- நாங்கள் 1954 இல் இருந்து பெருந்தொகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களோடு வாழ்ந்த நாடு !
- எதிர்ப்பு அரசியலாலும் வெற்றுக் கோசங்களாலும் மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாது!
- ஜனநாயகத்தை கொன்று தீவிரவாத்திற்கு கையசைக்கும் ரனிலின் ஆபத்தான அரசியல்!
சிறிமாவோவையும், அமிர்தலிங்கத்தையும் ஒதுக்கி விஜேவீரவையும் - பிரபாகரனையும் களைத்தில் இறக்கிய ஜே.ஆரின் நாசகார அரசியல்!
-அரச அதிகாரிகள் இன்றி அரசியல்வாதிகளால் ஒரு சதத்தையேனும் கொள்ளையடிக்க முடியாது, இந்த கொள்ளைகளுக்கு White Collar Criminal களான அரச உயரதிகாரிகளே உதவினார்கள்.
- நாட்டில் ஊழலை கிராம சபை வரை பரவச் செய்தவர்கள் ராஜபக்சக்கள் !
- புலிகள் செய்ததை விட நாட்டுக்கு பேரழிவைச் செய்தவர் மகிந்த ராஜபக்ச!
- புலிகளுக்காக பணம் சேர்த்த தனவந்தர்கள் ராஜபக்சகளுடன் கூட்டுக் களவாணிகளாக வியாபாரம் செய்தார்கள்!
- புலித் தளபதி சொர்ணத்தின் மனைவி சாக்கில் கட்டிக்கொண்டு வந்த தங்கத்துக்கு நடந்தது என்ன?
- இலங்கை இராணுவத்தை கணிசமாக குறைத்து நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!
JVP யினர் சோசலிசம் சார்ந்த கருத்துக்களையும் பரப்பி, பெரும் எடுப்பில் பேசினாலும், அவர்களால் இதற்கு தீர்வை கொண்டுவர முடியாது. அவர்கள் முன்வைக்கின்ற கோஷங்கள் சிறந்த ஆட்சிக்கான முன்நிபந்தனைகளே அன்றி மூலோபாயங்கள் அல்ல. அவர்களிடம் எவ்வித மூலோபாயங்களும் இல்லை.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, நாட்டை ஆட்டிப்படைக்கும் ஊழல், மக்கள் வாழ்வை சீரழிக்கும் அரசியல் கலாச்சாரம், ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் அதிகாரத்துவ அரசியல் என, நாட்டில் எரியும் பிரச்சனைகளுக்கு யார்தான் காரணம் என்பதை ஆராயும் பொருட்டு இலங்கைநெட் பொறுப்புக்கூறவேண்டியவர்களை நேர்காணல் மேற்கொள்ளும் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
இதன் முதலாவது நேர்காணலுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் பேசினோம். சிங்களத்தில் எடுக்கப்பட்ட இந்த நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது.
வணக்கம் திரு சம்பிக்க ரணவக்க அவர்களே, எமது இந்த முதலாவது நிகழ்வுக்கு உங்களுடைய வேலைப்பழுவிற்கு மத்தியிலும் பங்குபற்ற வந்தமைக்காக உங்களை நன்றியுடன் வரவேற்கின்றோம்.
கேள்வி 1. முதலாவதாக, இலங்கையின் இன்றைய கொதிப்பான அரசியல் சூழ்நிலையில் உங்களை நாங்கள் எப்படி அறிமுகப்படுத்துவதாய் நீங்கள் விரும்புவீர்கள்? ஐக்கிய மக்கள் சக்தி பா.உ. என்றா? அல்லது 43வது படையணித் தலைவர் என்றா? எது உங்களுக்கு பொருந்தும்?
பதில் : 43 படையணியின் தலைவர் என்பதைத்தான் விரும்புகின்றேன். அதேநேரத்தில் நான் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராவேன்.
கேள்வி 2. ஒரு காலத்தில் மக்களோடு தெருவில் நின்று ஆர்ப்பாட்ட அரசியலில் முக்கிய பாத்திரம் வகித்த நீங்கள் இன்று மக்கள் நாளாந்தம் தெருவில் நின்று ஆர்ப்பாட்டங்கள் நடாத்திக்கொண்டிருக்கும்போது, அங்கு உங்களை அதிகம் காணவில்லையே ஏன் ? ஆர்ப்பாட்டக்காரர் சம்பிக்க அரசியல்வாதி சம்பிகவால் ஒருவகையில் அமுக்கி விடப்பட்டுள்ளாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா?
பதில்: நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்வது என்பதை விட, தீர்வுகளை தேடும் அரசியலையே பெரும்பாலும் செய்து வந்திருக்கிறோம். இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறது. அந்த வங்குரோத்து நிலையை உலக நாடுகளான கிரீஸ் ஆர்ஜென்டினா மற்றும் லெபணான் போன்ற நாடுகளில் நடந்திருக்கின்றவற்றை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, ஜனரஞ்சகமான எதிர்ப்பு அரசியல் செயல்பாடுகளை எங்களாலும் செய்ய முடியும். ஆனால் அதன் மூலம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாது. அனேகமான இந்த எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் சொல்லுவது போல் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படக்கூடிய நிலையில் இல்லை என்றே கூறமுடியும். அந்த பிரச்சினையினுடைய தீவிரத்தன்மை, ஆழம், அகலம் போன்ற விடயங்களை நாங்கள் தெளிவாக புரிந்து இருப்பதால் ஒரு விமர்சன ரீதியான, அதேநேரம் சாதகமான மாற்று திட்டம் அல்லது தீர்வு திட்டங்களை முன் வைத்து கொண்டுதான் நாங்கள் முன்னோக்கிச் செல்ல விரும்புகின்றோம்.
உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் 43 ஆவது படையணியை சேர்ந்த நாங்கள் இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு முன்னர், அதாவது 2022 எப்ரல் 12 ற்கு முன்னர், 2022 ஜனவரி 23 இல், நாடு 'வஙகுரோத்திற்கு நிலைக்கு செல்வதற்கு முன்னர் நாட்டை மீட்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்' என்ற கோஷத்தை 5 காரணங்களை முன்வைத்து அழைப்பு விடுத்தோம். நாடு வங்குரோத்து ஆனதற்கு பின்னரும் மிகக் குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்றையும் முன்வைத்தோம்.
அரசாங்கம் கலைக்கப்பட்டபின்னர் கூட்டு தேசிய அரசாங்கம் ஒன்றூடாக குறைந்தபட்ச பொருளாதார அரசியல் வேலைத் திட்டமொன்றை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்ற முன்மொழிவையும் முன்வைத்தோம். அதேபோல் பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய சபையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகின்ற கமிட்டியின் தலைவர் என்ற வகையிலும், அதிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து மிக குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயல் திட்டங்களை நாங்கள் முன் வைத்தோம். அது கற்பனைக் கோட்டையாக அல்லாது, எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சி ஆகிய இருதரப்பாலும் யதார்த்த பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய முன்மொழிவுகளையே நாங்கள் முன்வைத்திருந்தோம்.
அதேபோல் தற்போது அரசாங்கம் செய்து கொண்டுபோகின்ற சில விடயங்கள் கட்டாயம் அவசியமானவை என்றும் நாங்கள் கருதுகிறோம். பொருளாதாரத்தை சீர் செய்கின்ற திசையில் அவை அவசியமானவ என்று நாங்கள் கருதுகிறோம். அரசாங்கத்தினுடைய வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும். செலவுகளை குறைக்கவேண்டும். ஆனால் இவற்றின் மத்தியில் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற சில விடயங்கள், குறிப்பாக சட்டம் ஒழுங்கின் ஆதிக்கத்தை மலினப்படுத்தி, நீதித்துறையின் ஆதிக்கத்தை சிறுமைப்படுத்தி, மக்களுடைய வாக்களிக்கின்ற உரிமையை சிறுமைபடுத்துகின்ற, மறுக்கின்றது போன்ற செயற்பாடுகளுக்கு எங்களுடைய கடும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்கின்றோம்.
எங்களை பொறுத்தவரையில் இது போன்ற மிகக் கீழ்த்தரமான செயற்பாடுகளை நாம் மேற்கொள்வதில்லை. இந்நாடு சென்றிருக்கும் நிலைமையிலிருந்து நாட்டை தூக்கி நிறுத்துவதற்கு வெறும் கோஷங்களால் மட்டும் அதை செய்துவிட முடியாது என்று நாங்கள் நம்புவதே அதற்கு காரணமாகும்.
கேள்வி 3 - தமிழ் மொழி பேசும் மக்களிடையே நீங்கள் சிங்கள பௌவுத்த கருத்தாளுமையின் அடிப்படையில் அரசியல் செய்பவர் என்றும், இலங்கையின் சிறு பான்மை மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு எதிராவனர் என்ற கருத்தும் பரவலாக உண்டு. அவர்களிடம் உங்களை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ளுவீர்கள் ? அந்த பிரச்சனை மற்றும் தீர்வு பற்றி தனித்தனியாக பேசலாம்.
பதில் : சிறுபாண்மை மக்களுடைய உரிமையாக இருந்தாலென்ன, பெரும்பாண்மை மக்களுடைய உரிமையாக இருந்தாலென்ன, மொழி ரீதியான உரிமையாக இருந்தாலென்ன, மத ரீதியான உரிமையாக இருந்தாலென்ன அப்பிணக்குகள் யாவும் அடிப்படை மனித உரிமைகளுக்கு கட்டுப்பட்டு தீர்க்கப்படுவதற்கே நாம் இணக்க வேண்டும் என திடமாக நம்புபவன் நான். அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்ற விதத்தில் ஏதோ இனமொன்றின் உரிமைகள் தொடர்பில் எவராவது பேசுவார்களானால், அதனை எதிர்ப்பேன்.
நான் முதலாவதாக மனித உரிமைகளை மதிப்பவன், இரண்டாவது மனித உரிமைகளின் ஒரு பகுதியான ஜனநாயகச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புபவன். அந்த அடிப்படையில் ஆயுதம் தாங்கிய வன்முறைகளுக்கு எந்தத் தரப்பு வந்தாலும் அவ்வாறான நடவடிக்கைகள் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவன் நான். இந்த இரண்டு விடயங்களையும் தான் உங்களது கேள்விக்கு சுருக்கமான பதிலாக கூற முடியும்.
கேள்வி 4 : இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான வலதுசாரி அரசியலும், அதன் தொடர்சியாக ஜே.ஆர் அறிமுகம் செய்த அதி தீவிர வலதுசாரி கொள்கையும் நாட்டில் பாரிய அரசியல், சமூக, பொருளாதார சிக்கல்களை கொண்டு வந்துள்ளது. இடதுசாரி அரசியல் பல சவால்களுக்கு முகம் கொடுத்து பலவீனமாக்க பட்டிருந்தாலும் தற்போது ஜாதிக ஜன பலவேகயவின் எழுச்சியுடன் மக்கள் அதை நோக்கி பெருமெடுப்பில் சாய்வதாக தெரிகிறது. நீங்கள் உங்களை எந்த முகாமோடு காண்பிக்க தலைப்படுவீர்கள்?
பதில் : இலங்கை சமூகத்தை எடுத்துக்கொண்டால், குறிப்பாக சிங்கள சமூகத்தை அடிப்படையாக கொண்டு நான் பேசுகிறேன், நான் பேசுகின்ற இந்த விடயம் தமிழ்ச் சமூகத்திலும் புலிகளினுடைய அரசியல் வருவதற்கு முன்பு அந்த நிலையில்தான் இருந்தது. முஸ்லிம் சமூகத்திலும் வஹாபிசம் போன்ற கருத்தியல்கள் பரவுவதற்கு முன்னர் இதே நிலைதான் இருந்தது. அதாவது இடதுசாரிய சமத்துவ அரசியல் கலாச்சாரம் இருந்துள்ளது.
எங்களுடைய சமூகப் பண்பாடு, கலை இலக்கியம், சமூக அரசியல் சித்தாந்தம் போன்ற எல்லாத் துறைகளிலும் சோசலிம் , சமத்துவம் பற்றிய கருத்தியல் இருந்துள்ளது. திரு. அமிர்தலிங்கம் அவர்களை எடுத்துக்கொண்டால் கூட, அவருடைய அரசியலும் ஒரு சோசலிச கருத்தியலிலிருந்துதான் ஆரம்பித்துள்ளது. வெஸ்பன் விக்ரமசிங்க வை எடுத்க்கொண்டாலும் அவ்வாறுதான். ஏன் ஜே ஆர் ஜெயவர்தனா கூட 1948 ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையினுடைய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஏனைய இடதுசாரி கட்சிகளோடு ஒரு கூட்டு முன்னணியை முன்மொழிந்தவர் தான். அந்த அடிப்படையில் நாம் யாவரும் ஏதோ ஒரு வகையிலே இடதுசாரிய சிந்தனை கொண்ட கலாச்சாரத்திலிருந்துதான் வந்திருக்கின்றோம்.
எனவே அந்த இடதுசாரித்துவ கருத்துக்கள் இன்றுவரை எம்மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. அதேநேரம் இந்த லிபரலிஷம் (தாராளவாதம்) தொடர்பான சரியான ஒரு பார்வையோ வாசிப்போ இலங்கை சமூகத்தில் இல்லை. குறிப்பாக சிங்கள சமூகத்தை பொறுத்தவரை இல்லை. தமிழ்ச் சமூகத்தில் எப்படி இருக்கின்றது என எனக்கு தெரியாது. இந்த லிபரலிஸம் தொடர்பான ஒரு ஆழமான பார்வையோ அல்லது கருத்து முன்வைப்போ அரசியல் ரீதியாக, இலக்கிய ரீதியாக, கலைகளுக்கு ஊடாக, சினிமா ஊடாக அக கருத்து உருவாக்கப்படவில்லை.
இதன் காரணமாக இந்த லிபரலிசம் என்பது அமெரிக்காவிலிருந்து அல்லது வாசிங்டன் நகரத்தில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட சூழ்ச்சி அல்லது 1977 ஆம் ஆண்டில் திரு ஜே. ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் பரீட்சித்துப் பார்த்த திறந்த பொருளாதார முறை அல்லது அதுடன் சம்பந்தப்பட்ட லீ குவான் யு வின் சர்வாதிகார நடைமுறைதான் லிபரலிஸம் அல்லது நவ லிபரலிஸம் (நவ தராளவாதம்) என்று பார்க்கப்படுகின்ற ஒரு குழப்ப நிலை நாடுமுழுவதும் காணப்படுகின்றது.
என்னைப் பொறுத்தவரை நிதி வளத்தை பெருக்கிக் கொள்ளும் விடயத்தில் லிபரலிஸம் (தாராளவாதம்) என்பது சோசலிஸ கொள்கையை, அல்லது அதனை அண்டிய கொள்கையுடையவர்களை விட வெற்றிகாண்டுள்ளது. அவ்வாறேதான் சமூகநீதி என்கின்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் சமூக சனநாயக அரசுகள், சோசலிஸ அரசுகளை விட வெற்றி கண்டுள்ளன. சோசலிஸ அரசுகள் பலவற்றை எடுத்துக்கொண்டால் மனித சுதந்திரம் அடக்கியொடுக்கப்படுகின்றது, மனிதவளத்தை உற்பத்தி செய்தல் என்கின்ற செயல்பாட்டில் உலகத்தில் இடதுசாரித்துவ கருத்தியல் சார்ந்த நாடுகள் செய்ததை விட இந்த லிபரல்வாத அடிப்படையில் செயல்பட்ட நாடுகள் வெற்றி அடைந்துள்ளன என்பதே என்னுடைய பார்வையாக உள்ளது.
அந்த அடிப்படையில் தராளவாத பொருளாதார சீர்த்திருத்த கொள்கையுடன் ஒன்றுணைந்த சமூக ஜனநாயக அரசியல்தான் இந்நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது என நான் கருதுகின்றேன். ஆனாலும் அது யதார்த்த பூர்வமாக மேற்கொள்ளபடவேண்டியது. இன்று ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தோல்வியில் முடிந்த காரணத்தாலும், நாடு திவாலாகியுள்ள காரணத்தாலும், இந்நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அதனுடையை தேசிய மக்கள் சக்தியை நோக்கிச் சாய்வதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. அந்த சாய்வு எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையேயும் ஏற்படும்.
பிரதான அரசியல் கட்சிகள் இன்று மிகவும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன போன்ற இந்த மூன்றும் இணைந்து 100 க்கு 10 வீத வாக்குகளை மாத்திரமே எடுக்கக்கூடிய நிலைக்குத்தான் அவர்கள் வந்து நிற்கின்றனர்.
தமிழ்ச் சமூகத்தில் மேற்குறித்த மாற்றங்கள் எதுவும் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அதற்கு எதிரான கட்சிகளினதும் செல்வாக்கு அவ்வாறே உள்ளது. முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் திரு றிசார்ட் பதுயுதீனுடைய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தவிர வேறு எந்த ஒரு போக்கினையும் நாங்கள் அங்கும் இன்னும் அவதானிக்கவில்லை.
பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாடு திவாலாகியமையினூடாக, அரசாங்கத்தின் மீது எழுந்த எதிர்ப்பை தமதாக்கிக்கொண்டு, மக்களை தங்களது பக்கத்திற்கு இழுத்துக்கொள்ள, ஐக்கிய மக்கள் சக்தியினால் முடியாது போயுள்ளது. அத்துடன் மக்கள் எழுச்சியை தமதாக்கிக்கொள்ளவும், அரசாங்கத்தை கவிழ்க்கவும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முடியாமல் போயுள்ளது.
நான் ஜேவிபி யினரை கிறீஸ் நாட்டினை ஆட்சி செய்த இடதுசாரி ஜனரஞ்சக வாதிகளாகவே காண்கின்றேன். அவர்கள் என்னதான் சமூக ரீதியான அக்கறைகொண்ட கருத்துக்களையும் சோசலிசம் சார்ந்த கருத்துக்களையும் பரப்பி, பெரும் எடுப்பில் பேசினாலும், அவர்களால் இதற்கு தீர்வை கொண்டுவர முடியாது. ஜனரஞ்சகவாதததிற்கு குறுகிய தூரமே உண்டு. பொருளாதாரத்தை மீண்டும் உயிரூட்டி கட்டியெழுப்புவதற்கான எவ்வித நடைமுறை சார்ந்த செயற்திட்டங்களும் அவர்களிடம் இல்லை. அவர்கள் முன்நிபந்தனைகள் தொடர்பாகத்தான் பேசுகின்றார்கள். அதாவது ஊழல் அற்ற ஆட்சி, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல் மற்றும் நீதிமன்றங்களை சுயாதீனமாக இயங்கச்செய்தல் போன்ற விடயங்களையே அவர்கள் பேசுகின்றனர். அவை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் அல்ல. அவை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்குரிய முன்நிபந்தனைகள் மட்டுமே.
நிதி வளத்தை உற்பத்தி செய்கின்ற விடயத்தில் அவர்கள் முன்வைக்கின்ற யோசனைகள் மிகவும் மேலோட்டமானதும் இலகுவானதுமாக காணப்படுவதுடன் சில விடயங்கள் கேலிக்குரியதாகவும் காணப்படுகின்றன.
ஆனாலும் அவர்கள் தொடர்பாக எனக்கு ஒரு பெரு மதிப்புள்ளது. அதையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அதாவது, இந்த நாட்டிலே குடும்ப ஆட்சி அல்லது பிரபுக்கள் வர்க்கத்திலிருந்தல்லாமல் சாதாரண மக்கள் கூட்டத்திற்குள்ளிருந்து உருவான தலைவர்களாக அவர்கள் காணப்படுகின்றார்கள். அது இந்த நாட்டின் இலவசக் கல்வியினால் கிடைக்கப்பெற்ற மற்றுமோர் வெற்றியாகும். இந்த நாட்டின் வரலாற்றிலே பல்வேறு தடவைகள் 1956 , 1970 , 1994 , 2005 போன்ற காலங்களில் பிரபுக்களுக்கு எதிராக மக்கள் எழுந்திருக்கின்றார்கள். இந்த மேல்தட்டினரை சமூகத்தின் அடித்தட்டு மக்கள் எதிர்த்து நின்றாலும், அவர்களால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போயுள்ளது. ஆனாலும் பிரபுக்கள் வர்க்கத்திலிருந்து வந்திராத தலைவர்களாக அவர்கள் தற்போது எழுந்து நிற்க்கின்றார்கள்.
இந்தப்பக்கம் கவனத்தை செலுத்துவோமானால், ஐக்கிய மக்கள் சக்தியினால் பொருளாதார விடயங்களை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற இரான் விக்ரமரட்ண, ஹர்சத சில்வா, ஹபீர் கசீம் ஆசிய மூவரையும் எடுத்துக்கொண்டால் இவர்கள் மூவரும் 2015 ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பணியாற்றியவர்கள். அதுமட்டுமல்லாது ரணில் விக்கரமிங்கவினால் முன்மொழியப்பட்டிருக்கின்ற சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக எந்த யோசனைகளையும் இந்த மூவரும் முன்வைக்கவும் இல்லை. எனவே ரணில் விக்ரமசிங்கவை விட இவர்களால் மேலதிகமாக ஏதும் செய்துவிட முடியுமா என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது. என்னிடமும் இருக்கின்றது. எனவே இந்தப் பக்கம் நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ ரணில் விக்கிரமசிங்க அங்கு தன்னை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கின்றார். அவருடைய அரசியலானது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானதும் அதிகாரப்போக்குடையதுமானதாகவே காணப்படுகின்றது.
மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கமிருந்து கடந்த காலத்துக்குரிய பிறேமதாஸ யுகத்து பிற்போக்குத்தனமாக பின்தங்கிய அரசியல் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் இணையவழி செயல்திறன் மிக்க செயற்பாடுகளோடு தொடர்புடைய புதிய தலைமுறையினருக்கு, இவர்கள் முன்வைக்கின்ற அரசியல் கலாச்சாரம் மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகின்றது என்றே நான் நினைக்கின்றேன்.
எனவே இந்த பழைமையான, பிற்போக்கான அரசியல் காலச்சாரத்திற்கு பதிலாக நவீன அரசியல் ஒன்றை முன்வைப்பதற்கு நாங்கள் விருப்புகின்றோம். அத்துடன் இந்த தேவை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்திலும் இருக்கும் என நாம் நம்புகின்றோம். கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக எழுந்து வந்த பிரதானமான கோஷம் யாதெனில் சுதந்திரமானதோர் முகாம். மீண்டுமொருறை சோவியத் மாதிரியான அணியொன்றை உருவாக்க சிலர் முற்பட்டார்கள். ஆனாலும் மக்களுக்கு தேவைப்படுவது சுதந்திரமானதோர் முகாமாகும். அந்த முகாம் இதுவரை உருவாகாத காரணத்தால் அவ்வாறானதொன்றை உருவாக்கவே நாம் முனைகின்றோம்.
கேள்வி 5 : இப்போது நீங்கள் கூறுனீர்கள் எழுச்சிப்போராட்டமொன்று உருவாகியது என்று, இலங்கையில் கடந்த ஒரு வருடகால மக்கள் எழுச்சி, அரசியல் கொதிப்புநிலை நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் சாதகமானதா பாதகமானதா? அல்லது இவ்வாறான மக்கள் எழுச்சியை நீங்கள் முன்னரேயே எதிர்பார்த்தீர்களா?
பதில் : உலகத்தில் மக்கள் எழுச்சி ஊடாக ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக நீங்களும் நாங்களும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஒரு காலத்தில் மகாத்மா காந்தி அவர்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களை துரத்தியடிப்பதற்காக இவ்வாறான நேரடியான எழுச்சி (Direct Action) நடவடிக்கை ஒன்றை முன்மொழிந்தார். அதேபோல் பாகிஸ்தானுடைய ஸ்தாபகரான அலி ஜின்னா அவர்களும் நேரடியான எழுச்சி நடவடிக்கையை முன்மொழிந்திருந்தார். அறுபதுகளில் திரு. செல்வநாயகம் கூட வடக்கில் அவ்வாறான ஒன்றை செய்ய முயற்சித்தார். அதேபோல்தான் மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் லிபியாவிலிருந்து கடாபி, உக்ரேனின் ஜனாதிபதி ஆகியோர் ஓடித் தப்பியதை நாம் உலக அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்.
எனவே மக்கள் எழுச்சி என்பது யாராலும் ஒழுங்குபடுத்தப்பட்டு செய்யப்படக்கூடியது என்று நான் நினைக்கவில்லை. அது மக்கள் அனைவரது மனங்களிலும் ஒரே நேரத்தில் இயற்கையாக பொங்கி எழுந்து வருவது. 0 பாகையில் பனிக்கட்டி உருவாகுவதுபோல் மக்களின் மனங்களில் இயற்கையாக உருவாவது. அவ்வாறுதான் படையினருடைய மனங்களிலும் அந்த எண்ணம் உருவாகின்றது. இன்று பலரும் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என்கின்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். உண்மையிலேயே ஜுலை 9 நிலைமை அவ்வாறெல்லாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அத்துடன் படையினரும் இந்த பொருளாதார வீழ்சியின் வேதனைகளை மாதக் கணக்காக அனுபவித்தவர்களாகத்தான் இருந்தனர்.
உண்மையில் இளைஞர்கள் காலிமுகத்திடலுக்கு சென்று அங்கு குடியிருக்கப்போகின்றோம் என்றபோது அவர்களால் நெடுங்காலத்திற்கு அங்கு இருக்க முடியும் என்பதனை நான்கூட நம்பியிருக்கவில்லை. ஏனென்றால் நாங்களும் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருக்கிற காலங்களில் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகளை செய்திருக்கின்றோம். அவை யாவும் ஆகக் கூடியது ஒருவாரம் ஒன்றரை வாரங்கள்தான் நீடித்தன. ஆனால் இது பல மாதங்கள் நீண்டு சென்றதுடன் மக்களும் தங்களுடைய மன வேதனைகளை, மன அழுத்தத்தங்களை வெளிப்படுத்தக்கூடிய நேரமும் இடமும் இதுதான் என்பதனை நம்பினர்.
சிலர் இது சி ஐ ஏ யின் ஒரு சதித் திட்டம் என்கின்றனர், சிலர் கத்தோலிக்க திருச்சபையின் சதித் திட்டத்தினால் செய்யப்பட்டது என்கின்றனர், வேறு சிலரோ முஸ்லிம் மக்கள் அவர்களுடைய ரம்சான் காலத்தில் மேற்கொண்ட சதித் திட்டம் என்றெல்லாம் இந்த எழுச்சியை மிகவும் மலினப்படுத்தி , சிறுமைப்படுத்தி பேசுகிறார்கள். அப்படி சதித் திட்டம் தீட்டுவதென்றால் இப்போதும் அவ்வாறு மேற்கொள்ளலாம் அல்லவா? ஆனால் இந்த மக்கள் எழுச்சியானது அவ்வாறனதுமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாட்டினால் வெளிவந்ததும் அல்ல. மாறாக அது மக்களின் உணர்வுகளிலிருந்து பொங்கி எழுந்துவந்த வெளிப்பாடு. அங்கே ஒருபோதும் கட்சி சார்ந்த அரசியல் செயல்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்த தளத்திலே கட்சிகள் நின்றன. எங்களுடைய அமைப்பு நின்றது, ஜேவிபியினர் நின்றனர், ஐக்கிய மக்கள் சக்தியினர் நின்றனர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தோர் நின்றனர், ஏன் பொதுஜன பெரமுனவிற்கு மிக பாரியளவில் உதவி செய்தவர்கள் அவ்விடத்திற்கு சென்று தாங்கள் செய்த தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்புக் கோரி நின்றனர், கலைஞர்கள் நின்றார்கள், தொழில்சார் வல்லுனர்கள் நின்றார்கள்.
இது கட்சி சார்பற்றது என்று சொன்னாலும் கூட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் பல தரப்பினர்களும் அங்கு போய் ஒன்றிணைந்து உருவாக்கிக்கொண்ட ஒரு பெரிய செயல்பாடாக மாறியதுடன் எங்களுக்கு இது மிகப்பெரியதோர் அனுபவமாகவும் இருக்கிறது. அதேநேரம் ஆட்சியாளர்கள் படித்துக் கொள்ள வேண்டிய குறிப்பான பாடமாகவும் வரலாற்றில் இது பதிவாகியுள்ளது. அந்தப் பாடம் என்னவென்றால், குறிப்பிட்ட சூழ்நிலையில் இவ்வாறாக மக்கள் ஒன்றிணைந்து வந்து தங்களுடைய உயிரைக்கூட துச்சமாக மதித்து பணயம் வைத்து செயல்பட தயாராக இருக்கிறார்கள் என்கின்ற பாடம்தான் அது. அவ்வாறான ஒன்றை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிறுத்த முடியாது.
எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக சிறிமாவோ பண்டாராநாயக்க அம்மையார் புறக்கோட்டையை நோக்கி ஒரு போராட்டத்திற்காக சென்றிருந்தார். ஆனால் அது ஒரு மக்கள் எழுச்சி கிடையாது. அது ஒரு கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன 127 பேரை சுட்டுக்கொன்று அந்த எழுச்சி போராட்டத்தை நசுக்கினார். இது அப்படியல்ல, இலட்சக்கணக்கான நம் மக்கள் பங்கேற்றார்கள். அச்சந்தர்ப்பத்தில் கீழ் மட்டத்திலிருந்த இராணுவத்தினர்கூட மேல் மட்டத்திலிருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றினால் தாங்கள் என்ன விதமான எதிர்வினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுமோ என அச்சத்தில் உறைந்திருந்தனர்.
அண்மையில் கிடைக்கப்பெற்ற அறிக்கையொன்றிலிருந்து கடந்த வருடம் மிக அதிகமானோர் இராணுவத்தை விட்டு விலகிச் சென்றிருப்பதை அறியக்கூடியதாகவுள்ளது. நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையினால் பொதுமக்கள் , படையினர் என சகல தரப்பினரதும் மனங்களில் பழமைப்பட்டுப்போயிருந்த மனஅழுத்தம் வெடித்து சிதறியதை எம்மால் உணர முடிந்தது. எனவே சவேந்திர சில்வா சுடுவதற்கு கட்டளையிடாமையால்தான் கோத்தபாய நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது, அமெரிக்க தூதரின் தொலைபேசி அழுத்தங்களால் ஓடவேண்டி வந்தது என்பதெல்லாம் வெறும் போலிக் கதைகள்.
இவை 2015 ராஜபக்ச படுதோல்வியடைந்தபோது அவர் றோ மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்களால் தோற்கடிக்கப்பட்டார் என்று அவிட்டுவிட்ட கதைகள் போன்றுதான். ஆனால் அவரை அவ்வாறானவர்கள் யாரும் தோக்கடிக்கவில்லை. தோற்கடித்தது இந்நாட்டு மக்கள். இதுவும் அவ்வாறுதான். மக்கள் ஒன்றிணைந்துதான் தோத்தபாயவை விரட்டினார்கள். இந்த விடயம் இவ்வளவு தூரம் சென்று முடிவடையும் என நான் நம்பியிருக்கவில்லை. இதிலிருந்து நானும் ஒரு பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். அதாவது நாம் அழைக்கின்றோம் என்பதற்காக மக்கள் ஒருபோதும் வரப்போவதில்லை. நான் அவதானித்த அளவில் இப்போதும் பல தலைவர்கள் அழைப்புக்களை விடுத்தார்கள். ஆனால் மக்கள் வரவில்லை. மக்களின் மனங்களில் அகவயமாக அந்த தாக்கம் உருவாகி அவர்களாக சுயமாக வெளிவருவார்கள். அப்போதுதான் நேரடிச் செயற்பாட்டின் ஊடாக ஆட்சியாளர்களை விரட்டி அடிக்க முடியும் என்பதனை கற்றுக்கொண்டோம்.
எதிர் காலத்தில் ஹம்பாந்தோட்டையிலிருந்தோ எங்கிருந்தோ மீண்டும் அதிகாரத்தை ராஜபக்சவாலோ அன்றில் அவருடன் தொடர்புடைய எவராலோ கைப்பற்ற முடியும் என நாங்கள் கருதவில்லை. பிலிபீனில் மார்கோசின் மகன் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றியடைந்திருக்கின்றார். அவ்வாறு ஏதாவது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் எங்களுக்கு தெரியக்கூடிய தூரத்தில் அதற்கான சந்தர்ப்பங்கள் எதையும் காணவில்லை.
மக்களின் மனங்களில் மிக ஆழமாக பதிந்துபோயிருக்கின்ற விடயம் என்னவென்றால், இந்த நாட்டை மீட்டெடுத்த தேசத்தின் தந்தை, மாபெரும் தலைவன் என்று போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்சவாலும் அவர் குடும்பத்தாலும், இந்த நாட்டிற்கு LTTE பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட சேதத்திலும் பார்க்க பாரிய நாசம் எற்படுத்தப்பட்டு மக்கள் எதிர்காலம் தொடர்பான எந்த நம்பிக்கையுமற்றவர்களாக நிராதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதாகும். இவ்வாறான நிலையில் அவர்களுக்கு மக்களின் வாக்குகள் இனி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் மொட்டுக் கட்சிக்கு கொழும்பில் 2.5 வீத வாக்குகளும் நாடளாவிய ரீதியில் 4 வீத வாக்குகள் கிடைக்கப்பெறும் என தெரியவந்துள்ளது. இது சரியான கணிப்பு என்றே நானும் நம்புகின்றேன்.
கேள்வி 6 : ஜனதா மிதுரோ (மக்கள் நண்பன்) என்ற அமைப்பில் தொடங்கி இன்றுவரையான உங்கள் அரசியல் பயண அவதானிப்பில், நீங்கள் காலத்துக்கு காலம் நிலவுகின்ற அரசியல் சூழலை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்குபவர். இலங்கையின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார சீரழிவு நிலைமைக்கு அரசியல்வாதிகள் மட்டும்தான் முழுப் பொறுப்பு சொல்ல வேண்டுமா? சொல்ல முடியுமா? அப்படியானால் ஏன் ? இல்லை என்றால் உங்கள் பார்வை என்ன?
பதில் : சகலவற்றின் பொறுப்பையும் அரசியல்வாதிகளின் மேல் சுமத்துகின்ற பேச்சுக்களை நாம் செவிமடுக்கின்றோம். அது இந்தப் பிரச்சினையை மிக இலகுபடுத்தி சொல்ல முனைவதாகும். இந்தப் பிரச்னைக்கு முற்றுமுழுதான பொறுப்பும் சொல்ல வேண்டியவர்கள் அரசியல் வாதிகள்தான் என்று எவரும் சொல்லிவிட முடியாது.
உண்மையில் இந்த 225 பேருமே வேண்டாம் என்கிற கோசம் முதல் முதலில் கொண்டுவரப்பட்டது கோத்தாபய ராஜபக்ச அவர்களை, அரசியல் களத்தில் முன்னுக்கு கொண்டுவருவதற்காக திலீப் ஜெயவீர போன்றவர்களால் தயாரிக்கப்பட்ட போலிநாடகத்தில் அல்லது கபட நாடகத்தின் திரைக்கதை வசனத்தில்தான் என்றே நான் சொல்லுவேன். அதாவது கோத்தபாய ராஜபக்ச ஒரு பிரதேச சபையைகூட நிருவகித்திராதவர் என்ற எதிர்ப்பு அவருக்கு வந்தபோது, அரசியல்வாதிகள் எல்லோருமே கள்ளர்கள், இந்த 225 பேருமே எமக்கு வேண்டாம், நாம் வெளியில் இருந்து ஒரு நபரைக் கொண்டு வரவேண்டும் என்றார்கள். அங்கு காணப்பட்ட கேலிக்குரிய விடயங்களில் முக்கியமான இரு விடயம் யாதெனில், முதலாவது அவர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் இரண்டாவது அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை, சுருக்கமாகச் சொன்னால் அவர் ஒரு 'யங்கீ' என்று கூறலாம்.
ஆனால் அவருடைய பிரச்சார மேடை முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு கோஷம்தான் கேட்டது. MCC ஒப்பந்தத்துக்கு எதிரான கோஷங்கள் கேட்டன. ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான கருத்துக்கள் காணப்பட்டன. அவரை ஒரு திறனாளியாக நிறுவுவதற்காக 'அவர் ஒரு சிறந்த நிர்வாகி, அவர் லி குவான் யூ போல் எதிர்கால தொலை நோக்குள்ளவர், மிக ஒழுக்கமான ஆட்சி நிர்வாகத்தை செய்யக் கூடியவர், பிடல் காஸ்ட்ரோ போல் புரட்சிகரமாக ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிராக எழுந்து நிற்கக் கூடியவர், மகாதீர் மொஹாமட் போல் ஒரு அறிவுஜீவி போன்ற பிரமை உருவாக்கப்பட்டது.
அது மட்டுமன்றி கடந்தகால சிங்கள வரலாறுக்கும் போய் கோத்தபாயவை துட்டகைமுனுவின் அவதாரம் என்றார்கள், ருவன் வெளி சாயாவில் பிரமாணம் எடுத்து ஒரு விதமான தேசிய வெறி உருவாக்கப்பட்டது. சமூகத்தில் ஒரு கூட்டு ஆவேசத்தை உருவாக்கினார்கள். இது ஒரு Mass-Hipnotism என்றுதான் நான் சொல்லுவேன். அதுதான் அவர்களின் அரசியல் வியூகம்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கொள்ளைக்கார வியாபாரிகள் என இங்கு மூன்று தரப்பினர் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் இணைந்துதான் கூட்டுக்கொள்ளை அடிக்கின்றார்கள்.
ஒரு அரசியல்வாதிக்கு அவருடைய அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றி ஒருகாலமும் தனியாக களவெடுக்க முடியாது. குறிப்பாக ராஜபக்ச யுகத்தில் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என்னும் மூன்று ராஜபக்சக்களையும் எடுத்துக் கொண்டால், அவர்கள் முறையானதோர் கல்வியை கற்றவர்கள் அல்ல. க.பொ.த. உயர்தரம் தேர்சியடைந்தவர்கள் அல்ல. இது அவர்களைத் தூற்றுவதற்காக சொல்லும் விடயமுமல்ல, அவர்களின் அறிவு மட்டம் பற்றி எனக்குத் தெரியும். அவர்களை முழுமையாக பொருளாதார ரீதியாக இயக்கியவர்கள் கலாநிதி பீ .பி .ஜயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே. அவர்களுடைய பிசினஸ் விடயங்களை கையாண்டது காமினி செனரத் என்பவர்.
அது தவிர அவர்கள் பெருமளவான பணத்தை சுருட்டிக்கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது பெருந்தெருக்கள் நிர்மாணத் துறையாகும். அதற்கு செயலாளராக பிரேமசிறி என்பவர் இருந்தார். அதேபோல் எரிபொருள் மற்றும் மின்சாரத்துறையில், மின்சார மாபியா என்று சொல்லப்படுகின்ற, நிலக்கரி இறக்குமதி, எண்ணெய் இறக்குமதி போன்ற சகலவற்றையும் கையாண்டவர் எம்.எம்.சி . பார்டினண்ட் என்பவராவார்.
நிர்ப்பாசனத்துறையில் ஐவன் சில்வா போன்ற பெரும்கொள்ளையடிப்பை மிக ஒழுங்கு முறையாக செய்யக்கூடிய அதிகாரிகள் கூட்டமொன்று அவர்களுக்கு இருந்தது. இந்த அதிகாரிகள் கூட்டம் அவர்களுக்கும் செய்து கொடுத்து தமக்கும் செய்துகொண்டது. அந்த அதிகாரிகள் கூட்டத்தினரின் சொத்துக்களை சரியாக ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் எவ்வளவை சுருட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
அத்துடன் இந்த சுருட்டிய பணத்தை ஒழிப்பதற்கு ஒரு பிசினஸ் கூட்டம் இருந்தது. அதாவது போர்க்காலத்தில் புலிகள் அமைப்போடு சேர்ந்து விடுதலைப் போராட்டத்துக்கு என மக்களிடம் சுருட்டிய பெருமளவு பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு இருக்கின்ற கூட்டமும் இன்று இவர்களுடன் சேர்ந்து பெரும் வியாபாரத்தில் ஈடுபடுகின்றது. அதாவது பிரபாகரனை தோற்கடித்த பின்னர் இவர்கள் அவர்களோடு சேர்ந்து இதை செய்து கொண்டு போனார்கள். இங்குள்ள அதிகமானோருக்கு தெரியாது போனாலும், புலிகள் இயக்கத்தின் கையிருப்பில் இருந்த பெருந்தொகையான நிதி யாருடைய கைகளுக்குப் போனது என்று சரியான விசாரணைச்செய்தால் உண்மைகள் தெரியவரும். அந்த நாட்களில் குமரன் பத்மநாதனிடம் புலிகளின் 1582 வாங்கிக் கணக்கு விபரங்கள் இருப்பதாகவும், ஆறு கப்பல்கள்- இருப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் என்ன நடந்தது என்பது பற்றி எமக்குத் தெரியாது.
அடுத்ததாக தமிழ் மக்களிடம் புலிகள் பறித்து வைத்திருந்த சொத்துக்கள், பெரும் தொகைத் தங்கம், மக்கள் மெனிக் முகாமிற்கு வரும்போது கையில் கொண்டுவந்தவற்றிற்கெல்லாம் என்ன நடந்து? புலிகளின் முக்கிய தளபதியான சொர்ணத்தின் மனைவி கைது செய்யப்படும் பொழுது அவர் ஒரு சாக்கில் பெரும்தொகை தங்கத்தோடுதான் பிடிபட்டார் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அந்த பெரும்தொகைப் பணம், தங்கம், சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது இந்த நாட்டில் மிகப் பெரும் பிரச்சினை. அதை யாருமே விசாரித்து ஆராய்ந்து பார்த்தது கிடையாது. இதையெல்லாம் கையாளுவதற்கு சிற்சில அதிகாரிகள், பிசினஸ் காரர்கள் இருக்கிறார்கள். தற்போது இங்குள்ள பிரதான பெரு முதலாளிகளில் முதல் பத்துப்பேரை எடுத்தால் அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகளை நிறுவி, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி, டொலர்களை திரட்டி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வளர்த்தவர்கள் அல்ல. மாறாக அரசாங்கத்தோடு சேர்ந்து எதோ ஒரு பிஸினஸை செய்து அதை பொருளாதார பங்களிப்பாக காண்பித்து மற்றவர்கள் உருவாக்கிய வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கையகப்படுத்திக்கொண்டு, தங்களுடைய வியாபார வலையமைப்பை பலப்படுத்திக்கொண்டவர்கள்.
இலங்கையில் எல்லா அரசியல்வாதிகளும் இதனுடன் தொடர்புள்ளவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இலங்கையின் சகல அரச அதிகாரிகளும் இதனுடன் தொடர்புள்ளவர்கள் என்றும் நான் சொல்ல மாட்டேன். எல்லா பிசினஸ் கார்களும் அல்ல. ஆனால் மிக மேல்மட்டத்திலுள்ள பெரு முதலாளிகள், மற்றும் பல அரச அதிகாரிகள் இவற்றுடன் தொடர்பாக இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல மகிந்த ராஜபக்ச செய்த மிகப்பயங்கரமான விடயம் என்னவென்றால் இந்த கொள்ளையடிக்கின்ற செயல் முறையை கிராமங்களிலுள்ள பிரதேசசபை வரை கொண்டுசென்றார். பிரதேச சபை மந்திரி ஊருக்குள் கருங்கல்லு மற்றும் மணல் வியாபாரத்தை செய்தார். அதற்கு பிரதேச சபையிலுள்ள தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்தாசை கிடைத்தது. அப்பிரதேசத்திலிருந்த ஒப்பந்தக்காரர்களின் சங்கங்களின் அனுசரணையும் கிடைத்தது. குறிப்பாக அந்தப் பகுதி அரசியல் வாதியின் அண்ணன் தம்பி உறவினர்தான் அந்த சங்கங்களை நடத்தியவர்கள். இப்படியான ஒரு கொள்ளையடிக்கும் செயல்பாட்டை உருவாக்கினார்.
மேலும், நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் A9 வீதியை வடக்கின் வசந்தம் என்னும் திட்டத்தின் கீழ் மீள் நிர்மாணம் செய்யும்போது, அதற்கான நிதியை வழங்கியது CATIC நிறுவனம். அது சீனாவுக்கு சொந்தமான வான் தொழிநுட்ப இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம். அந்த வீதி நிர்மாணத்தில் நடந்த ஊழல் என்பது 1:4 மடங்கு என்ற விதத்திலே நடந்தது. அதாவது பொறியியலாளர்கள் கொடுத்த மதிப்பீட்டை விட 4 மடங்காக, அதாவது 100 ரூபா செலவழித்து செய்யும் வேலைக்கு 400 ரூபாய்கள் செலவழித்துத்தான் அது செய்யப்பட்டது.
அந்தப்பகுதியில் யுத்தத்தால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்கள் சகலருக்கும் செய்த மிகப்பெரும் அவமதிப்புத்தான் அந்த ஏ 9 வீதி நிர்மாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை என நான் நினைக்கின்றேன். அடுத்தது யாழ்தேவி புகையிரதப் பாதை மீள் நிர்மாணம். IRCON என்கின்ற இந்திய நிறுவனம்தான் அதனை செய்தது. அதன் தேசிய ஏஜெண்டுகள் யார் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களும் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்த்தவர்களே. அதிலும் இருந்தது 1:4 என்ற விதாசாரம். அதாவது ஓமந்தையில் இருந்து வவுனியாவுக்கு புகையிரத விதியை நிர்மாணிப்பதற்கு தேவயானது ஒரு கி.மீ. க்கு 100 ரூபாய்கள் என்றால் 400 ரூபாய்கள் மட்டில் காண்பிக்கப்பட்டது. 2014ம் ஆண்டில் நான் 'மலினமான பொருளாதாரம்' என்று ஒரு புத்தகம் எழுதினேன் அதில் இந்த விடயங்களை எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
உண்மையில் வடக்கில் வீதிகளை நிர்மாணிப்பது, மின்சாரம் வழங்குவது அல்லது மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்தல் என்பதெல்லாம் நல்ல பணிகள். ஆனால் இந்தப் பணிகளுக்கு ஊடாக இந்த கொள்ளை கும்பல் உருவாக்கியது யாதெனில், மொத்த சமூகத்தையும் இத்தகையதோர் கலாசசாரத்திற்கு பழக்கியமையாகும். சமய நிறுவனங்கள் உட்பட பௌத்த பிக்குகள் ஈறாக இதற்கு பழக்கப்பட்டார்கள். இதுதான் முறை, இப்படித்தான் இது போகப்போகின்றது என்று இதற்கு பழக்கி ஒருவித கூட்டு களவாணித்தனத்தை உருவாக்கி, அந்த கூட்டுக்களவாணிகள் நாட்டின் மொத்த அரசையும் கைப்பற்றுகின்ற நிலை உருவாக்கப்பட்டது என்றுதான் நான் சுருக்கமாக கூறமுடியும்.
கேள்வி 7 : அண்மைய நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு துறையை பற்றி நீங்கள் கடுமையான சொற்பிரயோகங்களைப் பாவித்து கண்டித்துள்ளீர்கள். பாதுகாப்பு துறையினருக்குள் ' இரத்த வாடையை விரும்புகின்ற பிரிவினர்' இருப்பதாகவும், இலங்கையின் பாதுகாப்பு படையினர் ' ஒரு கைக்கூலிப் படையாக ' செயற்படுவதாகவும் கூறியுள்ளீர்கள். இந்த கடுமையான விமர்சனத்திற்கு காரணம் என்ன? ஏனெனில் ஒரு காலத்தில் பாதுகாப்பு படையினருக்காவும் அவர்களின் நலனுக்காகவும் குரல் எழுப்பியவர்.
பதில் : உண்மையில் சொல்வதானால் எங்களுடைய இராணுவ கட்டமைப்பை 2010ம் ஆண்டில் மீள் சீரமைப்பு செய்யவேண்டி இருந்தது. ஏனென்றால் ஒரு முழுமையான யுத்தம் முடிவடைந்த நிலையில், புலிகளமைப்பு இனிமேலும் செயற்பட முடியாது என்கின்ற நிலை உருவாகிய பின்பும், முன்று லட்சம் எண்ணிக்கையான இராணுவத்தினரை தொடர்சியாக வைத்து பேணிவருவதற்கான தேவை இலங்கைபோன்ற நாட்டிற்கு எந்தவகையிலும் இல்லை. ஆனால் அதை எடுத்த எடுப்பிலேயே செய்துவிட முடியாது. படிப்படியாக ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறைக்கூடாக செய்யப்படவேண்டும். உதாரணமாக இராண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஐசென் கோரின் தலைமையின் 12 மில்லியன், அதாவது ஒருகோடியே இருபதுலட்சம் இராணுவத்தினர் அமெரிக்காவில் இருந்தனர். அவர்கள் யுத்தத்தில் ஜேர்மனியர்களை தோற்கடித்து யுத்தம் முடிவுக்கு வந்ததற்கு பின்னர், (அவர் ஜேர்மனிய நாசித்திற்கு எதிராக சண்டையிட்டிருந்தாலும் அவரும் ஒரு ஜேர்மனிய வம்சாவழியைச் சேர்ந்தவர்தான் ) அவர் அந்த தொகையை பதினைந்து லட்சத்திற்கு குறைத்தார். யுத்தகளத்திற்கு போய் திரும்பி வந்திருந்த இராணுவத்தினருக்கு, மிகவும் ஒழுங்கான ஒரு விஞ்ஞான பூர்வமான முறையில், பொருத்தமான பொருளாதார வேலைத்திட்டத்தை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தினார். அதன் பின்னர் அவர் ஜனாதிபதியுமானர்.
எனவே முதலாவதாக இந்த இராணுவத்திலிருக்கின்ற பெரும் எண்ணிக்கையான தொகையை எங்களால் தூக்கக்கூடிய சுமை என்கின்ற அளவுக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். கடந்த காலத்தில் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சியின்கீழ் நடந்த மிகவும் அழிவுகரமான செயல்பாடு யாதெனில், பொலிஸாரும் இராணுவத்தினரும் படுமோசமாக அரசியல்மயப்படுத்தப்பட்டனர். உதாரணமாக இராணுவத்தளபதியாக வேண்டுமென்றால், அவர்கள் சொல்லுகின்ற யாவற்றையும் செய்தாக வேண்டும். பொலிஸ் மா அதிபராக வரவேண்டுமென்றாலும் அவ்வாறுதான்.
எனவே இன்று பார்க்கின்றபோது பாதுகாப்பு படையினரிடமிருந்து எவ்வளவு அதிருப்தி வெளிப்படுகின்றது என்பது தெரிகின்றது. பல ஆயிரக்கணக்கான பேர் இராணுவத்தை விட்டு வெளியேறிச்சென்றிருக்கின்றார்கள். பொலிஸிலும் பெரும்தொகையானோர் பெரும் விரக்தியில் இருக்கின்றார்கள். பொலிஸில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்ற தேசபந்து தென்னக்கோண் போன்றவர்கள் இந்த மோசமான ஊழல்மயப்பட்ட முறைக்கு சார்பானவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள் என மிகத்தெளிவாக நீதிமன்றங்களால் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பாதுகாப்புதுறையை சுத்தப்படுத்தாமல், சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறையை சுத்தப்படுத்தாமல், இந்தப்பணியை செய்யமுடியாது.
சட்டம் மற்றும் ஒழுங்கு துறைக்கு பொறுப்பான அமைச்சரேகூட ஒருகாலத்தில் புலிகளுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுத்த நபர். அது தொடர்பாக அவருக்கு வழக்குகளும்கூட தொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் அவர்போன்ற ஒருவர், இந்த நாட்டின் தேசியப்பாதுகாப்பைப்பற்றி பேசுவது மிகவும் கேலிக்குரியதாகும். அந்த கடந்தகாலத்தை மறந்துவிட்டுப்பார்த்தாலும், தற்போது நிகழ்காலத்தில் கொள்ளைக்கார வியாபாரிகளாலும், ஏனைய கைக்கூலிகளாலும் கையாளக்கூடிய ஒரு தளமாக சிறிலங்கா பொலிஸ் ஆகியுள்ளது.
அதேபோல் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் ஆட்டுவிக்ககூடியதோர் இடமாக சிறிலங்காவின் பாதுகாப்பு படை ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு மிக உதாரணமாக, அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொல்லுகளோடு வந்து நிகழ்த்தப்பட்டதாக கூற்றஞ்சாட்டப்படுகின்ற சம்பவம் தொடர்பில், விஜயபாகு ரெஜிமென்றின் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டப்படுவதை பார்கின்றபோது, அது ஜேஆர் ஜெயவர்த்தனவின் காலத்தில் அமைச்சர் சிறில் மத்தியூ போன்றவர்களின் தலைமையில், ஜேஎஸ்எஸ் செய்ததை போன்றுதான். இந்த ஜேஎஸ்எஸ் என்பது இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், போன்றவற்றிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்கத்தின் காடையர் கூட்டம், அதனால் இதனை அக்காலத்தில் காடையர் கூட்டுத்தாபனம் என்றுதான் அழைத்தார்கள். ஆனால் இதை இப்போது நாட்டின் இராணுவத்தை வைத்துச் செய்கின்றார்கள். இது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய சூழல், இதனை மாற்றியமைத்தே ஆகவேண்டும். இராணுவத்தினருடைய கௌரவத்தை மீள நிலைநிறுத்தவேண்டும், பொலிஸினுடைய கௌரவத்தை மீள உறுதிசெய்யவேண்டும், அதேவேளை ஒரு ஒழுங்கமைக்கப்பட்டவிதத்தில் இவர்களின் எண்ணிக்கையை குறைத்து நாட்டிற்கு பொருத்தமான கட்டமைப்பாக இதனை மாற்றி அமைக்கவேண்டும்.
மறுபுறமாக எங்களுக்கு எதிர்காலத்தில், யுத்தரீதியான சவால்கள் ஏதும் வருவதாக இருந்தால், அது இவர்கள் இப்போது பேசிக்கொண்டிருப்பதுபோல் ஜேவிபி காலத்தில் வந்த இனம்தெரியாத துப்பாக்கி நபர்கள், அல்லது கண்ணி வெடிகளை புதைக்கின்ற புலிகளை சேர்ந்தவர்கள் போன்றவர்களிலிருந்து வரப்போவதில்லை. மாறாக நவீன தொழில்நுட்ப யுத்தமொன்றை எதிர்பார்க்கலாம். றோன் போன்றவற்றின் மூலம் தாக்குதல், சைபர் தாக்குதல்கள்போன்ற தொழில்நுட்ப முறையில்தான் வரும். பயங்கரவாதம் என்ற திசையிலிருந்துகூட தற்கொலைத்தாக்குதல் வரக்கூடும். அவ்வாறான சூழலுக்கு முகம் கொடுக்கக்கூடியவகையில் இந்த பாதுகாப்பு படைகள் மீள்சீரமைக்கப்படவேண்டும். அதேபோல் மீள்கட்டுமானத்திற்கும் உட்படுத்தப்படவேண்டும்.
இந்நிலையில் எமது இராணுவக் கட்டமைப்பை பேணுவதற்காக அக்குரேகொட என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, பாதுகாப்புப் படைகளுக்கான மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு 80 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தப்பணத்தைக்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து காரியாலயங்களையும் மீள்திருத்தம் செய்வதிருக்க முடியும்.
இந்த நிலையத்தை பராமரிப்பதற்கு ஒருவருடத்திற்கு மாத்திரம், மின்சாரம் நீர்வசதி மற்றும் ஏனைய செலவினங்களுக்கு கிட்டத்தட்ட 500 கோடி அளவில் செல்கின்றது. இக்கட்டிடம் கிட்டத்தட்ட பென்டக்கன் கட்டிடத்தின் அரைவாசி அளவு இருக்கும் என்பது இவ்விடத்திற்கு போனவர்களுக்கு புரியும். இது எமது நாட்டிற்கு எந்த அளவில் பொருந்தும்? இந்த நாட்டின் பொருளாதார நிலைமைக்கு, சமூக நிலைமைக்கு பொருத்தமான ஒரு பாதுகாப்புதுறை கட்டமைப்பையும் , பாதுகாப்பு சேவையையும் நாம் உருவாக்கி கொள்ளவேண்டும்.
ஆகவே நாங்கள் பாதுகாப்பு படையினரோ பொலிஸாரோ செய்கின்ற, எல்லாவற்றையும் சரியென்று ஆமோதிக்கின்ற யுத்தவாதிகளோ, இனவாதிகளோ அல்ல. மாறாக நாங்கள் இந்த நாட்டையும் , நாட்டு மக்களையும் நேசிக்கின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு பொருத்தமான, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய வகையில், எமது பாதுகாப்பு துறையை மறுசீரமைப்பு செய்யவேண்டுமென்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.
கேள்வி 8 : இலங்கை இன்று ஒரு முற்று முழுதான 'போலீஸ் இராட்சியமாக' மாறிவிட்டது என்று யாராவது கூறுவார்களானால்? அல்லது அதை நோக்கி வேகமாக நடை போடுகிறது எனக் கூறுவார்களானால்? ரணில் விக்கிரமசிங்க என்கின்ற தலைவருக்கு கட்சியின் பலமோ அன்றில் பாராளுமன்ற பலமோ இல்லாத காரணத்தால், ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரின் பலத்தை பயன்படுத்தி அவர் அந்த திசையை நோக்கி தள்ளிச்செல்கின்றார் என்று கூறினால், நீங்கள் கூறும் பதில் என்ன?
பதில் : இப்போது ரணில் விக்ரமசிங்க எப்படி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார் என்று பார்த்தால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மற்றும் ஏனைய சிலரின் ஆதரவில்தான் அவருக்கு அந்த அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் தற்பொழுது பின்பற்றும் எல்லாவற்றிற்கும் போலீசாரை பாவிப்பது, சட்டமா அதிபர் திணைக்களத்தை பாவித்து வழக்குகளைத் தொடுப்பதுபோன்ற உபாயமானது தற்போயை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாறாக குழப்பங்கள் ஏற்படுத்துகின்றது.
அவர் உண்மையிலேயே அறிவு பூர்வமாக சிந்திப்பதாக இருந்தால், அவருடைய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கை வெற்றி அடைய வேண்டுமாக இருந்தால், அவர் இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு அதை தெளிவாக புரிய வைத்து, அத்திசையை நோக்கி மக்களை வெற்றிக்கொள்ள கொள்ள வேண்டும். இந்த நாட்டின் தொழிற்சங்கங்களோடு பேசி அவர்களின் பரந்த அனுமதியைப் பெறவேண்டும். அதைவிடுத்து ஜே ஆர் ஜெயவர்த்தன ஜனாதிபதியை போலவே வெறுமனே பலாத்காரத்தின் அடிப்படையில் பயணிக்க முற்படுவாரானால், அவ்வாறான போக்கின் கடந்தகால அனுபவங்கள் எங்களுக்கு நிறைய இருக்கின்றன.
ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதிக்கு மேசைகளில் குந்தியிருந்து பேசக்கூடிய அரசியல் சக்தியாகத்தான் திரு. அமிர்தலிங்கம் போன்றவர்கள் உட்பட்ட தமிழர் விடுதலை கூட்டணி என்னும் அரசியல் கட்சி இருந்தது. அந்தத் தரப்போடு பேசுவதை தவிர்த்து ஆறாவது திருத்தச் சட்டம் என்பதை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, அவர்களை பாராளுமன்றத்தில் இருந்து வெளியே விரட்டியடித்த பின்பு அவருக்கு பேச வேண்டியிருந்தது வேலுப்பிள்ளை பிரபாகரனோடுதான். அது மட்டுமின்றி அவர் தனக்கு எதிராக அல்ல தனக்கு எதிர்த்தரப்பாக இருந்த அரசியல் முகாமினுடைய தலைவியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிவில் உரிமைகளை பறித்தார், அல்லது இல்லாமல் செய்தார். அந்த சிவில் உரிமை பறிப்பு மூலம் அவர் எதிர்க்கட்சியை மட்டும் பலவீனப்படுத்தவில்லை, அரசியல் கட்சிகளையும் தடை செய்தார்.
ஜனதா விமுக்தி பெரமுன, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி போன்ற கட்சிகளை தடை செய்தார். மாணவர் அமைப்புகளை தடை செய்தார், தொழிற்சங்கங்களை தடை செய்தார். 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட அந்த இனக்கலவரத்தில் இந்த தடை செய்யப்பட்ட கட்சிகள் எவருக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். மறுபுறமாக அதோடு ஏதாவது தொடர்பு இருந்ததாக இருந்தால் அத்தொடர்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம்தான் இருந்தது. ஆனால் அவருடைய அந்தத் தடைகள் மூலம் நடந்தது என்ன? சிறிமாவோ பண்டாரநாயக்காவை பலவீனப்படுத்தி விஜயவீர போன்றவர்களை, அவர்களின் கட்சியைத் தடைசெய்ததன் மூலம் சமன் பியசிறி போன்ற கடுமையான ஆயுததாரிகளுடன்தான் அவர் அரசியல் மேசையில் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கினார். அதன் பின்னர் நாடுபூராகவுமிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வலைப்பின்னலில் பெரும்பாலானவர்களை கொலை செய்வதற்கு அல்லது அவர்களை உடல் ரீதியாக அழிப்பதற்கு ஜே. வீ. பி. யினரால் முடியுமாக இருந்தது.
சிறிமாவோ, பீலிக்ஸ் போன்றவர்களுக்குப் பதிலாக இவர்களை கொண்டு வந்ததன் மூலம், மற்றும் விஜேவீர போன்றவர்களை தடைசெய்து அவர்களை வெல்லவாயா காடுகளுக்குள் கலைத்துவிட்டு அதன் பிரதிபலனாக களத்துக்கு கொண்டு வந்த சக்திகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். இலட்சக்கணக்கான பேர் இதனால் உயிரிழந்து இருக்கிறார்கள். எனவே ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த ஜனநாயக முறைமையோடு அவர் செய்கின்ற இந்தவகை அரசியல் செயல்பாடு பற்றி அவர் மீளவும் சிந்திக்க வேண்டும். எனவே இதைவிட மக்கள் தொடர்பான அக்கறையோடு அல்லது கரிசனையோடு தன்னுடைய பொருளாதார மீள் சீரமைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வார் என்றால், இதை விடவும் அதிகமான மக்கள் அனுமதியும் ஆதரவும் அவருக்கு கிடைக்க வாய்ப்புண்டு.
கேள்வி 9 : இலங்கையில் அரசியல் நன்றாக பணம் புரளும் வியாபாரமா? நல்ல வழியிலோ தீய வழியிலோ சேர்த்த பணம் இன்றி இலங்கையில் அரசியல் செய்ய முடியுமா? இந்த தேர்தல் முறை இதற்கு பிரதான காரணமா? உங்கள் பார்வை என்ன?
பதில் : உண்மை. இப்போது தேர்தல் முறை சம்பந்தமாக பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இந்த விருப்புவாக்குக்காக நடக்கின்ற இழுபறி யுத்தம் பற்றி பேசுகிறார்கள். இப்போது இலங்கையிலிருக்கின்ற அரசியல் முறைக்குள்ளே தேர்தலுக்காக செய்யப்படுகின்ற பிரச்சாரங்கள், பிரச்சார செலவினங்கள், அதிலும் குறிப்பாக ஊடகங்கள் மூலம் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு பெரும் தொகைப் பணம் தேவைப்படுகின்றது. அதுமட்டுமல்ல ஊடகங்களின் சொந்தக்காரர்கள், உரிமையாளர்கள் இலங்கையினுடைய அரசியலை கையாள முனைகின்ற போக்கும் நிலவுகின்றது.
அடுத்தது தேர்தல் காலங்களில் மக்களுக்கு பொருட்களை நன்கொடையாக விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பெருந்தொகையான பணம் உண்மையில் தேவைப்படுகிறது. அதேநேரம் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினருடைய மாதாந்த சம்பளம் என்பது 54,000 ரூபாய்கள். இதை வைத்துக் கொண்டு செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை. அவருக்கு மரண வீடு கல்யாண வீடுகள், இன்னும் பலரின் குடும்ப கொண்டாட்டங்கள் மற்றும் பன்னசாலைகள், கோயில்கள், பொதுநிகழ்வுகள் என்பவற்றில் பங்கு பற்றி அவற்றிற்கு அவர் செய்கின்ற நன்கொடைகள் என்பதன் அடிப்படையிலேதான் அவருடைய அரசியல் வாழ்க்கை தங்கியிருக்கின்றது. அவருடைய அரசியல் இருப்புகூட அதில்தான் தங்கி இருக்கின்றது. ஆகவே இன்று இலங்கையில் உள்ள நிலைமையின் அடிப்படையில் 54 ஆயிரம் ரூபாவை வைத்துக்கொண்டு நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தைக்கூட ஒருவரால் நடத்த முடியாது. ஆகவே விரும்பியோ விரும்பாமலோ அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு, உறுதி செய்து கொள்வதற்கு தங்களுடைய அதிகாரத்தைப் பாவித்து நேர்மையான முறையிலோ அல்லது நேர்மையற்ற முறைகளிலோ பெருந்தொகை பணத்தை திரட்டுவதற்கு அல்லது பணத்தை சம்பாதிப்பதற்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
அல்லது நடந்து கொண்டிருக்கின்ற பாரிய வியாபாரங்கள் அல்லது வியாபாரங்களிலிருந்து தங்களுக்கான ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்கின்றார்கள். இப்போது இந்த நடைமுறை என்பது இலங்கையினுடைய அரசியலின் பிரிக்க முடியாத அகவயமான, அதோடு இரண்டற கலந்த பகுதியாக நடைமுறையில் மாறிவிட்டது. இது ஒரு மிக பாதகமான நிலைமை. குறிப்பாக இந்த ஊடகத்துறையின் உரிமையாளர்களும் கூட அரசியலின் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆதிக்கத்தை வைத்துக் கொண்டு இந்த நிலைமைக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். தென்பகுதியில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் கூட குறிப்பாக LTTE இருந்தபொழுது இல்லாமல் இருந்தாலும் அதன் பின்பு இப்போது பணத்தை மையமாக வைத்து அரசியல் செய்கின்ற ஒரு போக்கும் கலாச்சாரமும் அங்கும் நிலவுகின்றது. அதேபோல் முஸ்லிம் அரசியல் சமூகத்துக்குள்ளும் அவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.
ஆனால் இப்போது கடந்த வருடம் நடந்த அரக்கலய போராட்டத்தினால் நடந்திருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், கடந்த காலத்தில் தங்களுக்கு நன்கொடைகளை பகிர்ந்தளித்த அரசியல்வாதிகளை ஒரு கௌரவத்தோடும் மதிப்போடும் நோக்கிய சூழ்நிலை மாறி, அவ்வாறான அரசியல்வாதிகளை அருவருப்போடு பார்க்கும் ஒரு சூழல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உதாரணமாக முன்னர் ஒரு அரசியல்வாதி ஒரு மத ஸ்தலத்திற்கோ அல்லது விகாரைக்கோ போய் ஒரு சமயச் சடங்குகளில் பங்குபற்றுவதாக இருந்தால், பெரிய வாகனங்களோடு ஊர்வலமாக போய் பங்கு பெறுவது வழமை. அவர் போகின்ற வாகனங்கள் அல்லது அவர் உடுத்தியிருக்கும் உடுப்பு கழுத்தில் போட்டிருக்கின்ற தங்கச் சங்கிலி அல்லது கைகளில் போட்டிருக்கும் மோதிரங்கள் என்பவற்றைப் பார்த்து, பாருங்களேன் எங்களுடை மத்திரியினுடைய உடல் தேஜஸ் மற்றும் ராஜ பார்வையை என அவற்றைப்பற்றி பெருமைப்படுகின்ற போக்கு அவர்களிடம் இருந்தது. அவருடைய பண பலம் மற்றும் அவற்றைப் அவர் காட்ச்சிப்படுத்தும் விதம் தொடர்பாக ஒரு மகிழ்சசி இருந்தது.
ஆனால் இந்த அரக்கலய போராட்டத்தினால் நடந்த விடயம் என்னவென்றால், இவர்கள் இவை எல்லாவற்றையும் எங்களிடமிருந்து கொள்ளையடித்துத்தான் இப்படி வாழ்கிறார்கள் என்கின்ற ஒரு கருத்து உறுதியாக்கப்பட்டுள்ளது. எனவே எனக்குத்தெரியும், மிகப் பெரும் தொகையான பணத்தை சேர்த்து வைத்திருக்கின்ற அரசியல்வாதிகள், குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட ஒரு சிறிய வாகனத்தில் தான் அப்பொழுது பாராளுமன்றத்துக்கு வந்தார்கள். வேறு உடைகளை உடுத்திக்கொண்டு பாராளுமன்றத்திற்குள் வந்துதான், அங்கு சீருடைகளை உடுத்தினார்கள். அப்படியான சூழ்நிலை ஒரு கட்டத்தில் நாட்டில் ஏற்பட்டது. இது ஒரு உண்மையான நிலைமை. இது வெறுமனே எங்களுடைய தேர்தல் முறைமையினால் மட்டுமல்ல எங்களுக்குள்ளே கலாச்சார ரீதியான போக்கு கூட ஏற்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக அது 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த கடை கெட்ட கலாச்சாரம் இன்னும் வளர்ச்சி பெற்றது. அதாவது பெருந்தொகை பணத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது. பணம் இல்லாவிட்டால் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை. இதனால் புலமைசார் மனிதர்கள் எல்லாம் அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி விட்டார்கள். பெரும் கொள்ளை வியாபாரிகள் போன்றவர்கள் அரசியலை நோக்கி பெரும் எடுப்பில் வருகின்ற ஒரு போக்கு உருவாகி, அதன் பிரதிபலனாக அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு காடைத்தனமான அரசியல் போக்கு நிலவுகின்றது. நாம் குறிப்பாக எழுபதுகளில் பாராளுமன்றத்தில் இருந்த அரசியல்வாதிகளுடைய நடைமுறைகளையும் நடவடிக்கைகளையும், தற்போது உள்ளவர்களினுடைய நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்த்தாலே அந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவாக தெரியும்.
கேள்வி 10 : ரணில் விக்ரமசிங்க தொடர்சியாக உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை பின்போடுவதற்கு எடுக்கின்ற முயற்சி, எதற்கெடுத்தாலும் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் வைத்து மக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற விடயத்தை அடக்குகின்ற விடங்களை செய்துகொண்டு, இந்த நாட்டை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்டெடுக்கின்ற பணியை இவரால் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியுமா? இண்டாவது தொடர்சியாக தேர்தல்களில் தமது வாக்குகளை அளிக்கின்ற ஒரு அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றி வந்திருக்கின்ற மக்கள் ரணிலினுடைய தேர்தல்களை பின்போடுகின்ற நடவடிக்கைக்கு எவ்வாறான பிரதிபலிப்பை செய்வார்கள்? அது எவ்வாறானதோர் தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில் : உண்மையை சொல்வதானால் நாங்கள் ஒரு ஜனநாயக நாடு என்கின்ற வகையில், மக்களுடைய விருப்பு-வெறுப்புக்களை, அல்லது அவர்களுடைய அபிலாசைகள் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு களம் தானே தேர்தல் என்பது? மக்கள் அந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அந்த முறைமை அல்லது அந்த களம் இல்லாமல் ஆக்கப்படும்போது, இல்லாமல் ஆக்கப்படுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்போதுதான் மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வேறு மார்க்கங்களை தேர்ந்தெடுப்பார்கள். உதாரணமாக ஆரம்ப நிலைகளில் ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்-நிகழ்வுகள் அப்படி-இல்லாவிட்டால் வேலைநிறுத்தங்கள் அல்லது சற்று வன்முறை-கலந்த ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடக்கலாம். அடுத்ததாக ஆயுதப் போராட்டத்துக்கு போவார்கள். இது தான் ஒரு நாட்டில் நடக்க கூடிய சூழல்.
அதுவும் எங்களுடைய நாட்டுக்கு, இது பற்றி புதிதாக சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எங்களுடைய நாடு 1953 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 70 வருட காலமாக இரத்தத்தினாலேயே இந்த அனுபவத்தை பெற்றுக் கொண்ட ஒரு நாடு. எனவே இது ஒரு ஆபத்தன போக்காகும். உண்மையில் இந்த தேர்தலை நடத்தினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு என்ன நடக்கக்கூடும் என்று பார்ப்போமானால், தேர்தல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட சகலவிதமான கருத்துக் கணிப்புக்களிலிருந்தும் தெரியவருது யாதெனில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்கின்ற இருகட்சிகளும் தனித்தனியாகவோ அன்றில் இணைந்தோ போட்டியிட்டாலும் இருவராலும் நாட்டின் வாக்குகளில் 10 வீதத்தை கூட இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும்.
அப்படியான ஒரு நிலை அப்பட்டமாக தேர்தல் முடிவுகளில் வெளிவந்ததன் பின்னர் எவ்வாறு இவர்களால் பாராளுமன்றில் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்? அல்லது ஜனாதிபதி என்கின்ற தலைமைப் பதவியில் தொடர்ந்து இருக்க முடியும்? அதனால்தான் உண்மையிலேயே இந்த தேர்தலை தவிர்க்கிறார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் இந்த விடயம் தொடர்பாக ஏதாவது ஒரு வகையில் அறிவு பூர்வமாக அல்லது தந்திரோபாய ரீதியாக இதைப் புரிந்து கொண்டார் என்றால், அவர் இவ்வாறான உபாயங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. ஏனெனில் அவர் அறிவு பூர்வமாக அல்லது தந்திரோபாயமாக சிந்தித்து செயற்படக் கூடியவர் என்று கருதப்படுகிறார்.
ரணில் விக்கரமசிங்க அறிவுபூர்வமாக இந்த விடயத்தை அணுகுகின்ற ஒரு நபராக இருந்தால், அவர் இந்தச் சூழலை தவிர்த்துக்கொண்டு, அதே நேரத்தில் தான் அடைய விரும்புகின்ற அந்த இலக்கை வெற்றிகரமாக அடையக்கூடியவராகவும் இருப்பார். அவர் செய்துகொள்ள கூடியதாக இருந்தது யாதெனில், டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டமசோதாவை சமர்ப்பித்து, நிறைவேற்றி அதன் மூலம் இலகுவாகவே அவரால் இந்த இந்த தேர்தலை பின்போட்டுக்கொண்டுருக்கலாம். இதைத்தான் மாகாண சபைகளுக்கு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த மாகாண சபை தேர்தலை பாராளுமன்றத்துக்குள் சிறைவத்துள்ளார்கள். அந்த ஜனநாயக உரிமையை இல்லாமல் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, 13 ஆவது திருத்தத்தை முழுமை ஆக்குவது போன்ற பேச்சுக்கள் எல்லாம் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆகவே ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவையாக இருந்தால், இதைவிட கௌரவமான முறையில், பாராளுமன்ற முறைமைக்கூடாகவே, தேர்தலை, அவரால் பின் போட்டுக்கொண்டிருக்க முடியும்.
ஆனால் அவர் அதற்கு பதிலாக தேர்ந்தெடுத்துக்கொண்ட முறையானது, ஒரு தேர்தல் இருப்பதாக அறிவித்து, தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை செய்து, அந்த தேர்தல் நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டு, அதற்குப் பின்னர் ஒரு பலாத்காரமான முறையில் பாதிதூரம் அச்சடிக்கப்பட்ட தேர்தல் வாக்குப் பத்திரங்களை பாதியில் நிறுத்தியது போன்ற, வெளியில் இருந்து பார்க்கும்போது மிகவும் அநாகரிகமாக தெரியும் முறையில்தான் அவர் அந்த தேர்தலை நிறுத்தி வைத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சமூகத்திலே என்ன நடக்கக் கூடும்? இந்நிலைமைகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது, இனிமேல் இவற்றை நாம் ஆயுத ரீதியாகத்தான் கையாள முடியும் என சிந்திக்கின்ற ஒரு தொகை மக்கள் சமூகத்தில் இருக்ககிறார்கள், அல்லது இருப்பார்கள் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஜனநாயகவரையறைகளுக்கு வெளியே போய் செயற்படும் பிரிவினராக இருக்கலாம். அவ்வாறான பிரிவினர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதுதான் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிகழக்கூடும்.
ஆகவே அவர் இந்த மறுசீரமைப்பு பணிகளை அல்லது மறு சீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் இதை விடவும் இந்தப் பிரச்சனையினுடைய நீள, அகல, ஆழங்களை வடிவாக பார்த்து ஜனநாயகம் என்கின்ற அடிப்படை நடைமுறை கொள்கைகளுக்குள் நின்று அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொண்டால் நல்லது.
அவர் கட்சிகளை அழைத்து ' பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நிலைமைகளை நான் தூக்கி நிறுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தால் தற்போது தேர்தலை நடத்த முடியாது, தேர்தலை இக்குறிப்பிட்ட காலத்தில் , அல்லது இந்நாளில் நாடாத்துவேன், அதுவரை மறுசீரமைப்புக்களை நாங்கள் செய்வோம், இந்த தேர்தல் முறையை இவ்வாறு மாற்றிக் கொள்வோம், இந்த விடயத்தை இவ்வாறு கையாளுவோம் நான் இந்த இந்த சட்டவாக்கத்தை கொண்டு வரப்போகிறேன்.' என்று தெரிவித்திருந்தால், நான் நினைக்கிறேன் பொதுமக்களும் இதைவிட சாதகமான பிரதிபலிப்பைச் செய்திருப்பார்கள்.
அதாவது, மக்கள், ' அவ்வாறாயின், முதலில் எங்கள் பிள்ளைகளுக்கு மருந்துகளையும், போதியளவு சாப்பாட்டையும், பிள்ளைகள் பாடசாலைக்கு போகக்கூடிய வசதிகளையும் செய்து தாருங்கள், அதற்குப் பின்னர் தேர்தலை பற்றி நாங்கள் பேசுவோம்,' என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் இங்கு அப்படியான ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. அதுதான் பிரைச்சினை. இதனால் நடக்க கூடியது என்னவென்றால் இதை விட பயங்கரமான அரசியல் போக்குகள் கிளம்புவதற்தேதுவான சிறகுகள் முளைப்பதற்கான வாய்ப்புகள் தான் இங்கு உருவாக்கப்படுகிறது.
கேள்வி 11 : இலங்கை எதிர்நோக்கி நிற்கின்ற பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் ஊழலே பிரதான காரணம் என்று ஜனரஞ்சகமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது உண்மையா? அதனை பிரதான விடயமாக கொண்டே இன்று மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை எதிர்க் கட்சிகள் கோரி நிற்கின்றார்கள். அவர்களை மாற்றினால் பொருளாதாரம் சீர் செய்யப்படுமா? அரச இயந்திரத்தில் ஆழமாக வேருண்டியிருக்கும் ஊழல் என்னும் சவாலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில் : இன்றைக்கு நிலவுகின்ற இந்த பிரச்சினைக்கு ஒரு நீண்ட கால காரணம் இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட, அதாவது 15 வருடங்களுக்கு முன்னர் 2005 அல்லது குறிப்பாக, 2010 அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு காரணமும் இருக்கிறது. அத்துடன் மூன்று வருடத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒரு காரணமும் இருக்கிறது.
நீண்ட காலத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட காரணம் என்பது 1954 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக எமது வரவு செலவில் பற்றாக்குறையை, துண்டு விழும் நிலையை ரூபாய்களில் பேணி வந்தோம். அதாவது நாங்கள் வரவை விட செலவு அதிகம் செய்தோம். அந்த பற்றாக்குறை தொகையை நிரப்புவதற்கு அல்லது சரிசெய்வதற்கு ரூபாய்களில் கடன் வாங்கினோம். எங்கள் அபிவிருத்தி வேலைகளுக்கும் இன்னோரன்ன சில பணிகளுக்குமென டொலர்களில் கடன் வாங்கினோம். அதிலும் நாங்கள் தொடர்ச்சியாக ஒரு துண்டு விழுகின்ற நிலையை டொலர்களில் பேணி வந்தோம். அதாவது எமது ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் கடன்களை மீளக்கட்டுதல் என்பதிலும், டொலர்களில் துண்டு விழும் தொகைய நாங்கள் தொடர்ந்து பேணி வந்திருக்கிறோம். அந்த துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்வதற்கு, டொலர்களில் கடன்களை வாங்கி, நாங்கள் அப்படியே முன்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.
ஆகவே, இந்த துண்டு விழும் தொகைகளை நாங்கள் ரூபாய்களிலும், டொலர்களிலும் 1954 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அப்படியே பேணி வந்திருக்கிறோம். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக 2005ஆம் ஆண்டில் இன்னும் குறிப்பாகச் சொன்னால் 2010 ஆண்டிலிருந்து நாங்கள் அவ்வளவு காலமும் செய்து வந்த 'இரு தரப்பு கடன்' அல்லது 'பல் தரப்பு' கடன் கொடுக்கல் வாங்கல் அதாவது Bilateral Loans (பைலேட்ரல் லோன்) அல்லது Multilateral Loans என்னும் முறையில் இருந்து மாறினோம். அதாவது, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் JAICA- KOICA-USAID போன்றவற்றில் இருந்து விலகி நேரடியாக சர்வதேச வியாபார சந்தையிலிருந்து டொலர்களை பெற்றுக் கொள்கின்ற முறைக்குச் சென்றோம்.
அதாவது அவற்றை Sri Lanka Development Bonds or Sri Lanka Sovereign Bonds அதாவது இலங்கை அபிவிருத்தி பிணைமுறி அல்லது இலங்கை இறைமைப் பிணைமுறி என்ற வகையில் கடன்களை டொலர்களிலும், யூரோக்களிலும் பெற்றுக்கொண்டோம். இந்த ஆபத்தான போக்கை ஆரம்பித்தவர் மஹிந்த ராஜபக்ச. அதேபோல் சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்திலேதான் 1997 பிபி ஜெயசுந்தர முதன்முதலாக மத்திய வங்கி பிணைமுறி பத்திரங்களை வினியோகித்து நாட்டிலே இருக்கிற பணப்புழக்கத்தை சரிசெய்து, கடன்களை நிவர்த்தி செய்வதற்காக ரூபாய்களை பெறுவதற்கான முறையை அவர் அறிமுகப்படுத்தினார். இதனுடைய உச்ச நிலையை நாங்கள் 2020 ஆம் ஆண்டு வந்தடைந்தோம். நாங்கள் கிட்டத்தட்ட 13,000 பில்லியன் ரூபாய்கள் தேசிய கடனும். 50 பில்லியன் டொலர்கள் சர்வதேச கடனும் என்கின்ற நிலைக்கு நாங்கள் வந்து இருந்தோம். அதேவேளை ஒரு வருடத்திற்கு ஏழு பில்லியன் டொலர்கள் கடன் திருப்பிக் கட்ட வேண்டும் என்கின்ற நிலைக்கு, எம்மைப் பலியாக்குகின்ற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தோம்.
ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்த கடன் நிலைமை சம்பந்தமாக எந்தவிதமான ஒரு தெளிவோ புரிதலோ இல்லாமல், அவரைப் பற்றி கட்டியெழுப்பிய அந்த மாயப் பிம்பம், அல்லது பொய்யாக ஊதிப்பெருப்பித்த அந்த பிம்பத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டு, தன்னை சுற்றி இருந்து துதி பாடிக் கொண்டிருந்த ஒரு வியாபார சமூகக் கூட்டம் சொன்ன விஷயங்களைக் கேட்டு, அதாவது நான் அவர்களை வெள்ளை சட்டை அணிந்த அல்லது வெள்ளை கொலர் அணிந்த கேடிகள் - வைட்கோலர் கிரிமினல்ஸ் என்று சொல்லப்படுகின்ற கலாநிதி பி.பீ. ஜெயசுந்தர போன்றவர்கள் சொன்ன ஆலோசனையின்படி முன்னோக்கிச் சென்று, அந்த சிக்கலை இன்னும் கடுகதி வேகத்தில் முன்னுக்கு கொண்டு போனார். பாரிய வரிச்சலுகைகளை கொடுத்தார். அந்த வரிச்சலுகைகளை கொடுத்ததன் காரணமாக கிறெடிட் ரேட்டிங் நிறுவனக்கள், எங்கள் நாட்டின் கடன் பெறும் தராதரத்தை தீர்மானிக்கின்ற நிறுவனங்கள், எம்மை அந்த பட்டியலில் கீழ்நோக்கி தள்ளும் நிலை உருவாக்கப்பட்டது. எங்களால் அதை தாண்டி சென்று அந்த நிறுவனங்களின் பட்டியலில் எங்களுடைய தரத்தை மேலே உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது.
அத்துடன் டாலரின் பெறுமதியை 198 இலிருந்து 200 ரூபாயாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கையிருப்பில் மீதமிருந்த 7.2 பில்லியன் வெளிநாட்டுக் கையிருப்புத் தொகையில் 2.5 பில்லியன்களை வீண்விரயம் செய்தனர். அது மட்டுமன்றி கோவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சரியான விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையை கையாளுவதை தவிர்தனால் கிட்டத்தட்ட 30,000 பேர் வரை இறந்து போனது மட்டுமன்றி பொருளாதாரத்துக்குக்கு பாரிய தாக்கம் ஏற்படுவதற்கும் வகை செய்தார். வைத்தியர்கள் செய்ய வேண்டிய வேலையை ராணுவத்தினரை கொண்டு செய்ய முயற்சித்தார். அடுத்தது விவசாயத்துறையை நாசமாக்கினர். அது மட்டுமன்றி தன்னுடைய தரப்பில் தன்னுடைய கையால் இன்னும் சில பாதகமான விடயங்களை இந்த சூழலுக்கு அவர் சேர்த்துவிட்டார்.
இறுதியில் எமது திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களை வாங்குவதற்கு யாரும் வராத நிலையிலும், International Sovereign Bond (ISB) என்கின்ற சர்வதேச பிணைமுறிகளை வாங்க முடியாமல் போன நிலையும் உருவாகின்ற பொழுது, பணத்தை அச்சிடுகிற வேலையை ஆரம்பித்தார். அதனால் பணவீக்கம் வானளாவ உயர்ந்தது மட்டுமன்றி அதன் அடிப்படையில் வட்டி வீதங்களும் கடுமையான உயர்வை கண்டன. இந்த ரீதியில் நாடு இப்படியே போய் ஒரு வங்குரோத்து நிலையை அல்லது கையறு நிலைக்கு போய் நின்றது. அந்த அடிப்படையிலேதான் 1954ம் ஆண்டிலிருந்து 2005 ம் ஆண்டு வரை, 2005ம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை 2020 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வரை மூன்று யுகங்களாக நடந்ததை மூன்று பகுதிகளாக பிரித்து இந்த சிக்கலை புரிய வைப்பதற்காகச் சொன்னேன்.
எனவேதான் நான் சொல்கிறேன், வெறுமனே களவெடுத்தினால் மட்டும்தான் இந்த நிலைமை வந்தது என்று கூறுவது இப்பிரச்சினையை இலகுபடுத்திக் கூறுவது அல்லது மலினப்படுத்தி கூறுவதாகும். ஆனால் அப்படி அல்ல. பிரதானமான விடயம் யாதெனில், நாங்கள் எங்களுடைய வரவு செலவு மற்றும் எங்களுடைய அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றை செய்கின்ற பொழுது எங்களுடைய எதிர்கால வருமானம் தொடர்பில் கணக்கில் எடுக்காது செலவுகளை செய்து கொண்டிருந்தமையாகும். குறிப்பாக அதிவேக வீதி நிர்மாணம், மற்றும் சரியான நிதி மதிப்பீடுகள் இல்லாத பெரும் கட்டிட நிர்மானப்பணிகள்.
இவை எந்த வகையிலும் பாரிய பொருளாதார வருமானத்தை ஈட்டிக் கொடுக்கக் கூடியவை அல்ல.
அது மட்டுமண்றி குறிப்பாக அரசின் பிரதான நிறுவனங்களான, இரண்டு பிரதான வங்கிகள், எரிபொருள் கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்ற இந்த பிரதான நான்கு நிறுவனங்களையும் மிக மோசமான முறையில் முகாமைப்படுத்தியமை. நான் இதை ஒரு பெருமைக்காக சொல்லவில்லை, குறிப்பாக நான் அந்த நிறுவனன்களை நிர்வகிக்கின்ற பொழுது இலங்கை மின்சாரக் சபை 2015ஆம் ஆண்டில் 4500 கோடிகள் அதாவது 4.5 பில்லியன் நட்டம் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டு இருந்த நிலையில், எனது நிர்வாகத்தின் கீழ் 20 பில்லியன் லாபத்தை ஈட்ட கூடியதாக இருந்தது. அது மட்டுமன்றி எண்ணெய் விலையைக் குறைத்து கிட்டத்தட்ட 67 பில்லியன் ரூபா பெறுமதியான நலன்களை நாங்கள் நாட்டு மக்களுக்கு கொடுக்கக் கூடியதாக இருந்தது. 154 ரூபாயாக இருந்த பெட்ரோலை 117 ரூபாய்க்கு கொண்டு வந்தோம். 134 ரூபாயில் இருந்த டீசலை 95 ரூபாயை கொண்டு வந்தோம். அப்படி குறைத்துக் கொடுத்தும் கூட அந்த இரண்டு நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சி காணவில்லை. அந்த இரண்டு நிறுவனங்களையும் லாபம் ஈட்டக்கூடிய இடங்களாக நாங்கள் மாற்றிக் காட்டினோம்.
அவ்வாறாக ஒரு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைக்கூடாக இந்த நிறுவனங்கள் முகாமை படுத்தப்படவில்லை . மாறாக, இந்த இடங்கள் எல்லாம் வெறுமனே நபர்களுக்கு தொழில் கொடுக்கின்ற இடங்களாக பார்க்கப்பட்டன. எண்ணெய் இறக்குமதி செய்கின்ற பொழுது நிலக்கரியை இறக்குமதி செய்கின்ற பொழுது அதில் கமிஷன் வைத்து கமிஷன் உழைக்கின்ற இடங்களாகவே பார்க்கப்பட்டன. அதேவேளை அதிவேக வீதிகளை நிர்மாணிப்பது, பாரிய கட்டடங்களை உருவாக்குவது, ஜாகிங் போவதற்கான பாதைகளை உருவாக்குவது, போன்ற எந்தவித இலாபமும் கிட்டாத நிர்மாணப் பணிகளுக்கு கோடிக்கணக்கான பெருநிதிகள் செலவழிக்கப்பட்டன. இவற்றால் ஒரு வருமானமும் வராது என்கின்ற நிலை இருக்கின்ற பொழுதும் பெருந்தொகை பணத்தை வட்டிக்கு வாங்கி செலவழித்தார்கள். இதுதான் பிரதானமான காரணம்.
அதாவது நிதியை செலவழிக்கின்ற அதே நேரத்தில் வருமானத்தை ஈட்டுவது எப்படி என்கின்ற ஒரு நிதி முகாமைத்துவம் பற்றிய அடிப்படை விஷயம் தொடர்பான எந்தவித தெளிவான அறிவோ அணுகுமுறையோ இல்லாது, அல்லது அவை தொடர்பாக செய்யக்கூடிய ஒரு முறையான ஆய்வோ பொருளியல் கற்கையோ இல்லாமல், எங்களுடைய வரவு செலவுகளை முகாமைப்படுத்த போனதுதான் இந்த சிக்கலுக்கு பிரதானமான காரணம். அதே வேளை ஊழலும், பெருந்தொகை நிதியை கொள்ளை அடித்ததும், சட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப் படுத்தப்படாமல் போனதும் இதன் ஒரு பக்க விளைவாக வந்த விடயம் என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுடைய அடிப்படை நிதி கையாளுகின்ற மூலோபாயம் என்பதே தவறானது, அதுவே இந்த நிலைமைக்கு பிரதான காரணம்.
கேள்வி 12 : இலங்கையில் அரச சேவையில் அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று அரச சேவையிலுள்ள சுமார் 1.5 மில்லியன் சேவையாளர்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அரச செலவினத்தைக் குறைப்பதற்கு அளவுக்கு அதிகமாக காணப்படும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விடயத்தில் உடன்படுகின்றீர்களா? அவ்வாறாயின் அதை செய்வதற்கான முறைகள் என்ன? பெரும் எதிர்ப்பு கிளம்பாதா?
பதில் : உண்மையில் இவை எல்லாம் கூட விஞ்ஞான பூர்வமான தர்க்கங்கள் அல்ல. உதாரணமாக, 'அரச சேவைகளை தனியார் துறையினரிடம் கொடுக்க வேண்டும். அப்படியானால் அவை இலாபகரமானவையாக இயங்கும். அவற்றின் சேவைகள் சிறப்பாக அமையும். அல்லது, அரச சேவையில் 15 இலட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு வி ஆர் எஸ் கொடுத்து அல்லது கட்டாய லீவு கொடுத்து வீட்டிற்கு அனுப்புதல் வேண்டும்.' என்கின்ற ஜனரஞ்சகமான முன்மொழிவுகள் எல்லாம் வரும். ஆம், இலங்கையின் அரச சேவைகள் மிகவும் செயற்திறன் அற்றவைதான், நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன, அங்கு பணியாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இது ஒரு பெரிய சுமைதான். இவற்றை எம்மால் சுமக்கக் கூடியதான அளவிற்கு மாற்றிக்கொள்வது எப்படி என்பதுதான் பிரச்சினை.
இலங்கையில் அரசு நிறுவனங்கள் மட்டும் 2200 இருக்கின்றன. இந்தப் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பாராளுமன்றத்திற்கு முன்மொழிந்துள்ளோம். அது தற்போது செயற்படுத்தபட ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதையிட்டு நாம் மகிழ்சசி அடைகின்றோம். அதாவது முதலிலே இந்த நிறுவனங்கள் தொடர்பாக ஒரு முகாமைத்துவ கணக்காய்வு ஒன்றை (Management Audit ) செய்ய வேண்டும். ஒரே பணியை செய்வதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணமாக தெங்கு அபிவிருத்திக்கு மட்டும் மூன்று நிறுவனங்கள் இருக்கின்றன. பொறியியல் சார்ந்த பணிகளுக்கு மட்டும் அரசு சார்ந்த ஏழு நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே, முதலில் ஒரு முகாமைத்துவ கணக்காய்வைச் செய்து வெறும் பெயரளவிலான நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன என்பதை கண்டறிய வேண்டும்.
உதாரணமாக, சீமேந்து கூட்டுத்தாபனம் வெறும் பெயரளவிலான நிறுவனம், சி.ரி .பி. (இலங்கை போக்குவரத்துச் சபை) என்பது பெயரளவிலான நிறுவனம். எனக்கு தெரிந்தவரை இம்மாதிரியான நிறுவனங்கள் நாற்பது வரையில் உள்ளன. இவ்வாறானவற்றை உடனடியாக மூடிவிடல் வேண்டும். அதன் பின்னர் ஒரே பணியை செய்கின்ற நிறுவனங்களை ஒன்றொடொன்று இணைக்க வேண்டும். நிதி அமைச்சினால் தற்போது இதைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். நான் மேலோட்டமாக ஒரு ஆய்வு செய்து பார்த்தபோது சுமார் இது போன்ற 600 நிறுவனங்களை இணைத்து அவற்றின் பணிப்பாளர் சபைகளை குறைக்க முடியும். அது முதல் படி. இரண்டாவது படிதான் இந்த 15 இலட்சம் அரச பணியாளர்கள் என்னும் பிரச்சினை.
இப்போது நாம் செய்ய முனைவது யாதெனில் 5 வருட விடுமுறை தருகிறோம் வெளி நாடு போய்விட்டு வாருங்கள் என்று சொல்வது. அப்போது என்ன நடக்கும் என்றால் நன்றாக பணி செய்யக்கூடியவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிடுவர். ஆதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதற்கு நாங்கள் செய்யவேண்டியது யாதெனில், பணிகள் தொடர்பான முறையானதொரு கணக்காய்வைச் (Work Audit) செய்ய வேண்டும். அதன்படி அத்தியாவசியமான பணியாளர்கள் யார்? அத்தியாவசியமற்ற பணியாளர்கள் யார்? என்பதை அறிய வேண்டும். அத்துடன் பன்முக வேலைகளைச் செய்யக்கூடிய பணியாளர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். உதாரணமாக பியூன் வேலையையும் சாரதி வேலையும் ஒரே நபர் செய்தல் போன்றவை. ஒவ்வொரு நிறுவனமும் 3 மாத காலத்திற்கொருமுறை தத்தமது பணியாளர்கள் பற்றி தீர்மானிப்பதற்கான முறையான விஞ்ஞான பூர்வமான செயற்திட்டமொன்றை அறிமுகம் செய்தால், அத்தியாவசியமற்ற சேவையாளர்கள் யார் என்பதை இனம் கண்டுகொள்ள முடியும்.
5 வருடமல்ல 10 வருடங்களுக்கேனும் சம்பளம் இல்லாமல் வேலையில் இருந்து விலகி வெளிநாடுகளுக்கு போய் பாணியாற்றும்படி, அல்லது வேறு எங்காவது போய் தொழில் செயுங்கள் என்று அவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அல்லது வி.ஆர். எஸ் . ரீமுக்குள் எடுக்கலாம். அதை விடுத்து எல்லா அரச பணி நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படத்தல் என்பதோ, அல்லது 10 இலட்சத்துக்கு மேல் உள்ள அரசு பணியாளர்களை வெட்டிக்குறைத்து 5 இலட்சம் ஆக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளால் சமூகத்தில் பெரும் சீரழிவே ஏற்படும். பாதுகாப்புத்துறையில் உள்ளவர்களை குறைப்பதற்கு நான் முன்மொழிந்தது போன்று காலத்திற்கு உகந்த வகையில், சகலரோடும் கலந்தாலோசித்து புரிந்துணர்வோடு, படிப்படியாக ஆனால் இறுக்கமான கொள்கை அமுலாக்கத்திற்குடாக அவற்றை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
கேள்வி 13 : இன்றைய பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீளுவதற்கு சர்வதேசக் கடன்கள் மற்றும் தேசியக் கடன்கள் என்பவற்றை மறுசீரமைக்க வேண்டியது தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாக வைக்கப்படுகின்றது. அதனைச் செய்வதற்கு முனையும் போது முகம்கொடுக்க நேரிடும் முக்கிய சவால்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்? அத்துடன் இன்றைய சூழ்நியைலியல், ஐ.எம்.எப். அதாவது சர்வதேச நாணய நிதியித்திடம் போகாமல் இந்த பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாட்டை மீட்பதற்கு வேறு வழி உண்டா? அல்லது அவர்களிடம் போனாலும் அவர்கள் முன்வைக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுபடாமல் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளோடு அதை செயல்படுவதற்கு இடைவெளிகள் உண்டா? அப்படியாயின் அதற்கு தற்போது நாட்டில் உள்ள அரசியல் களச் சூழல் இடம் தருமா? உங்கள் பார்வை என்ன?
பதில் : நீங்கள் மிகவும் முக்கியமான கேள்வி யொன்றை கேட்டீர்கள். நான் முன்னர் கூறியதுபோல் எங்களுக்கு இலங்கையில் இரண்டு வகைக் கடன்கள் உள்ளன. முதலாவது, வெளிநாட்டு பணத்தில் இருந்து எடுத்த கடன் , இரண்டாவது தேசிய பணத்தில் எடுத்த கடன். அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்துடன் அதன் பணிப்பாளர் குழுமத்துடன் உரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுபோல் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் அது ஒரு வகையில் ஒருவித வெற்றிதான். அதனால் நாட்டின் பொருளாதார நிலைமையில் ஒருவித உறுதியான நிலை உருவாகும் தான். ஆனால் அதன் பின்புதான் உண்மையான சவால் என்பது வரப்போகிறது. அது என்ன சவால் என்றால், எமக்கு கடன் வழங்குபவர்களோடு நடத்தப்படும் கலந்துரையாடல்களின்போது முழுமையாக கடன் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் செயலாற்றவும் முடியாது, இலங்கைக்கு தேவையான விதத்தில் செயலாற்றவும் முடியாது.
அந்த இடத்தில் செயற்படுத்தப் படவேண்டிய கொள்கைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் எங்களுடைய திறந்த வெளிப்படைத்தன்மை, அதாவது எங்களுடைய கடன்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மை. அடுத்து சம அந்தஸ்தோடு நடத்துதல், அதாவது ஒவ்வொருவர் தொடர்பாக ஒவ்வொரு விதமாக கையாளப்பட முடியாது. இது போன்ற சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, கடைபிடிக்கப்பட வேண்டிய பல கொள்கைகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது தான் Dept Sustainable Criteria என்பது. அதாவது, சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்பட்டதன் படி எமது கடனை நாங்கள் தாங்கக்கூடிய நிலையான தன்மை பற்றியதான அளவுகோல் என்பதற்கு எம்மை இயைபாக்கம் செய்து கொள்ளுதல் என்பதாகும். அதன்படி பார்த்தால் மிகப்பெரிய சவால்கள் எதிர் காலத்தில் எம்முன்னே இருக்கின்றன.
குறிப்பாக அரசாங்கம் கூறியிருக்கிறது, எமது தேசியக் கடன்களை இப்போதைக்கு மறுசீரமைப்பு செய்ய மாட்டோம் என்று. தேசிய கடன்களை மறுசீரமிப்பதென்றால் என்ன? இலகு படுத்தப்பட்ட அர்த்தத்தில் எடுத்தால், நாங்கள் 1000 டொலர்களை கடன் வாங்கியிருக்கிறோம் என்றால், அதை 8வீத வட்டிக்கு வாங்கியிருக்கிறோம் என்றால், அதை 10 வருடத்தில் திருப்பிக் கட்ட வேண்டும் என்றால், எமக்கு மூன்று விதமான மாற்று வழிகள் உள்ளன. ஒன்று, இந்த 1000 டாலருக்கு பதிலாக நாங்கள் 500 டொலர்தான் திருபித் தருவோம் என்பது. இதை (ஹெயார் கட்) என்று நாங்கள் சொல்லுவோம். மற்றது 8 வீத வட்டி கட்ட முடியாது 2 வீதம் கட்டுகிறேன் என்பது. அதாவது (இண்டெரெஸ்ட் கட்). அடுத்தது 10 வருடத்தில் திருப்பிச் செலுத்த முடியாது 25 வருடத்தில் செலுத்தலாம் என்பது. (மசூரிட்டி எக்ஷடென்ஷன்). இது மூன்றும் தான் எம் முன்னுள்ள மாற்று வழிகள். இந்த மூன்று வழி முறைகளுக்கு ஏற்ப தான் கடன்களை மறுசீரமைப்புச் செய்யலாம்.
அதை எவ்வாறு செய்வது. ஐ.எம்.எப். சொல்லியிருக்கிற Dept Sustainable Criteria என்பதற்கு எம்மை இயைபாக்கி கொள்ளும் விதத்தில். உதாரணமாக, அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் எதிர்காலத்தில் நாங்கள் எமது தேசிய கடன்களை திருப்பிச் செலுத்துவதாக இருந்தால், அது எமது உள்நாட்டு உற்பதி பெறுமதியின் 4 வீதத்திற்கு மேல் அது இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். அவ்வாறான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுதான் செய்ய வேண்டும். தற்போது உள்ள நிலைமையை நான் பருமட்டாகச் சொல்லுகிறேன், இப்போது அந்த வெளிநாட்டு கடன்களை திருப்பிக் கொடுத்தலானது தேசிய உற்பத்தி பெறுமதிகளின் 10 வீதமாக இருக்கின்றது. அதை 4 வீதத்திற்கு குறைக்க வேண்டும். அடுத்து ஜீ.எப்.என். (GFN) அதாவது வருடத்திற்கு இந்த கடன் மீளக் கொடுத்தல் என்பதையும் சேர்த்து தான் இந்த ஜீ.எப். என் என்பது அளவிடப்படுகின்றது. தற்போதைக்கு அது எமது தேசிய உற்பத்தி பெறுமதியின் 33 வீதமாக உள்ளது. இதை 13 வீதத்திற்கு குறைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அப்படி செய்வதாயின் கட்டாயமாக இந்த தேசிய கடன்களின் மீது கையை வைத்தே ஆக வேண்டும்.
தேசிய கடன்கள் என்பது என்ன? இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பன அரசாங்கத்திற்கு கொடுத்த கடன்கள். அவை சிறு கடன் தொகைகள் என்றா எண்ணுகிறீர்கள். அவ்வங்கிகளுடைய மொத்த சொத்துக்களின் 57 வீதத்தை அரசாங்கத்திற்கு கடன் கொடுத்துள்ளார்கள். இந்த நிலைமைக்கு முழுப் பொறுப்பும் எடுக்க வேண்டியவர்கள் தான் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகிய இருவரும். இது ஒரு படு பாதகச் செயல். அதாவது இந்நாட்டு 14 மில்லியன் மக்களின் சேமிப்பு வைப்பீடுகளில் கை வைக்கும் விதத்தில் இந்த நாசகார வேலையை ராஜபக்சக்கள் செய்திருகிறார்கள்.
அது மட்டுமன்றி இந்த நாட்டின் தொழிலாளர்களான 26 இலட்சம் மக்களின். ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். என்பதிலும் இவர்கள் கை வைத்துள்ளார்கள். இவற்றை மறுசீரமைப்புச் செய்வது என்பது, மக்கள் மத்திய வங்கியின் பிணைமுறிகளில் போட்ட பணம், வங்கிகளின் பிணைமுறியில் போட்ட பணம், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். என்பவை பிணைமுறிகளில் போட்ட பணம் என்பவற்றை வெட்டிக்குறைத்தல் என்பதாகும்.
எனவே நான் நினைக்கிறேன் 70 வீதமானவர்கள் மீது ஒரே நேரத்தில் பாரிய அடி விழப் போகின்றது. அதனால்தான் அரசாங்கம் இதனைச் செய்யாமல் இருக்கிறது. ஆனால் இப்போது International Sovereign Bond (ISB) இந்த வெட்டை செய்யும்படி கோரி உள்ளார்கள். இது மிகப் பெரியதொரு சவாலாகும். இப்போது பொது வெளியில் பேசுகின்ற சுவையான பேச்சுகள் போன்ற இனிப்பான விடயமல்ல. பெரிய சவால் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அடுத்து வருகின்ற சவால்தான், நாங்கள் எப்படியாவது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எல்லாம் அடிபணிந்து இந்த மீள்சீரமைப்பு ஆவணங்கள் எல்லாம் கையொப்பமிட்டு முன்னோக்கி செல்கிறோம் என்று வைப்போம். அதற்குப் பின்னர் அவற்றின்படி நாம் கடன்களை திருப்பிக் கட்ட வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் கடன் மீளச் செலுத்துவதில்லை. அதனால் மாதத்திற்கு 600 மிலியன் டொலர் வரை மீதி கையிருப்பில் இருக்கின்றது. அதனால் நாங்கள் பெரிய சுதியில் இருக்கின்றோம். டொலர் தருவதற்கு ஒருவரும் இல்லாவிட்டாலும் ஒரு சுதியில் இருக்கின்றோம். ஆனால் பின்னர் கடன் மீளச் செலுத்த வேண்டிய சூழ்நிலை வருகின்றபோது அதனை செலுத்துவதற்கு பணம் எங்கிருந்து வரப்போகிறது?
இன்னும் பல தசாப்தங்களுக்கு எம்மால் சர்வதேச நிதிச் சந்தையில் எங்குமே ஒரு சதத்தையேனும் கடனாகப் பெறுவதற்கான நிலைமை இல்லை என்றே நான் நினைக்கின்றேன். இந்த மாதிரியான நிலைமகளில்தான் எமது இறைமை உட்பட இன்னோரன்ன பல விஷயங்களுக்கு பாரிய சவால்கள் வரக்கூடும். உதாரணமாக சில நாடுகள் ஆர்ஜண்டீனா, கிரீஸ் போன்ற நாடுகள், அந்த கடன் வழங்குனர்கள் மற்றும் ஐ.எம்.எப். என்பவற்றுடன் வெற்றிகரமாக பல்வேறு ஒப்பந்தங்களை செய்து முன்னோக்கிப் போயும்கூட, கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் இயலாமை நிலைக்குச் சென்றுள்ளன. மீண்டும் கையறு நிலைக்குப் போயுள்ளன. பன்முக இயலாமை நிலைக்கு (Multiple Default Situation) போயுள்ளன. அவ்வாறான நிலைமைக்கு இலங்கையும் செல்வதற்கு இடமுண்டு.
எனவே இந்தப் பயணமானது நினைக்கிற அளவுக்கு சுமுகமான பயணமல்ல. ஆனாலும், மத்திய வங்கியும், நிதி அமைச்சும், ஜனாதிபதியும் இணைந்து மேற்கொண்ட மறு சீரமைப்பு நடவடிக்கை காரணமாக, இலங்கை ஒரு குறைந்த அளவான சமனிலை தன்மையை (டழற டநஎநட நஙரடைiடிசரைஅ) அடைந்துள்ளது என்பதை நாங்கள் பாசாங்கு செய்யாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நீண்ட கியூ வரிசைகள் இல்லை, மக்களிடம் பாரிய அமைதியற்ற தன்மை இல்லை, மின் வெட்டு நேரத்தில் குறைப்புக்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், இந்தப் பிரச்சினையை நிலையான திசையை நோக்கி தீர்ப்பதற்கு இருக்கும் திசை வழி என்பது மிகக் கடுமையானது.
அடுத்து நீங்கள் கேட்டீர்கள் ஐ.எம்.எப். இடம் போகாமல் இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு வேறு வழிவகை ஏதும் உண்டா என்று. குறிப்பாக சில நாடுகள் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் 1997ம் ஆண்டு கால கட்டத்தில் எமது நாட்டின் அளவு மோசமாக அல்லாவிட்டாலும் அவர்களுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. அந்த நெருக்கடிகளின் போது மலேசியாவின் மஹதிர் மொஹமட் ஐ.எம்.எப். அல்லாத வழிமுறை ஒன்றைக் கையாண்டு அதிலிருந்து மீண்டார். தாய்லாந்து ஐ.எம்.எப். உடன் சேர்ந்து போய் அந்த நிலையில் இருந்து மீண்டது. எனவே, ஐ.எம்.எப். அல்லாத வழி முறைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு பரந்த மக்கள் ஆதரவும், அனுமதியும் வேண்டும். பலமான அரசாங்கமும் வேண்டும்.
அதேபோல் நீங்கள் கேட்ட மிகச் சரியான கேள்விதான், இந்த அரசாங்கத்திற்கு அந்த மக்கள் ஆதரவும் அனுமதியும் உண்டா என்பது. இவர்களுக்கு மக்களின் ஆதரவும் அனுமதியும் இல்லை. பொது மக்கள் பாரிய கோபத்தில் இருக்கிறார்கள். எனவே ஜனாதிபதி உடனடியாகச் செய்ய வேண்டியது யாதெனில், எதாவது வகையில் அவரின் செயற்பாடுகளுக்கு பரந்த பொது மக்களின் அனுமதியைப் பெறுகின்ற வகையிலான நடவடிக்கைகள் சிலவற்றை செய்தலாகும். வெறுமனே பொருளாதார சீரமைப்பு செயற்பாடுகளினால் பலாபலன்களை பெற்று மக்கள் திருப்திப்பட்டு மகிழ்வார்கள் என்பதில்லை. மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அமைதியிழந்து இருக்கிறார்கள் என்றால், அந்த உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வழியும் இல்லை என்றால் இந்த பொருளாதார மறு சீரமைப்பு நடவடிக்கைகள் தோல்வி காணுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிப்பதர்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த நேர்காணலின் இரண்டாவது பாகத்தில் இலங்கையினுடைய இனப்பிரச்சினை அதனுடைய ஊற்றுமுமூலம் அதற்கான தீர்வு என்ன என்கின்ற விடயங்களை திரு. சம்பிக்க ரணவக்க அவர்களிடம் வினவவுள்ளோம். எதிர்பார்த்திருங்கள். நன்றி
No comments:
Post a Comment