Saturday, October 14, 2023

பாலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது எப்படி? கா. ஆனந்தன்

இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கி யப் பங்கு வகிப்பது, ‘பெல்பேர் பிரகடனம்’. பிரிட்டன் அரசு எவ்வாறு பாலஸ்தீன அரேபியர் களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள பெல்பேர் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். 2017ல் அந்த பிரகடனத்தின் நூற்றாண்டு விழாவை பிரிட்டன் அரசு லண்டனில் கொண்டாடியது. உலகம் முழுவதுமுள்ள அரேபியர்கள் அந்த நாளை தங்களின் உரிமையை, அடிப்படை வாழும் உரிமையையே பறித்த நாளாய்ப் பார்க்கிறார்கள். முதல் உலகப் போர்(1914-18)

முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும், துருக்கியின் ஆட்டோமான் காலிஃபட், ஜெர்மனி ஆகிய அச்சு மைய அதிகார நாடுகள் எதிர் அணியிலுமிருந்து சண்டையிட்டன. 4 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் 85 லட்சம் வீரர்கள் இரண்டு பக்கமும் மடிந்தனர். 70 லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சண்டை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் நடைபெற்றது.

யூதர்களைக் கவர...

1914ல் யுத்தம் தொடங்கப்பட்ட போது, தங்களுக்கு வலு சேர்க்க, யூதர்களின் ஆதரவு தேவை என பிரிட்ட னின் ‘யுத்த அமைச்சரவை’(வார் கேபினட்) முடிவு செய்தது. காரணம் அவர்களிடமிருந்த செல்வம். அதன்படி அன்றைய பிரிட்டன் பிரதமர் அஸ்குயுத், பாலஸ்தீனம் உட்பட ஆட்டோமான் பேரரசின் பகுதி களைக் கைப்பற்றுவது பற்றி ஆராய ஒரு குழு அமைத்தார். அந்தக்குழு 1916ல் அறிக்கை சமர்பித்த போது, பிரதமராக இருந்தவர் டேவிட் லாயிட் ஜார்ஜ். அவரது எண்ணம் ஆட்டோமான் பேரரசை பல துண்டு களாக்க வேண்டும் என்பதாகும்(தற்போது உக்ரைன் போரில் அமெரிக்காவின் நோக்கமான ரஷ்யாவை பல துண்டுகளாக ஆக்குவது போன்று). இதற்கிடையில் 1917ல் காசா பகுதியில் ஜெருசலேம் பகுதியை அட்டோமன் படைகளிடமிருந்து கைப்பற்ற 6 மாதங்களுக்கு மேல் கடும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ந்து இழுபறி நிலை. இந்த நிலையில் உலகம் முழுவதுமுள்ள யூதர் களின் ஆதரவை தங்களுக்கு சாதகமாக திரட்ட பிரிட்டன் திட்டமிட்டது. அன்றைய தினம் யூதர்கள் பெரும்பாலும் கந்துவட்டி, வங்கி மற்றும் நிதித்துறை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பிரிட்டன் அமைச்சரவையில் விவாதம்

1917 அக்டோபர் 31ல், பிரிட்டன் அமைச்சரவையில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அதில் ‘யூதர்களுக்கு நாடு’ என்று ஒரு அறிக்கை வெளியிடு வது; அதனை பிரச்சாரம் செய்வது, அதன் மூலம் நேச நாடுகளின் போர் முயற்சிகளுக்கு யூதர்களின் ஆதரவைத் திரட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் பாலஸ்தீனத்தை பிரிப்பது பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாலஸ்தீனர்களுக்கு நிரந்தர துயரம் தந்த 67 வார்த்தைகள்

ஒரு ஏகாதிபத்திய நாடு முதன் முதலாக யூத இன வாதக் குறிக்கோள்களை பிரதிபலித்தது. இந்த தீர்மானத்தில்தான் பழைய விவிலியத்தில் உள்ளது போல் ‘யூதர்களுக்கு ஒரு தாய்நாடு வேண்டும்’ என நிறைவேற்றப்பட்டது. 1917ல் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் ஆர்தர் பெல்பேர். அவர் இங்கிலாந்தில் யூதர்களின் மதிப்பு மிக்க தலைவராக இருந்த வால்டர் ரோத்சைல்ட் பிரபுவுக்கு 1917 நவம்பர் 2-ம் தேதி எழுதிய கடிதத்தில், யூதர்களுக்கு தாயகம் அமைப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம் இணைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் மொத்தம் 67 வார்த்தைகள் கொண்ட அந்த கடிதத்தின் முதல் வரியில் ‘மேன்மை தங்கிய மன்னரின் அரசு, பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தாயகம் உருவாக்குவதற்கு சாதகமான எண்ணம் கொண்டுள்ளது. அந்த குறிக்கோளை நனவாக்கிட தன்னிடமுள்ள அனைத்து முயற்சிகளையும் பிரிட்டன் பயன்படுத்திடும்” என்று தொடங்கியது. இதுவே இஸ்ரேல் உருவாகிட ஆரம்பப்புள்ளி உலகோரின் பொதுப் புத்தியில் பதிவாகியிருப்பது போன்று, ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததால் ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் உருவான நாடல்ல. அதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனின் ‘இராஜ தந்திரத்தின்’ அதாவது சூழ்ச்சி யின் விளைவாக உருவாக்கப்பட்டது.

பாலஸ்தீனர்களுக்கு பொய் உறுதிமொழி

அந்தக் கடிதத்தின் பின்பகுதியில், இவ்வாறு தாயகத்தை உருவாக்க இரண்டு நிபந்தனைகளை அந்த தீர்மானம் தெரிவிக்கிறது. அதில் முதல் நிபந்தனை, பாலஸ்தீன மக்களின் நலன் சம்பந்தப்பட்டது; அது 100 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய நாடுகள் குப்பைத் தொட்டியில் எறிந்த வாக்குறுதியாகும். “மிகத் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது என்ன வெனில், பாலஸ்தீனத்தில் தற்போதுள்ள யூதர்கள் அல்லாத சமூகங்களுக்கு ஏற்கனவேயுள்ள குடிமை மற்றும் மத உரிமைகளுக்கு முரணாக எந்த செயலும் மேற்கொள்ளப்பட மாட்டாது (It being clearly understood that nothing slall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine)”. இரண்டாவது நிபந்தனை, “இஸ்ரேல் உருவாகும் கும்வரை யூதர்கள் அவரவர் வாழும் நாடுகளில் அவர்களின் குடிமை மற்றும் மதஉரிமைகள் பாதுகாக்கப்படும்” என்பது. முதல் நிபந்தனையான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்களின் குடிமை மற்றும் மத உரிமைகள் மட்டும் 1948 முதல் 2023 வரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் உதாசீனப்படுத்தப்படுகின்றன.

பிரிட்டனின் துரோகங்கள்

பாலஸ்தீன மக்களின் குடிமை மற்றும் மத உரிமைகளை பாதிக்கும் எந்த முடிவையும் எடுக்கமாட்டோம் என்ற நிபந்தனையை பிரிட்டன் கைவிட்டுவிட்டது. மெக்காவின் ஷெரீப்பாக இருந்த ஹூசைன் பின் அலி, முதல் உலகப் போரில், அட்டோமான் பேரரசை வீழ்த்த உதவியவர். அதற்கு கைமாறாக முழு அரபுப் பிரதேசத்தையும் தனி சுதந்திர நாடாக மாற்றுவோம் என பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. பெல்பேர் பிரகடனத்தை ஹூசைன் கடுமையாக எதிர்த்ததால், அவரை சவூதி அரேபிய சுல்தானைக் கொண்டு கொன்றது பிரிட்டன்.

1917ல் பாலஸ்தீன மக்களின் எழுச்சி

பாலஸ்தீனத்தில் அன்று வாழ்ந்த மக்களில் 90% இஸ்லாமியர்களும் கிருத்துவர்களுமான அரேபியர்கள். அன்றைய பாலஸ்தீனத்தில் வெறும் 8% யூதர்கள். பெல்பேர் பிரகடனம் வெளியிடப்பட்டவுடன் பாலஸ்தீனப் பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து 1919ல் அமைக்கப்பட்ட கிங்-கிரேன் கமிஷன், இராணுவ பலத்தினால் அல்லாமல் இதனை அமல்படுத்த சாத்தியமே இல்லை என்ற கருத்தை அனைத்து பிரிட்டானிய அதிகாரிகளும் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தது. 1936ல் பிரிட்டன் அரசு மீண்டும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அராபியர்களின் சொத்துரிமை மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் நடைமுறையில் கைவிட்டது.

முதல் உலகப் போருக்குப் பின்

முதல் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதியின் நிர்வா கத்தை பிரிட்டனிடம் நேச நாடுகள் அளித்தன. அந்த போர் நிறுத்த ஒப்பந்தங்களில் பெல்பேர் பிரகடனத்தை இணைத்ததன் வாயிலாக அது அமலாக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டமாக(இண்டர்நேஷனல் ஆப்ளிகேஷன்) மாறியது. போருக்குப் பின் உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை பிரிட்டன் பாலஸ்தீனப் பகுதிகளில் குடி யமர்த்தியது. யூதர்கள் தங்களுக்கென்று இராணுவம் அமைத்து பாலஸ்தீனர்களை தாக்கினர். பிரிட்டன் அதைக் கண்டு கொள்ளவில்லை.

1948ல் இன அழிப்பு

1948 மே 14 அன்று பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியவுடன், ராணுவத்தை கொண்டிருந்த யூதர்கள், அமெரிக்க உதவியுடன், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். சுமார் 15000 பாலஸ்தீன அரேபியர்கள் கொல்லப்பட்டனர். மிகப் பெரிய அளவில் இனஒழிப்பு நடவடிக்கைகள் பாலஸ்தீன அரேபியர்களுக்கு எதிராக நடத்தப் பட்டது. 7 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்கள் மூதாதையர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவையனைத்தும் அமெரிக்க ஆதரவுடன் நடை பெற்றன. அதே தினத்தில் யூதர்கள் “இஸ்ரேல்” என்ற நாட்டை அறிவித்தனர். அனைத்து ஆவணங்களிலும் இருந்த ‘பாலஸ்தீனம்’ என்ற பெயரை அழித்தனர். இந்த தினத்தை பாலஸ்தீனர்கள் “அல்-நக்பா” என்றழைக்கின்றனர். நக்பா என்றால் பேரழிவு என்று அர்த்தம்.
.

No comments:

Post a Comment