அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்கனை அச்சமின்றி வழங்கி, இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளார்.
செப்ரம்பர் மாதம் 6 ம் திகதி சிரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது இந்த சவாலை விடுத்த முன்னாள் ஜனாதிபதி, தனது ஆட்சிக்காலத்தின்போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13ம் திருத்தத்தை விடவும் மிக முன்னேற்றகரமான நிரந்தர அரசியல் தீர்வை தான் கொண்டு வந்ததை பற்றியும் அவர் மிகுந்த மனவேதனையுடன் சுட்டிக்காட்டியதுடன், அத்தீர்வுப்பொதியை தீயிலிட்டெரித்த ரணில் விக்கரமசிங்க இன்று 13 ம் திருத்தத்தினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையேனும் வழங்க முன்வருவாரானால், அவருக்கு தனது பூணர ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட அரசியல் யாப்பு நிபுணர் டாக்டர் நீலன் திருச்செல்வம் , லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் ஆகியோரின் கடின உழைப்பில் 2000ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அந்த அரசியல் தீர்வை பாராளுமன்றத்தில் முன்வைத்து ஆற்றிய உரையின் தமிழாக்கத்தையும், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரதான எதிர்க் கட்சியாக பாராளுமன்றத்தில் அதனை எதிர்த்தது என்பதையும் எவ்வாறு அத்தீர்வுப்பொதியை தீயிலிட்டு கொழுத்தினார்கள் என்பதையும் கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் வகையில் அதிகாரப் பகிர்வுக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பின் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகஸ்ட் 3, 2000 மாண்டு ஆற்றிய உரை.
கெளரவ சபாநாயகர் அவர்களே, இன்றைய நாள் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். மேலும் பல்லாயிரம் ஆண்டுகளின் மகத்தான வரலாற்றைக் கொண்ட நமது நாட்டின் வரலாற்றில் ஒரு மிகச் சிறப்பான நாளாகும்.
(எதிர்க்கட்சியின் பலத்த இரைச்சலுக்கு மத்தியில் பேச்சை நிறுத்துதல்)
கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்த அரசியலமைப்பு... (மறுபடியும் பெரும் கலாட்டாவின் நடுவில் பேச்சை இடைநிறுத்தி) இந்த நாட்டு மக்களின் வாழ்வை முற்றாக அழித்த, இந்நாட்டின் வரலாற்றில் இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு சாபக்கேடாக அமைந்த இந்த இனப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக... இந்த நாட்டில் இந்த இனப்போரை தோற்றுவித்தவர்கள் என்ற வகையில், இந்தப் பிரச்சினையை தீர்க்க எமது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியை நான் கேட்டுக்கொள்கிறேன்.
(மீண்டும் பெரும் தடங்கல்களுக்கு மத்தியில் உரை இடைநிறுத்தப்படுகிறது)
கௌரவ சபாநாயகர் அவர்களே, 1977ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஐந்து தடவைகள் இந்நாட்டின் தமிழ் மக்களை கொடூரமான முறையில் தாக்கி, அவர்களைக் கொன்று, அவர்களை உயிருடன் எரித்து, அவர்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை அழித்து, அபகரித்துள்ளது. அந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தனது அனுசரனையுடன் ஆரம்பித்து வைத்த யுத்தம் இது. அவர்கள் ஆரம்பித்து வைத்த இந்தப் இனப்பிரைச்சினையைத் தீர்ப்பதற்காகத் தான் எமது அரசாங்கம் எமது உயிர்களையும் துச்சமாக மதித்து செயற்பட துணிந்திருக்கின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த நாட்டில் நிலையான உறுதியான சமாதானத்தை ஏற்படுத்துவது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்தப்பொறுப்பு இந்த ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இல்லையா என்ற கேள்வியை நான் கேட்கின்றேன்? இன்று ஒரு குள்ள நரிக்கூட்டம் போல் கூக்குரலிடும் இந்த ஐக்கிய தேசியக் கட்சியால் இந்த நாட்டில் எவ்வாறு பொறுப்புள்ள அரசாங்கத்தை அமைக்கமுடியும்?
கெளரவ சபாநாயகர் அவர்களே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்த அரசியலமைப்பை நான் இன்று முன்வைக்கிறேன். இது நமது நாட்டின் நீண்ட மற்றும் மகத்தான வரலாற்றில் மிகவும் சிறப்பான தருணமாகும். கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று எமது அரசாங்கம் எமது நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை முன்வைப்பதால் மாத்திரம் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று நான் கூற வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களைத் தாக்கி, கொன்று குவித்து ஆரம்பித்த 1983 கறுப்பு ஜூலையில் இருந்து 18 வருடங்களாக எமது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த, சாபக்கேடான, வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் கொடிய யுத்தத்தால் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு நிரந்தரத் தீர்வை முன்வைப்பதால் இந்த நாளும் நிகழ்வும் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
இன்று இந்த அரசியலமைப்பை சமர்ப்பிப்பதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலானதும் மற்றும் நிலையானதுமான முதற்படியை நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகின்றேன்.
கௌரவ எதிர்க்கட்சித் தலைவரே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே, இந்த நாட்டு மக்களினால் வழங்கப்பட்ட ஆணையின் பெயரால், இந்த நாட்டு மக்களின் பெயரால், உங்கள் கட்சியின் ஆதரவை எமக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனவே இதனை மேலும் இழுத்தடிக்காமல் நேர்மையாக உண்மையை சத்தியத்தின் பால் நின்று எமக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்று இந்த அரசியலமைப்பை முன்வைத்து அடுத்த வாரம் 7, 8, 9 ஆம் திகதிகளில் தொடர்ந்து விவாதித்து இந்த அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான எதிர்பார்ப்போடு நாம் முன்வந்துள்ள இந்த வேளையில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இதய சுத்தியோடு உங்கள் மனச்சாட்சிக்கு நேர்மையாக இதற்கு ஆதரவு தருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். கடந்த 18 வருடங்களாக நீண்டு செல்லும் தேசிய அனர்த்தமான இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நேர்மையான ஆதரவைத் தாருங்கள் என்று உங்களிடம் கேட்கின்றேன்.
இந்த அரசியல் யாப்பை முன்வைப்பதுடன் மட்டும் எமது பணி முடிவடைந்துவிடாது. இந்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏனைய அரசியல் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு தனிப்பட்ட முறையிலும், கட்சியாகவும் தத்தமது சொந்த மனச்சாட்சிக்கு உகந்ததாக தீர்மானங்களை எடுத்து எம்முடன் இணைந்து இப்பணியில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
சபாநாயகர் அவர்களே, பல்வேறு சர்வதேச சஞ்சிகைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல அறிக்கைகள் மற்றும் ஊடகங்கள் என்பவற்றில் எல்லாம் கூட, தீர்வு காணப்படாமல், இந்த நூற்றாண்டில் மிகவும் நீண்டு செல்கின்ற ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஒரு யுத்தமாக இலங்கையின் இனப்பிரச்சினையானது பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இதைப் பற்றிய புரிதல் உள்ள ஊடகவியலாளர்கள், வல்லுநர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தவர்கள் சொல்லுவதுபோல் நம் துரதிர்ஷ்டத்தால் இந்த நெருக்கடி நம்மைப் போன்ற ஏழை நாட்டில் ஏற்பட்டது என்று சொல்வதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை.
அதற்கு காரணம் இந்த பிரச்சனை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனை. இந்தப் பிரச்சனை நம் பெற்றோர்கள் மற்றும் நம் தலைமுறையின் சிலரால் உருவாக்கப்பட்ட பிரச்சனை. இந்த பிரச்சனையை நாம் நமது தலைமுறையிலேயே இல்லாமல் செய்யலாம். அதற்கான முழு உரிமையும் அதிகாரமும் நம் கையில்தான் உள்ளது என்பதை நான் தெளிவாகவும் நேரடியாகவும் கூற விரும்புகிறேன்.
இந்த முக்கியமான பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதில் மாற்றுக் கருத்தோ அல்லது மாற்று வழிகள் எதையுமோ முன்வைக்காமல் வெறுமனே தேவையற்றவற்றை பேசி நாங்கள் செய்யும் இந்த முயற்சியை எதிர்க்க வேண்டாம் என்று அனைவரையும் மிகவும் நேர்மையாகவும் மிகவும் பணிவாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
கெளரவ சபாநாயகர் அவர்களே, நாங்கள் பெற்றுக்கொள்ளப் போகும் வாக்குகளின் எண்ணிக்கைக்காக மட்டும் இதைச் செய்யவில்லை. துரதிஷ்டவசமாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் அனைத்து தேர்தல்களிலும் தமது வாக்குகளை மட்டும் மனதிற்கொண்டு நேர்மையாகவும் உறுதியாகவும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவில்லை.
அதனால்தான் இன்றைய தினமானது இந்நாட்டு வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறுகின்றேன். நான் இலங்கையின் பழைய மன்னர் கால வரலாற்றைப் பற்றி இங்கு பேசவில்லை. 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக, நாம் ஆட்சிக்கு வந்த பின் ஒரு அரசாங்கம் என்ற வகையில், எல்லா வகையான தடைகளுக்கு மத்தியிலும், யாருடைய செல்வாக்கும்மின்றி, அந்நிய நாடுகளின் தலையீடின்றி நாம் இந்த தீர்வை முன்வைக்கின்றோம்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறும் விடுதலைப் புலிகள் அந்த மக்களின் விமோசனத்துக்கான சிறப்பான தீர்வான இதை எதிர்க்கின்றபோதும், எமது அமைச்சர்கள் பலர் எதிர்க்கும் போதும், என்னைக் கொல்லத் தயாராகும் போதும், எமது அமைச்சர்கள் பலரை கொல்வதற்கு முயற்சிகின்ற போதும்கூட நாம் இந்தப் பிரைச்சினையை தீர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எமது கழுத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது தேசம் வீழ்ந்துள்ள சாபக்கேடான இந்த அதளபாதாளத்தில் இருந்து எமது தேசத்தை மீட்பதற்காக, எமது நாடு தள்ளப்பட்டுள்ள இந்த கீழ்த்தரமான தலைவிதியிலிருந்து எமது மக்களை மீட்பதற்கும் உள்ள ஒரே வழி இது ஒன்றே என நாம் நம்புவதாலேயே நாம் இதனை செயற்படுத்த விரும்புகின்றோம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த அரசியல் யாப்பினுள் பொதிந்துள்ள உள்ளடக்கத்தை நடைமுறைப்படுத்தி, இந்நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமை வழங்குவதன் மூலம், இந்த நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனத்தவர்களும் நிமிர்ந்த நெஞ்சுடன் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்கி, நாம் அனைவரும் சுபீட்சத்தை நோக்கி முன்னேறுவோம்.
இந்த நாட்டில் அனைவருக்கும் நமது அரசாங்கம் கட்டியெழுப்புகின்ற வலுவான பொருளாதார அடித்தளத்தின் மீது, ஆசியாவில் மீண்டும் ஒருமுறை நாகரீகமான சமுதாயம், நாகரீகமான அரசு மற்றும் ஒரு வளர்ந்த பொருளாதாரம் கொண்ட வளமான மக்கள் ஆகிய பண்புகளை எம்மால் உருவாக்க முடியும் என்பதை இன்று இந்தச் சபையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதற்காக நான் அரச தலைவர் என்ற வகையில் இந்த அதியுச்ச சட்டத்தை இந்த சபையில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கியமைக்காக கௌரவ சபாநாயகர் அவர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், எமது அவைத்தலைவர் திரு. ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று இங்கு இப்பணியை செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தவர் என்ற வகையில் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
மற்றும் கடந்த 6 வருடங்களாக 1994 இல் இருந்து நாம் தேர்தலை எதிர்நோக்குகின்றன இன்றுவரையிலும் இந்த யாப்பைத் தயாரிப்பதில் பெரும் பங்காற்றிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் இப்பணியில் ஈடுபட்ட ஏனைய அமைச்சர்கள் அனைவருக்கும், இப்பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இப்பணியை நிறைவேற்ற அயராது உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், தனிப்பட்ட முறையிலும் எனது அரசு சார்பிலும், உங்கள் அனைவருக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment