அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.
தனிமனித ஆளுமையும் அரசியற் தெளிவும் கொண்ட டொமினிக்- கேசவன் - தான் சார்ந்த புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி அந்த அமைப்பிலிருந்த முரண்பாடுகளை ,குழப்பங்களை ,நெருக்கடிகளை தன் பார்வையில் தீப்பொறி என்ற சிறிய அமைப்பொன்றை உருவாக்கி புதியதோர் உலகம் என்ற நூலைத் தன் பார்வையில் எழுத அதை வெளியிடுவதற்கு என் எல் எவ் ரி , தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கின்றது.
ஹற்றன் நசனல் வங்கியில் என் எல் எவ் ரி கொள்ளையடித்த பணத்தில் இப் புதினத்தை வெளியிட ஆங்கே புல்லுக்கும் பொசிந்ததுபோல் நிதியுதவி கிடைக்கிறது.
இந்த நாவலை எல்லா மட்டங்களிலும் கொண்டுபோய்ச் சேர்க்க புலிகள் வேலை செய்கிறார்கள். அப்போது புலிகளும் என் எல் எவ் ரியும் தம் பிரதான எதிர்த்தரப்பாகக் கருதியிருந்தது புளொட் அமைப்பைத்தான்.
தமிழ் நாட்டில் அச்சடித்த நூலைப் புலிகள் தம் படகுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்து வினியோகிக்கிறார்கள். ஆனால் உயிராபத்தான நெருக்கடிகளை தீப்பொறி அமைப்பினர் எதிர்கொண்டபோது அவர்களுக்கு முதலில் பாதுகாப்பு வழங்கியது புலிகள்தான்.
இப்போது புலிகளின் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்ட தீப்பொறியினரைச் சந்திக்கவரும் இதர அமைப்பாளர்கள் புலிகளின் கண்காணிப்பினுள் வருகிறார்கள்.
இப்படியிருக்க புளொட்டிலிருந்து வெளியேறியபின் தீப்பொறி அமைப்பினர் தம் கருத்தியல்களை மீள வடிவமைக்க வேண்டியிருந்தது.
தமிழீழம் ,தமிழ்த் தேசியம் இவற்றை முன் மொழியாவிடினும் அதற்கிணையாக ஒரு குறுங்குழுவாத சிந்தனை முறையில் தம்மைப் பாடுபடுத்தி, ஈடுபடுத்தி ,அறியப்படுத்திக் கொண்டார்கள் . இத்தனைய குறுங்குழுவாதச் சிந்தனை முறையின் விருப்பார்வங்களை புதியதோர் உலகத்திலும் காணலாம்.
அந்த நாவலில் ஒரு பாத்திரமாக வரும் ஜான் மாஸ்ரர் கனடாவிலிருந்து எழுதிய எழுத்துக்களில் மோசமாக திரிபாயும் குறுக்கமாயும் இவற்றைக் காணலாம். இந்த நாவல் இத் தீப்பொறிக் குழுவினரை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. முற்றுமுழுதாக தலைமறைவாக இருக்கவேண்டிய நிலையில் புலிகளும் என் எல் எவ் ரி யும் இதன் வினியோகத்தைக் கையேற்றுப் பிரச்சாரப்படுத்திக் கொண்டார்கள் எனப் பார்த்தோம்.
தமிழீழக் கட்சி என்ற பெயரில் தம்மைத் தளமாற்றம் செய்த தீப்பொறியினர் புலிகளின் ஒவ்வொரு செய்கைக்கும் செயலுக்கும் நியாயம் சொல்ல வேண்டியவராயினர். எப்படியெனில் ஒரு சிறு உதாரணம் சொல்லலாம் , மாணிக்கதாசனைக் கிளைமோர் தாக்குதலில் புலிகள் கொன்றபோது பீடை ஒழிந்தது ! என தம் பத்திரிகையில் எழுதிவேண்டிய நிலை வந்தது.
பின்னர் "உயிர்ப்பு" என ஒரு சித்தாந்தக் கோட்பாட்டு சஞ்சிகையை கொண்டுவந்தபோதும் அதற்குள் இருந்த அக முரண்பாடுகளால் அந்த எத்தனமும் இல்லாமலாகி பின் தீப்பொறி ,தமிழீழக் கட்சி, உயிர்ப்பு இவையெல்லாமும் காணாமலானது.
முதற்பதிப்பு 1985 இல் வெளிவருகிறது. தோராயமாக ஆண்டின் இறுதிப்பகுதி எனக் கொண்டாலும் 1986 பிப்ரவரியில் நடந்த தளமாநாட்டிற்கு முன்னரே நூலும் தீப்பொறி அமைப்பும் தயாராகிவிடுகின்றது . இரண்டு மா நாடுகளிலும் கோவிந்தனோ ஜான் மாஸ்ரரோ கலந்துகொள்ளவில்லை.
இந்தா! பிடி ! இந்தா பிடி !
சுடுகுது ,மடியைப்பிடி ! என்ற அவசரக் குடுக்கைத் தனத்துக்கு அவர்கள் தம்மை ஒப்புக்கொடுத்ததில் அவர்கள் செலுத்திய விலை மிக அதிகம் !
இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தில் புளொட் அமைப்பு மிகப் பலவீனமான நிலையை அடைந்தது. புலிகளின் நோக்கமும் அதுவாயிருந்தது. தாபனத்தைப் பலவீனப்படுத்துவதில் வெளியேயான விமர்சனங்களுக்கு இருக்கும் வலு இதுமட்டும்தான்.
"நீண்டகால மக்கள் யுத்தம் "எனும் கோட்பாடு வலிமைகாண்பதும் இங்குதான். இப்படி இன்னொரு தளத்தில் புலிகளுடன் முரணில்லாத ,விமர்சனங்களில்லாத வகையில் தாம் இயங்கமுடியும் என்ற நப்பாசையில் இருந்தபோதும் ஏற்கனவே மற்ற அமைப்புகளை அழித்தொழித்த திமிரில் 1991 மே மாதம் 17 ஆம் தேதி கேசவனும் அவர் சார்ந்த தோழர்களும் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டு புலிகளால் கொல்லப்படுகின்றனர்.
தமிழீழம் என்ற அதே இலட்சியத்துடனும் கோட்பாட்டுடனும் தீப்பொறி தம் குறுகிய காலத்தில் இயங்கிய போதிலும் 1986 மே மாதம் ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட கையோடு தலையெடுத்த தமிழ்ப்பாசிச வகைமை தமிழ்ப்பிரதேசங்களில் இயங்கிய அமைப்புகளை அனைத்தையுமே அழித்தொழித்தது.
ஆனால் புதியதோர் உலகம் 1985 இல் வெளிவருகிறது. புதியதோர் உலகம் வெளிவந்த பின்னரே உடுவிலில் தளமாநாடு நடைபெறுகிறது .அதில் புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன் , அரசியற்துறைச் செயலர் வாசுதேவா ஆகியோர் கலந்துகொண்டு வைக்கப்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
தாபனத்தை அமைப்பினுள்ளிருந்து சீர்திருத்துவதற்குப் பதில் அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி தீப்பொறி குழுவாக வெளியேறி புதியதோர் உலகம் நாவலைக் கூட்டுச் சேர்ந்து எழுதிப் பரப்புவதுதான்.
இத்தனைக்கும் கேசவனும் ஜானும் அமைப்பின் அதியுயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் . ஆனால் அமைப்பின் அடிமட்டத் தோழர்களுக்கும் அமைப்பின் வெகுமக்கள் பிரதிநிதிகளுக்கும் இருந்த கடப்பாடு இவர்களுக்கு இருக்கவில்லை. தாம் வெளியேறுவதற்கான நியாயங்களைச் சொல்லும் தூய்மைவாத வெள்ளை அறிக்கையாகத்தான் புதியதோர் உலகத்தைக் கட்டமைத்தார்களேயன்றி தார்மீகப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து அல்ல.
கேள்விப்பட்டவற்றை சுவாரஸ்யமான புனைவாக்கம் செய்தமாறான புதியதோர் உலகம் கதைக்கு உதாரணம் சொல்வதென்றால் பிரான்ஸிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறார் , என்னுடைய குதம் இப்போ எவ்வளவு விரிவடைந்திருக்கிறது தெரியுமா ? எனக் கேட்டபடி அப் பாத்திரம் அறிமுகமாகிறது. நாவலின்படி அப் பாத்திரம் போதை மருந்து கடத்தி அதனால் வரும் பணத்தை அமைப்பிற்குக் கொடுக்கிறது. அப் பாத்திரம் கதையின்படி போதை மருந்து வியாபார நபர்.
ஆனால் உண்மையில் அப் பாத்திரம் காந்தீயம் உள்ளிட்ட அமைப்புகளில் கடுமையாக வேலைசெய்து பொலிஸ் நெருக்கடிகளால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து சில தொழில் நிறுவனங்களை அவரது படித்த துணைவியாரோடு உருவாக்கி அதன் வருமானத்தை மிக எளிமையாக வாழ்ந்து அமைப்பிற்குக் கொடுத்து வந்தவர். இதற்காகவே தமக்கென வாரிசு எதையும் ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள்.
போர்க்காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்விற்கு உதவிசெய்து மிகப் பின்தங்கிய தங்கள் பிரதேசத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றுவரை ஆதாரமாய் நிற்பவர். ஆனால் புதியதோர் உலகத்தின் தூய்மையில் ,கேள்விச் செவியில் அவர் ஒரு போதைவியாபாரி. இப்போது லண்டனில் ஒரு நுட்பமான வியாபார நிலை காணப்படுகிறது. புதியதோர் உலகம் விற்பனையை கைத்துணையாகக் கொண்டு புதுவை ரத்தினதுரையை விற்பதில் ஒரு வியாபார அனுகூலம் உண்டு.
தர்க்கத்திலும் திறந்த பார்வை மதிப்பீடுகளிலும் ஒரு விடுதலை அமைப்பினுள் உள்ள உள்முரண்பாடுகளைப் புனைவின் வழியே வெளியே முன்வைத்ததில் இருந்த திறந்தநோக்கு இருக்க புலிகளின் பாசிச அமைப்பு முரண்களை அதற்குள் இருந்து இப்படி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்களா?
மாத்தையாவும் கருணாவும் துரோகிகளாகவே இருந்துவிட்டுப்போகட்டும் !
கவிஞராகவும் அறியப்பட்டு புலிகளின் அறியப்பட்ட பிரமுகராகவும் அதிகாரக் குரலாகவும் இருந்த ஒருவரின் எழுத்துக்களை ,பிரபாகரனின் அணிந்துரையுடன் அவை ஏற்கனவே நூல்களாக வெளிவந்து பாசிச மன நிலையை பொது உளவியலில் கட்டமைப்பதில் பங்குவகித்த ஒருவரின் தொகுப்பை விற்பதில் மனம் கூசாது
வந்தவரை லாபம் என்ற வியாபார எண்ணம் நிச்சயம் மாற்றுக்கருத்துகளையும் மாற்று முயற்சிகளையும் ஜனநாயத்தையும் அவாவி நிற்போருக்கு எதிர்காலம் குறித்து அச்சமூட்டவே செய்யும் .
வானத்தைப் பிளந்த கதை எழுதி ஈ பி ஆர் எல் எவ் வை விமர்சித்து ,மன ஆறுதல் அடைந்தபின் செழியன் உதிரியாகிச் சீரழிந்து பின் புலிகளின் பிரச்சாரப் பிரமுகராகி புலிக்கொடியும் பிரபாகரன் கொடியும் ஏந்தித் தன் அந்திமத்தைத் கண்டு , தன் அற உணர்வைக் கைவிட்டதுபோல ,தீப்பொறி முகாமையில் வெளிவந்த "புதியதோர் உலகம் தொட்டு ஒரு புலிச்சாய்வு எடுத்து ஈற்றில் புலிகளாலேயே கொல்லப்பட் டும் சீரழி துயரமும் நிகழ்ந்தது.
வலதுசாரிகளுக்கு அமைப்புகள் பிளவுபட்டு உதிரி அமைப்புகள் உருவாகுவது அவர்களளவில் சேதங்களை உருவாக்காது , ஆனால் இடதுசாரி ,ஜனநாயக ,மக்கள் சார்பு அமைப்புகளில் இருந்தவர்கள் அவ்வவ்வமைப்புகளில் இருந்து வெளியேறும் முடிவுகளை ஆற அமர யோசித்தே எடுக்கவேண்டும் , தம்மை நம்பிவந்த தோழர்களை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டு தாம்மட்டும் தம் கருத்தியல் தூய்மையையும் தூயதிலும் தூய கரங்களையும் காட்டிக்கொண்டிருக்க முடியாது.
அமைப்புகளிலிருந்து வெளியேறியபின் தம்மைத் தூய்மையாளர்களாக நிறுவ முன்னிறுத்தப்பட்ட நூல்களிற்கும் படைப்பினூடு இலக்கியமாய்க் கதை அமைவில் வெற்றிபெறும் படைப்புகளுக்கும் வேறுபாடுண்டு. அடூர் கோபால கிருஷ்ணனின் "முகாமுகம் " அப்படியாக கலை நுட்பத்திலும் இலக்கியக் கதையாதலிலும் வெற்றிபெற்ற திரைப்படம்.
புளொட் மக்கள் அமைப்பில் அமைப்பாளராயிருந்து பின் தீப்பொறியிலும் இயங்கிய ஆளுமை மிக்க தோழர் ஒருவர் இப்போதும் கொழும்பில் மனநிலை பிறழ்ந்து சிங்கள உறவுகளின் பராமரிப்பில் இருக்கிறார். அமைப்பினுள் இருந்து இயங்கியமட்டிலும் அவர் மிகவும் ஆளுமை மிக்கவராயிருந்தார். அவரது ஆளுமைச் சிதைவிற்கு காரணம் தமிழ்ப் பாசிசம் . போர்க்குணாம்சமிக்க போராளிகள் அரசியல் ,சமூக அரங்குகளிலிருந்து அகற்றப்பட்ட அவ்விடத்தில் வந்தமர்ந்த பாசிசம். இந்த அவலமான சித்திரங்களையெல்லாம் புதியதோர் உலகத்தின் பின்னணியிலிருந்தெல்லாம் புரிந்துகொள்ளமுடியாது.
மேலும் அதே தளத்தில் அமைப்புக் குறித்த விமர்சனங்களோடும் சுயவிமர்சனங்களோடும் தளப்பொறுப்பாளராயிருந்த சின்ன மெண்டிஸ் - விஜயபாலன் - கிட்டுவால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பின்னணியையெல்லாம் புதியதோர் உலகத்தைத் தலைமேற் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள் இணையாகப் பேசப்போவதில்லை.
20/05/1989 இல் முள்ளிக்குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு புலிகள் 60 க்கும் மேற்பட்ட ஆரம்பகாலப் புளொட் தோழர்களைப் படுகொலை செய்த பின்னணியையும் கூறப்போவதில்லை. "புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி'' என தேசம் நெற் ஜெயபாலன் பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார். பாசிசத்தின் மனச் சாய்வில் தற்திருப்தி காண்பவர்களுக்கு ,கொள்பவர்களுக்கு புதியதோர் உலகத்தை விட்டால் வேறு போக்கிடமுமில்லை.
புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்:
பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன்.
பிறப்பு : 1948.5.02 பாலையூற்று, திருகோணமலை.
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை.
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா.
கல்வியும் தொழிலும் : தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித வளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலைக் கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.
அரசியல் : பல்கலைக்கழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான “தீர்த்தக்கரை” எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
1980 களின் தொடக்கத்தில் “சங்கப்பலகை ” எனும் குழுவை அமைத்து மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.
1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (PLOTE) இணைந்து கொண்டார்.
1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.
1985 இல் PLOT அமைப்பிலிருந்து வெளியேறினார்
பச்சை இனவாதிகள்
டொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் "தீப்பொறி" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார்.
தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) "தீப்பொறி" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும்.
டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட "தீப்பொறி" ச் செயற்குழுவின் முடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். "அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா?" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார்.
"இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.
ஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.
"தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரிந்து கொள்ள முடியும்.
இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.
டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் "தீப்பொறி"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார்.
"நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார்.
"உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
(ஒரு தீப்பொறித் தோழரின் சுயவிமர்சனம் - April 06, 2012 )
புலிகள் தலையெடுத்து முழுச் சமூக சூழ்நிலைகளையும் தம் சமூகப் பாஸிச கொலைக் கலாச்சார நடைமுறையில், கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் கொண்டு வந்த நிலையில் தீப்பொறி ஒரு பெருப்பிக்கப்பட்ட, சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக வெளிநாட்டு அரசியல் ஆர்வலர்கள், இயக்கங்களிலிருந்து விலகியும் அதிருப்தி அடைந்து ஒதுங்கியோர் மத்தியிலும் ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தது.
ஆனால் அவர்கள் தம்மையே காப்பாற்றிக்கொள்ள முடியாத, அடுத்தவர் தயவில் அனுசரணையோடு இருக்கும் நிலையில் அவர்களை நம்பி வந்த தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு எப்படியான தப்பித்தல் வழிகளைக் காட்டி நின்றனர் என்பதற்கு இந்தச் சுய விமர்சனம் ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு அரசியற் தந்திரோபாயம் என்ற அளவிற்கூட இதற்கு எவ்வித பெறுமானமுமில்லை. தீப்பொறியின் அறிவிக்கை ஒரு அரசியற் குழப்பமான சிறு குழுவொன்றின் அனாதைத் தனமான பொறுப்பற்ற பிரலாபம் . அவர்களால் எப்படியேனும் தம்மைத் தகவமைக்க முடியவில்லை. இதில் அடுத்தவரைக் காப்பாற்றிப் பேணும் சால்பிற்கு எங்கு நோக !
அபத்தம் இதழுக்காக சுகன்
No comments:
Post a Comment