Saturday, February 18, 2023

ரணில்-மொட்டு அரசு பலமிழந்துள்ளது என்பதை நிரூபிக்க மக்களின் வியர்வையிலிருந்து 30 பில்லியன் பணத்தை செலவிட வேண்டுமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் அனைத்தும், நடப்பு அரசாங்கத்தை விடுத்து ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சமூகம் சார் குழுக்களிடையில் மிகவும் முனைப்புடன் முன்னெடுக் கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதற் கிடையில் அரசு தேர்தலை பிற்போட முயற்சிப்பதும் அதனை எதிர்கட்சியும், இன்னும் தமது அரசியல்சார் மக்கள் ஆதரவை பெருக்கிக்கொள்ள முயற்சிக்கிற சில அரசியல் குழுக்களும் மிகக் காட்டமாக விமர்சிப்பதும், அவர்களின் கயிறுழுத்தல்களிடேயே கூட்டத்தோடு ஓடுகின்ற மாடுகளைப் போலவே மக்களில் பலரும் தேர்தல் கட்டாயம் வேண்டுமென கூறிக்கொள்வதையும் காணக்கிடைக்கின்றது.

மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கும் அரசிற்கு எதிராக அமைந்த நிலையில், அதனை ஏதோ பாரிய வெற்றியாக கொண்டாட ஆரம்பித்தார்கள் இந்த அதிக முட்டாள் வாக்களர்களை கொண்ட மக்கள் கூட்டம், இவ்விடத்தில் கடந்த காலங்களில் இதே நீதித்துறை எடுத்த அநீதியான பல முடிவுகளையும் நினைவில் கொள்க,

விடயத்திற்கு வருகின்றேன், ஜனநாயகத்தின் பெயர் கொண்டு இந்த உள்ளூராட்சி தேர்தல் நிச்சயமாக வேண்டும் என்று கூறிகொள்கின்ற அனைவரிடமும் கேட்க வேண்டிய ஒரே வினா.. இந்த உள்ளூராட்சி என்கிற மண் கோட்டையை வைத்துக் கொண்டு எதனை கிழிக்க போகின்றீர்கள்? தேசிய ரீதியில் அதிக சபைகளை வைத்திருக்கின்ற மொட்டு மற்றும் ரணில் அணி நாட்டில் பலமிழந்துதுள்ளது என்பதை நிரூபணம் செய்வதைத் தவிற வேறு எதனை நீங்கள் சாதிக்கப் போகின்றீர்கள்?

சரிவடைந்திருக்கின்ற நாட்டின் பொருளாதாரதிற்கு யார் காரணம் என்பதை தாண்டி அதனை மீள கட்டி எழுப்ப வேண்டிய தேவை குடிமக்கள் அனைவருக்கும் இருக்கின்ற இக்காலப்பகுதியில் பல பில்லியன் ரூபாய்க்களை கொட்டி மந்தமான செயற்பாட்டு போக்கினை கொண்ட ஒரு உள்ளூராட்சி தேர்தலை நடாத்தித்தான் ஆக வேண்டுமா?

தேர்தலை நடாத்துவதற்காக மட்டுமே மக்களின் பணத்திலிருந்து 10 பில்லியன்களுக்கும் அதிகமான பணத்தை அரசு செலவிட உள்ளது.

அதுபோக தேர்தல் நடாத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகள் தேர்வு செய்யப்படுகின்ற வேளையில் நாடு முழுவதும் உள்ள 341 சபைகளில் இருந்து 8700 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். இவர்களுக்கென மாதமொன்றிற்கு 174,000,000 ரூபாய்களும் அதே சபை நான்கு வருடங்கள் நீடிக்குமாயின் 8,352,000,000 ரூபாய்களும் மேலும் சபையின் ஆட்சிக் காலம் ஐந்து வருடங்களாக நீடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து வருடங்களும் வழங்கப்படும் சம்பளம் மட்டுமே 10,440,000,000.00 ரூபாய்க்களுமாக மக்கள் பணத்திலிருந்து செலவு செய்யப்படவுள்ளது.

மேற்படி தேர்தல் நடாத்தப்படாதவிடத்து, எதிர்வரும் மார்ச் மாதத்துடன் இருக்கின்ற சபைகள் கலைந்து விஷேட ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கைகளில் சபைகள் வருகின்ற போது இவர்களால் செய்யப்பட்ட வேலைகளையும் விட அதிக மக்கள் சேவைகளை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளது.

ஆக மொட்டு மற்றும் ரணில் தரப்புகள் நாடளாவிய ரீதியில் பலமற்றுப்போயுள்ளது என்பதை நிரூபிக்க மக்களின் வியர்வைகளிலிருந்து ஏறத்தாழ 30 பில்லியன் ரூபாய்க்களை இந்த தேர்தலுக்காக செலவிட தயாராகின்றீர்கள். இங்கு குறிப்பிடப்பட்ட செலவீன விபரங்களானது சபை உறுப்பினர்கள் எதிர்காலத்தில் செய்யப்போகின்ற ஊழல், திருட்டு மற்றும் மோசடிகளை தவிர்த்து என்பதை கவனத்தில் கொள்க, இதுவே பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் ஒரு மாற்று சக்திக்கான ஒரு களமாக அதனை வரவேற்றிருக்கலாம். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை, இந்த தேர்தல் SJP மற்றும் NPP ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே அளப்பெரிய நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கப்போகின்றது அதற்கான மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றுதான் இந்த தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்கிற பிரச்சாரம். தேர்தல் முடிந்ததும் வரவிருக்கின்ற பொருட்களின் விலையேற்றத்திற்கு தயாராவோம் வாருங்கள்.

𝗛𝗮𝗯𝗹𝘂𝗹𝗹𝗮𝗵 𝗕𝘂𝗵𝗮𝗿𝘆

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com