Friday, September 13, 2024

பழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக தட்டிய அனுர

மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த யாழ் மாவட்டத்திற்கான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் வலுவானதொரு இளைஞர் அணி தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேபோல, எங்களுக்குச் செவிமடுக்கவும், எங்களுடன் உரையாடவும் இந்த இடத்தில் கூடியிருக்கிற உங்களனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனுமதியையும் கோருகின்றேன்…

இந்தச் செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தலொன்று நடைபெறவுள்ளதென்பதை நாமனைவரும் அறிவோம்… பிரசார நடவடிக்கைகளுக்காக எஞ்சியிருப்பது இரு வாரங்கள் எனப்படும் குறுகிய காலம் மட்டுமே… இந்தப் பிரதேசங்களின் தேர்தல் களம் தென்பகுதி அளவிற்கு சூடுபிடித்துக் காணப்படவில்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்…

எனினும், இந்த 21 ஆம் திகதி தேர்தலில் தெரிந்தெடுக்கப்படவிருப்பது முழு நாட்டுக்கும் தேவைப்படும் ஒரு தலைமைத்துவம்… உங்களுடைய வாழ்க்கைக்கும், உங்களுடைய எதிர்காலத்துக்கும் இந்த செப்டெம்பர் 21 இல் நீங்கள் எடுக்கப் போகும் தீர்மானமானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்… நீங்கள் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவைத் தோற்கடிக்க வாக்களித்திருந்தீர்கள்… எனினும், அவர் தோல்வியடையவில்லை… 2015 இல் நீங்கள் பெருவாரியாக மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்திருந்தது தெரிகிறது… எனினும், அவரது ஐந்து வருட கால ஆட்சியில் நாடு பாரிய சரிவுநிலைக்குத் தள்ளப்பட்டது… 2015 - 19 கால ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவிருந்தார்… அந்தக் காலகட்டத்தில் சஜித் பிரேமதாச அமைச்சரவை அமைச்சராகவிருந்தார்… அந்தத் தலைவர்கள் வடக்குக்கு மட்டுமல்ல தெற்கிற்கு அளித்த வாக்குறுதிகளையும் அலட்சியம் செய்து, மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

மக்களை ஏமாற்றும் இந்த அரசியலை நிறுத்தவே நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்… எங்கள் நாட்டுக்கு பாரியதொரு சமூக மாற்றமொன்று அவசியம்… அரசியல் மாற்றமொன்று அவசியம்… பொருளாதார ரீதியிலான மாற்றமொன்று அவசியம்… இன்று இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த மாற்றத்தை வேண்டி நிற்கிறார்கள்… யாழ்ப்பாண மக்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்… மாற்றமொன்றிட்காக முன்னிற்கும் தேசிய மக்கள் சக்தியை தெரிந்தெடுப்பதா…. அல்லது பழைய பாதையிலேயே பயணத்தைத் தொடர நினைக்கும் சஜித் அல்லது ரணிலை தெரிந்தெடுப்பதா… நீங்கள் எதனைத் தெரிந்தெடுக்கப் போகின்றீர்கள்… பழைய பாதையையா? அல்லது புதிய பாதையையா? புதிய பாதையை!...

சரி… நான் உங்களுக்கு பழைய பாதை மற்றும் புதிய பாதைக்கிடையிலான வேறுபாடுகள் சிலவற்றைக் கூறுகிறேன்… பழைய பாதை தான் இனவாதத்தை தூண்டிவிடும் பாதை… உங்களுக்குத் தெரியும் ராஜபக்சவின் ஆட்சி இனவாதத்தின் ஆழத்திற்கே சென்றிருந்தது… அந்த ராஜபக்ச முகாம் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது.. அதுதான் இலங்கையின் இனவாத முகாம்… அந்த மொட்டுக் கட்சியில் இருந்தோர் இன்று எங்குள்ளனர்? மொட்டுக் கட்சியின் பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்கவுடன்… மொட்டுக் கட்சியின் இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவுடன்… மொட்டுக் கட்சியின் சிறியளவிலானோர் நாமல் ராஜபக்சவுடன்… அப்படித் தானே… அந்த நாமல் ராஜபக்சவின் இனவாத முகாம் இன்று மூன்றாகப் பிரிந்துள்ளது.. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பத்து வருடங்கள் அமைச்சராகவிருந்த…. கோட்டாபயவின் அரசாங்கத்தில் இரண்டரை வருடங்கள் அமைச்சராகவிருந்த… மஹிந்தவின் கட்சியின் தவிசாளராகவிருந்த ஜீ எல் பீரிஸ் தற்போது சஜித்துடன் இருக்கிறார்…. அங்கு புதிதாக என்ன இருக்கிறது? மொட்டுக் கட்சியின் ஏனைய இனவாதக் குழுக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன்… மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த… கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த…. டலஸ் அழகப்பெரும இப்போது சஜித்துடன் இருக்கிறார்…. கோட்டாபயவுடன் இணைந்து வியத்மக வை உருவாக்கிய…. ஜெனீவாவுக்குச் சென்று தமிழ் மக்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாளக்க கொடஹேவா இன்று சஜித் பிரேமதாசவுடன்… அப்படித் தானே…

ஆகவே, எமது நாட்டில் இனவாத முகாமில் இருந்தவர்கள் மூன்று நான்கு குழுக்களாகப் பிரிந்து இன்று ஒன்றாக இருக்கிறார்கள்… ஆனால், எந்த காலகட்டத்திலும் இனவாதத்துக்கு எதிராக ஒரு கட்சி இருந்து வருகிறது… அது தேசிய மக்கள் சக்தி தான்… அவ்வாறெனில், இனவாத முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையா அல்லது இனவாத முகாமுக்கு எதிரானவர்களையா நீங்கள் தெரிவுசெய்ய வேண்டும்? பழைய பாதை இனவாதத்துக்கான பாதை… புதிய பாதை தேசிய ஒற்றுமைக்கான பாதை.. அதனையே நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்… அப்படியானால், அந்தக் கேள்விக்கான பதிலாக நாங்கள் யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? தேசிய மக்கள் சக்தியை…

எங்கள் நாட்டின் பொருளாதாரமும், பொது மக்களின் வாழ்க்கையும் சீர்குலையக் காரணமாக அமைந்தவை பாரியளவிலான ஊழல் மோசடிகள் மற்றும் வீண் விரயங்களே என்பது உங்களுக்குத் தெரியும்… நாட்டின் இன்றைய பின்னடைவுக்கு இயற்கை காரணம் ஏதுமுண்டா? எமது நாட்டின் பின்னடைவுக்குக் காரணம் இயற்கை வளங்கள் இல்லாமையா? இல்லை… எமது நாட்டின் சரிவுக்குப் பிரதான காரணம், ஊழல் மோசடிகளும், வீண் விரயங்களுமே… அப்படியாயின், ரணில் விக்ரமசிங்ஹ, சஜித் பிரேமதாச என்போர் பிரதிநிதித்துவப்படுத்துவது எந்த முகாமை? ஊழல் மோசடிகள், வீண் விரயங்கள் நிறைந்த பழைய பாதையை… ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கிறார்கள் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க போன்றோர்… அதே போல ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான மஹிந்தானந்த, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் மத்திய வங்கியைக் கொள்ளையிட்ட ரணில் விக்ரமசிங்க போன்றோர் ஒரு குழுவாக…

சஜித் பிரேமதாசவுடன் இருப்போர் யார்? பெருந்தெருக்கள் அமைச்சைப் பொறுப்பெடுத்து பொது மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரிஎல்ல… நான் பார்த்தேன் நேற்று பாராளுமன்றத்தில் நாளக்க கொடஹேவாவின் மோசடிகள் குறித்து சுசில் பிரேமஜயந்த கதைக்கிறார்… நாளக்க கொடஹேவா இருக்கிறார் சஜித் பிரேமதாசவுடன்… கலாசார அமைச்சில் பல பில்லியன்களை வீணடித்த சஜித் பிரேமதாசவுடன்… அவர்கள் இருவரும் செல்வது ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களைக் கொண்ட பழைய பாதையில்… எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஊழல், மோசடிகள் மற்றும் வீண் விரயமற்ற பாதையொன்று அவசியமென்றால்…. அந்த பாதை தான் தேசிய மக்கள் சக்தியின் புதிய பாதை… நீங்கள் தெரிவு செய்யப் போவது பழைய பாதையையா? அல்லது புதிய பாதையையா? என்ன சொல்கிறீர்கள்?

எந்த காலகட்டத்திலும் இந்த நாட்டு மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, அது திருடர்கள் தண்டிக்கப்படவும், திருடப்பட்டவற்றை மீளக் கையகப்படுத்திக் கொள்ளவும்… 2015 - 19 காலப் பகுதி ஆட்சியில் ரணில் சஜித் இருவரும் மோசடிகாரர்களைப் பாதுகாத்தனர்… ஆகவே, புதிதாக எமக்குத் தேவை இந்த மோசடிகாரர்களையும், திருடர்களையும் தண்டிக்கக் கூடிய ஓர் அரசாங்கம்… திருடப்பட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்திக்கொள்ளக் கூடியதோர் அரசாங்கம்… யார் அந்த அரசாங்கம்? திருடர்களைப் பாதுகாக்கும், திருட்டில் ஈடுபடும் பாதை…. ரணில் சஜித் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய பாதை… திருட்டினை ஒழிக்கும்…. திருடியவர்களைத் தண்டிக்கும்… திருடப்பட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்திக் கொள்ளும் புதிய பாதை… தேசிய மக்கள் சக்தியின் பாதை… இவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள்? எதனை? பழைய பாதையையா அல்லது புதிய பாதையையா?

அது போல தான் பழைய பாதை எமது நாட்டின் வளங்களை விற்பனை செய்து… எமது நாட்டின் உற்பத்திகளை வீழ்ச்சியடையச் செய்து… எமது நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய பாதை… ஆனால், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதை தான் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு… நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் பாதை… நீங்கள் தெரிவுசெய்ய வேண்டிய பாதை எது? வளங்களை விற்பனை செய்த… இடங்களை விற்பனை செய்த… மன்னாரின் இடங்களை இந்தியாவுக்குத் தாரை வார்த்த… அவ்வாறான பழைய பாதையையா? நாட்டை புதிய திசை நோக்கிப் பயணிக்கச் செய்யும்… தேசிய மக்கள் சக்தியின் பாதையையா? என்ன சொல்கிறீர்கள்? எது மாற்றமடைய வேண்டும்?

உங்களுக்குத் தெரியும் இப்போது இந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பிரதேசங்கள் அனைத்திலுமே போதைப் பொருளானது படிப்படியாக பரவிக் கொண்டு வருகிறது… இந்த யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதில்லை… இந்த இலங்கையில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதில்லை… அவை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன… வான் வழியாகவோ… அல்லது கடல் வழியாகவோ… இன்று என்ன நடந்திருக்கிறது? எமது நாடு போதைப் பொருட்களின் மாபெரும் சொர்க்கபுரியாக மாறியுள்ளது… இவை எல்லாவற்றிட்கும் அரசியல்வாதிகளே பாதுகாப்பளிக்கின்றனர்…

நீங்கள் பார்த்திருப்பீர்கள் சமீபத்தில் சக்தி தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது… ஒரே கூட்டணியில் இருந்த வேலு குமாரும், திகாம்பரமும் அதில் பங்குபற்றியிருந்தனர்… 2020 தேர்தலில் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டிருந்தனர்… வேலு குமார் ஐமச சார்பில் கண்டியில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தார்… திகாம்பரம் நுவரெலியாவில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தார்… இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவளிக்கிறார்… வேலு குமார் ரணிலுக்கு ஆதரவளிக்கிறார்… இருவருக்குமிடையில் விவாதம் நடைபெற்றது… திகாம்பரம் வேலு குமாரைப் பார்த்து, ‘பார் குமார்‘ என்கிறார்… வேலு குமார், திகாம்பரத்தைப் பார்த்து ‘குடு திகா‘ என்கிறார்… அவ்வாறாயின், இந்த போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அரசியல்வாதிகள்… அந்தக் கட்சிகளுக்கு பணத்தை வாரியிறைப்பவர்கள் இந்தப் போதைப் பொருள் வியாபாரிகளே… நீர்கொழும்பில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதி ஒருவர் தான் ரணிலுக்கு ஆதரவளித்து வருகின்றார்… அவர்கள் யார்? போதைப் பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கும், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு உதவி செய்யும்… அவர்கள் தான் பழைய பாதையில் இருப்பவர்கள்… நாங்கள் யார்? போதைவஸ்து வியாபாரிகளுடன் தொடர்புபடாத, போதைப் பொருள் வியாபாரத்துக்கு பங்களிப்புச் செய்யாத… போதைவஸ்து வியாபாரத்தை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்கக் கூடிய சக்தி தான் தேசிய மக்கள் சக்தி… ஆகவே, தெரிவு செய்யப்பட வேண்டியது எது? போதைவஸ்துவைக் கொண்டு வரும் பழைய பாதையையா? போதைவஸ்துவை இல்லாதொழிக்கும் புதிய பாதையையா? எது வேண்டும்?

புதிய பாதை… எமது நாட்டில் சட்டம் இருக்கின்றது… எமது நாட்டு அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லர்… ரணில் விக்ரமசிங்க, சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார்… நாட்டின் அடிப்படை அரசியமைப்பை மீறுகிறார் நாட்டின் ஜனாதிபதி… பதில் பொலிஸ் மா அதிபரொருவரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்குக் கட்டளையிட்டது… ஜனாதிபதி அதனை நிறைவேற்றவில்லை… நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்காத ஜனாதிபதி தான் ரணில்…. அவர்கள் சட்டத்தை அமுல்படுத்தப் போவதில்லை…

அதுமட்டுமல்ல… நீங்கள் பார்த்திருப்பீர்கள்... சஜித் பிரேமதாசவின் தங்கை 20 இலட்ச ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வங்கியொன்றில் வைத்து பிடிபட்டார்… கடந்த நாட்களில் மஹிந்த ராஜபக்ச கூறினார், அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் சஜித்தின் தங்கை பிடிபட்டார் என்று.. மஹிந்த ராஜபக்ச என்ன கூறினார்… பிரேமதாசவின் மகள் என்பதால் காப்பாற்றியதாகக் கூறினார்… அவர்களுக்கு மோசடிகளிலும், சட்ட விரோத காரியங்களிலும் ஈடுபட்டு விட்டு சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது…

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக… கலாசார நிதிய மோசடிக்கு எதிராக… சிஐடி யில் விசாரணையொன்று நடந்து வந்தது… அந்த விசாரணை இடை நிறுத்தப்பட்டது…. காரணம் என்ன? அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை… அவர்கள் சட்டத்தை விட மேலான நிலையில் இருப்பவர்கள்… எனவே, பழைய பாதையென்பது எப்படிப்பட்டது? நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஜனாதிபதிகள்… நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்க்கப்பட்ட ஜனாதிபதிகள்… சட்டத்தை அசட்டை செய்யும் அரசியல்வாதிகள்… அது தான் பழைய பாதை… நாங்கள் அமைக்கப் போகும் புதிய பாதை எது? அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்… அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர்…. அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள்… சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்… இன்று எமது நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களா? அதிகாரத்திலிருப்போருக்கு ஒரு சட்டம்… ஏழை எளியோருக்கு இன்னொரு சட்டம்… அது தான் சஜித், ரணில் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய பாதை…

நாங்கள் பரிந்துரைக்கும் புதிய பாதை எது?

இனம், மதம்…. ஏழை, பணக்காரன்… அதிகாரத்திலிருப்பவர், இல்லாதவர்… எந்த பேதங்களுமின்றி.. சகலருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் ஒரு நாடு… எது அவசியம்? பழைய பாதையா? புதிய பாதையா? புதிய பாதை… அப்படியென்றால், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி… இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொள்ளும் போது நீங்கள் புரிந்து கொள்வதென்ன? இந்த நாட்டில் மாற்றமொன்று அவசியமென்றால்… இனவாதத்திற்குப் பதிலாக இன நல்லிணக்கம் அவசியமென்றால்… களவு, ஊழல், மோசடி மற்றும் வீண் விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டுமென்றால்… திருடர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால்… எமது நாட்டு சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமானவர்களாக நடத்த வேண்டுமென்றால்… யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? தேசிய மக்கள் சக்தியை…

இன்று முழு நாட்டிற்குமான புதியதொரு கோரிக்கை உள்ளது… எமது நாட்டிற்கு மாற்றமொன்று அவசியமென்று… எமது நாடு தொடர்ந்தும் இதே விதமாகச் செல்ல இடமளிக்க வேண்டாமென்று… இன்று தென்னிலங்கை மக்கள்…. இலட்சக்கணக்கான மக்கள்... இந்த மாற்றத்திற்காக முன்னிற்கிறார்கள்… நேற்று மற்றும் இன்று அஞ்சல் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டது… நீங்கள் அறிந்த ஒரு நண்பரிடம் கேட்டுப் பாருங்கள்… பொலிஸார் எப்படி… ஆசிரியர் எப்படி… கச்சேரியில் எப்படி என்று… 75, 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள்… அந்த மாற்றத்திற்காக… தேசிய மக்கள் சக்திக்காக… தென்பகுதி மக்கள் ஓரணியாக திரண்டிருக்கிறார்கள்… இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என… தென்பகுதி மக்கள் பெருமிதத்துடன் எழுந்து நிற்கிறார்கள்… நான் வடக்கு வாழ் மக்களிடம் கேட்கிறேன்… நீங்கள் அந்த மாற்றத்தை எதிர்ப்பீர்களா அல்லது அதற்கு ஆதரவு தருவீர்களா? என்ன நினைக்கிறீர்கள்?

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிக்கை எனது நினைவுக்கு வருகிறது… அது முழு நாடும் எதிர்பார்த்திருக்கும் அந்த மாற்றத்தை எதிர்ப்பதாகக் காணப்படுகிறது… ஏனைய நாட்களில் நடப்பதைப் போன்றதொரு தேர்தலல்ல இது… ஏனைய நாட்களில் வடக்கு வாழ் மக்கள் யோசித்ததெல்லாம், ராஜபக்ச அணியினருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றியே… 2010 இல் அவர்கள் ராஜபக்சவினருக்கு எதிராக பொன்சேகாவுக்கு வாக்களித்தனர்… 2015 இல் ராஜபக்ச படையணிக்கு எதிராக மைத்ரிபாலவுக்கு வாக்களித்தனர்… 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்… நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வடக்கு மக்களிடமிருந்து… நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் சுமந்திரன் ஐயாவிடமிருந்து… யாருக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறீர்கள்? யாருக்கு எதிராக? ராஜபக்சவின் ஒரு பகுதி அவரிடமா இருக்கிறது? அப்படியென்றால், யாருக்கு எதிராக இந்த தமிழ் மக்களை அழைக்கிறீர்கள்? இந்த தமிழ் மக்களை வேறொன்றுக்கும் எதிராக அல்ல…. தெற்கில் இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆதரிக்கும் அந்த மாற்றத்திற்கு எதிராக…. சமூகம் வேண்டி நிற்கும் புதிய மாற்றத்திற்கு எதிராக… முழு நாட்டிற்கும் தேவை புதியதொரு மாற்றம்… அந்த மாற்றத்திற்காக நாமனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம்… தெற்கில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி… மக்கள் ஒன்றுதிரண்டுள்ளார்கள்… இந்த நாட்டிற்கு புதியதொரு மாற்றம் தேவை… பழைய பாதையில் செல்ல வேண்டுமா? பழைய பாதையில் முன்னேறிச் செல்ல வடக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமா? நாங்கள் வடக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்… புதிய பாதைக்காக பழைய பாதையைக் கைவிட்டு விட்டு ஒன்று திரளுங்கள்…

ஆகவே, இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த அந்த தீர்மானம்… இந்த புதிய மாற்றத்திற்கு எதிரானதொரு தீர்மானம்… 2010, 15, 19 காலப்பகுதியில் ராஜபக்சக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம்… ஆனால், 2024 இல் எடுத்திருக்கும் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரானதொரு தீர்மானம்… இந்த நாட்டில்… இந்தப் பகுதியில் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் :
தொழில்வல்லுனர்களாகிய நீங்கள் அந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கின்றீர்களா?
புத்திஜீவிகள் மற்றும் பேராசிரியர்கள் போன்றோர் இங்கு சமூகமளித்துள்ளீர்கள்… நீங்கள் மாற்றத்திற்கெதிரான இந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கின்றீர்களா?
வடக்கு வாழ் மக்களிடம் நான் தயை கூர்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம்… இந்த மாற்றத்திற்கான பங்குதாரர்களாக நீங்கள் மாறுங்கள்…

இந்த மாற்றத்திற்கு எதிரானவர்களல்லாதிருங்கள்…
இந்த மாற்றத்தை அரவணைக்கிறவர்களாயிருங்கள்…
இந்த மாற்றத்திற்காக பெருமிதத்துடன் உழைக்கிறவர்களாக இருங்கள்…

அதுவல்லவா இங்கு நடந்தேற வேண்டும்… நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்… நாட்டின் பெரும்பாலான மக்கள் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் போது யாழ் மக்களாகிய நீங்கள் மட்டும் அதற்கு முரணாக எவ்வாறு செயற்பட முடியும்?
இலங்கை தமிழரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்?
நாங்கள் இந்த யாழ்ப்பாணத்தின் புத்திஜீவி சமூகத்திடம் கேட்டுக் கொள்வது…. இந்த புத்திஜீவிகள் யாழ் மக்களின் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பாரியளவிலான பணிகளை மேற்கொள்ள முடியும்…
இவ்வாறான மாற்றத்திற்கெதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் அனுமதிக்காதீர்கள்… அந்தத் தீர்மானம் தவறானது என இந்த மக்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள்…

நாங்கள் வெற்றி பெறுவோம்… தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறுவோம்… இந்த வெற்றியின் பங்குதாரர்களாக யாழ் மக்களும் மாறுங்கள்… அந்த மாபெரும் மாற்றத்திற்கு எதிரானவர்கள் என நீங்கள் முத்திரைக் குத்தப்பட வேண்டாம்... நீங்களும் அந்த மாற்றத்தின் பங்குதாரர்களாகுங்கள்…
புதிய பாயொன்றை முனைவது போல நாங்கள் இந்த நாட்டை புதிதாகப் பின்னுவோம்…
அனைத்தையும் நாங்கள் புதிதாக ஆரம்பிப்போம்… சில வருடங்கள் கடந்த பின்பு உலகின் ஒரு செல்வந்த நாடாக இந்த நாட்டை நாம் மாற்றிக் காட்டுவோம்…
மலர்ந்த முகத்துடனான மக்களைக் கொண்ட ஒரு நாடாக இதை நாம் மாற்றுவோம்…
யுத்த பிணக்குகளற்ற… ஏனைய மக்கள் கூட்டத்துடன் சந்தேகம், பகையுணர்வு, கோபங்கள் போன்றவையற்ற ஒற்றுமையான ஒரு நாடாக இதனை மாற்றுவோம்…
கல்வியை மேம்படுத்தக் கூடிய… விவசாயிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடாத்திச் செல்லக் கூடிய.. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்யக் கூடிய.. இந்த யாழ்ப்பாணத்திலிருக்கும் மீனவர்களுக்கு அச்சமின்றி, சந்தேகமின்றி நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்…

நீங்கள் உங்கள் வடக்குப் பகுதி கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றீர்கள்…. ஆனால் இந்தியாவின் ரோலர் படகுகளினால் உங்களது வலைகள் போன்றவை நாசம் செய்யப்படுகின்றன… நாம் நமது வடக்கின் மீனவ சமுதாயத்திற்கு தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்வோம்… நாங்கள் யாருக்கும் அடிபணியும் ஓர் அரசாங்கமல்ல…. நாங்கள் வலுவான இராஜதந்திர உறவுகளை விரும்பும் ஓர் அரசாங்கமாகும்… எனினும், எமது பங்கிற்கான முழு உரிமை எமக்கிருக்க வேண்டும்… அந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசாங்கத்தையே நாங்கள் அமைக்கப் போகிறோம்… அதற்கான ஒத்துழைப்பு வழங்குவது தான் இன்று யாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகவுள்ளது… இந்த அரசியலை வெற்றி கொள்வது தான் யாழ் மக்களின் பொறுப்பாக இருந்து வருகிறது என நாங்கள் நினைக்கிறோம்… நீங்கள் இந்த வெற்றிக்கு எதிரானவர்களாக மாற வேண்டாம்… நீங்கள் இந்த வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிப்பவராக, இந்த வெற்றியின் பங்குதாரர்களாக மாறுங்கள்… நீங்கள் அதற்கு ஆயத்தமாக இல்லையா? நீங்கள் இந்த வெற்றிக்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? இந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? நீங்கள் தேசிய ஒற்றுமைக்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? நீங்கள் ஊழல், மோசடிகார்களின் பாதுகாவலர்களாக மாறுவீர்களா? நீங்கள் சட்டத்தைப் புறந்தள்ளி அதிகாரத்திலிருப்பவர்களுக்கு பாதுகாவலராக மாறுவீர்களா? அப்படியாயின் நீங்கள் 21 ஆம் திகதி ரணிலுக்கு அல்லது சஜித்துக்கு வாக்களிக்கலாம்….

ஆனால் நீங்கள் மாற்றத்திற்கான பங்குதாரர்களாக மாறினால், நீங்கள் மாற்றத்திற்கான பங்காளிகளாக மாறினால்… நீங்கள் வாக்களிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்திக்கே… நான் உங்கள் முன் ஒரு வியாபாரியாக வரவில்லை.. நான் உங்கள் முன் ஒரு தரகராக வரவில்லை… நான் இதைத் தருகிறேன் எனக்கு அதைத் தாருங்கள் எனக் கூறி வாக்குக் கேட்பதற்கு நான் வரவில்லை… எமக்கிருப்பது யாழ்ப்பாண தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தெற்கு அரசியலுடன் செய்து கொள்ளும் ஒரு கொடுக்கல் வாங்கல் முறையல்ல… தெற்கின் அநேகமான அரசியல்வாதிகள் வடக்குடன் மேற்கொள்வது ஒரு கொடுக்கல் வாங்கலைத் தான்…. நீங்கள் வாக்களியுங்கள்… 13 ஐத் தருகிறோம்… நீங்கள் வாக்களியுங்கள்… 13 ப்ளஸ் தருகிறோம்.. நீங்கள் வாக்களியுங்கள்… காணி அதிகாரத்தைத் தருகிறோம்… எவ்வளவு காலமாக இதையே சொல்லி வருகிறார்கள்…. நான் வந்தது அதற்காகவல்ல… நான் உங்களுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள வரவில்லை… நான் உங்களுடன் பேரம் பேச வரவில்லை… நான் உங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்காக வந்தால் நீங்கள் கூறுவீர்கள் 13 போதாது ப்ளஸ் கொடுங்கள் என்று…. நான் அவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்காக வரவில்லை… எனது முதலாவது நோக்கம் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதே…

எமது நாட்டில் அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டது இன்னுமொருவருக்கு எதிராக.. தெற்கில் அரசாங்கம் அமைக்கப்படுகிறது வடக்கிற்கு எதிராக…. சிங்கள அரசாங்கம் அமைக்கப்படுகிறது தமிழ் மக்களுக்கு எதிராக… எனது முதலாவது முயற்சி, மற்றொருவருக்கு எதிரான அரசியல் என்பதை மாற்றியமைப்பது.. மற்றொருவருக்கெதிராக அரசாங்கம் அமைத்தல் என்பதை மாற்றியமைப்பது.. இலங்கையில் முதன் முறையாக வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்து வருகிறது. சிங்கள் தமிழ் முஸ்லிம் பறங்கியர் மலே என அனைத்து மக்களினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் அரசாங்கத்தை உருவாக்குவது… அவ்வாறானதொன்றை உருவாக்குவோம்… அதன் பின்னரான கொடுக்கல் வாங்கலாக அந்த அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமொரு பொறுப்பு காணப்படுகிறது…. கொடுக்கல் வாங்கலின் போது அவ்வாறானதொரு பொறுப்பு காணப்படாது…. முதலில் வாக்கினைப் பெற்றுக் கொண்டு பின்னர் வழங்குவதாகத் தான் உடன்பாடு காணப்படும்.. வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பின்பு கொடுக்கவும் முடியும் கொடுக்காமலிருக்கவும் முடியும்.. கொடுக்கல் வாங்கல் என்பது அவ்வாறானதே…. கடன்களைத் திருப்பிச் செலுத்தாத எத்தனையோ பேர் உள்ளனர்… கொடுக்கல் வாங்கல் என்பது அவ்வாறானதே… தேர்தல் காலங்களில் வருவார்கள்… 13 ஐத் தருவோம் என்பார்கள்… 13 ப்ளஸ் தருவோம் என்பார்கள்… உங்களுக்கு அதனை நீட்டுவார்கள்… வெற்றுக் காசோலையொன்றைத் தருவார்கள்.. உங்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள்… சில நாட்கள் கடந்த பின்னர் காசோலை காலாவதியாகி விடும்… பெறுமதியிழந்து விடும்… அதில் பிரயோசனம் இருக்கிறதா? நான் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்காக இங்கு வரவில்லை என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்…

நாங்கள் ஒன்றிணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்குவோம்… நாம் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து தீர்வுகளைத் தேடுவோம்… அவை தான் வெற்றிகரமான தீர்வுகளாக அமையும்… இந்த கொடுக்கல் வாங்கல்கள் ஒருபோதும் வெற்றிகரமானவையாக அமையாது… அவை எம்மை ஏமாற்றத்திற்குட்படுத்துபவையாகவே காணப்படும்.. நீங்கள் எத்தனை முறை ஏமாற்றத்திற்குட்பட்டுள்ளீர்கள்… இல்லை… நாம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவோம்… வடக்கு, தெற்கு, கிழக்கு அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாடுவோம்… அது அனைவரின் ஒத்துழைப்புடனும் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்கம் என்றதன் அடிப்படையில்…. அங்கு அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதொரு பொறுப்பு காணப்படுகிறது.. அதற்கான ஒரு வழிகாட்டலுக்காக…. நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில் அது தொடர்பான சில விடயங்களை உள்ளடக்கியுள்ளோம்… நான் அதிலுள்ள சில விடயங்களை இப்போது உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.. எமது நாட்டில் நீண்ட காலமாக ஒரு புதிய அரசியமைப்புக்கான தேவை இருந்து வருகின்றது… 2000 ஆம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.. ரணில் விக்ரமசிங்க அதனை பாராளுமன்றத்தில் தீயிட்டுக் கொளுத்தி முடிவுக்குக் கொண்டு வந்தார்… மீண்டும் 2015 - 19 காலப் பகுதியில் அரசியலமைப்புக் குறித்து ஒரு உரையாடல் இருந்து வந்தது… எனினும் அது ஒரு முடிவுக்கு வரவில்லை.. நாங்களனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கவிருக்கும் அரசாங்கத்தில் 2015 - 2019 காலகட்டத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காகக் கடைபிடிக்கப்பட்ட செயற்பாட்டினை துரிதமாக நிறைவேற்றி சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக் கூடியவாறு ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்துக்கும், மாவட்டத்துக்கும் மற்றும் மாகாணத்துக்கும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கின்ற அரச ஆளுகைக்கான அனைத்து இனத்தவர்களையும் அரசியலில் பங்காற்றுவதனை உறுதி செய்கின்ற புதிய அரசியலமைப்பொன்றை நாங்கள் தயாரித்து நிறைவேற்றுவோம்….

அதாவது நாங்கள் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை பரிந்துரைத்துள்ளோம்.. அந்த முன்மொழிவுகளின் வரைபுகளை சமர்ப்பித்துள்ளோம்… இந்த அரசியலமைப்பை மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புடன் இலங்கையின் முதன்மையானதொரு சட்டமாக நிறைவேற்றுவோம்.. மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளாக நடாத்தப்படவில்லை… உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இரண்டு வருடங்களாக நடாத்தப்படவில்லை.. ஆகவே… தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஒரு வருடத்திற்குள் நடாத்தி ஆட்சியில் பங்குபற்றுவதற்கான மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம்…

எமது நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலே எனும் இனக் குழுமங்கள் காணப்படுகின்றன… பௌத்தம் இந்து கத்தோலிக்கம் இஸ்லாம் என பல்வேறு மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்… சிங்கள மற்றும் தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுபவர்கள் காணப்படுகின்றனர்… இவ்வாறான பல்வகைத்தன்மையுடைய மக்கள் எமது நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்… ஆகையால் நாங்கள் இனவாதம் முற்று முழுதாக இல்லாமல் ஆக்கப்படும் வரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் ஏதேனும் நிச்சயமற்றத் தன்மை மற்றும் ஓரங்கட்டப்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயமுள்ளது… ஆகவே நாங்கள் ஒரு ஆணைக்குழுவை நிறுவ உள்ளோம்… பாரபட்சத்துக்கெதிரான சட்ட ரீதியான அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை நாம் அமைக்கவுள்ளோம்.. அதன்படி எவரேனும் தான் கடைபிடிக்கும் மதத்தின் அடிப்படையில்... தான் பேசும் மொழியின் அடிப்படையில்… தான் பின்பற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினால் அது குறித்து இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்…. இனவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல் போகச் செய்வித்தல் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவோம்…

இனக்கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல்… அரசியலமைப்பின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்துதல்.. இவ்வாறு சகல மக்களினதும் உரிமைகளை உறுதிசெய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.. ஆகவே நாங்கள் நினைக்கின்றோம்…. இலங்கையில் மக்களிடையேயான நம்பிக்கையில் ஏதும் பழுது ஏற்பட்டிருந்தால்.. அவ்வாறு பழுதுபட்ட நம்பிக்கையை சரிசெய்து மீளக் கட்டியெழுப்பக் கூடிய இயலுமை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது… இப்போது உங்கள் முன் இருப்பது ஒரே ஒரு கேள்வி தான்.. இந்த மாற்றங்களுடன் கூடிய புதிய அரசாங்கமொன்றை செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அமைக்கப் போகிறோமா…. அல்லது இந்த இனவாத, ஏமாற்று அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கப் போகின்றோமா… அது தான் செப்டெம்பர் 21 ஆம் திகதி உங்கள் மேசை மீதிருக்கும் கேள்வி….

கடந்த காலங்களில் வட பகுதி மக்களுக்கு தென் பகுதி மக்களைக் குறித்த ஒரு சந்தேகம் நிலவி வந்தது பற்றி நான் அறிவேன்… தென் பகுதி மக்களுக்கு வடக்கு மக்களைக் குறித்த ஒரு சந்தேகம் நிலவி வந்தது.. எனினும், அது இப்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது… எனினும் தெற்கு மக்கள் மாற்றத்திற்காக ஒன்றிணைந்திருக்கும் பொழுது அந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக நீங்கள் மாறினால் தெற்கு மக்களிடையே என்ன மாதிரியானதொரு மனோநிலை ஏற்படும் என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்… அந்த மாற்றத்திற்கு முரண்பட்டவர்களாக.. அந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக… யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்படுவதனை நீங்கள் விரும்புகிறீர்களா? வடக்கு அடையாளப்படுத்தப்படுவதனை நீங்கள் விரும்புகிறீர்களா? நான் மீண்டும் உங்களுக்கு உறுதிப்படுத்துகின்றேன்….. நாங்கள் வெற்றி பெறுவோம்… எனினும், அந்த வெற்றியின் பங்காளர்களாக நீங்கள் மாற வேண்டும்… அதற்கு எதிரானவர்களாக நீங்கள் மாற வேண்டாம்….

சுமந்திரன், சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய ஆதரவினை நாம் ஒருபோது இனவாதமாகப் பார்க்கவில்லை.. எனினும், உங்களுக்கு நினைவிருக்கிறதா 2015 இல் ரீஎன்ஏ மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த பொழுது…. இன்று சஜித்தின் தேசிய அமைப்பாளராக இருக்கும் திஸ்ஸ அத்தநாயக்க அன்று மஹிந்தவுடன் இருந்தார்.. மஹிந்தவுடன் இருந்து சம்பந்தன் மற்றும் மைத்ரிபாலவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி ஒரு உடன்படிக்கையைத் தயாரித்தார்.. போலி உடன்படிக்கையொன்றை தயாரித்தார்.. அன்று ரீஎன்ஏ மைத்ரிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய பொழுது அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்… போலி ஆவணங்களைத் தயாரித்தார்கள்… திருட்டு ஒப்பந்தங்களை தயாரித்தார்கள்…. மைத்ரிபால நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காக ரீஎன்ஏ வுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்தார்கள்.. அந்த திஸ்ஸ அத்தநாயக்க… இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்…. ஆனால் நாங்கள்.. சுமந்திரன் மற்றும் சஜித்துக்கிடையில் ரகசிய ஒப்பந்தமொன்றிருக்கிறது என நாங்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அவ்வாறான இனவாத அணுகுமுறைக்குள் நாங்கள் செல்ல மாட்டோம்… எனினும், இதற்கு முன்னரான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ரீஎன்ஏ ஏதாவதொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போது தென்பகுதியில் அதற்கெதிராக மாபெரும் கோஷங்களை உருவாக்கினர்.. நாங்கள் அவ்வாறான இழிவான அரசியலுக்குள் செல்ல மாட்டோம்.. ரீஎன்ஏ ஏதேனுமொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போதெல்லாம் தெற்கில் அச்சத்தை உண்டு பண்ணினர்.. நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியினது சஜித்துக்கு ஆதரவளிக்கும் இந்தத் தீர்மானத்தை, தெற்கில் இனவாதத்தை தூண்டுவதற்காக மிகச் சிறிய அளவிலேனும் பயன்படுத்தப் போவதில்லை….

எனினும் நாங்கள் மிகவும் நேர்மையாக தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.. எவருக்கும் ஆதரவளிப்பதற்கான ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கிறது… அது அவர்களுடைய உரிமை…. அவர்கள் தனியொரு கட்சியாக செயற்படுவது இவ்வாறான தீர்மானங்களை எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு இருப்பதனால் தான்… ஆகையால், தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அவர்களது ஜனநாயக உரிமைக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம்… எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறோம்…. அது ஜனநாயகம்…

ஆகவே நான் வடக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்… நீங்கள் அந்த பழைய அரசியல் பாதையை விட்டு விலகி புதிய அரசியல் மாற்றத்திற்காக ஒன்று சேருங்கள்…. எனக்குத் தெரியும் வடக்கு தெற்கு கிழக்கு என்ற பேதங்களின்றி புதிய தலைமுறை எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்… இன்று இந்த மேடையில் ஏறி அதிகளவானோர்… இளைஞர் யுவதிகள் அதிகளவானோர்.. எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்… நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்…. நீங்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்… ஆகவே இளம் தலைமுறையினரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்… புத்திஜீவிகள் கல்விமான்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.. இந்த மாற்றத்தை மேற்கொள்வதா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்…. தூர கிராமங்களில் வசிக்கும் தாய்மார் தந்தைமாரிடம் நான் கேட்கிறேன்… இனிமேலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வசதியில்லாத.. வைத்தியசாலைகளில் மருந்துபொருட்கள் இல்லாத…. விவசாயத்தை மேற்கொள்ள முடியாத…. உங்கள் துன்பகரமான வாழ்க்கை முறையை விட்டு விட்டு முன்னேற வேண்டாமா இல்லையா என உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்… அதனால் நான் இங்கு குறிப்பிடும் விடயங்கள் அனைத்தையும் நீங்கள் கவனத்திலெடுத்துக் கொண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்தை நீங்கள் மேற்கொள்வதற்கான அறிவு உங்களுக்குக் கிடைக்கட்டும்… ஞானம் பிறக்கட்டும்…. என வேண்டிக் கொண்டு நான் நிறைவு செய்கிறேன்… நன்றி….



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com