இளங்கவிஞையும் பெண்நிலைவாதியுமான சிவரமணியின் மறைவு துயரந் தோய்ந்தது. அராஜகம் கோரநர்த்தனம் புரியும் ஒரு அந்தகார வெளியில் ஒரு சின்ன விளக்கைப் பிடித்துக்கொண்டு போக முனைந்த அவர் தன்னையே அழித்துக் கொண்டு விட்டமை மனிதாபிமானம் கொண்ட எவரதும் அனுதாபத்தையும் கோருவது.
ஜேர்மனியில் ஒரு இலக்கியச் சந்திப்பில் தமிழ்ப் பெண்நிலைவாதிகள் அவரது கவிதைகளை வாசித்து அவரின் மறைவை நினைவு கூர்ந்தபோது, அந்நிகழ்வை அவருடைய தற்கொலையை அவர்கள் ஆராதித்து மகுடம் சூட்ட முனைவதாகவும் அது வெறும் கோழைத்தனம் மட்டுமே என்றும் ஒருவர் வாதிட்டார். ’ஞானி நிலவைச் சுட்டிக்காட்டினால் மூடன் சுட்டுவிரலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்கிற கூற்றுத்தான் அப்போது என் நினைவில் எழுந்தது.
"சிவரமணி போன்றோரின் தற்கொலை என்பது அடிப்படையிற் கோழைத்தனமானது. சிவரமணி வெறும் கவிதைகள் மட்டுமென்ற நிலையிலிருந்ததுடன், தனது அரசியற் பாதையை வகுத்துக்கொள்ளாத நிலையில் இருந்ததும் தற்கொலைக்கான காரணம் எனலாம். கலை கலைக்காக மட்டுமென்ற ஊகம் உடையவர்கள்கூட சில பிரச்சினைகளைக் கண்டு அதன் மீதான வெறுப்புடன் தற்கொலையை நாடுகின்றனர்.
அப்பிரச்சினைகளை மாற்றத் திராணியற்ற இவர்களின் மரணம் கோழைத்தனமானது" என்று இன்னுமொரு 'காரணமன்னர்களின்' No appeal தீர்ப்பு.
ஏன் சிவரமணி எதிர் நீச்சல் போடவில்லை? என்று இன்னுமொரு கண்டனம்.
இந்த நபர்களெல்லாம் கூடிக்கூடிப் போனால் தாங்கள் எதிர்நீச்சல் போட்ட மகத்தான அனுபவத்திலிருந்து சிவரமணிக்கு யாராவது Travel Agency யின் விலாசத்தைச் சிபார்சு செய்திருக்கக்கூடும். அவ்வளவுதான்!
சிவரமணி என்ற முரசின் மீது தங்கள் மொண்ணைக் கத்திகளைச் சுழற்றி மோதிக் கூச்சல் எழுப்பும் இவர்களின் வாதத்தில் ஒருவருக்கு ஆழ்ந்து கிரகித்துக்கொள்வதற்கு எதுவுமில்லை.
கிறிஸ்தவத் திருச்சபைகள்
தற்கொலையை அழுத்தமாகக் கண்டிப்பது மட்டுமே ஒருவரை முற்போக்கானவராக்கி விடாது. மத்தியகாலக் கிறிஸ்தவத் திருச்சபைகள் தற்கொலையை மிக மோசமாகக் கண்டனம் செய்திருக்கின்றன. ஒருவர் தன் விருப்பத்தின்படி தன் உயிரை நீக்கிக்கொள்ள முனைவது கடவுளின் ஆதிபத்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விஷயமாகக் கருதப்பட்டு, தற்கொலை செய்தவர்களுக்குக் கிறிஸ்தவ மதச்சடங்கே நிராகரிக்கப்பட்டது. இன்னும் ஒருபடி மேலேபோய் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல் சந்திகளில் வீசப்பட்டு, கழுகுகளாலும் நாய்களாலும் குதறிச் சிதைக்கப்பட்டு நிந்தனைக்கும் அவமரியாதைக்கும் உட்படுத்தப்பட்டது. அந்தச் சடலங்களைப் புதைக்க அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில்கூட யாருக்கும் தெரியாமல்-கிறிஸ்தவச் சடங்கு எதுவுமில்லாமல், இரவில் மட்டுமே புதைக்கவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. தற்கொலை எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலுங்கூட அது அபாயமான காரியம்தான் என்று புனித, ஆகஸ்தின் நிராகரித்ததிலிருந்து, கிறிஸ்தவ சமயம் தற்கொலையைக் கொலைக்குச் சமமான குற்றச் செயலாகவே கருதிச் செயற்பட்டு வந்திருக்கிறது. தற்கொலைக்கு எதிரான சட்டங்கள் 11 ஆம் நுாற்றாண்டிலேயே இங்கிலாந்தில் நடைமுறைக்கு வந்துவிட்டன. தற்கொலை செய்பவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதோடு அவர்களுக்குக் கிறிஸ்தவச் சவஅடக்கமும் நிராகரிக்கப்பட்டது. 1882 ஆம் ஆண்டுவரை இந்த விதிகள் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்தன.
கிறிஸ்தவத் திருச்சபையும் அரசும் தற்கொலையைக் கடுமையாகக் கண்டிப்பதை எதிர்த்து வெவ்வேறு கண்ணோட்டத்திலிருந்து, அதன் சரிபிழைகள் எதுவாயினும், கியூம், மொந்தேயின், மொந்தெஸ்கியூ, வோல்தயர், ரூஸோ போன்ற அறிஞர்கள் பெருங்குரல் எழுப்பியுள்ளனர்.
ஆக, இந்த இகவாழ்வை இந்துசமயம் நிராகரித்து விடுவதால்-இந்துசமயம் “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி… எல்லாப் பிறப்பும் பிறந்து இளைக்க வேண்டியிருப்பதால்" உயிரின் சொந்தக்காரன் வேண்டுமானால் தான் அதை நினைத்த மாத்திரத்தில் 'தட்டி'விட்டுப் போவது பற்றிச் சமரசம் செய்துகொண்டு விடுகிறது.
கிறிஸ்தவ சமயத்தைவிட மோசமாகத் திருக்குர்ஆன் தற்கொலையைக் கண்டனம் செய்கிறது. கொலையைவிடப் பாரதுரமான குற்றச் செயலாகத் தற்கொலையை அது கருதுகிறது.
மத்தியகாலக் கிறிஸ்தவ திருச்சபைக் காரர்களின் அதே குரல்கள் இப்போதும் வெவ்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு காரணங்களைக் காட்டிக்கொண்டு தலையெடுப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
பிரெஞ்சு அறிஞர் துர்க்ஹைம்
நவீன சமூகவியலின் தந்தை எனப்படும் எமில் துர்க்ஹைம்(Emile Durkheim) என்ற பிரெஞ்சுச் சமூகவியலறிஞர் நூறு ஆண்டுகளுக்கு முன் ’தற்கொலை’ பற்றி நடத்திய சமூகவியலாய்வு இன்றும் அத்துறையில் மகத்தான நூலாகவே கணிக்கப்படுகிறது.
துர்க்ஹைம் தற்கொலையைத் தனிநபர் ஒருவரின் செயற்பாடாக, தனிநபரின் உளவியல், அவரின் மனக்கிளர்ச்சிகள் சார்ந்த தனித்துவ மனோபாவம், அவரின் விஷேடகுணாம்சம், இளமைக்கால நிகழ்வுகள், அவரது Private history ஆகியவற்றால் மட்டுமே விளக்கிவிடமுடியுமென்று கருதவில்லை. அதீத தனிநபர் நடவடிக்கையாக மட்டுமே சாதாரணமாகக் கருதப்படும் தற்கொலைக்குச் சமூகவியல் விளக்கம் காண முனைந்ததில்தான் துர்க்ஹைமின் ஆராய்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட புறக்கணிக்கப்பட முடியாத ஆராய்ச்சியாக நின்று நீடிக்க முடிந்திருக்கிறது. தற்கொலை நிகழ்ச்சியில் சமூகக்காரணிகளை முதன்முதலாக நிலைநிறுத்தியவர் துர்க்ஹைம் ஆவார்.
வெறும் தனிநபர்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள் எனின் ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு குறிக்கப்பட்ட தற்கொலை வீதம் ஏன் காணப்படுகிறது என்று துர்க்ஹைம் கேள்வி எழுப்பினார். பல்வேறு நாடுகளின் தற்கொலை வீதம் பற்றிய புள்ளிவிபரங்களைத் திரட்டி விரிந்த ஆய்வை மேற்கொண்டார். இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டும் தற்கொலை வீதங்களைச் சமூக அமைப்பியல் சக்திகளின் ஏற்றத்தாழ்வான அசமத்துவமான செயற்பாடுகளின் விளைவாக விளக்கப்படவேண்டிய சமூக உண்மைகளாக அவர் கண்டார். தற்கொலை வீதமானது ஒரு மெய்யான ஒழுங்குமுறை சார்ந்தும், ஒருமித்த போக்கைக் காட்டுவதும் திட்டவட்டமானதும் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு சமூகமும் திட்டவட்டமான தற்கொலைக் "கோட்டாக்களைக்" கொண்டுள்ளது என்றும் இது சமூகவியலின் விஷேச ஆய்வுக்குரியதென்றும் அவர் கருதினார்.
பல்வேறு நாடுகளினதும், ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் கூட பல்வேறு வகை சார்ந்த மக்களதும் ஒப்பீட்டு ரீதியான புள்ளிவிபரங்கள் தற்கொலை வீதங்கள் சார்பு ரீதியில் நிலையானவையாக உள்ளன என்றும் எனவே தற்கொலையை நோக்கிய ஒரு கூட்டு மனப்பாங்கு (collective tendency to suicide) ஒவ்வொரு சமூகத்திலும் நிலவுவது என்பது ஒரு சமூக உண்மை என்றும் அவர் நிறுவினார். இத்தகைய கூட்டு மனப்பாங்குகள் சில பொதுக்காரணிகளின் அடிப்படையில் பொதுவாக வகைப்படுத்தக்கூடிய தற்கொலைகளோடு தொடர்புபடுத்தக்கூடியது என்றும் அவர் கருதினார். கூடியபட்ச தனிநபர்வாதப் போக்கைத் தூண்டுகிற மையநீக்க விசைகளுக்கும் (Centrifugal forces) கூடியபட்ச சமூகத்தின் இறுக்கமான - கடும்பிடியான அமுக்கங்களைக் கொண்ட மையநாட்ட விசைகளுக்கும் (Centripetal forces) இடையிலான சமத்துவமின்மைகள் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையில் துர்க்ஹைம் தற்கொலைக்கு சமூகவியல் விளக்கம் கண்டார்.
தற்கொலைகளை அவர் சுயமுனைப்பு(Egoism), ஒழுங்கு பிறழ்ந்த நிலை(Anomie), விதிமுனைவாதம்(Fatalism), பொதுமைச்சார்பு(Altruism) தற்கொலைகள் என்று வகைப்படுத்தி ஆராய்கிறார்.
இரண்டு சோடி சமத்துவமின்மை கொண்ட சக்திகளை அவர் வரையறுத்தார். ஒரு சோடி சக்திகள் ஒரு சமூகக் குழுவிற்குள் எந்த அளவிற்கு சமூக ஊடாட்டத்தையும் ஒருங்கிசைவையும் (Degree of integration or interaction in a group) கொண்டுள்ளன என்பதனைப் பொறுத்து சுயமுனைப்புத் தற்கொலைகளும் பொதுமை சார் தற்கொலைகளும் இடம் பெறுகின்றன என்றார். மற்றுமொரு சோடி சக்திகள் எந்த அளவிற்கு அறவியல் நடத்தைகளை ஒழுங்குபடுத்துகின்றன என்பதைப் பொறுத்து ஒழுங்கு பிறழ்ந்த நிலைத் தற்கொலைகளும் விதிமுனைவாதத் தற்கொலைகளும் அமைவதாக தூர்க்ஹைம் கருதினார்.
சமுக ஒருங்கிணைவு (Social integration) எந்த அளவு காணப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு சமூகக்குழு அதன் உறுப்பினர்களால் ஆஹர்சிக்கப்படுவதும், அதுபோலவே தனிநபர் நடத்தையை நெறிப்படுத்தும் ஆற்றலும் அமைகிறது. சமூக ஒருங்கிணைவு சமூக உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் அதேவேளையில் அவர்கள்மீது அழுத்தங்களையும் பிரயோகிக்கிறது.
சமூக ஒருங்கிணைவு வலிமையானதாக இருக்கும் போது தனிநபர்வாதப் போக்கு நசிந்துபோய் அல்லது அமுக்கப்பட்டுச் சமூகக்குழுவின் பொதுக்குறிக்கோள்களுக்காக தனிநபர் தன்னையே அழித்து அர்ப்பணிக்கத் தயாராகிவிடுகிறார் என்று தூர்க்ஹைம் கருதினார். சமூகக்குழுவினால் பூரணமாக உள்வாங்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தனிநபர்த் தன்மை (Individuality) பற்றிய குறைந்த-, வளர்ச்சியுறாத மதிப்பீட்டு நிலையில் அவர் செயற்படுகிறார். சமூகக்குழுவின் நலன் கருதி அது தற்கொலையேயாயினும் தன்னை அர்ப்பணிக்கக் கோரும் அழுத்தத்தினை அவர் எளிதில் நிராகரித்துக் கொள்ள முடிவதில்லை. நவீன ராணுவத்திலும் புராதன சமூகக் குழுக்களின் மத்தியிலும் நிலவும் பொதுமைசார் தற்கொலைகளின் ஒருமித்த தன்மையினைத் துர்க்ஹைம் தன் நூலில் எடுத்துக்காட்டுகிறார்.
முதுமை காரணமாகவோ, நோய்வாய்ப்பட்டோ படுக்கையிற் கிடந்து மரணித்தல் கௌரவக்குறைவு என்று கருதி அந்த அவமரியாதையைத் தவிர்த்துக் கொள்வதற்காகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டுவிட்ட டேனிஷ் போர் வீரர்களைத் துர்க்ஹைம் தன் நூலில் மேற்கோள் காட்டுகிறார். இயற்கையாக மரணிப்பவர்கள் விஷப்பாம்புகள் நிறைந்த நரகக்குழிக்குள் என்றென்றும் கிடந்து உழலுமாறு விதிக்கப்பட்டிருப்பதாக Goths இனத்தவர்கள் நம்பினர்.
வானத்துப் புதுமையல்ல
இத்தகைய தற்கொலைகள் ஒன்றும் வானத்துப் புதுமையல்ல. எதிரிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத் தற்கொலை நாடியவர்கள் பற்றி பைபிள் பேசுகிறது.
"அவனோ ஆண்டவர் பெயரைச் சொல்லி, என் ஆண்டவராகிய கடவுளே! என்னை நினைவு கூரும். இதோ என் இரு கண்களைப் பிடுங்கியவர்களையும் என் எதிரிகளையும் பழிவாங்கும்படி இந்த ஒருமுறை மட்டும் முன்பிருந்த வலிமையை எனக்குத் தாரும் என்று வேண்டினான். பின் அவ்வீட்டைத் தாங்கிய இரு தூண்களை வலக்கையாலும் இடக்கையாலும் பிடித்துக்கொண்டு பிலிஸ்தியரோடு நானும் சாகக்கடவேன் என்று கூறி தூண்களை வன்மையுடன் அசைக்கவே வீடு இடிந்து மக்கட் தலைவர்கள் மேலும் அங்கு இருந்த மற்றவர்கள் மேலும் விழுந்தது. (நீதிபதியாகமம்: 16 ம் அத்தியாயம் 28-30)
அப்பொழுது சாவுல் தன் பரிசேயனை நோக்கி அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் ஒருவேளை என்னை அவமானப்படுத்திக் கொல்லாதபடி, ’நீயே உள் வாளை உருவி என்னை வெட்டிப்போடு' என்றார். அச்ச மிகுதியால் பரிசேயர் அதற்கு இணங்கவில்லை. ஆகையால் சாவுல் தன் வாளைத் தரையில் குத்தி வைத்துத் தாமாகவே அதன் மேல் விழுந்தார். "- (முதலாம் சாமுவேல் ஆகமம்: 31 ம் அத்தியாயம் 4-6)
சாம்சனும் சாவுல் மன்னனும் எதிரிகளால் தாங்கள் கைப்பற்றப்பட்டால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவோ அல்லது கொலை செய்யப்படவோ கூடுமென்று கருதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகளை மேலே குறித்த வேதாகம வாசகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எதிரிகளின் கைகளில் பிடிபட்டு சித்திரவதையுற்று இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகத் தங்களையே அழித்துக் கொள்பவர்களையும் எதிரணி ராணுவ முகாம்களைத் தகர்க்கத் தற்கொலைப் படை போலச் செயற்பட்டுத் தங்களை அழித்துக் கொள்பவர்களையும் கோழைத்தனத்தால் செயற்படுபவர்கள் என்று கூறுவது அறிவுபூர்வமானதாகாது. சமூக அநீதிகளுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவிக்கின்ற மார்க்கமாகவும் சில சந்தர்ப்பங்களில் தற்கொலைகள் அமைந்திருக்கின்றன.
தென்கொரிய அரசின் கொடூரமான தொழிலாளர் வர்க்க அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராயும் ஆகக்குறைந்த சம்பளம், தாங்கமுடியாத கஷ்டமான வேலை நிலைமைகள் ஆகியவற்றினை எதிர்த்து தாய்-சுன் என்ற ஆடைத்தொழிலாளி தன்னையே தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டமை, 1970 இல் தென்கொரிய அரசுக்கெதிரான தொழிலாளர் வர்க்க சக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்ட உதவியதில் தென்கொரிய அரசியல் எழுச்சி வரலாற்றில் மிகமுக்கிய நிகழ்ச்சியாகவே அமைந்தது.
தற்கொலை= கோழைத்தனம் என்ற குருட்டுத்தனமான சமன்பாட்டிற்கு அறிவார்த்த சர்ச்சையில் எந்தவித இடமுமில்லை.
வாழ்வா? சாவா?
தற்கொலை பற்றிய ஆய்வுகள் வெகுவாக முன்னேறியுள்ள போதிலும் இது குறித்த முடிவுகளை மேற்கொள்ளும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதே உசிதமானது. 1918 இல் வியன்னாவில் நடைபெற்ற தற்கொலை பற்றிய உளவியல் ஆய்வரங்கில் அறிஞர் சீக்முண்ட் ஃப்றொய்ட்(Siegmund Freud) கூறிய கருத்துக்கள் இன்றும் பொருந்துவனவாகும்: ”இந்தக் கலந்துரையாடலில் எத்துணை பெறுமதி மிக்க தகவல்களும் தரவுகளும் பெறப்பட்ட போதிலும் நாம் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதில் வெற்றிபெறவில்லையென்றே கூறவேண்டும். நமது அனுபவங்களிலிருந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் நாள்வரும்வரையில் இது குறித்து ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்றே கருதுகிறேன்."
தற்கொலை பற்றிய நுணுகிய உளவியல் ஆய்வை மேற்கொண்ட Zilboorg என்ற அறிஞர். "விஞ்ஞாளபூர்வமான அணுகுமுறையிலிருந்து தற்கொலைப் பிரச்சினை இன்னும் தீர்வு கண்டு முடிவு காணப்படாத பிரச்சினையாகவே உள்ளது என்பது மிகவும் தெளிவானதாகும். பொது உணர்ச்சியோ, Clinical Psycho pathologyயோகூட காரணபூர்வமான அல்லது திட்டவட்டமான பரிசோதனை அனுமானங்களைக்கூட முன்வைக்க முடியவில்லை” என்றார்.
நவீன அறிவியலாளர்கள் பெரும்பாலான தற்கொலை நடவடிக்கைகளில் வாழ்வைப் பேணுகின்ற அல்லது உயிர்வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளுகின்ற மனப்பாங்கிற்கும் சுய அழிவைக் கோரும் போக்கிற்கும் இடையிலான உக்கிரமான மோதலின் பிரதிபலிப்பைக் காணமுடியும் என்று கருத்துத் தெரிவிக்கின்றார்கள். உண்மையில் தற்கொலை புரிபவர்கள் ஒன்றில் சாவையோ அல்லது வாழ்வையோதான் விரும்புகிறார்கள் என்று கறாராகக் கூறிவிடுவதற்கில்லை. ஒரே நேரத்தில் அந்த இரண்டு செயற்பாடுகளையும் மேற்கொள்ள முனைகிறார்கள். சாதாரணமாக ஒன்றை மற்றதைவிடக் கூடுதலாகச் செய்துகொண்டு விடுகிறார்கள். இந்த எதிர்ப் போக்குகளில் ஒன்றைக் காட்டிலும் மற்றையது எவ்வளவு தூரம் வலிமை கொண்டதாக அமைகிறது என்பதைப் பொறுத்துத்தான் தற்கொலை நடவடிக்கைகளின் இறுதி முடிவுகள் அமைந்துவிடுகின்றன என்ற கருத்து அண்மையில் முன்வைக்கப் பட்டுள்ளது.
ஜப்பானியத் தற்கொலைகள்
ஜப்பானைப் பொறுத்தவரையில் ஜப்பானியரின் தற்கொலை நிகழ்ச்சிகள் வேறுபட்ட விளக்கங்களை வேண்டிநிற்கிறது. ஒருவிதமான விளக்கத்தின்படி, ஜப்பானியர்கள் கற்பனாலய வாழ்வில் ஊறிப்போனவர்கள். புரட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் உயர்ந்த தர்க்கபூர்வமான அறிவு கொண்டவர்களாக காணப்படும் நேரத்தில், ஜப்பானிலோ அவர்கள் மிகுந்த கற்பனாவாதிகளாக இருக்கிறார்கள். புரட்சிகர இயக்கங்களில் ஈடுபட்ட ஜப்பானிய மாணவர் தலைவர்களின் இயல்புகளைப் பற்றி அறிஞர் Faur குறிப்பிடுவதை ஜப்பானியத் தற்கொலைகள் பற்றிய ஆராய்ச்சி அறிஞர் பேராசிரியர் Mamouru iga தன்னுடைய, "The thorn in the chrysanthemum - Suicide and Economic success in Modern Japan" என்ற நாலில் மேற்கோள் காட்டுகிறார்.
”எதற்கும் அப்படியே விட்டுக்கொடுத்துக் கொண்டு போகும் போக்கிலிருந்தும் அதிகாரத்துவத்தின் முன்னால் தங்களை அப்படியே ஒப்புக்கொடுத்து நிற்கும் நிலைமைகளிலிருந்தும் மக்களை மீட்டெடுக்கும் இளம் கற்பனாவாதிகளாகவே இந்த மாணவ தலைவர்கள் காணப்படுகிறார்கள் தங்களது சொந்த சாதனைகளில் இவர்கள் கேள்விக்கிடமில்லாத நம்பிக்கை கொண்டுள்ளனர். கற்பனாவாதப் புரட்சிகர அரசியலுக்கும், தீர்க்கமான எதிர்த்தாக்குதல் நடத்தும் சாகசத் தன்மையோடு கூடிய பக்கூனிய சுயஅழிப்புப் போக்கிற்குமிடையில் இவர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தனர்.”
1972 மே 20 ஆம் திகதி தெல் அவிவில் Lod விமான நிலையத்தின் மீது திடீர்த் தாக்குதலைக் கொண்ட ஜப்பானியப் பல்கலைக்கழக மாணவன் கோலோ ஓக்கமோட்டோ மட்டும் கைதுசெய்யப்பட, அவரது இரண்டு புரட்சிகர நண்பர்களும் கிரணைட்ஸ் மூலம் தங்களையே அழித்துக்கொண்டு விட்டனர். கைதுசெய்யப்பட்ட ஓக்கமோட்டோ தனது நினைவுக் குறிப்பில் எழுதுகிறார்: “ஓர் உன்னத இலட்சியம் கருதி சாவிற்காகப் பயப்படாமல் செயற்படுவதென்பது ஜப்பானிய இனத்தில் ஊறிப்போன பண்பு.”
Heizo Toriyama என்ற ஆய்வாளர் ”ஏன் சாவு அஞ்சப்படுகிறது?" என்று ஜப்பானிய, ஜேர்மனிய, ஆஸ்திரிய மாணவர்கள் மத்தியில் அபிப்பிராயக் கணிப்பீட்டை மேற்கொண்டபோது, சாவுக்குப் பிறகு எனது உடலுக்கு என்ன ஆகும் என்ற பயத்தை வரிசைப்படுத்தும் போது, ஜப்பானிய மாணவர்கள் அதற்கு மிகக்குறைந்த இடத்தையே கொடுத்திருந்தார்கள் என்பதை விபரிக்கிறார்.
மரணத்தை இயல்பாக ஏற்றுக்கொள்கிற போக்கு ஜப்பானிய சமூகத்தில் மரணம் பற்றிய பல்வேறு கருத்தோட்டங்களால்தான் பலிதமாகியிருக்கிறது. பதினெட்டு வயதே நிறைந்த ஒரு ஜப்பானிய மாணவன் தனது தற்கொலை பற்றி எழுதிவிட்டுப் போன ஒரு குறிப்பிலிருந்து மரணம் பற்றிய ஒரு தேடலில் அவர் ஆழ்ந்து போய் இருப்பதை நாம் காணமுடியும். அந்தக் கடிதம் வருமாறு: "நான் நீண்டகாலம் வாழத்தான் விரும்பினேன். ஆனால் நான் ஏன் வாழவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஹைஸ்கூலில் படித்த மூன்று ஆண்டுகளிலும் நான் இதற்கு பதில் தேடிப்பார்த்தேன், ஒரு சாமானிய வாழ்க்கையை வாழ்வதென்பது மிகவும் லேசானதுதான்,….. ஒரு பூனையைப் போலவோ, ஒரு பூச்சியைப் போலவோ வாழவும் முடியும்தான். துரதிஷ்டவசமாக மனிதனாகப் பிறந்துவிட்ட காரணத்தால் நான் மிகுந்த துயரத்துடன் இந்த உலகைவிட்டுப் போகிறேன்.
சொர்க்கத்தில் நான் சோக்கிரட்டீசைச் சந்தித்து இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கேட்பேன். வாழ்க்கையின் தத்துவம் தான் என்ன என்று Bergson ஐயும் Kierkegard ஐயும் சந்திப்பேன். Schopenhauer ஐயும் Kant ஐயும் சந்திப்பேன். மிசாவோ பியூசி மாறாவுடன் சம்பாஷிப்பேன். மனிதவாழ்க்கை என்ன என்று விளங்காமல் நீங்கள் வாழ்தல் கூடும். ஆனால் அதற்காக நீங்கள் சாகவும் செய்யலாம். நிம்மதியாக நான் சொர்க்கத்துக்கு போய்ச் சேர்கிறேன். அங்கே எனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவேன். அங்கே என் அப்பாவுடன் சேர்ந்து சிகரட் குடிப்பேன்.” இத்தகைய மரணம் பற்றிய அதீத தத்துவ விசாரணைப் போக்கு ஜப்பானிய இளைஞர்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிறது. ஏக தேசமாக - காலதேச வர்த்தமானங்களுக்கு அப்பால் தற்கொலையைக் கோழைத்தனமானது என்று நிராகரிப்பது வெறும் பாமர அபிப்பிராய உதிர்த்தல் என்ற அந்தஸ்தைப் பெறக்கூட லாயக்கற்றது.
தற்கொலை பற்றி மாஓ
Chao-சாஓ என்ற சீனத்துப் புரட்சிகர இளம்பெண் தங்கள் பெற்றோர் பேசிய திருமணத்திற்கு உடன்படாமல் 1919 நவம்பர் மாதம் தனக்குக் குறிக்கப்பட்டிருந்த திருமணத்தினத்தன்று தற்கொலை செய்து கொண்டுவிட்ட சம்பயம் தலைவர் மாஓவின் நெஞ்சை உலுக்கியிருக்கிறது. மார்க்ஸியப் பேராசான் மாஓவின் ஆரம்பகால அரசியல் எழுத்துக்களில் சாஓவின் தற்கொலை முக்கிய இடத்தை வகிக்கிறது. அந்த ஆண்டின் சாங்ஷா நகரின் மிகப் பிரசித்தமான துயரக் கதையாக அமைந்துவிட்ட சாஓவின் துர்ப்பாக்கிய மரணம் குறித்து மாஓ உணர்ச்சிகரமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
சாஓ என்ற இளம்பெண்னின் தற்கொலை பற்றித் தலைவர் மாஓ பின்வருமாறு எழுதினார்: "ஒரு நபரின் தற்கொலை நிகழ்ச்சியைச் சந்தர்ப்ப சூழ்நிலைகளே முழுமையாக நிர்ணயிக்கின்றன. சாஓவின் உண்மையான நோக்கம் சாவைத் தழுவுவதுதானா? இல்லை. மாறாக அவர் வாழ்வையே நாடினார். ஆனால் அதற்குப் பதிலாக சாஓ சாவைத் தழுவிக்கொண்டிருக்கிறார் என்றால், சூழ்நிலைகள் அவரை அவ்வாறு செய்ய நிர்ப்பந்தித்தன என்பதே காரணமாகும். சாஓவினை நிர்ப்பந்தித்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் பின்வருவனவாகும்:
1. சீனச் சமூகம்
2. சாங்ஷா நகரில் நன்யாங் தெருவில் வாழ்ந்த சாஓவின் குடும்பம்.
3. சாஓ உடன்பட விரும்பாத - அவருக்குக் கணவராக வரிக்கப்பட்ட சாங்ஷா நகரின் கன்சுயான் தெருவில் வாழ்ந்த வூவின் குடும்பம்.
இந்த மூன்று காரணிகளும் ஒரு முக்கோணக் கூண்டு போல மூன்று இரும்பு வலைகளாக அமைந்துள்ளன. இந்த மூன்று வலைப் பின்னல்களில் சிக்கிக் கொண்டுவிட்டபிறகு, சாத்தியமான வழிகளிலெல்லாம் அவர் வாழ்க்கைக்காகப் போராடியது வியர்த்தத்திலேயே முடிந்துவிட்டது. அவர் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவருக்கு ஒரு வழியும் தெரியவில்லை. வாழ்வின் மறுதலை மரணம். சாஓ மரணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டார். இந்த மூன்று காரணிகளில் ஏதாவது ஒன்று இரும்பு வலையாக இல்லாது போயிருந்தால் அல்லது ஏதாவது ஒரு வலையாகிலும் திறந்து விடப்பட்டிருந்தால் சாஓ ஒருநாளும் மரணித்திருக்கமாட்டார்.
நேற்றைய நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்தது. பேசிச் செய்கிற கல்யாணம் என்கிற வெட்கக்கேடான அமைப்பினாலும், எமது சமூக அமைப்பின் இருண்ட தன்மையினாலும், தனிநபரது விருப்பு வெறுப்புக்களை மறுதலிக்கும் தன்மையினாலும், ஒருவர் தனது துணையைத் தானே தேடிக்கொள்கிற சுதந்திரமின்மையினாலுமே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வின் சகல அம்சங்களின் மீதும் இது குறித்து அக்கறை கொண்டவர்கள், தங்கள் விமர்சனங்களை முன்வைப்பதுடன் தனது சொந்தக் காதலைத் தானே தீர்மானிக்கும் சுதந்திரத்துக்காக ஒரு தியாகியின் மரணத்தை வரித்துக்கொண்ட இப்பெண்ணின் பெருமையைப் பாதுகாத்து நிலைநிறுத்தவும் முன்வருதல் வேண்டும்.
தற்கொலை பற்றிய எனது கருத்து அதனை நிராகரிப்பதாகும். முதலில் மனிதனின் குறிக்கோள் வாழ்க்கையைத் தேடுதலாகும். இந்த இயற்கையான போக்கிற்கு எதிராகச் சென்று மரணத்தைத் தழுவிக் கொள்ளக் கூடாது. இரண்டாவதாக, சமூகம் மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் வழங்காத ஒரு உண்மைநிலையிலிருந்துதான் தற்கொலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனினும் நாம் இழந்துபோன நம்பிக்கைகளை மீட்பதற்காக, சமூகத்துக்கு எதிராகப் போராடியேயாக வேண்டும். நாம் ஒரு போராட்டத்திலேயே மரணிக்க வேண்டும். மூன்றாவதாக தங்களது சொந்த வாழ்க்கைக்குத் தாங்களே துணிச்சலோடு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டு விட்டவர்கள் மீது மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள் என்றால், அது ஒருநாளும் அவர்கள் தற்கொலையைக் கெளரவிக்கிறார்கள் என்று ஆகமாட்டாது. மாறாக தற்கொலை செய்துகொள்ள ஒருவரைத் தூண்டிய, ‘காட்டுமிராண்டித்தனமான அதிகாரத்துவத்திற்கு எதிர்ப்புணர்வைக் காட்டும்' துணிச்சலான அவரின் ஆத்ம பலத்தைக் கௌரவிக்கிறார்கள் என்றே அர்த்தமாகும்.
தனது சொந்த உயிரைத் தானே எடுத்துக்கொள்வதைவிட ஒரு போராட்டத்தில் கொல்லப்படுவது எவ்வளவோ உயர்ந்ததுதான். போராட்டத்தின் குறிக்கோள் மற்றவர்களால் கொல்லப்படுவது அல்ல. மாறாக 'உண்மையான ஆளுமையை நிலைநிறுத்த அவாவுதலே’யாகும். ஒரு நபர் தனது சகல முயற்சிகளாலும் இதனை அடைய முடியாது போவாரானால், சாவுடன் போராடித் தன்னையே தியாகத்துக்கு அர்ப்பணிப்பாரெனில் அத்தகைய நபர் இந்த மண்ணில் வாழும் யாரைக் காட்டிலும் வீரம் மிகுந்தவராகவே ( most courageous of all on earth) திகழ்கிறார். அத்தகைய நபரின் துயர முடிவு மக்கள் மனதில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
மாஓவின் இந்த வாசகங்களுக்கு விளக்கம் தேவையில்லை. மாஓ போன்ற மகத்தான புரட்சிகர மனிதாபிமானி சாஓவின் தற்கொலையை மிகுந்த அனுதாபத்தோடு நோக்கித் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கள் மனுக்குலத்தை நேசிக்கும் எவரது சிந்தனையிலும் ஆழ்ந்த பரிவுணர்ச்சியை ஏற்படுத்தவே செய்யும். மாஓ தற்கொலையை முதலில் நிராகரித்துவிட்டுப் பிறகு அவ்வாறு தற்கொலை செய்துகொண்டுவிட்ட நபர் இந்த மண்ணில் வாழும் யாரைக் காட்டிலும் வீரம் மிகுந்தவர் என்று கூறுகின்றாரே. இது இரட்டைத் தன்மையை வெளிப்படுத்தவில்லையா? என்று வாதாடுதல் சாலுமா? தற்கொலையை நிராகரித்தால் மட்டும் போதாது, அதை கோழைத்தனமானது என்றும் நிராகரிக்கவேண்டும் என்று அறிவிலிகளின் மூடத்தனம் மட்டுமே கோரமுடியும்.
சாஓவும் சிவரமணியும்
சாஓ 74 ஆண்டுகளுக்கு முன் சீன மண்ணில் சந்திக்க நேர்ந்த அதே கொடூரமான சமூக அமைப்பு முறையையே சிவரமணியும் யாழ்ப்பாண மண்ணில் சந்திக்க நேர்ந்த கொடுமை துர்ப்பாக்கியமானதுதான். யாழ்ப்பாணத்தில் கோலோச்சும் அராஜகச் சூழலுக்கு எதிராக, "ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை" என்ற தனது பிரசித்தமான கவிதை வரிகளில் தனது எதிர்ப்புணர்வை அந்தச் சூழலில் வெளிப்படுத்திய சிவரமணி யாரைக் காட்டிலும் மிகுந்த வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கொள்வதே பொருந்தும். அன்னிய மண்ணில் அல்ல, அகதிச்சூழலில் அல்ல, சொந்த மண்ணில் சோரம் போய்விட்ட விடுதலைப் போராட்டத்தின் சூழலில், ”எவ்வளவோ காட்சிகள் விரிந்து கிடந்தனதான். ஆனால் அவை எல்லாமே இருண்டுபோன காட்சிகள்” என்று ராஜினி திரணகம வர்ணித்த ஒரு சூழலில், ஒரு பெண்ணின் மீதான இரட்டை ஒடுக்குமுறை மேலாண்மை புரியும் ஒரு சூழலில் தன்னை மாய்த்துக் கொள்வதன் மூலமே தனது சமூகக் கண்டனத்தை வெளியிடமுனைந்த சிவரமணி ஒரு மகத்தான தியாகியின் இடத்தை வகிக்கிறார்.
அவர் கவிதை எழுதியதை ஒரு பாவமே போன்றும் அவர் அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் பிரச்சினைகளை மாற்றத் திராணியற்ற கோழை என்றும் போலிகள் நயவஞ்சகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
மக்கள்சீனத்தின் மகத்தான கலாசாரப் புரட்சியைத் தலைமை ஏற்று நடத்திய மாபெரும் புரட்சிகரத் தலைவியான சியாங் சிங் என்ற தலைவர் மாஓவின் துணைவியார் தனது 77 வயதில் தற்கொலை செய்து கொண்டு தனது சிறை வாழ்வை முடித்துக்கொண்டுவிட்ட நிகழ்ச்சியின் (1991 மே 14) மீது அவதூறு கூறுபவர் யாரோ?
"ஒரு ஜீவமரணப் பிரச்சினை பற்றி நீங்கள் இவ்வளவு அலட்சியமாக இருக்கலாமா?" என்று ஒரு சந்தர்ப்பத்தில் சியாங் சிங்கிடம் கேட்டபோது அந்தப் புரட்சிப்பெண் பின்வருமாறு கூறினார்:
”I don't care. சாவு என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? நான் சாகவேண்டும் என்று எப்போதோ தீர்மானித்து விட்டேன். இப்போதெல்லாம் நான் தியாகத்தைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”
1923 பெப்பிரவரி மாதத்தின் போது லெனின் தனது இறுதிக் காலத்தில் தாங்கமுடியாத நோயின் வேதனையால் நஞ்சு கொண்டுவந்து தருமாறு கேட்டுவிட்டார் என்பதற்காக லெனின் கோழை என்று குறை கூறக்கூடியவர் யார்?
FPL ன் தலைவராக ஒரு தசாப்த காலத்துக்கு மேல் எல் சல்வடோர் யுத்தத்தை வழிநடத்திய கெரில்லாத் தலைவர் கார்ப்பியோ 1983 ஏப்ரல் 12 ல் தனது நெஞ்சில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துவிட்டதற்குக் கோழைத்தனம் மட்டும் விளக்கம் தந்துவிடாது.
சங்கானைச் சாதிஎதிர்ப்புப்போராட்டத்தில் மட்டக்களப்பிலிருந்து சென்று நேரடியாகக் கலந்துகொண்ட மாஓயிஸ்ட்டான கவிஞர் சுபத்திரன் தற்கொலை செய்து கொண்டு மரணித்தது அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளாதுவிட்ட தவறின்பாற் படுமாமோ?
தற்கொலையும் தமிழர்களும்
சிவரமணியின் தற்கொலையினை ஒரு தனித்த நிகழ்வாகவும் கருதுவதற்கில்லை. இலங்கையின் தற்கொலையின் பின்னணியில்-அதுவும் குறிப்பாக வடமாகாண தமிழர்களின் தற்கொலை விகிதாசாரத்தின் பின்னணியில் வைத்துப் பரிசீலிப்பது இன்னும் கூடிய விளக்கத்தினை நமக்குக் கொடுக்கத் துணைபுரியும். அண்மைக்காலப் புள்ளிவிபரங்கள்கூட இணையத்தில் இப்போது கிடைக்கின்றன.
சிங்கள மக்களுடன் ஒப்பிடும் போது வடமாகாண இலங்கைத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஆகக்கூடிய தற்கொலைவீதம் ’அசாதாரணமான தற்கொலைப் பண்பு' என்றும் இது பெருமளவு கிராமியத் தோற்றப்பாடு என்றும் ஆதர் லூயிஸ் வூட்(Arthur Lews Wood) அவர்கள் ’Crime and Agression in changing Ceylon - A Sociological Analysis of Homicide, Suicide and Economic Crime’ என்ற தனது நூலில் கூறுகிறார். கலாசார மதிப்பீடுகள் தற்கொலை வீதத்தின் மீது செல்வாக்கைச் செலுத்த வல்லன என்று வடமாகாணத்தின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய தரவுகள் வலுவூட்டுவனவாக உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
1950களின் நடுப்பகுதியிலிருந்து 1970களின் நடுப்பகுதி வரையிலான இரண்டு தசாப்த காலத்தில் இலங்கையின் தற்கொலை வீதமானது 3 மடங்காக அதிகரித்திருக்கிறது. 1955 ல் 6.9 ஆக இருந்த தற்கொலை வீதம் 1974 ல் 22.1 ஆக அதிகரித்திருக்கிறது. இது உலகின் ஆகக்கூடிய தற்கொலை வீதங்களில் ஒன்றாகும். இலங்கையின் தற்கொலையில் அவதானிக்கத்தக்க முக்கிய அம்சம் இளம் ஆண்கள்- பெண்கள் மத்தியில் காணப்படும் அதிகரித்த தற்கொலை நிகழ்ச்சிகளாகும். 1960 களிலிருந்து இதனை ஆழ்ந்து நோக்கினால் தற்கொலை புரிந்து கொண்டவர்களில் சரி அரைவாசிப் பேர் 15-29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருப்பது தெரியவரும். அதிலும் பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் ஆண்களின் தற்கொலைகளை விட கூடிய அதிகரிப்பைக் காட்டுகிறது. 1955ல் 59 வீதமாக இருந்த இத் தற்கொலை வீதம் 1974ல் 72 வீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் மாவட்ட ரீதியான தற்கொலை வீதங்கள் பற்றிய ஆய்வு நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய பல உண்மைகளைப் பற்றிப் பேசுகிறது. இதற்கு ஆதாரங்களை ’The Spiral of Suicide and Social change in Srilanka’ by Robert N.Kearney and Barbara D.Miller(1986) என்ற நூலில் பெற்றுகொள்ளலாம்.
1955லிருந்து 1974 காலப்பகுதியில் தற்கொலை வீதாசாரத்தில் வவுனியா மாவட்டம் தான் தொடர்ச்சியான, நிலையான அதிகரிப்பைக் காட்டுகிறது. அதற்கு அடுத்த அதிகரிப்பைக் காட்டுவது யாழ்ப்பாண மாவட்டமாகும். ஆகக்கூடிய தற்கொலை வீதத்தைக் காட்டும் முதல் 3 மாவட்டங்களில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய 4 தமிழ் மாவட்டங்களும் அடங்கிவிடுகின்றன அண்மைக்கால புள்ளிவிபரங்களையும் கணக்கிலெடுப்போமாயின் இந்தத் தற்கொலைவீதம் மிகச் சடுதியான அதிகரிப்பினை காட்டி நிற்கும் எனலாம்.
ஸ்ட்ரௌஸ் & ஸ்ட்ரௌஸ், ஆதர் லூயிஸ் வூட் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் நிலவும் மிகவும் இறுக்கமான சாதி மற்றும் இரத்த இன உறவுகள், தனிநபரினது மன அபிலாஷைகளையும் குறிக்கோள்களையும் கட்டுப்படுத்தியும் ஒடுக்கியும் விடுகின்ற போக்கினால்தான் இந்தக் கூடியபட்ச தற்கொலைவீதம் காணப்படுகிறதென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களின் கலாசாரப் பண்பில் ஆத்திர, உக்கிர உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு வெளிஉலகில் போதுமான, ஏற்றுக்கொள்ளத்தக்க வடிகால்கள் இல்லாமையால் இது மறுபுறத்தில் தங்கள் சுயத்துக்குள்ளேயே செயற்பட ஆரம்பித்துவிடுகிறது என்று கூறத்தோன்றுகிறது.
எனினும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலான இந்தக்கூடிய பட்ச தற்கொலை வீதத்தின் பின்னணியில் செயற்படும் சமூக-கலாசார இயக்கவியல் இன்னும் விரிந்த நுணுகிய பரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டியுள்ளது. ”அதிகரித்துச் செல்லும் தற்கொலை வீதத்தின் பின்னணியில் செயற்படும் சமூக மாற்றம், சீர்குலைவுகள் போன்றனவற்றை 100 ஆண்டுகளுக்கு முன் இனம் கண்ட துர்க்ஹைமின் பார்வையில் ஆராய்ச்சிக்கு இடம் தருகின்ற ஒரு சமகால case study யாக இலங்கை முக்கியத்துவம் பெறுகிறது." என்று இலங்கையின் தற்கொலை பற்றிய அண்மைக்கால ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. இந்த ஆராய்ச்சிக் குறிப்புக்கள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் போரட்டம் கூர்மையுறத் தொடங்கிய 80களுக்கு முற்பட்ட கால அவதானிப்புகள் என்பதைக் கவனத்தில் நிறுத்துவது பொருந்தும். இந்த விரிந்த புள்ளிவிபரங்களின் பின்னணி சிவரமணியின் மரணத்துக்கு ஆழ்ந்த பரிமாணத்தைச் சேர்க்கிறது. சிவரமணியின் மறைவுக்கு அனுதாபம் தெரிலிக்கும் அனைவருமே தற்கொலையைத் திட்டவட்டமாக நிராகரிப்பவர்களாவர்.
”எவ்வளவுதான் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டாலும், யார்தான் எப்படி மறுதலித்தாலும் தற்கொலை என்பது ஒவ்வொரு மனிதனதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் கோரிநிற்கும் மனிதவாழ்வின் ஒரு நிகழ்வாகும்.” என்ற ஜேர்மனிய மகாகவிஞன் Goethe யின் வாசகங்கள் இங்கே நினைவு கூரத்தக்கன.
தற்கொலை செய்துகொண்டுவிட்டதால் மட்டும் எவ்வாறு சிவரமணி கோழையாகி விடமாட்டாரோ அதேபோலப் போலிகளும் போக்கிரிகளும் 'உயிர் கொண்டு’ திரிவதால் மாத்திரமே வீரர்களாகிவிடப் போவதில்லை.
No comments:
Post a Comment