ரவூப் ஹக்கீம் இருக்கும் வரை அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைமை பதவி முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவருமான அப்துர் ரஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு அங்குரார்ப்பன நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான ஜுனைதீன் மான்குட்டி இன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் முன்னாள் நிருவாக உத்தியோகத்தருமான உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அப்துர் ரஸாக் (ஜவாத்) தொடர்ந்தும் தனதுரையில்,
அம்பாறை மாவட்டத்தின் மத்திய குழுவின் தலைவராக, உறுப்பினர்களாக இருக்கவேண்டிய உரிமை உள்ளவர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரம் தான் என்றும் அவர்களைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்த ஒரே ஒரு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டும்தான். இதனூடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுடைய உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வீட்டினுடைய உரிமை அந்த வீட்டினுடைய தலைவருக்கு, தலைவிக்கு அல்லது அந்த வீட்டினுடைய ஒரு மகனுக்கு வழங்கப்பட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்கு அந்த உரிமை வழங்கப்பட முடியாது. பக்கத்து வீட்டுக்காரன் என்றாலும் பரவாயில்லை; மு.கா.வில்கண்டியை சேர்ந்த ஒருவருக்கு அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி கடந்த 23 வருடங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்றால் அது பிழை. அப்பதவியை இன்னும் கொடுக்க முடியாத, கொடுப்பதற்கு நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருக்கின்றது.
ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அப்படியானதல்ல, பிரதேசத்தில் உள்ள மக்களே அப்பதவிக்கு வர வேண்டும் என்ற ஜனநாயக கோட்பாட்டில் உறுதியாக இருந்து இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இன்று நாம் இந்த மத்திய குழுக்களின் நிர்வாகங்களை தேர்வு செய்து கொண்டிருக் கின்றோம்.
முஷார்ரப் எம்.பி ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம். ஆனால் சாய்ந்தமருதில் சலீம் அவர்கள் எங்களது தலைவருடன் பேசிய பேச்சுக்கு இணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு இருந்தால் இன்று இந்த கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கப் போகின்றவர் சலீம் மாத்திரம்தான். அப்போதைய பொதுத் தேர்தலில் இருந்து நான் அப்போது விலகி இருப்பேன். இந்த விடயத்தை குழப்பியவர்கள் இதனை மறுப்பதற்கு முடியாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் எதற்கும் அஞ்ச மாட்டார். தயங்க மாட்டார், ஓடி ஒளிய மாட்டார். அவரை எப்படியும் சிறையில் மாட்டி, சிறைக்குள் கொலை செய்ய வேண்டும் என்ற அளவு முயற்சியை மஹிந்த குடும்பம் செய்தது. ஆனால் அவரோடு இறைவன் இருந்தான். இறைவன் துணையோடு அவர் இப்பொழுது வெளியில் வெளியேறி இருக்கின்றார். பாராளுமன்றத்தில் தைரியமாக தற்போது பேசுகின்றார். எதிர்வரும் 23 ஆம் தேதி அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி இது சம்பந்தமாக ஆராய இருக்கின்றார். இதற்கான முயற்சியை அவர் செய்துள்ளார். ஏதாவது ஒரு விடயத்தை மக்களுக்காக செய்கின்ற விடயத்தில் றிஷாட் பதியுதீன் வல்லவர் என்றும் கூறினார்.
கூட்டத்திற்கு கெளரவ அதிதிகளாக கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், உச்சபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் மகளிர் அமைப்பு முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.அஷ்ரப்கான்
No comments:
Post a Comment