மக்கள் பக்தியில் உயர்ந்த கோபுரம்! றொபேர்ட் ன் படுகொலையும் ஒரு கோழையின் குமுறலும்..
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் - வரதர் அணி பிரதித்தலைவராகவும், யாழ் மாநகர சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டுக்கொண்டிருந்த தோழர் றொபேர்ட் என அழைக்கப்பட்ட தம்பிராஜா சுபத்திரன் இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர் 2002 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி காலை 06.15 மணிக்கு புலிகளின் கொலைப்படைகளில் ஒன்றான சினைப்பர் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
அன்னாரின் இறுதிச்சடங்கில்கூட பங்கு பற்ற முடியாது நின்ற தமிழ் கோழை என தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நபர் ஒருவர் றொபேர்ட்டின் நினைவாக டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு எழுதிய மடல் ஒன்று மீண்டும் அவர் நினைவாக..
றொபேர்ட் இப்போது எம் முன் இல்லை. ஜூன் 14ம் திகதி காலை மொட்டை மாடியில் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணியைச் சேர்ந்த றொபேர்ட் எனப் பலராலும் அறியப்பட்ட சுபத்திரன் உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கையில் கொலையாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எமது நிறுவனத்துக்கு இராணுவ உதவி தேவைப்பட்டபோது றொபேர்ட் எனக்கு அறிமுகமானார். வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு இவ்வாறான பல உதவிகளை ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் என்பவையே செய்யக்கூடியவையாக இருந்தன. செய்து கொண்டிருந்தன. அரசியலுக்கப்பால் மேற்படி கட்சிகளின் உதவிகளையும் நன்மைகளையும் தமிழ் மக்கள் பெற்றிருக்கின்றனர். ஆனால் பின்னர் அவர்கள் அதனை மறந்து மௌனிகளாகிவிடுகின்றனர்.
தனது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு இலட்சியவாதியாகத்தான் றொபேர்ட்டை நாம் கண்டோம். எனக்கு உதவுவதற்காக அவர் செயற்பட்டவிதம் அவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவர் என்று காட்டியது. தன்னலமற்று, பிறருக்கு உதவுவதில் நிறைவு காண்பவராக இருந்தார். ஜனநாயக கூட்டமைப்பிற்கு புத்துயிரளிக்க யாழ் மாநகர சபையின் செயற்பாடுகளில் தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்து உள உறுதியுடன் செயற்பட்டமை பல வழிகளிலும் அர்ப்பணிப்போடு தமிழ் மக்களுக்குச் சேவை செய்தமை என்பன றொபேர்ட் தொடர்பான எனது கணிப்பீடுகள் சரியானவை என்பதை பறைசாற்றின.
வரலாற்றில் ஏற்பட்ட விபத்தால் 1980 களின் முற்பகுதியில் ஏனைய இலட்சியம் நிறைந்த தமிழ் இளைஞர்களைப் போல றொபேர்ட்டும் தன்னை ஒரு விடுதலை இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். ஆயுத வல்லாதிக்கம் இல்லாத அந்த இயக்கத்தை தமிழ் பாசிச அரசியல் பலி கொண்டது. அந்த இயக்கத்தில் இருந்தவர்களில் சிலர் ஆதிக்கமுடையோருடன் இணைய, துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட பலர் பழிவாங்கப்பட்டனர். வேறு பலர் வெளிநாடுகளுக்குச் சென்று தப்பி வாழும் இலகுவான வழியை தேர்ந்nடுத்தனர்.
பல போராளிகளின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த றொபேர்ட் இந்த வழிகள் எதனையும் தேர்வு செய்யவில்லை அவர்களைக்கைவிட அவர் தயாராக இல்லை. நாட்டில் இருந்து தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கான அரசியல் இடைவெளியை நிரப்பவும் தன்னை நம்பியவர்களைக் கைவிடாதிருக்கவும் தீர்மானித்தார்.
இது காலபோக்கில் அவருக்கும் அவரைப் போன்ற ஏனையவர்களுக்கும் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராணுவத்தினரைச் சார்ந்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியது. இது ஒரு அவல நிலையே. புலிகளின் கொலைப் பயமுறுத்தலிலிருந்து தப்ப இராணுவப் பாதுகாப்பைப் பெற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படும் இலட்சியவாதிகளுக்கு எதிரானது தமிழ் அரசியல்போக்கு.
றொபேட்டின் தமிழர் நலன் சார்ந்த ஆற்றலையும் நியாயபாட்டையும் மறுத்தொதுக்க முடியாத அதேசமயம் தமிழ் தேசியத்தின் அழுகல் நோய்த் தன்மையைத் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் பின்வருமாறு வெளிப்படுத்தினார்.
ஆம் யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொருவரும் சொல்வார்: றொபேர்ட் நல்லவர், மக்களுக்குப் பல்வேறு வழிகளிலெல்லாம் உதவிகள் புரிந்தார் என்பதை. ஆனால் ஏன் இவர் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணியில் இருந்தார்?
சொரணையற்ற அந்தப் பதில் இவ்வாறான கொலைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் எப்படித் தங்கள் பதவிகளுக்காகப் பயன்படுத்தி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும். நான் றொபேர்ட்டை கடைசியாக பார்த்தபோது அவரது நடவடிக்கைகள், அசைவுகள் யாவும் கட்சி அலுவலகங்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தன. இந்த முடக்கத்தால் நான் முதலில் பார்த்த மெல்லிய உயரமான றொபேர்ட் உடற்பருமன் அதிகரித்துக் காணப்பட்டார். வேட்டையாடப்பட்ட ஒரு மனிதனாக, தனிமையில் அலையவிடப்பட்ட அவரது வாழ்க்கை, மனைவி, குழந்தைகள் போன்ற சுகங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. அவருடன் நான் உரையாடிய வேளைகளில் என்னிடம் இல்லாத துணிகர இலட்சிய உள்ளத்தை அவரிடம் இனங்கண்டேன். வெகுவிரைவில் அரவது தந்தையைக் கொன்றவர்களாலேயே இவரும் கொல்லப்பட போகிறார் என்றுணர்ந்தேன். என்னையறியாமல் இரு சொட்டுக் கண்ணீர் சிந்தின. உடனே அவரும் அதைக் கவனிக்காதது போல் இருந்துவிட்டார். ஆனால் அப்படியான அந்தத் தருணங்களில் அவரை விரும்புவதற்கும், அவரிடமுள்ள மனிதத்துவத்தை இனங் காணவும் பலர் இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தால் துக்கம் கவிந்த இந்த நேரத்தில் அது என் இழப்பைச் சற்றேனும் ஈடு செய்யும்.
றொபேர்ட் எனக்கு எவ்வாறு உதவினார் என்பதை விபரித்து ஒரு நீண்ட புகழுரை எழுதவே விரும்பினேன். எனது பெயரைக் குறிப்பிடவும் விரும்பினேன். ஆனால் அது எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கடுமையாக எச்சரித்து எனது குடும்பத்தவர்கள் தடுத்தனர். என்னில் தங்கி வாழும் மனைவி பிள்ளைகள் எனக்குண்டு. றொபேர்ட்டின் பூதவுடல் கனத்தையிலுள்ள ஒரு மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். அவரது ஒரேயொரு சகோதரியும் கனடாவிலிருந்து வந்திருப்பதாக அறிகிறேன். மலர்ச்சாலைக்கு சென்றாவது றொபேர்ட்டுக்கு எனது அஞ்சலியை செலுத்த ஆசைப்பட்டேன்.
ஆனால் எனது குடும்பத்தவர்கள் மிகுந்த பயத்தோடு அதற்கும் மறுத்துவிட்டனர். அங்கு செல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறும்படி த.வி.கூ முக்கியஸ்தர்களிடமும் என் குடும்பத்தவர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்கும் றொபேர்ட் மீது மதிப்பும் அன்பும் இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருந்த றொபேர்ட்டின் பூதவுடலுக்கு அஞ்சலி செய்யப் போகவில்லை. அப்படி போவதன் மூலம் நானும் கொலையாளிகளினால் கவனிக்கப்படும் ஒருவனாகிவிடுவேன் என்று அந்த முக்கியஸ்த்தர்கள் என்னை எச்சரித்தனர். அபாய விளையாட்டு வேண்டாம் என்று உணர்த்தினர்.
நானும் இங்குள்ள சாதாரணர்களில் ஒருவன். கோழை என்பதை ஒப்புக்கொள்கிறேன். உயர்ந்த கோபுரம் போன்ற றொபேர்ட்டின் துணிகரமான மக்கள் பக்தி, இளமை நிரம்பிய இலட்சியவாதம் ஆகியவற்றுக்கு முன்னால் மிகக் குறகியதும் சாதாரணமானனுமான கோழை நான். தனது மரணத்தினால் இந்தத் தமிழ்ச் சமூகமே எப்டியாக இருக்கிறது என்றும், எப்படி மரணத்தில் கூடத் தன் நண்பர்களைக் குறிப்புக்காட்ட முடியாத சமூகமாக அச்சத்தில் குமைந்து கிடக்கிறது என்பதையும் றொபேர்ட் காட்டிச் சென்றுள்ளார்.
ஆனால் அவரது சகோதரிக்கு குடும்ப அங்கத்தவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். அவரது மரணச் சடங்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் அங்கத்தவர்கள் அல்லாதோர் மிகச் சொற்ப எண்ணிக்கையாளராக இருக்கலாம். ஆனால் உண்மையில் றொபேர்ட் எதற்காக போராடினார் என்பதை மதிக்கும், ஏற்றுக் கொள்ளும் அவரது மனித நேயத்தை ஏற்று உணர்ந்த பல கோழைகள் இருக்கின்றனர். ஒரு நாள் அவர்கள் எமது நண்பன் றொபேர்ட் என்று கூறும் சூழல் நிச்சயம் வரும். தன்னை படைத்தவரை றொபேர்ட் சந்திக்கும் போது ஏனைய தமிழ்ச் சமூகத்தவர்களிலும் பார்க்க மிகுந்த கருணையுடனேயே கணிக்கப்படுவார்.
தமிழ்க் கோழை
Daily News
21.06.2003
(2003 ஜூன் 21ம் திகதி Daily News பத்திரிகையில் வாசகர் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தின் தமிழாக்கம்)
0 comments :
Post a Comment