யுத்தகாலத்தில் இந்த வகை மனநோயாளிகளின் மனதைக் குளிர வைப்பதற்காக, அல்லது அந்த மனநோயாளிகளிடமிருந்து அளவு கணக்கற்ற பணப் பெறுமதியைப் புலிகள் பெற்றுக் கொள்ளவைப்பதற்காக நிலாந்தன் அவர்கள் எழுதிய எழுத்துக்கள் ஏராளம். “சந்திரிகா எழுதப் போகும் சோதனை” (2005) என்று கண்டியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பிக்கு ஒருவரது நிலை குறித்து எழுதியது என்றாலும் சரி, “ சேது சமுத்திரத் திட்டம் கடற்புலிகளுக்கு எதிரானதா” (2005) என எழுதியது என்றாலும் சரி, சந்திரிகாவின் அரச காலத்தில் “சமாதானத்திற்குக் குறுக்கு வழிகள் உண்டா?” (2004) என்று எழுதியதென்றாலும் சரி , “தமிழ் தொியாத- அநேகமாக ஆங்கிலமும் தெரியாத ஜப்பானியர்கள் வவுனியாவில் வீடு வீடாகச் சென்று கைப்பாசைகள் மூலம் மணிக்கூடு விற்கிறார்கள்” என்று தொடங்கும் “வல்லரசுகளின் குத்துச் சண்டைக்குள் சமாதானம்” (2003) என்று எழுதிய பல கட்டுரைகள் அவற்றிற்கு உதாரணங்களாக இருக்கின்றன. உண்மையில் அவர் எழுதும் எழுத்துக்கள் அயோக்கியத் தனம் கொண்டவை என்று அவருக்கு உணர முடிந்திருந்தாலும் அதையே அவர் தொடர்ந்தும் எழுதினார். ஏனெனில் அவர் ஒரு தற்குறி.
யுத்தம் முடிந்த பிற்பாடு 2009இன் பின்னர் “பிரபாகரனிசம்” என்று ஒன்று உருவாகும் என்பதாகச் சூரியத் தேவன் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய கட்டுரையையும், கறுப்பு வெள்ளையாக நாம் ஒரு கருத்தை அணுகமுடியாது என்பதாகக் குறிப்பிட்டு சாம்பல் நிறக் கருத்தாக்கம் பற்றி எழுதிய கட்டுரையையும் அவர் அவ்வப்போது உரையாற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரைகளையும் நீங்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்திருக்கக் கூடும்- கேட்டிருக்கக் கூடும். இவ்வாறு காலாகாலத்திற்குத் தகுந்தபடி மனநோயாளிகளுக்குக் கதை சொல்ல வேண்டி வந்ததில் சொல்லப்பட்ட கடைசிக் கதைதான் அவரது "கஞ்சிக் கதை" கவிதை.
இந்த ஆய்வாளன் சொன்ன “முள்ளிவாய்க்கால் கஞ்சி”யை முள்ளிவாய்காலுக்குள் இருந்து அவர் குடித்ததேயில்லை என்பதே என் கணக்கு. என் கணக்குத் தப்பாது இருந்தால் ஜனவரி 2009 காலப்பகுதியில் கிளிநெச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் முழுதாகக் கொண்டுவரப்பட்ட காலத்தில் அவர் யாழ்ப்பாணம் சென்றிருக்க வேண்டும். அவர் இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்காலிற்குள் வாழ்ந்ததாக எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. அவரும் அதனைச் சொன்னதில்லை. அவர் தனது பேச்சு வல்லமையால் அந்தக் கதையை மழுங்கடித்தே தொடர்ந்து பேசிவருகிறார்.
ஒரு அழுகிய யுத்தத்திற்குள் இருந்து ஒருவர் தனது உயிரைத் தப்ப வைப்பதற்கு எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதுவே சரி என்பதுதான் மனித இயல்பு. அதே போன்று நிலாந்தன் அவர்கள் எடுத்த முள்ளிவாய்க்காலுக்குள் செல்லாது தப்பிய முடிவு என்பதும் எக்காலத்திலும் நியாயமானதே. ஆனால் அந்த முடிவின் பின்னர் அவர் பேசிவரும் அசிங்கம் கொண்ட கதைகள் மனித குலத்திற்கு எதிரானது. மனித நேயத்திற்கு எதிரானது. அதன் இயல்பிற்குள் அடங்காதது.
ரொரண்டோவில் அவரை அழைத்த தமிழ்த் தேசிய மனநோயாளர்கள் முன்னால் அவர் ஒரு உரை நிகழ்த்தினார். அந்த “முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை” யை இங்கே கேட்கமுடியும்.
இதனை அனைவரும் கேட்க வேண்டுமென விரும்புகிறேன். இந்த உரையில் அவர் சொல்வதெல்லாம் அவரது மதியிழந்த உரை என்றே நான் கணிப்பிடுகிறேன். ஒரு அயோக்கியக் கூட்டத்திற்கு முன் தான் என்ன உரை ஆற்ற வேண்டும் என மனித நேயம் கொண்டவர்கள் தயங்குவார்கள். ஆனால் எந்தத் தயக்கமும் இன்றி, எந்தக் கூச்சமும் இன்றி கேட்டுக் கொண்டிருப்பவர்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் உரையாற்றும் நிலாந்தன் என்பவரை நாம் எவ்வாறு அடையாளப்படுத்துவது? என்ன பெயர் கொண்டு அழைப்பது?
“சுனாமி அரசியல்” (ஜனவரி 2005) என்ற கட்டுரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செய்யப்படும் மீள் கட்டுமானங்களும் சுனாமி உதவிக் கொடுப்பனவுகளும் புலிகளுக்கூடாகவே செய்யப்பட வேண்டும் என்பதாகவும் அது சர்வதேசத்திற்கு புலிகளை மறைமுகமாகவேனும் அங்கீகரிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதாகவும் சொல்லும் நிலாந்தன் “இது புலிகளின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும் ஒரு வளர்ச்சிக்குக் கொண்டுபோய்விடக் கூடும் இது தவிர்க்க முடியாததும் கூட” என்கிறார்.
உலகம் பூராவும் செய்வதறியாது உறைந்து போயிருந்த காலத்தில், அவலச்சுழியில் அனைத்து மனித உயிர்களும் அழுது கொண்டிருந்த காலத்தில், அந்த அவலத்தை வைத்து புலிகளின் மேலாண்மையைக் காட்ட வழிகாட்டிப் பிழைக்கிறார் நிலாந்தன். சுனாமியில் வதை பட்டு மரணித்த பிணங்களிலிருந்து நகைகளைக் கழற்றியெடுத்தவர்களுக்கும் கரையொதுங்கிய பிணங்களை ஒழித்து வைத்து தாமே கண்டெடுத்தோம் என்று வீடு தேடிச்சென்று கொடுத்துப் பணம் பெற்ற பலசாலிகளின் மேலாண்மைக்கும் நிலாந்தன் சொல்லும் புலிகளின் மேலாண்மைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
நித்திரைப் பாயிலிருந்து குழந்தைகளையும் பெற்றோரையும் ஓருசேர இழுத்துச் சென்று பிணங்களாய் கரையொதுங்கவைத்த பேரலைக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் செய்வதறியாது பார்த்திருந்த மிஞ்சியவர்களுக்கு கிடைத்த உலகநாட்டின் உதவிக்குள்ளால் புலிகளின் மேலாண்மைக்குக் கணக்குத் தேடிக் கொடுக்கிறார் கயமையை மனங்கொண்டலையும் நிலாந்தன்.
அதைவிடவும் சேது சமுத்திரத் திட்டம் காங்கேசன் துறைமுகம் உட்பட இலங்கையின்மற்றய துறைமுகங்களுக்கு பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும் ஒரு திட்டம் என்று பலர் எழுதுகிறார்கள் என்றும், ஆனால் அது கடற்புலிகளுக்கு நல்ல சூழல் அல்ல எனச் சொல்லும் நிலாந்தன் ;
” தமிழீழப் போராட்டம் முடிவுறாத சூழலில் அதுவும் இந்தியா புலிகளுடன் எத்தகைய ஒரு இணக்கத்திற்கும் வரப் பின்னடிக்கும் ஒரு சூழலில் எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை மேற்கு நாடுகள் தத்தெடுத்துவிடுமோ என்று ஒரு அச்சம் புதுடில்லியில் உள்ள சில கொள்கை வகுப்பாளர் மத்தியில் உருவாகிவரும் ஒரு சூழலில் இத்திட்டமானது போரியல் அர்த்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பாதகமாக மாறக் கூடிய நிலைமைகளே அதிகம் காணப்படுகின்றன.” என்கிறார்.
இந்த மாதிரியான புலிகளுக்காக வலிந்து வலிந்து முண்டு கொடுத்த எழுத்துக்களை அளவிட்டே அவரை நான் புலிகளின் உத்தியோகத்தர் என்று சிலகாலத்தின் முன் அடையாளம் இட்டேன். அவர் அதனை உடனடியாகவே மறுத்திருந்தார். உண்மையாய்ச் சொல்லப் போனால் புலிகளை விடவும் புலிகளுக்காக வேலை செய்த உத்தியோகத்தர்களை விடவும் மானிட விரோதம் கொண்ட அயோக்கித்தன வேலைகளையே அவர் அன்றும் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார். அதற்கான சான்றுகளே இவை.
நிலாந்தன் தன்னுடைய வாழ்நாளில் இவ்வாறு எழுதிய யுத்தகாலக் கட்டுரைகளை தனது அடையாளமாகக் காட்ட விரும்பாது போகலாம். ஆனால் நமது சமூகத்தின் அழிவிற்கும் அது தொடர்ந்தும் அறிவைக் கொலை செய்வதற்கும் இவர்களைப் போன்ற நயவஞ்சகர்களே காரணம் என்பதற்காகவேனும் அவர் யுத்தகாலத்தில் எழுதிய கட்டுரைகளை நாம் யாரேனும் தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும். அது அவர் விரும்பாது விட்டாலும் கூட.
இவர்களைப் போன்றவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இலங்கையிலிருந்த எனது நண்பர் ஒருவர் சொன்னார், “மச்சான் உவங்கள் தான்ரா “ உண்மையான கோயில் யானைகள்” என்று.
கோயில் யானைகளுக்கு பாரம் தூக்கிற வலி தெரியாது. பசி தெரியாது. மழையோ, வெயிலோ, காற்றோ, புயலோ, இடியோ, மின்னலோ எதனுடைய அச்சமும் தெரியாது. சேறும் சகதியும் தெரியாது. நல்ல வடிவாக வெளிக்கிட்டு பொட்டும் வைத்துக் குடையும் பிடித்து வரவேற்பாளர்களுக்கு முன் நடந்து திரிவதோடு பார்வையாளர்கள் கொடுக்கும் வாழைப்பழங்களை வாங்கித் தின்று திரிவதும், அவ்வப்போது விருந்தாளிகளைச் சந்திப்பதும் தானே வாழ்க்கை. அந்த வாழ்க்கையை ஒத்ததுதான் நிலாந்தன் போன்றவர்களது வாழ்க்கையும். பொதுவாச் சொன்னா “பெரகரா யானை” மாதிரி விருந்தாளிகளுக்கு முன் நடனமாடும் யானைகளடா உவங்கள்.”என்றார். அவர் சொன்ன அவ்வளவு சொல்லும் உண்மை என்பதனை நிலாந்தன் நமக்குத் தொடர்ந்தும் நிரூபித்து வருகிறார்.
முள்ளிவாய்க்காலுக்குள் அகப்பட்டு சீரழிந்து சிதைந்து போன மக்கள் கதை ஒன்றாக இருக்க ரொரண்டோவில் உள்ள தமிழ்த் தேசிய மனநோயாளிகளுக்கு, தான் ஏதோ முள்ளிவாய்க்காலில் வாழ்ந்ததாகக் கஞ்சிக் கதையும் வாய்ப்பன் கதையும் கடலை வடைக் கதையும் சொல்லிச் செல்கிறார். அதனையும் மீறி வங்கக் கடலினை மலக்கடல் என்றும் நந்திக் கடலைப் பிணக்கடல் என்றும் அங்கிருந்து பார்த்ததாகக் கதை சொல்கிறார். ஒரு பச்சைமிளகாய் நூறு ரூபாவிற்கு விற்றார்கள்.கறிக்குப் புளியிருக்கவில்லை. கறிக்குப் பால் இருக்கவில்லை என்கிறார். இந்தக் காலத்தில் தான் ரொரண்டோவில் புலிகளின் பினாமியாக இயங்கிய வானொலிகள் தொலைக்காட்சிகள் எல்லாம் முள்ளிவாய்க்காலில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தன.
ஒரு முப்பதினாயிரம் பெறுமதியான சங்கிலியை முன்நூறு ரூபாவிற்கு விற்று தனது குழந்தைக்குப் பால்மா வாங்கினேன் என்று கதறிய தாயின் அழுகையை அப்போது இங்குள்ள புலிப்பினாமிகள் ஒலிபரப்பினார்கள். அவ்வாறு வாங்கியவனும் அந்த மரணவாழ்விற்குள் தானே இருந்தான் என்பது இந்த மனநோயாளிகளுக்கும் தெரிந்திருந்தது. ஆனால் அந்தத் தர்க்கம் குறித்து உரையாடினால் தங்ககளது பிழைப்புப் பறிபோய்விடும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலத்திலும் ரொரண்டோவிலிருந்து உண்டியல் மூலம் அங்கே பணம் அனுப்பக் கூடியதாகத்தான் இருந்தது. அவ்வாறு அனுப்பிய பணத்தின் மூலம் பிடித்துச் சென்ற தனது சகோதரங்களை புலிகளிலிருந்து விலக்கி எடுத்து இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வெளிக் கொண்டு வரவும் முடிந்த காலங்களாகத்தான் அவை இருந்தன. இவையெல்லாம் நிலாந்தன் வகை ஆய்வாளர்களுக்கும் நன்கு தெரியும். அவர்களை நம்பியிருக்கும் மனநோயாளிகளுக்கும் தெரியும். ஆனால் இவை எதையும் தெரியாததும் அறியாததும் போல இவர்கள் காட்டும் பாவனை என்பது மனித குலத்திற்குத் தீங்கானது. இந்தப்பாவனைகள் அவசரஅவசரமாக் காடாற்றப்பட வேண்டும். இல்லையேல் இந்த சமூகத்திற்கு மீட்சி என்பதே ஒருபொழுதிலும் இருக்கப் போவதில்லை.
யுத்தகாலத்தில் உசுப்பேற்றி எழுதிய கட்டுரைகளைப் போல இன்று அவரது கஞ்சிப் பாடலையும் சாம்பல் நிறக் கதைகளையும் கேட்டு மதி மயங்கிய மனநோயாளிகளைப் போலத்தான் ஆரம்பகாலத்தில் இனத்துவேசங்களையும் தியாகி- துரோகி கட்டமைப்புக்களையும் வெளிக்காட்டி துரோகிகளைக் களையெடுக்கவேண்டும் என எழுதிய எழுத்துக்களை நம்மவர்கள் கொண்டாடினார்கள். இவ்வாறு கொண்டாடிய கொண்டாட்டம் எவ்வளவு பெரிய கொடூரத்தை தனது இனத்துக்குள்ளேயே நிகழ்த்தி முடித்தது என்பதனை நமக்கு நம் வாழ்காலத்திலேயே கண்டுணர வைத்திருக்கிறது.
ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அதற்கு “துரோகத்தின் பரிசு” இதுதான் என்று எழுதியவர்கள் நம்மிடையே வாழ்ந்த சாதாரணமக்களல்ல, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
24.2.71சுதந்திரன்(படம் நன்றி கிரிதரன்) |
இந்தப் பதகழிப்பில் எல்லோருக்கும் நல்லவனாக நடிக்க அடுத்த ஒரு அயோக்கிய இலக்கியக் கூட்டம் வெளிக்கிட்டிருக்கிறது. துரோகிக்கும் ஒரு பூ. தியாகிக்கும் ஒரு பூ என்று இரண்டு பூக்களை ஏந்தியவாறு வருடத்திற்கு இரண்டு முறை அலைகிறது. ஒன்று புலிகளின் மாவீரர் தினத்திற்கும் மற்றது புலிகள் மக்களை அழித்து தானும் அழிந்த மே மாதத்திற்கும்.
இந்தக் கவிதையை எழுதியவர் பலர் “கவிஞர்” என அடையாளம் சொல்லும் சித்தாந்தன். ஆனால் இதனைக் காலாகாலமும் தொடர்ந்து காவுபவர் எழுத்தாளர் அருண்மொழிவர்மன். இவர்கள் தாங்கள் கடந்து வந்த அழுகிய புலித் தேசியக் காய்ச்சலில் இருந்து இன்னும் அறுபட முடியாது தொங்குபவர்கள். அதற்கும் வாலாட்ட வேண்டும் மற்றப்பக்கமும் தலையாட்ட வேண்டும் என்ற வில்லங்கத்தில் கொண்டலையத் துடிக்கும் கவிதை இது. இந்தக் கவிதை சொல்ல வரும் விடயம், அதனைத் திரும்பத் திரும்பப் பதிவிட்டு அதற்கான நிலை நிறுத்தலைக் கோர நினைக்கும் மனப்பான்மை இந்த சமூகத்தை இன்னும் நிலை குலையச் செய்பவை. இதற்கும் நிலாந்தன் தினமும் கொட்டிக் கொண்டிருக்கும் நஞ்சிற்கும் எள்ளளவும் வித்தியாசமில்லை. அன்று காசி ஆனந்தன் எழுதிய “களை” எடுக்கும் கவிதைக்கும் இதற்கும் இயல்பில் மாற்றம் இல்லை. இது நவீனமடைந்த நச்சுச் செயல். NEO காசியின் வளர்ச்சி.
இன்னும் சொல்லப் போனால்,
“மண் அகத்திலும் வானிலும் எங்குமாம்
திண் அகத்து திரு ஆலவாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண்
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே”
என்று
சமணப்பெண்களைக் கற்பழிக்க இறைவா வழி செய்து கொடு என்று பக்திகாலத்தில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்திற்கும் இவர்கள் பாடும் இத்தகைய கவிதைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமேயில்லை.
காசி பாடியதற்கும்
புதுவை பாடியதற்கும்
சித்தாந்தன் பாடியதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
காலமும் மொழியும் ஆட்களுந்தான் வேறு. ஆனால் கதை ஒன்றுதான். ஒரே சிந்தனைதான். நவீனமடைந்த நச்சு. இந்தச் சிந்தனையைத்தான் அறுந்தழிய வேண்டும் என்கிறேன் நான்.
காசியைத் தாண்டிப் போய் ஞானசம்பந்தனையே எட்டிப்பிடிக்கும் நிலையை இந்த NEO உணர்ச்சிக் கவிஞர்கள் கொண்டிருப்பது எப்பொழுதும் ஆபத்தானது. இது அறிவைக் கொலை செய்யும் சமூகம்.
இதனைக் கவனமாகக் காடாற்ற வேண்டும்.
நன்றி
அபத்தம் ஜூன், 2023
No comments:
Post a Comment