Monday, February 12, 2024

இந்தியாவிற்கு ஜேவிபி சென்றது இதுதான் முதற்தடவை அல்ல. இந்திய விரிவாக்க கொள்கை கைவிடப்பட்டு தசாப்பதங்கள்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையிலான நேர்மறையான மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தப்பட்டதாக கலாநிதி ஜெய்சங்கரின் சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அனுராவுக்கு என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதா?

தோழர் அநுரகுமார ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) தலைவராகவும் உள்ளார். அவரின் இந்த சமீபத்திய விஜயமானது அரசியல் ஆய்வார்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டாலும், ஜனதா விமுக்தி பெரமுன இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு செயற்பட்டது இதுதான் முதல் தடவை அல்ல. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்களின் சமூக ஊடகப் பதிவுகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரவின் வெற்றியின் சாத்தியப்பாட்டிற்கு இந்தியா அளித்த அங்கீகாரமாக இந்த விஜயத்தை அர்த்தப்படுத்துகின்றன. இதற்கு முன்னர் ஜே.வி.பி.யானது போதுமான அளவு பலமான ஒரு அரசியல் சக்தியாக காணப்படாததாலேயே இராஜதந்திரிகள் அதனுடன் பெரிதாக ஈடுபாட்டைக் காட்டவில்லை. தேசிய மக்கள் சக்தியானது குறிப்பாக கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகளவு கவனத்தையும், புகழையும், நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

ரோஹன விஜேவீரவும் நரசிம்மராவை சந்தித்தார்.

நான் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராகவும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிட்பியூரோ உறுப்பினராகவும் இருந்தபோதுதான் இந்திய அரசாங்கத்துடன் ஜே.வி.பி.யின் முதல் தொடர்பு ஏற்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் நாங்கள் நல்லுறவைப் பேணி வந்தோம். எண்பதுகளின் தொடக்கத்தில் திரு.நரசிம்மராவ் இலங்கை வந்தபோது, ​​தோழர் ரோகண விஜேவீரவும் நானும் அவரைச் சந்திக்கச் சென்றோம். அந்தக் காலத்தில் "இந்திய விரிவாக்கம்" என்ற கொள்கையை நாம் கைவிட்டிருந்தோம். அது 1972 இலேயே கைவிடப்பட்ட அக்கருத்து 1984 க்குப் பிறகு ஜனதா விமுக்தி பெரமுனாவால் புத்துயிர் அளிக்கப்பட்டது.

பின்னாளில் ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய சோமவன்ச அமரசிங்க போன்ற முன்னணி தோழர்கள் கடும் இந்திய விரோதிகளாக இருந்ததோடு, இலங்கைக்கான இந்திய இறக்குமதிகளை தடை செய்யும் அளவிற்கு சென்றனர். ஆனால் நகைப்பிற்கிடமான காரணம் யாதெனில், தோழர் ஹென்றி விக்கிரமசிங்கவின் தலையீட்டின் மூலம் சோமவன்ச அமரசிங்க இலங்கையை விட்டு தப்பி இந்தியாவிற்குடாவே வெளியேறினார். மிக அண்மையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர்களை சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதால் குறிப்பிடத்தக்க கலாச்சார, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய உறவுகளைப் பேணிவருகிறது. இலங்கை சமூகத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது. இன்று, இலங்கைத் தீவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேசத் துறையிலும் இது ஒரு சக்திவாய்ந்த நிலையாக மாறியுள்ளது. இந்தியா வல்லரசாக உருவெடுத்ததைக் கருத்தில் கொண்டு, தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் இந்த யதார்த்தத்தை அங்கீகரித்து, இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் அர்த்தமுள்ளது.

"இந்திய விரிவாக்கம்" என்ற கருத்து இனி இல்லை.

அண்மைய ஆண்டுகளில் ஜேவிபி புத்துயிர் பெற்று தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த முன்னணியை ஸ்தாபித்த பின்னர், "இந்திய விரிவாக்கம்" என்ற அரசியல் கோஷத்தை அவர்கள் பயன்படுத்துவதை நான் செவிமடுக்கவில்லை. ஒரு அரசியல் ஆர்வலராக, எனது மாவோயிஸ்ட் காலத்திலிருந்தே தோழர் மாவோ சேதுங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தபோது அவர் முன்வைத்த "இந்திய விரிவாக்கம்" என்னும் கொள்கையுடன் நான் உடன்பட்டேன்.

எனினும், அக்கருத்து இந்திய தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது இலங்கையில் வாழும் மலையக தொழிலாளர்களுக்கோ எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக இந்திய முதலாளித்துவத்தினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல், இலங்கையில் உள்ள தமது முதலாளித்துவ சகபாடிகளுடன் சேர்ந்து மலையக மக்கள் என்னும் காரணியையும் வைத்துக்கொண்டு இலங்கையின் மீது அவர்கள் ஏற்படுத்த முனையும் தாக்கங்கள் என்ன என்பதை பற்றி இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு போதிக்க நாங்கள் விரும்பினோம்.

இந்திய அமைதி காக்கும் படைகள்

1980 களில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும், இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு ​​ஜே.வி.பி.யின் பலத்த எதிர்ப்பின் பிரதிபலிப்புகள், மற்றும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த பெரும்பாலான பெரிய, சிறிய அரசியல் அமைப்புகள் இலங்கையில் இந்திய தலையீட்டிற்கு எதிரான கருத்தில் இருந்தன என்பதும் இவ்விடத்தில் நினைவுகூரப்படுவது முக்கியமாகும். பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத பிரதிநிதிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் தற்போதைய பிரதமரின் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் இருந்தன.

அதற்கு ஆதரவாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.சி.எஸ் ஹமீட் மற்றும் காமினி திஸாநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி (SLMP), மற்றும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி (CPC) போன்றவர்கள் இருந்தனர். மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி (LSSP). வடக்கு கிழக்கில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் பல சிறிய அரசியல் குழுக்களும் இருந்தன.

அன்றைய அரசின் பிரதமர் ஆர் பிரேமதாச மற்றும் அவரது கட்சியில் உள்ள ஏனையவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அமைதி காக்கும் படையை (IPKF) இலங்கைக்கு அழைத்தவர் ஜனாதிபதி ஜெயவர்த்தன. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அமைச்சர் காமினி ஜயசூரிய, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரதமர் ஆர்.பிரேமதாச இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவராக ஆனார். அவர் IPKF படைகளை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார், இறுதியில் இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பிரேமதாச ஆட்சியின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையின் தலைவராக இருந்தார். கொழும்பில் புறக்கோட்டை போதி மரத்துக்கு அருகில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் IPKF இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

13வது திருத்தம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை.

விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்க, ஜனதா விமுக்தி பெரமுனா தெற்கில் ஆயுதமேந்திய எதிர்ப்பை ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க ஆட்சி தனது அரசியல் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருந்தது. தேசியப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசின் ஒப்புதலுடன் இலங்கையில் ஏற்பட்டிருந்த மோதல் நிறைந்த சூழ்நிலையில் இந்திய அரசு இராணுவ ரீதியில் தலையிடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்து மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டது. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் இலங்கையின் தேசியப் பிரச்சனையை மேலும் மோசமாக்கியது.

ஆயினும்கூட, அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு தேசிய பிரச்சினையில் இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு மாறாமல் உள்ளது.

இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக மேலிருந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும். இது இலங்கை மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆலோசனை செயல்முறையின் விளைவாக கொண்டுவரப்பட்டதொன்றல்ல. IPKF இராணுவத்தின் வருகை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்தியா மேற்கொண்ட தலையீட்டிற்கு எதிராக பல அரசியல் ஸ்தாபனங்கள் காட்டிய எதிர்ப்பை இந்த வகையிலலேயே நாம் புரிந்து கொள்ள முடியும். அதேவேளை இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நீண்டகால நோக்கிலான ஒரு தீர்வை உருவாக்குவதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் எந்தவொரு உண்மையான, நேர்மையான முயற்சிகளையும் எடுக்காததற்காண பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.

அறுபதுகளில் இருந்த காலம் இப்போது மாறிவிட்டது .

1983 - 1987 காலப்பகுதியில் "இந்திய விரிவாக்கம்" மற்றும் "இந்திய எதிர்ப்பு" போன்ற அரசியலை புரிந்துகொள்ள அக்காலத்தின் உலகளாவிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சொல்நிலைமைகள் பற்றி விவாதிக்காமல் புரிந்து கொள்ள முடியாது. கடந்த காலத்தை மீளப் பார்க்கும் போது அவற்றை நேர்மையாகவும் விமர்சனரீதியாகவும் பார்க்க வேண்டும் எனக் கூறுவதானால், அக்காலத்தில் இருந்த அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளையும் அதே அடிப்படையில் ஆராய வேண்டும். இன்று நாட்டில் நிலவும் விரும்பத்தகாத சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது. இருப்பினும், இந்த அத்தியாவசியமான பணியைச் செய்யத் தொடங்குவதற்கு எந்த ஒரு அரசியல் நிறுவனமும் அதற்குரிய தைரியத்துடனும் நேர்மையுடனும் இருப்பதாகத் தெரியவில்லை.

1960 களில், ஜே.வி.பி மட்டுமல்ல, ஏனைய அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் 'இந்திய ஆதிக்க விரிவாக்கம்' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டன. அந்தக் காலங்கள் மாறிவிட்டன. நவதாராளவாதத்திற்கே உரித்தான இயல்பான அகவயமான இயல்பு காரணமாக, அதன் முக்கிய பங்காளிகள் அனைவரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஒருவித் ஆதிக்க விரிவாக்க நிகழ்ச்சி நிரலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அத்ததுடன் நடைமுறை அரசியலில், 1960கள், 1980கள் மற்றும் குறிப்பாக 1987 முதல் 2024 வரையிலான பிராந்திய மற்றும் சர்வதேச அதிகார சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களை இப்போது கருத்தில் கொள்வது அவசியம்.

சோவியத் யூனியன் தலைமையிலான 'சோசலிச' முகாம் 1989ல் சரிந்தது. சீனா ஒரு புதிய உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி, சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய சக்தியா மிளிர இருக்க விரும்புகிறது. எனவே, இப்பகுதியில் சீன, இந்திய தலையீடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையம் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக ஜே.வி.பி எதனை முன்வைக்கிறது என்பது மேலும் தெளிவுபடுத்தபட வேண்டும்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) எதிர்ப்பு தணிந்துள்ளதாகத் தெரிகிறது. புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் வரை இலங்கையின் அரசியலமைப்பு தளத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக அந்த 13ம் திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தகைய கட்டமைப்புரீதியான, யாப்பியல் ரீதியான மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் எதுவும் செயல்படுத்தப்படுமா என்பது இன்னமும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அப் பிராந்தியத்தில் இந்தியா வகிக்கும் முக்கிய பங்கை ஜே.வி.பி அங்கீகரித்துள்ளது. எனது பார்வையில், இந்த முற்போக்கான நடவடிக்கைகள் 1980களின் பிற்பகுதியில் அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. இருந்தபோதிலும், தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஜனதா விமுக்தி பெரமுன முன்வைக்கும் விடயம் மேலும் விருத்தி செய்யப்பட்டு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ஆட்சிக்கு வர விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் முடிந்தவரை பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, குறிப்பாக இலங்கை அரசியலில் இந்தியாவும் சீனாவும் வகிக்கும் சக்திவாய்ந்த பாத்திரத்தின் காரணத்தினால் இந்து சமுத்திரத்தில், இலங்கை மக்களின் நலன்களுக்கு ஆதரவான அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றும் அதே வேளையில், இந்த இரண்டு வல்லரசுகளின் போட்டி நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு நிர்வகிப்பது, கையாளுவது என்பதை ஆட்ச்சிக்கு வரும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது கூட்டணியோ கணத்தில் எடுக்க வேண்டும்.

இது அசாதாரணமானத சூழ்நிலைமை அல்ல.

ஒரு தேர்தல் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இந்திய வருகையை அந்த அடிப்படையிலேயே கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மத்திய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியையும் அதன் தலைவரையும் அழைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அரசாங்கத்தின் கடந்தகால நடைமுறைகளைப் பொறுத்தவரை இது அசாதாரணமானதும் அல்ல. ஒரு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தியானது தமது கொள்கை உருவாக்கம், சமூக அணிதிரட்டல் மற்றும் பிரச்சாரம் போன்ற துறைகளில் நேரடியாக நுழைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. பிரச்சனைகள், குறைகள், தவறுகள், கடந்த காலத்தை பார்ப்பதை தவிர்த்தல் போன்றவற்றை தமக்குள் கலந்துரையாடல் செய்து நிவர்த்தி செய்துக்கொள்ளல் வேண்டும். எவ்வாறாயினும், இந்த முக்கியமான வரலாற்று சந்தியில், இலங்கையில் உள்ள முற்போக்காளர்கள் மத்தியில் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.

இப்பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியை கையாளுவதற்கு சீனாவும் அவர்களை அணுகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கலாநிதி லயனல் போபகே - Dr. Lionel Bopage
ஜேவிபி இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும்1971ம் ஆண்டு நடத்தப்பட்ட இடதுசாரி ஆயுத கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவருமாவார்.

தமிழில் மனோரஞ்சன்


No comments:

Post a Comment