ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்றவறிலுள்ள நிதியினை கடன் மறுசீரமைப்பு என்ற கோதாவில் உறுதியற்ற முறையில் முதலிட்டு, அரசு உழைக்கும் மக்களின் இறுதிகாலத்தை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அரசினால் முன்னெடுக்கப்படும் முன்னெச்சரிக்கையற்ற இச்செயற்பாட்டுக்கு தனது எதிர்ப்பினை காட்டும்பொருட்டு நாடுதழுவிய ரீதியில் இயங்கும் 28 தொழிற்சங்கங்கள் கடந்த 28ம் திகதி பாரிய எதிர்பு ஆர்ப்பாட்டத்தினை கொழும்பில் நடாத்தியிருந்தது.
அரச இயந்திரத்தின் பலத்த அடக்குதல்களை தாண்டி இடம்பெற்ற இப்போராட்டத்தின் இறுதியில் 28 தொழிற்சங்கங்களும் இணைந்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அரசுக்கு வெளியிட்டிருக்கின்றது. அவ்வறிக்கை கீழ்கண்டடவாறு கூறுகின்றது.
கடனை செலுத்தப் போவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றும் இலங்கை மத்திய வங்கி; எம்முடனான பேச்சுவார்த்தையில் இருந்து அது தப்பியோடியது.
உள்ளுர் கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிகை நிதியம் (EPF/ETF) மற்றும் பிற ஓய்வூதிய நிதிகளுக்கு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் சேர்ந்து கூட்டாக செய்யும் நாசகார மக்கள் விரோத செயல் முயற்சிகளுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் என நாம் ஆகஸ்ட் 28 திங்கட்கிழமை நண்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அணிதிரண்டோம்!
எமது கடும் எதிர்ப்பையும் தெரிவித்தோம்!!
எங்கள் கோரிக்கையானது....
EPF/ETF என்பன உழைக்கும் மக்களின் சேமிப்பு நிதியே அன்றி முதலீட்டுக்கான நிதியங்கள் அல்ல...
01. EPF/ ETF மற்றும் பிற ஓய்வூதிய நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு (DDR) என்னும் செயற்பாட்டிலிருந்து முற்றாக விலக்கி வைக்க வேண்டும். உழைக்கும் மக்கள் தமது முதுமைக் காலத்தில் பயன்படுத்த வேண்டிய சேமிப்புப் பணமாக இருப்பது இந்த ஓய்வூதிய நிதிகள் மட்டுமே. அவை இலாபத்தைப் பெருக்கி கொள்வதற்கான சொத்துக்களோ, அல்லது சொத்துக்களைப் பெருக்கிகொள்ளுவதற்காக முதலீடுகளைச் செய்யும் நிதிகளோ அல்ல. ஓய்வூதிய நிதிகள் என்பன ஊழியர்கள் தமது சம்பளத்தில் இருந்தும் உழைப்பில் இருந்தும் சேமிப்பாக மீதப்படுத்திய நிதிகளேயன்றி, தனியார் கடன் வழங்குபவர்களின் முதலீட்டு சொத்துக்களுக்கு சமமானவையாக கருதப்பட முடியாதவை.
வரி ஏய்ப்பாளர்களுக்கு சொந்தமான பிணைப் பத்திரங்களை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்...
02. பெரும்தொகை வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகைககளின் தற்போதைய மதிப்புக்கு ஒப்பீடாக, வரி ஏய்ப்பாளர்களின் பிணைப் பத்திரங்களை வெட்டிக் குறைத்தல் வேண்டும். அவர்களின் வைப்புகளை அரச பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் செலுத்தப்படாத வரிகளின் மொத்தப் பெறுமதி 904 பில்லியன் ரூபாவாகும். பிணைப் பத்திர பதிவுதாரர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்பட்ட காலத்தின்போதே பெருமளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளதால், அவ்வாறு செலுத்தப்படாத வரிகளின் தற்போதைய மதிப்பு மட்டும் 2 டிரில்லியன் ரூபாய்களைத் தாண்டியுள்ளது. என்வே அரசாங்கமானது EPF மற்றும் ETFகளை இரத்து செய்வதன் மூலம் மீதப்படுத்த எதிர்பார்க்கும் தொகையை விட மூன்று மடங்கு தொகையை, அவ்வாறு வரி செலுத்தாதவர்களின் பிணைப் பத்திரங்களை இரத்து செய்வதன் மூலமும், அவர்களின் வைப்புத் தொகையைப் பறிமுதல் செய்வதன் மூலமும், அடுத்த 16 ஆண்டுகளில் அரசாங்கம் சேமிக்க முடியும். இதன் மூலம் இலங்கையின் வங்கி கட்டமைப்பை பாதிக்காமல் இந்தக் கடன் மறுசீரமைப்பை அவர்களால் செயல்படுத்த முடியும். எனவே EPF, ETF மற்றும் ஓய்வூதிய நிதிகளை தொடாமல் கடன் மறுசீரமைப்புச் செய்ய முடியாது என மத்திய வங்கியும் ரணில் ராஜபக்ச அரசாங்கமும் கூறியிருப்பது அந்த ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட பொய்க் கதையாகும்.
பொய்யான இன்வொயிஸ்கள் (விலைச்சிட்டை, விற்பனைச்சிட்டை) போட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட 53 பில்லியன் டாலர்களை திரும்பப் பெறுங்கள்.
03. சர்வதேச வர்த்தகத்தில் பொய்யான இன்வொயிஸ்கள் போட்டதன் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட $53 பில்லியன் நிதியை திருப்பி பெறுவதற்கான தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) நடத்த வேண்டும். 2009 மற்றும் 2018 க்கு இடையில், சர்வதேச வர்த்தகத்தில் பொய்யான இன்வொயிஸ்கள் மூலம், 40 பில்லியனுக்கும் அதிகமான தொகை நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக Global Financial Integrity என்னும் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. இதன் உண்மையான பெறுமதி 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியை திருப்பி நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக மத்திய வங்கியானது தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
வாங்கிய கடனை கொள்ளையிட்டவர்கள் இடமிருந்தே அவை மீள அறவிடப்படவும் வேண்டும்.
04. அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்கள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட வேண்டும். மற்றும் அந்தக் கடன்களில் நெறிமுறைகளுக்கு விரோதமாக கொடுக்கப்பட்ட கடன்கள் (Odious Debt) எவை என பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும். 2017ஆம் ஆண்டு வரை அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டு திட்டக் கடன்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் எஞ்சிய உள்நாட்டு சொத்துக்களின் பெறுமதி கணிசமான அளவு குறைந்துள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊழல் நிறைந்த ஒரு அரசியல் கட்டுமானத்தையும், அரச அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட கூட்டுக் களவாணி வணிக பிரபுக்களையும் வளப்படுத்தி சொகுசுப் படுத்துவதற்காகவே வெளிநாட்டுக் கடன்கள் பெருமளவில் கையாடப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய இராட்சியத்தின் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுக் கடனைத் தங்கு தடையின்றி துஷ்பிரயோகம் செய்ததற்கான பரவலான சான்றுகள் இருக்கும்போது, அவற்றை நிரூபிப்பதற்கான பொறுப்பும் அந்த கடன் வழங்கியவர்களுக்கே உரியது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடன் பணத்தை முறைகேடாக கையாடிய அல்லது முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்தே அவற்றை திரும்பப் பெற வேண்டும், மாறாக அவர்களின் ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து அல்ல. உலகெங்கிலும் உள்ள 182 புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் கையெழுத்திட்டு அண்மையில் வெளியிடப்பட்ட இது தொடர்பான விஞ்ஞாபனமும் இலங்கையின் கடன் இரத்து தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை மேலும் ஆதரிக்கிறது.
BOI நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் நீக்கப்பட வேண்டும்.
05. முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் (BOI) நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை உடன் இரத்து செய்ய வேண்டும். இந்த வரிச் சலுகைகளை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்த போதிலும் முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிரவும், அனைத்து BOI நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட வரியில்லா இறக்குமதி சலுகைகளை திரும்பப் பெறுமாறு அரசை நாம் வலியுறுத்துகின்றோம். 1990களின் நடுப்பகுதியில் இருந்து வரி விகிதமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22% இலிருந்து தற்போதைய 9% ஆக வீழ்ச்சியடைவதற்கு இந்த நிலைமையே நேரடியாக பங்களித்துள்ளது. எனவே, முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த வரிச்சலுகைகளை நீக்கினால், அரசின் வரி வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை மத்திய வங்கிக்கு எந்த அக்கறையுமில்லை ...
கடந்த சில மாதங்களாக எம்மைப் போலவே பல தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் இலங்கை மத்திய வங்கியுடன் உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றது. ஆனால், ஓய்வூதிய நிதியை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தும் முடிவு எடுக்கப்பட்ட தருணத்திலிருந்து, இலங்கை மத்திய வங்கி உழைக்கும் மக்களுடனோ அல்லது அவர்களது பிரதிநிதிகளான தொழிற்சங்கங்களுடனோ பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. அத்துடன், ஜூலை 25ஆம் திகதி, நாங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்கள் மத்திய வங்கியைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
மத்திய வங்கி இந்த மோசடியை இனிமேலும் தொடர அனுமதிக்க முடியாது...
இலங்கை மத்திய வங்கி ஆரம்பத்தில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு பற்றிய விவாதத்தை துறைசார் (டெக்னிகல்) கரணங்களுக்குள் மறைத்து மக்களை தவறாக வழிநடத்தி அந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தது. நாங்கள் உட்பட பல தரப்பினரின் எதிர்ப்புகள், கருத்துக்கள் மற்றும் ஆவண அதாரங்கள் காரணமாக மத்திய வங்கியால் அந்த மோசடியை மேலும் தொடர முடியாமல் போய்விட்டது.
எமது போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 28ம் தேதி, பழைய பாணியிலேயே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கவும், கலைக்கவும் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டது. இந்த தடை உத்தரவின்படி, மத்திய வங்கி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்குகூட பல தொழிற்சங்க தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, எங்கள் மீது தண்ணீர் பீரங்கி, தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீச போலீசார் அழைக்கப்பட்டனர். அதற்கும் மேலதிகமாக ஆயுதப்படைகளும் அழைக்கப்பட்டிருந்தன.
எம்மில் 40 அமைப்புகள் இருந்தபோதும் 5 பிரதிநிதிகளை மட்டுமே உள்ளே வரச் சொன்னார்கள்.
எவ்வாறாயினும், மத்திய வங்கியுடன் நீண்டகாலமாக நாம் கேட்டிருந்த கலந்துரையாடலுக்கான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை முன்வைத்தோம். இதன்படி, ஆர்ப்பாட்டத்தின் போது ஐந்து பிரதிநிதிகளுக்கு மாத்திரமே கலந்துரையாடலுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக அறிவித்தனர். அதன் முலம், 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் பரந்துபட்ட தன்மையை அது புறக்கணித்தது.
20 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அனுமதி கோரினோம். மத்திய வங்கி அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் பிரகாரம், நாங்கள் கலந்துரையாடலுக்குத் தயாராக உள்ளோம் என்றும், எமது பிரதிநிதிகள் 20 பேர் மத்திய வங்கி ஆளுநரை சந்திப்பதற்கு வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அதனை ஏற்றுக்கொண்ட மத்திய வங்கியின் பிரதிநிதிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை கூட்டுவதாக உறுதியளித்தனர். அந்த கலந்துரையாடல் நடத்தப்படும் வரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து முடிவு எடுக்கப்படாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, எங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ள நாம் ஒப்புக்கொண்டோம்.
அந்த கலந்துரையாடலுக்கு நாம் தயாராக இருக்கிறோம்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக மட்டுமே நாம் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதல்ல. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மூலம் நாட்டிலிருந்து பெருமளவிலான நிதி மூலதனம் வெளியேறுவது குறித்தும் நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் நாங்கள் கடந்த ஆண்டு மத்திய வங்கியிடம் அவகாசம் கேட்டிருந்தோம். ஆனால் மத்திய வங்கி அதைத் தவிர்த்தது. அத்துடன் ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினையில் உழைக்கும் மக்களுடன் இணைந்து பணியாற்றுமாறு மத்திய வங்கியை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.
ஆனாலும் மத்திய வங்கியானது, ஓய்வூதிய மற்றும் சேமலாப நிதிகளைப் பயன்படுத்தி கடன் மறுசீரமைப்பினைச் செய்வதன் மூலம் ஏற்படப் போகும் மோசமான தாக்கம் குறித்து பெரும்பாலான உழைக்கும் மக்களை இருட்டில் வைத்திருக்க அது மிக சிக்கலான டெக்க்னிகல் காரனங்களை முன்வைக்கும் ஒரு அணுகுமுறையை தொடர்ந்தும் பின்பற்றுகிறது. நமது சேமிப்பை அழிக்கும் மத்திய வங்கியின் முயற்சிகளுக்கு சவால் விடும் வகையில் தொழிற்சங்கங்கள் போராட எழுந்தபோது மத்திய வங்கி பொலிஸை அழைத்தும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றும் மிக கோழைத்தனமான அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிற்சங்கங்களுக்கு தீங்கு விளைவித்து, போராட்ட நடவடிக்கைகளை அவமானப்படுத்தியது மிக வெட்கக்கேடானது.
எம்மை ஏமாற்றவும், கொள்ளையடிக்கவும் இடமளியோம்!
எங்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் இலங்கை மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்க தொழிற்சங்கங்களைச் சுற்றி அணிதிரளுமாறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிய உறுப்பினர்கள், மற்றைய ஓய்வூதிய நிதி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை அழைக்கிறோம்!
ஏமாற்றவும் கொள்ளையடிக்கவும் இடமளிக்க மாட்டோம்!
வெற்றி உழைக்கும் மக்களுக்கே!
ஆகஸ்ட் 28 போராட்டத்தை ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூடமைப்பு.
தமிழில் மனோரஞ்சன்
No comments:
Post a Comment