*ஈழப் போராட்டத்தின் முதற் குரலாக வெளிவந்த " காவலன் " பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர் .
*தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் காரணமாக சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் .- அக் கொடுமைகளிலிருந்து தப்பிக்குமுகமாக சிறையின் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்து முதுகெலும்பு உடைந்து தன் இறுதிவரை கூனல் முதுகோடு வாதைகளுடன் வாழ்ந்தவர்.
* பிரான்ஸிற்கு அரசியல் அகதியாக வந்து சேர்ந்த பின்னரும் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
* பிரான்ஸின் முதல் தமிழ் சஞ்சிகையின் தோற்றத்திற்கான முன்னோடி.
* தலைசிறந்த ஆவணச் சேகரிப்பாளர்.
* கொல்லப்படும்வரை மனித உரிமை மீறல்களுக்கெதிரான அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி மனித உரிமை மீறல்களுக்கெதிரான போராட்டத்தில் தன்னை தீவிரனாக இணைத்துக்கொண்டவர். அவற்றை மையப்படுத்தி ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அறிக்கைகளையும் ஆவணங்களையும் வெளிக்கொணர்ந்தவர்.
* ஆசியா வெளியீட்டகம் " எனும் பதிப்பு நிறுவனத்தை ஒழுங்கமைத்து படைப்பாக்கங்களை வெகிக்கொணர்ந்தவர்.
* அக்காலத்தில் பிரான்ஸில் வெளிவந்த மாற்றுச் சஞ்சிகைகளான தேடல் , ஓசை இவற்றிற்கான நிதி ஆதாரங்களை ஒவ்வொரு இதழுக்கும் வழங்கிவந்தவர்.
இப்படியாக ஒரு சமூக முன்னோடியாக இயங்கிய அவரை காலக்கிரமம் பாராது ஒரு மேதின மதியம் 1.45 மணிக்கு அவரது வீட்டில் வரவேற்று உபகரித்த ஒருவனால் அவர் மனைவி , மனைவின் தாயார் ,மகன் மூவரும் இருக்க சாப்பிட்ட கையோடு எழுந்து அக் கொலைகாரனுக்கு கதவு திறந்துவிட்டு , மனைவியை வந்தவனுக்கு சாப்பாடு போடக் கூப்பிட்டபோது ஒரு நம்பிக்கை அங்கு கொலையுண்டுபோனது. இந்த நம்பிக்கைத் துரோகம் ஈழத்தமிழர் இறுதிக்கால ஊழி வரை தொடர்ந்து வந்திருக்கிறது.
சபாலிங்கத்தின் தாயார் கொன்றவனுக்கு ஆணையிட்ட தலைவனுக்கு அவன் தலைமறைவாக இருந்த காலங்களில் உணவழித்துப் பாதுகாத்தவர். சபாலிங்கத்திற்கு பிரபாகரன்மேல் அவன் ஆரம்ப கால நிலவரங்களை உடனிருந்து அறிந்தபடியால் ஒரு கருத்தில்லை, மதிப்பீடு இல்லை. தன்னிலும் வயது மிகக் குறைந்த தங்கள் குழாமில் இருந்துவரும் ஒரு தற்குறியாய் கணிப்பீடு இருந்தது.
பிரபாகரன் சையிக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டு தேடப்பட்ட ஒரு இலங்கைப் பத்திரிகைப் பெட்டிச்செய்தியின் கட்டிங்கை சப்பாலிங்கம் அப்போது அவர் வீட்டில் வைத்து எனக்குக் காட்டியது மறக்கமுடியாதது.
சபாலிங்கத்தின் காலத்தில் பலர் அறப்போராளிகளாக ,முன்னோடிகளாக பரவலாக அறியப்பட்டிருந்தனர் . சேயோன் எனும் ஒரு அறப்போராளி சபாலிங்கத்துக்கு ஆதர்சமாயிருந்தார். தன் ஒரேயொரு மகனுக்கு "சேயோன் " என அவர் நினைவாக பேரிட்டழைத்தார்.
குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பல முன்னோடிகளைப் பார்த்துவந்த சபாலிங்கம் அவ்வழியில் ரெலோவின் பிரான்ஸ் முகவர்களில் ஒருவராக இருந்தார். அவர் கொல்லப்படும்போது பாரிஸில் இருந்து வெளிவந்த "ஈழநாடு " "Sarcelles எனும் இடத்தில் ரெலோ பிரமுகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் " என ஒரு பெட்டிச் செய்தியை போட்டு தன்னைத் தற்காத்துக்கொண்டது.
கொலையாளி தெரிந்த நாளென்பது பிரான்ஸிற்கு ஒரு விடுமுறை நாள், இடதுசாரி மற்றும் வெகுஜன மக்களுக்கு அப்பகல் தம் உரிமைக் கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்தி பெருந்தெருக்களில் ஊர்வலம் போகும் நாள். மற்றும் வெண் பூக்களை தம்மீது அக்கறையும் அன்பும் கொண்டோர்க்கு உவந்தளிக்கும் நாள்.
தன் அலுவல்கள் நிமித்தம் வேலை நாட்களில் வெளியே செல்லும் சபாலிங்கம் அன்று அகதிக் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டுபோக அவனை தன் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார். அகதியின் போர்வையில் கொலைஞர்களும் கொலைகளை விசுவாச மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்களும் வந்து நிறைந்த மணற்றி இது.
450, 300, 270, என நூற்றுக்கு மேலேயும் கீழுமாக அகதிகள் குழந்தைகள் என தம் பாதுகாப்பான வாழ்வை ஏங்கித் தஞ்சந்தேடி தீவுகள் சமுத்திரங்கள் பெரு நிலப்பரப்புகள் எங்கும் அலைந்து திரை கடல்களில் அமிழ்ந்து காணாமற்போய் செத்தும் காப்பாற்றப்பட்டும் வரும் நெடிய காலங்களொன்றில் சபாலிங்கம் படுகொலையும் நிகழ்ந்தது.
எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து கொலைக்கான முன்தயாரிப்புகளோடு ஒரு தஞ்சம் கோரும் அகதி என்றே தன்னை சபாலிங்கத்திற்கு அறிமுகமாக்கினான் அவன். கேஸ் எழுத உதவியாளர்களாக ஆனந்தராஜா என்பவரும், புத்தளத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் சபாலிங்கத்துடன் அவ்வப்போது உடனிருப்பதுண்டு.
சபாலிங்கம் கொலை தந்த அதிர்ச்சியில் பிரான்ஸில் இருக்க விருப்பமின்றி அன்பழகன் ஹோலண்டிலும் ஆனந்தராஜா கொலும்பிலுமாக தம் வாழ்வை அமைத்துக்கொண்டார்கள். ஆக இக் கொலைகூட இருவரை அகதியாகத் துரத்தியது.
"நாடிழந்த அகதியின் முன்னால் இருக்கும் படிகள் யாவும் செங்குத்தானவை " அது செங்குத்தான சுவரில் தலைகீழாக ஏறுவதைப் போல்வது .
இங்கு ஒரு அகதியின் போர்வையில் நடந்த கொலைக்கு இந்த அகதிச் சமூகம் எவ்வித எதிர்ப்புகளையும் பொது வெளிகளில் நடாத்தவில்லை. நான் சொல்வது சாதாரண சாமான்ய மக்களைக் குறித்து.
பிரித்தானியாவில் பிரான்ஸ் தூதரகம் முன்பு சபாலிங்கம் கொலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அது அரசியல் ரீதியாக பண்பட்ட ஜனநாயக சூழலையும் கருத்துரிமையையும் கோரிவந்தோர் நடாத்தியது. பொதுசன மட்டத்தில் இல்லை.
ஒரு கொலை என்பது மிக சர்வ சாதாரணமாக கடந்துபோகப்படும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு இயல்பான நிகழ்வு என அன்று ஒரு மதிப்பீடு இருந்தது. அதையே ஈழநாடு பத்திரிகையின் பெட்டித் துணுக்குச் செய்தியும் சுட்டியது. அத்தகைய இயல்பு பேணப்பட்டதால் பின் புலிகள் அமைப்பில் பிரான்ஸில் நான்கு உட்கொலைகள் வரை நிகழ்ந்தும் அதுவும் கடந்துபோம் ! என மக்கள் கடந்துபோனார்கள். பகீரத எத்தனத்தில் இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டி ஒரு பரப்புரையை செய்து தம்மைத்தாமே ஆறுதல் படுத்திக்கொள்ள முடிந்தது .
சபாலிங்கத்திற்கான இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டது அக்கால விசித்திரம் என்றே சொல்வேன். ஐரோப்பிய நாடுகள் தழுவி சபாலிங்கத்தை அறிந்தோர் , அரசியல் பிரமுகர்கள் , ஜனநாயக சிந்தனைகளை வலியுறுத்துவோர் ,பத்திரிகையாளர்கள் ,எழுத்தாளர்கள் என எல்லா மட்டங்களிலிருந்தும் கலந்துகொண்டார்கள். முன்பின் பார்த்தறியா நிறைய புதுமுகங்கள். ஒரு வன்மையான எதிர்ப்பினதும் கண்டனத்தினதும் உருத்திரண்ட பிரசன்னம்.
மாற்று ஜனநாயக தளத்தில் வெளிவந்த ஓரிரு பத்திரிகைகள், சஞ்சிகைகள் அனைத்தும் சபாலிங்கம் படத்தோடு கொலையைக் கண்டித்து பதிவுகளைச் செய்திருந்தன. "பிரபாகரன் காலத்திலிருந்த ஒருவர் பேனையைத் தூக்கியதென்றால் அது சபாலிங்கம் ஒருவர்தான் " என தராக்கி சிவராம் தாயகம் பத்திரிகையில் தன் இக் கொலைதொடர்பான ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்.
சபாலிங்கம் கொலை விசாரணையை வேர்செய் பொலிஸ் பிரிவு மேற்கொண்டது. பலதரப்பட்ட கோணங்களிலும் போலிஸ் விசாரணை செய்தது. சபாலிங்கத்தின் நெருங்கிய நண்பரான புஸ்பராசா அப்படி இறுதிச் சடங்கிற்கு வந்த சர்வதேச முகங்களை கூட்டி புலிகள் தான் இக் கொலையைச் செய்திருக்கவேண்டுமென தாங்கள் நம்புவதாக ஒரு வாக்குமூலம் கொடுக்க அதற்குரிய ஒரு விசாரணைப் பிரிவிற்குக் கூட்டிச்சென்றார்.
வாக்குமூலம் கொடுத்து முடியும்போது அப் பொலீஸ் விசாரணையாளர் "ஏன் இக் கொலையை இங்கு வந்திருப்பவர்கள் செய்திருக்கமுடியாது ? " என்ற ஒரு பொலிஸ் கேள்வியை வந்தவர்கள் நோக்கிக் கேட்டார். எதுவும் பேசமுடியாமல் எழுந்து வந்ததோடு முடிந்தது அன்றைய விசாரணை .
சபாலிங்கத்தின் ஆவணப்படுத்தல் நூல் வடிவில் வெளிவருவதை தடுப்பதற்காக இக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்பது ஒரு கோணம் . அவ் ஆவணங்கள் மற்றும் அகதி மனுக்கள் தொடர்பான அனைத்தையும் பொலிஸ் சில காலங்கள் தம் பரிசீலனையில் வைத்திருந்தது. அதற்கும் முடிவில்லை. லண்டனில் இருந்து வெளிவந்த "ஒரு பேப்பர் " பத்திரிகையில் சாத்திரி என்பவன் மிகக் கீழ்தரமாக சபாலிங்கம் தன்னிடம் அகதி மனு எழுத வந்த ஒரு பெண்பிள்ளையோடு பாலியல் ரீதியிலும் காதல் முகப்பிலும் அவருக்கு தொடர் தொந்தரவுகள் கொடுத்தத்தால் அப்பெண்ணின் சகோதரன் அதைப் பொறுக்கமுடியாது சுட்டுவிட்டதாகவும் எழுதியிருந்தான்.
பின் 2009 மே முடிவில் பலருக்கும் கிடைத்த மெஞ்ஞானம் போல சாத்திரியும் ஒருநாள் ஞானோதயம் பெற்று " தனக்கு மேலிடத்திலிருந்து அப்படி எழுத்தச்சொல்லி வந்த கட்டளையின் நிமித்தம் எழுதியதாக" ஒரு தன்னிலை விளக்கமும் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தான்.
சபாலிங்கம் கொலைக்காலத்தில் புலிகளின் பிரமுகர்கள் ,பொறுப்பாளர்களாயிருந்த வேலும்மயிலும் மனோகரன் ,சுவிஸ் முரளி, நோர்வே சர்வே போன்றவர்கள் 2009 இறுதிக் காலத்திலிருந்து புலிகளின் அதிகாரபூர்வ பிரச்சாரங்களால் துரோகிகளாக்கப்பட்டுவிட்டனர்.
லோரன்ஸ் திலகர் என்னவானார் என இன்றுவரை தெரியவில்லை, சபாலிங்கம் கொலையை ஒட்டி திலகர் தமக்கும் இக்கொலைக்கும் சம்மந்தமில்லை என தமிழர் புணர்வாழ்வுக் கழகம் ஊடாக மறுப்பறிகை விட்டிருந்தார். ஆனால் ஒரு மறுப்பறிக்கை விடவும் ஆளற்ற இப்போதய நிலை உண்மையில் அவலமானது. இப்படியான குடையும் குஞ்சரமுமாய் ஊர்ந்த பின்னணியில் ஆரைத்தேட ,எவரைச் சுகம் கேட்க ,ஏவம் கேட்க !
கனடா சிறையில் இருந்து ஒரு தமிழ் இளைஞன் தான்தான் சபாலிங்கம் கொலையைச் செய்ததென அவனது குற்றச் செயலோடு விசாரணை செய்த கனேடிய அதிகாரிக்கு சொன்னதாக அக் கனேடிய அதிகாரி சொன்ன தகவல் பின் எவ்வித கவனிப்புமின்றிப் போயிற்று.
ஐரோப்பாவில் ஒரு வெளிநாட்டவர் கொலை நடந்தால் அது ஒரு விடயமே இல்லை , இன்றுவரை தொடரும் குர்திஸ் துருக்கி பின்னணியில் பாரிஸில் நடந்தேறும் படுகொலைகள் அதற்கு சான்று. இவை ஒரு இயல்பான நிகழ்வுதான் என ஐரோப்பியர்கள், மற்றும் அரசுகள் அதில் கவனம் எடுப்பதில்லை. வன்முறையான வெளிநாட்டவர்கள் பற்றிய அவர்களுக்கு உகந்த மனப்பதிவுக்கு இவை பத்தோடு பதினொன்று.
சோபாசத்தியின் முதல் நாவலான "கொரில்லா " சபாலிங்கம் கொலையை முன்வைத்து எழுத்தப்பட்ட முதல் முதல் புனைவிலக்கியம் . "அவசர அவசரமாக நினைவு கூர்ந்து பின் அவசர அவசரமாக மறக்கத்தொடங்கினர் " என்ற ஒரு கவிதைக்கேற்ப சபாலிங்கம் கொலையும் காலவோட்டத்தில் மறந்துபோகும் ஒன்றாயிற்று.
மகனுக்கு 14 வயதிருக்கும்போது சுடப்படும்போது சபாலிங்கத்திற்கு 42 வயது. இப்போது சபாலிங்கம் மகன் சேயோனுக்கு 40 வயதாகிறது. ஆனால் கொலையோடு பரிதவித்துப்போன சபாலிங்கம் குடும்பம் எப்படி அந்தக் கொடூர நிகழ்விலிருந்து மீளமுடியும் ?
நன்றி : தாயகம் - அபத்தம்
No comments:
Post a Comment