வன்முறையை தூண்டக்கூடியதும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக்கூடியதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கலாநிதி சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்துரைத்துள்ள தேரர், தம்ம பதத்தின் 67 ம் பதத்தினை (எந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம்நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.) வாசித்திராத , வாசித்து புரிந்து கொள்ள போதிய அறிவற்ற நபர்களுக்கு புத்தரின் போனைகளை போதிப்பது குற்றங்களாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த ஒமல்போ சோபித தேரர் ராஜபக்சக்கள் விகாரைகளுக்கு சென்றாலும் அவர்கள் பௌத்தர்கள் அல்லவென்றும் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இந்நாட்டில் ஒரு சொட்டு பால் இல்லாதபோது அவர்கள் திருப்பதியிலுள்ள லிங்கத்திற்கு பால்வார்க்க செல்கின்றார்கள் என்று சாடியுள்ளார்.
புத்தரின் போதனைகளை இந்த நாட்டில் போதிப்பது எவ்வகையில் குற்றமாகின்றது என பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியான ரிலந்த வலலியத்தவிடம் ஊடகம்மொன்று கருத்துக்கேட்டபோது, இது வணக்கத்திற்குரிய ஒமல்பே சோபித தேரருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அல்லவென்றும் ஒட்டுமொத்த மகா சங்கத்தினருக்கும் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆட்சியாளர்கள் மகா சங்கத்தினருக்கு அச்சமூட்ட முற்படுவார்களானால், ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை விட தனக்கு மாற்று வழியில்லை எனக்கூறியுள்ளார் சட்டத்தரணி ரிலந்த வலலியத்த.
ஆட்சியாளர்களுக்கும் மகா சங்கத்தினருக்குமிடையே ஏற்பட்டுவரும் முறுகலானது பெரும் எழுச்சி ஒன்றுக்கு வழிவகுக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தேரர்கள் இந்நாடு பௌத்த போதனைகளின் அடிப்படையில் ஆட்சி செய்யப்படவேண்டுமென்றும், கொள்ளையடித்தலும் , அதனை மக்கள் அனுமதித்தலும் நிர்வாணத்துக்கான வழியில்லை என போதிக்க ஆரம்பித்திருப்பது மக்களின் மனங்களில் , அவர்களின் வாழ்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என பலமாக நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment