்கள் பாவம். இல்லையா...? அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், அரசாங்கத்தை கவிழ்க்கிறார்கள்...எதிர்பார்ப்புகளுடன் பட்டாசு கொளுத்துகிறார்கள், பாற்சோறு உண்கிறார்கள் அவர்கள் என்னதான் செய்யவில்லை..? ஆனால் ஓரிரு வருடங்கள் தான் அவருடைய எதிர்பார்ப்புக்கள் … அவை மீண்டும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே நாங்கள் நினைக்கிறோம் அந்த மக்களுடைய அடி மனதுகளின் வேதனைகளில் இருந்து வருகின்றன உணர்வுகளோடு எதிர்பார்ப்புகளோடு அரசியலை நாங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். எனவே நாளைக்கும் உங்கள் முன்னால் வந்து எங்களால இப்படி பேசக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவேதான் முதலிலேயே உங்களுக்குச் சொன்னேன் நாங்கள் அந்த நம்பிக்கையை பாதுகாப்போம். ஆகவே நாளையும் உங்கள் முன்னால் வந்து இப்படியே பேசக்கூடிய ஒரு அரசை நாங்கள் உருவாக்குவோம்.

ஆகவே இனப் பிரச்சனை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்து இதுதான் நன்றி


Read more...

Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலை. புலிகளின் கதை முடியும் நேரம்.

அதே நேரம் குடாநாடெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. இந்தியா படகுகள் மூலம் உணவு எடுத்துவர முயற்சி செய்தது. இந்தியப் படகுகள் உணவுப் பொருட்களுடன் இலங்கையின் கடல் எல்லைக்கு வந்து காத்துக்கிடக்கின்றன. உள்ளே வர இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. இலங்கை அரசு இந்தியாவின் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. இந்தியா விமானம் மூலம் உணவு போட முடிவு செய்தது. இந்திய போர் விமானங்கள் அத்துமீறி இலங்கையின் வான் பரப்புக்குள் நுழைந்தன.

இந்தியா "ஒப்பிரேசன் பூமாலை" என்ற பெயரில் குடாநாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொட்டலங்களைப் போட்டு இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஜே.ஆர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் பிரவேசித்தது.

இந்திய இராணுவ வாகனங்களில் தமது கொடிகளைக் கட்டி, புலிகள் தாமும் அவற்றின் மீது ஏறி வீதிகளில் வலம்வந்தார்கள். பூரண கும்ப மரியாதை செய்து இந்திய இராணுவத்தினரை புலிகள் வரவேற்றார்கள். எல்லாம் சிலகாலம் தான். புலிகள், ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தேடித்தேடி கொலை செய்தார்கள்.

உத்தேச மாகாணசபை அமைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படையை சினமூட்டும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்தார்கள். இந்திய அனுசரணையுடன் , தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற மேற்குலகின் அபிலாசைக்கு அமைய புலிகள் இந்தியாவுடன் முரண்படத் தொடங்கினார்கள்.

1987 ஐப்பசி மாதம் இந்திய அமைதிப்படை மீது புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள். அன்றிலிருந்து அமைதிப்படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களால் மக்கள் இந்தியா மீது வெறுப்புக் காட்டத் தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையைப் புலிகள் தமக்கு சாதகமாக்க, மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில், அமைதிப்படை மீது பல தாக்குதல்களை நடத்தினார்கள். அந்த சமயங்களில் அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு யாழ் பொது வைத்தியசாலை சம்பவத்தைக் குறிப்பிடலாம். வைத்தியசாலைக்குள் மக்கள் தாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே, உள்ளிருந்து புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள்.இப்படியாகத்தான் இந்திய எதிர்ப்பு மனநிலை படிப்படியாக மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இவ்வளவு வருடங்கள் ஓடி முடிந்த பின்னும், மக்கள் மனங்களில் இருந்து இந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் நச்சுச் சூழலுக்குள் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டாலும், சில புலி சார் அமைப்புக்களும், புலம் பெயர்ந்து வாழும் புலிப் பினாமிகளும், அரசியல்வாதிகள் சிலரும், தமிழ் பத்திரிகைகளும் மக்களை மாறவே விடமாட்டார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே புலிகளுடன் சேர்ந்து, சயனற் என்னும் நஞ்சை காவித் திரிந்த, அப்பாவி மாணவன், பல கொடூரக் கொலைகளின் பங்குதாரி சாந்தனின் இறுதி நிகழ்வுகளில் மக்களை உணர்ச்சியூட்டி, அதில் குளிர்காய பலரும் முயற்சி செய்தார்கள். பல இடங்களுக்கு சாந்தனின் உடலத்தைக் காவித் திரிந்து அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்கள். உச்சக்கட்டமாக வல்வெட்டித்துறை பிரபாகரன் வாழ்ந்த இடத்திலும் சாந்தனின் உடலை வைத்து படம் காட்டினார்கள். இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம், சாந்தன் சாமானியனல்ல. அவன் புலிகளின் முக்கிய உறுப்பினன் என்பதை உலகத்துக்கு குறிப்பாக இந்தியாவுக்கு முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.

இவ்வளவு காலமும் சாந்தன் ஒரு அப்பாவி. படிப்பதற்காக இந்தியா சென்ற சாதாரண மாணவன் என்ற புலித் தேசியங்களின் சுத்துக்கள் எல்லாம் போலி என்று நிரூபணமாகிவிட்டது. சாந்தனின் இளைய சகோதரன், அண்ணனின் புலிச் செயற்பாடுகள் பற்றி தனது முகநூலில் பதிவுகள் போட்டுள்ளார். அவர்கள் குடும்பமே அதிதீவிர புலிகளாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், இவர்களின் எச்சரிக்கையால் இந்தியா வெலவெலத்துப் போய் நிற்கிறது. எவை இந்த புற்றீசல் சிவில் அமைப்புக்கள். இந்த அமைப்புக்களின் பெயர் விபரங்களை யாழ்ப்பாண உதயன் பத்திரிகையிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சிறிதரன், சாந்தனின் உடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த தேர்தல் ஒன்றில் தனக்குத்தானே 75க்கு மேற்பட்ட கள்ள வாக்குகள் போட்டதாகப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட சாதனைத் தலைவர், சாந்தனைப் பெரிய தியாகியாக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை இலங்கை அழைத்து வர பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கிறார் தமிழரசுத் தலைவர். பொன்னம்பலம் கட்சி கஜேந்திரன் உட்பட சிலரும் ஓர் ஓரமாக நின்று அஞ்சலியை செலுத்தி ஒரு சில ஓட்டுக்களுக்கு.....

ஜே.வி.பி கட்சியினரும், கூடவே இலங்கையின் புலனாய்வுப் பிரிவுடன் கூடி இயங்கும் முன்னாள் புலிகளும் இந்தப் பயங்கரவாதியின் உடலுக்கு அஞ்சலி செய்கிறார்கள். ஒன்றுமே புரியலே, இங்கே என்னமோ நடக்குது. ராஜீவ்காந்தியை துவக்கால் அடித்து கொல்ல முயன்ற கட்சியினர், அவரைக் கொன்றவனுக்கு அஞ்சலி செய்வது ஒன்றும் ஆச்சரியமல்ல.

இவ்வளவுக்கும் இந்த சாந்தன் ஈவிரக்கமற்ற பயங்கரக் கொலையாளி. பத்மநாபா உட்பட 12 பேரை கொலை செய்து விட்டு, இலங்கைக்கு தப்பிச் சென்றான். அங்கு தனது தாய் கையால் சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொண்டு அடுத்த கொலைக்கான திட்டத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறான். அங்கு புலிகளின் கொலைக்குழுவுடன் ஒன்றிணைந்து ராஜீவ்காந்தி மற்றும் 12 பேரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்கின்றான். இந்தியாவின் ஒப்பற்ற இளம் தலைவனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு இலங்கைத் தமிழர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்தியாவைத் தூற்றுகிறார்கள். இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள்.

புலிகளின் அழிவுக்குப் பின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்தியத் தயவை வேண்டி நின்ற தமிழர் தரப்பு, ஒரு நொடி தோன்றிய உணர்ச்சி வேகத்தில், இந்திய கனிவை தலைகீழாக மாற்றி வைத்துக்கொண்டுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது, இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு புதுடில்லி போவது, அடிக்கடி இந்திய தூதுவர் அலுவலுகத்துக்கு காவடி எடுப்பது, இந்தியாவுக்குப் போவது மகஜர் கொடுப்பது, இந்தியத் தூதுவரிடம் கொடுப்பது என்றிருந்த தமிழ் கட்சித் தலைவர்கள், சாந்தன் என்ற கொலைகாரனுக்காக இந்திய எதிர்பாளர்களாக மாறிக் கொண்டுள்ளார்கள்.

இந்த தமிழ்க் கட்சித் தலைவர்களின் இந்திய விரோத மனப்போக்கு ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனியும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் போய் நிற்கப் போகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்தும் ஆள் மாறி ஆள் மாறி கருத்துத் தெரிவித்துக்கொண்டு, இந்தியா உதவி செய்யவில்லை என எவ்விதம் நீங்கள் ஒப்பாரி வைக்கலாம். இதற்குள் இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை வேறு. இது எப்படி இருக்கிறதென்றால், இந்திய அமைதிப்படை தானாக இலங்கையை விட்டு வெளியேறிய பின், உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே அடித்துக் கலைத்து விட்டோம் என்று புலிகள் பீத்திக்கொண்டது போலத்தான்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த இந்திய எதிர்ப்பு மனநிலை நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவே நான் அனுமானிக்கிறேன். போராட்ட ஆரம்ப காலங்களிலேயே (1970 – 1980) இடதுசாரி எண்ணம் கொண்ட பலரும் தமது இந்திய எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வந்து இருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு தமிழீழத்துக்குப் பாதகம் என வகுப்பெடுத்தவர்கள் பலர். காலப்போக்கில் எல்லோருமே இந்தியாவே கதி என அங்கேயே அடைக்கலமானார்கள்.

1983 இனக் கலவரத்துடன் தமிழ் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தான். இந்தியா வழங்கிய சகல சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். இந்திய எதிர்ப்பை பலமாக எடுத்துவந்த புலிகள் முதல் அனைவரும், இந்தியாவிடம் பணம் உட்பட பலவிதமான உதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் தான். பிராந்திய அரசியல் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத, அறிவுகெட்ட ஜடங்களின் சமூகவலைத்தள பதிவுகள், கருத்தாடல்கள், எமது இனத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கடந்து, எமது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

யூலியன். 08 03 24.

Read more...

Sunday, February 25, 2024

தீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்

அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.

தனிமனித ஆளுமையும் அரசியற் தெளிவும் கொண்ட டொமினிக்- கேசவன் - தான் சார்ந்த புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி அந்த அமைப்பிலிருந்த முரண்பாடுகளை ,குழப்பங்களை ,நெருக்கடிகளை தன் பார்வையில் தீப்பொறி என்ற சிறிய அமைப்பொன்றை உருவாக்கி புதியதோர் உலகம் என்ற நூலைத் தன் பார்வையில் எழுத அதை வெளியிடுவதற்கு என் எல் எவ் ரி , தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கின்றது.

ஹற்றன் நசனல் வங்கியில் என் எல் எவ் ரி கொள்ளையடித்த பணத்தில் இப் புதினத்தை வெளியிட ஆங்கே புல்லுக்கும் பொசிந்ததுபோல் நிதியுதவி கிடைக்கிறது. இந்த நாவலை எல்லா மட்டங்களிலும் கொண்டுபோய்ச் சேர்க்க புலிகள் வேலை செய்கிறார்கள். அப்போது புலிகளும் என் எல் எவ் ரியும் தம் பிரதான எதிர்த்தரப்பாகக் கருதியிருந்தது புளொட் அமைப்பைத்தான்.

தமிழ் நாட்டில் அச்சடித்த நூலைப் புலிகள் தம் படகுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்து வினியோகிக்கிறார்கள். ஆனால் உயிராபத்தான நெருக்கடிகளை தீப்பொறி அமைப்பினர் எதிர்கொண்டபோது அவர்களுக்கு முதலில் பாதுகாப்பு வழங்கியது புலிகள்தான்.

இப்போது புலிகளின் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்ட தீப்பொறியினரைச் சந்திக்கவரும் இதர அமைப்பாளர்கள் புலிகளின் கண்காணிப்பினுள் வருகிறார்கள். இப்படியிருக்க புளொட்டிலிருந்து வெளியேறியபின் தீப்பொறி அமைப்பினர் தம் கருத்தியல்களை மீள வடிவமைக்க வேண்டியிருந்தது.

தமிழீழம் ,தமிழ்த் தேசியம் இவற்றை முன் மொழியாவிடினும் அதற்கிணையாக ஒரு குறுங்குழுவாத சிந்தனை முறையில் தம்மைப் பாடுபடுத்தி, ஈடுபடுத்தி ,அறியப்படுத்திக் கொண்டார்கள் . இத்தனைய குறுங்குழுவாதச் சிந்தனை முறையின் விருப்பார்வங்களை புதியதோர் உலகத்திலும் காணலாம்.

அந்த நாவலில் ஒரு பாத்திரமாக வரும் ஜான் மாஸ்ரர் கனடாவிலிருந்து எழுதிய எழுத்துக்களில் மோசமாக திரிபாயும் குறுக்கமாயும் இவற்றைக் காணலாம். இந்த நாவல் இத் தீப்பொறிக் குழுவினரை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. முற்றுமுழுதாக தலைமறைவாக இருக்கவேண்டிய நிலையில் புலிகளும் என் எல் எவ் ரி யும் இதன் வினியோகத்தைக் கையேற்றுப் பிரச்சாரப்படுத்திக் கொண்டார்கள் எனப் பார்த்தோம்.

தமிழீழக் கட்சி என்ற பெயரில் தம்மைத் தளமாற்றம் செய்த தீப்பொறியினர் புலிகளின் ஒவ்வொரு செய்கைக்கும் செயலுக்கும் நியாயம் சொல்ல வேண்டியவராயினர். எப்படியெனில் ஒரு சிறு உதாரணம் சொல்லலாம் , மாணிக்கதாசனைக் கிளைமோர் தாக்குதலில் புலிகள் கொன்றபோது பீடை ஒழிந்தது ! என தம் பத்திரிகையில் எழுதிவேண்டிய நிலை வந்தது.

பின்னர் "உயிர்ப்பு" என ஒரு சித்தாந்தக் கோட்பாட்டு சஞ்சிகையை கொண்டுவந்தபோதும் அதற்குள் இருந்த அக முரண்பாடுகளால் அந்த எத்தனமும் இல்லாமலாகி பின் தீப்பொறி ,தமிழீழக் கட்சி, உயிர்ப்பு இவையெல்லாமும் காணாமலானது.

முதற்பதிப்பு 1985 இல் வெளிவருகிறது. தோராயமாக ஆண்டின் இறுதிப்பகுதி எனக் கொண்டாலும் 1986 பிப்ரவரியில் நடந்த தளமாநாட்டிற்கு முன்னரே நூலும் தீப்பொறி அமைப்பும் தயாராகிவிடுகின்றது . இரண்டு மா நாடுகளிலும் கோவிந்தனோ ஜான் மாஸ்ரரோ கலந்துகொள்ளவில்லை.

இந்தா! பிடி ! இந்தா பிடி !
சுடுகுது ,மடியைப்பிடி ! என்ற அவசரக் குடுக்கைத் தனத்துக்கு அவர்கள் தம்மை ஒப்புக்கொடுத்ததில் அவர்கள் செலுத்திய விலை மிக அதிகம் !

இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தில் புளொட் அமைப்பு மிகப் பலவீனமான நிலையை அடைந்தது. புலிகளின் நோக்கமும் அதுவாயிருந்தது. தாபனத்தைப் பலவீனப்படுத்துவதில் வெளியேயான விமர்சனங்களுக்கு இருக்கும் வலு இதுமட்டும்தான்.

"நீண்டகால மக்கள் யுத்தம் "எனும் கோட்பாடு வலிமைகாண்பதும் இங்குதான். இப்படி இன்னொரு தளத்தில் புலிகளுடன் முரணில்லாத ,விமர்சனங்களில்லாத வகையில் தாம் இயங்கமுடியும் என்ற நப்பாசையில் இருந்தபோதும் ஏற்கனவே மற்ற அமைப்புகளை அழித்தொழித்த திமிரில் 1991 மே மாதம் 17 ஆம் தேதி கேசவனும் அவர் சார்ந்த தோழர்களும் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டு புலிகளால் கொல்லப்படுகின்றனர்.

தமிழீழம் என்ற அதே இலட்சியத்துடனும் கோட்பாட்டுடனும் தீப்பொறி தம் குறுகிய காலத்தில் இயங்கிய போதிலும் 1986 மே மாதம் ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட கையோடு தலையெடுத்த தமிழ்ப்பாசிச வகைமை தமிழ்ப்பிரதேசங்களில் இயங்கிய அமைப்புகளை அனைத்தையுமே அழித்தொழித்தது.

ஆனால் புதியதோர் உலகம் 1985 இல் வெளிவருகிறது. புதியதோர் உலகம் வெளிவந்த பின்னரே உடுவிலில் தளமாநாடு நடைபெறுகிறது .அதில் புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன் , அரசியற்துறைச் செயலர் வாசுதேவா ஆகியோர் கலந்துகொண்டு வைக்கப்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர். தாபனத்தை அமைப்பினுள்ளிருந்து சீர்திருத்துவதற்குப் பதில் அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி தீப்பொறி குழுவாக வெளியேறி புதியதோர் உலகம் நாவலைக் கூட்டுச் சேர்ந்து எழுதிப் பரப்புவதுதான்.

இத்தனைக்கும் கேசவனும் ஜானும் அமைப்பின் அதியுயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் . ஆனால் அமைப்பின் அடிமட்டத் தோழர்களுக்கும் அமைப்பின் வெகுமக்கள் பிரதிநிதிகளுக்கும் இருந்த கடப்பாடு இவர்களுக்கு இருக்கவில்லை. தாம் வெளியேறுவதற்கான நியாயங்களைச் சொல்லும் தூய்மைவாத வெள்ளை அறிக்கையாகத்தான் புதியதோர் உலகத்தைக் கட்டமைத்தார்களேயன்றி தார்மீகப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து அல்ல.

கேள்விப்பட்டவற்றை சுவாரஸ்யமான புனைவாக்கம் செய்தமாறான புதியதோர் உலகம் கதைக்கு உதாரணம் சொல்வதென்றால் பிரான்ஸிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறார் , என்னுடைய குதம் இப்போ எவ்வளவு விரிவடைந்திருக்கிறது தெரியுமா ? எனக் கேட்டபடி அப் பாத்திரம் அறிமுகமாகிறது. நாவலின்படி அப் பாத்திரம் போதை மருந்து கடத்தி அதனால் வரும் பணத்தை அமைப்பிற்குக் கொடுக்கிறது. அப் பாத்திரம் கதையின்படி போதை மருந்து வியாபார நபர்.

ஆனால் உண்மையில் அப் பாத்திரம் காந்தீயம் உள்ளிட்ட அமைப்புகளில் கடுமையாக வேலைசெய்து பொலிஸ் நெருக்கடிகளால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து சில தொழில் நிறுவனங்களை அவரது படித்த துணைவியாரோடு உருவாக்கி அதன் வருமானத்தை மிக எளிமையாக வாழ்ந்து அமைப்பிற்குக் கொடுத்து வந்தவர். இதற்காகவே தமக்கென வாரிசு எதையும் ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள்.

போர்க்காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்விற்கு உதவிசெய்து மிகப் பின்தங்கிய தங்கள் பிரதேசத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றுவரை ஆதாரமாய் நிற்பவர். ஆனால் புதியதோர் உலகத்தின் தூய்மையில் ,கேள்விச் செவியில் அவர் ஒரு போதைவியாபாரி. இப்போது லண்டனில் ஒரு நுட்பமான வியாபார நிலை காணப்படுகிறது. புதியதோர் உலகம் விற்பனையை கைத்துணையாகக் கொண்டு புதுவை ரத்தினதுரையை விற்பதில் ஒரு வியாபார அனுகூலம் உண்டு.

தர்க்கத்திலும் திறந்த பார்வை மதிப்பீடுகளிலும் ஒரு விடுதலை அமைப்பினுள் உள்ள உள்முரண்பாடுகளைப் புனைவின் வழியே வெளியே முன்வைத்ததில் இருந்த திறந்தநோக்கு இருக்க புலிகளின் பாசிச அமைப்பு முரண்களை அதற்குள் இருந்து இப்படி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்களா?

மாத்தையாவும் கருணாவும் துரோகிகளாகவே இருந்துவிட்டுப்போகட்டும் !

கவிஞராகவும் அறியப்பட்டு புலிகளின் அறியப்பட்ட பிரமுகராகவும் அதிகாரக் குரலாகவும் இருந்த ஒருவரின் எழுத்துக்களை ,பிரபாகரனின் அணிந்துரையுடன் அவை ஏற்கனவே நூல்களாக வெளிவந்து பாசிச மன நிலையை பொது உளவியலில் கட்டமைப்பதில் பங்குவகித்த ஒருவரின் தொகுப்பை விற்பதில் மனம் கூசாது வந்தவரை லாபம் என்ற வியாபார எண்ணம் நிச்சயம் மாற்றுக்கருத்துகளையும் மாற்று முயற்சிகளையும் ஜனநாயத்தையும் அவாவி நிற்போருக்கு எதிர்காலம் குறித்து அச்சமூட்டவே செய்யும் .

வானத்தைப் பிளந்த கதை எழுதி ஈ பி ஆர் எல் எவ் வை விமர்சித்து ,மன ஆறுதல் அடைந்தபின் செழியன் உதிரியாகிச் சீரழிந்து பின் புலிகளின் பிரச்சாரப் பிரமுகராகி புலிக்கொடியும் பிரபாகரன் கொடியும் ஏந்தித் தன் அந்திமத்தைத் கண்டு , தன் அற உணர்வைக் கைவிட்டதுபோல ,தீப்பொறி முகாமையில் வெளிவந்த "புதியதோர் உலகம் தொட்டு ஒரு புலிச்சாய்வு எடுத்து ஈற்றில் புலிகளாலேயே கொல்லப்பட் டும் சீரழி துயரமும் நிகழ்ந்தது.

வலதுசாரிகளுக்கு அமைப்புகள் பிளவுபட்டு உதிரி அமைப்புகள் உருவாகுவது அவர்களளவில் சேதங்களை உருவாக்காது , ஆனால் இடதுசாரி ,ஜனநாயக ,மக்கள் சார்பு அமைப்புகளில் இருந்தவர்கள் அவ்வவ்வமைப்புகளில் இருந்து வெளியேறும் முடிவுகளை ஆற அமர யோசித்தே எடுக்கவேண்டும் , தம்மை நம்பிவந்த தோழர்களை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டு தாம்மட்டும் தம் கருத்தியல் தூய்மையையும் தூயதிலும் தூய கரங்களையும் காட்டிக்கொண்டிருக்க முடியாது.

அமைப்புகளிலிருந்து வெளியேறியபின் தம்மைத் தூய்மையாளர்களாக நிறுவ முன்னிறுத்தப்பட்ட நூல்களிற்கும் படைப்பினூடு இலக்கியமாய்க் கதை அமைவில் வெற்றிபெறும் படைப்புகளுக்கும் வேறுபாடுண்டு. அடூர் கோபால கிருஷ்ணனின் "முகாமுகம் " அப்படியாக கலை நுட்பத்திலும் இலக்கியக் கதையாதலிலும் வெற்றிபெற்ற திரைப்படம்.

புளொட் மக்கள் அமைப்பில் அமைப்பாளராயிருந்து பின் தீப்பொறியிலும் இயங்கிய ஆளுமை மிக்க தோழர் ஒருவர் இப்போதும் கொழும்பில் மனநிலை பிறழ்ந்து சிங்கள உறவுகளின் பராமரிப்பில் இருக்கிறார். அமைப்பினுள் இருந்து இயங்கியமட்டிலும் அவர் மிகவும் ஆளுமை மிக்கவராயிருந்தார். அவரது ஆளுமைச் சிதைவிற்கு காரணம் தமிழ்ப் பாசிசம் . போர்க்குணாம்சமிக்க போராளிகள் அரசியல் ,சமூக அரங்குகளிலிருந்து அகற்றப்பட்ட அவ்விடத்தில் வந்தமர்ந்த பாசிசம். இந்த அவலமான சித்திரங்களையெல்லாம் புதியதோர் உலகத்தின் பின்னணியிலிருந்தெல்லாம் புரிந்துகொள்ளமுடியாது.

மேலும் அதே தளத்தில் அமைப்புக் குறித்த விமர்சனங்களோடும் சுயவிமர்சனங்களோடும் தளப்பொறுப்பாளராயிருந்த சின்ன மெண்டிஸ் - விஜயபாலன் - கிட்டுவால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பின்னணியையெல்லாம் புதியதோர் உலகத்தைத் தலைமேற் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள் இணையாகப் பேசப்போவதில்லை.

20/05/1989 இல் முள்ளிக்குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு புலிகள் 60 க்கும் மேற்பட்ட ஆரம்பகாலப் புளொட் தோழர்களைப் படுகொலை செய்த பின்னணியையும் கூறப்போவதில்லை. "புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி'' என தேசம் நெற் ஜெயபாலன் பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார். பாசிசத்தின் மனச் சாய்வில் தற்திருப்தி காண்பவர்களுக்கு ,கொள்பவர்களுக்கு புதியதோர் உலகத்தை விட்டால் வேறு போக்கிடமுமில்லை.

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்:

பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன்.
பிறப்பு : 1948.5.02 பாலையூற்று, திருகோணமலை.
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை.
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா.
கல்வியும் தொழிலும் : தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித வளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலைக் கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.
அரசியல் : பல்கலைக்கழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான “தீர்த்தக்கரை” எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
1980 களின் தொடக்கத்தில் “சங்கப்பலகை ” எனும் குழுவை அமைத்து மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.
1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (PLOTE) இணைந்து கொண்டார். 1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார். 1985 இல் PLOT அமைப்பிலிருந்து வெளியேறினார்

பச்சை இனவாதிகள்

டொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் "தீப்பொறி" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார்.

தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) "தீப்பொறி" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட "தீப்பொறி" ச் செயற்குழுவின் முடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். "அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா?" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார்.

"இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.

ஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.

"தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் "தீப்பொறி"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார்.

"நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார்.

"உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
(ஒரு தீப்பொறித் தோழரின் சுயவிமர்சனம் - April 06, 2012 )

புலிகள் தலையெடுத்து முழுச் சமூக சூழ்நிலைகளையும் தம் சமூகப் பாஸிச கொலைக் கலாச்சார நடைமுறையில், கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் கொண்டு வந்த நிலையில் தீப்பொறி ஒரு பெருப்பிக்கப்பட்ட, சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக வெளிநாட்டு அரசியல் ஆர்வலர்கள், இயக்கங்களிலிருந்து விலகியும் அதிருப்தி அடைந்து ஒதுங்கியோர் மத்தியிலும் ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தது.

ஆனால் அவர்கள் தம்மையே காப்பாற்றிக்கொள்ள முடியாத, அடுத்தவர் தயவில் அனுசரணையோடு இருக்கும் நிலையில் அவர்களை நம்பி வந்த தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு எப்படியான தப்பித்தல் வழிகளைக் காட்டி நின்றனர் என்பதற்கு இந்தச் சுய விமர்சனம் ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு அரசியற் தந்திரோபாயம் என்ற அளவிற்கூட இதற்கு எவ்வித பெறுமானமுமில்லை. தீப்பொறியின் அறிவிக்கை ஒரு அரசியற் குழப்பமான சிறு குழுவொன்றின் அனாதைத் தனமான பொறுப்பற்ற பிரலாபம் . அவர்களால் எப்படியேனும் தம்மைத் தகவமைக்க முடியவில்லை. இதில் அடுத்தவரைக் காப்பாற்றிப் பேணும் சால்பிற்கு எங்கு நோக !

அபத்தம் இதழுக்காக சுகன்


Read more...

Tuesday, February 13, 2024

மாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர். டி.பி.எஸ்.ஜெயராஜ்

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘ சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது.2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார்.

இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை.

தமிழரசு கட்சியின் மகாநாடு

சுமார் ஒரு தசாப்தகாலமாக ” நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது ” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது.

2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே.

ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது.

பொதுச்செயலாளர்

இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது.

தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார்.

மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர்.

பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை ‘ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர்.

பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம் ‘ என்ற வாக்குகளும் ‘ இல்லை ‘ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன.

சண்முகம் குகதாசன்

செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

சேனாதிராஜா அப்போது “விசித்திரமான ” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார்.

சிறிதரனும் சுமந்திரனும் மாவையின் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர்

சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது.

பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல.

சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார்.

சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா ” கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார்.

சட்டரீதியான நிலைப்பாடு

அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஔிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார்.

அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான நற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே.

ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும்.

இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம்.

ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார்.

மகன் கலையமுதன்

மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார்.

இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுைகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன.

மாவையின் கடந்த காலம்

தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன்.

அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார்.

அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை ” சேனாதி அண்ணை ” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே!

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com