ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 01 - பிறேம்குமார்
சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பெரும் புதூரில் இனவாதிகளால் கொல்லப்பட்ட தன் தாய் இந்திராவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வரும் வழியில் இடைமறித்து மாலையிட்ட கூட்டத்தின் நடுவில் இருந்த தற்கொலை படை பெண் தனுவால் கொல்லப்பட்டார் ராஜிவ். அவருடன் 10 பொது மக்களும் 6 காவலர்களும் உயிர் இழந்தனர், பலர் காயமுற்று உறுப்புகளை இழந்து கதறினர், ராஜிவ் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பபட்டது.
காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிய பின்னர் இறந்தவர்கள் உடல்களும் உடமைகளும் சேகரிக்கப்பட்டது. அப்பொழுது கேமிராமேன் ஹரிபாபு உடலும் அவனுடன் cannon camera வும் கிடைத்தது குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில், பல பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்து ஓடியவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான செருப்புகள், ஹேன்ட்-பேக்கள், பைகள் என்று தரையெங்கும் பல பொருட்கள் சிதறிக் கிடந்தன.
அந்தப் பொருட்களைப் போல ஒரு பொருளாகவே, இந்த கெனான் காமெராவும், பத்தோடு பதினொன்றாக சேகரிக்கப்பட்டது. எவ்வித உயர் பதவியிலுமில்லாத சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த காமெரா பத்திரப்படுத்தப் பட்டது. இந்த காமெராவுக்கு உள்ளேயுள்ள பிலிம் ரோலில்தான், மனித வெடிகுண்டாக வந்து ராஜிவ் காந்தியைக் கொன்ற பெண்ணின் உருவமும், அவருக்கு துணையாக வந்திருந்த மற்றையவர்களின் உருவங்களும், குண்டு வெடிப்பைத் திட்டமிட்டுக் கொடுத்தவரின் உருவமும், வெவ்வேறு பிரேம்களில் பதிவாகியிருந்தன. இந்த ஒற்றைக் காமெரா மாத்திரம் புலனாய்வாளர்களின் கைகளில் கிடைக்காதிருந்தால், ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பது, இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும்!
கேமிராமேன் ஹரிபாபு எடுத்த புகைப்படத்தை பற்றிய முக்கியதுவத்தை தமிழக காவல்துறை அறியும் முன்பே ஹிந்து பத்திரிக்கை அறிந்து இருந்தது. பிரிண்ட் போட கொடுத்த இடத்தில் இருந்து கைப்பற்றி அதை மே 23 ல் வெளியிட்டது. தமிழக காவல்துறையினரிடமிருந்த 10 போட்டோக்களின் நெகட்டிவ் பிலிம் ரோல்களையும், போட்டோ எடுக்க உபயோகிக்கப்பட்ட கேமராவையும் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ. தமக்குக் கிடைத்த போட்டோக்களை சி.பி.ஐ. ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கியது.
முதலாவது போட்டோவில், லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி( ராஜிவ்வை சந்திக்க வந்து உயிர் விட்டவர்கள் ) ஆகியோருக்கு நடுவே, யார் என்று அடையாளம் காணப்படாத பெண், நின்றிருந்தார். மனித வெடிகுண்டு என்று ஹிந்து பத்திரிகையால் சந்தேகம் கிளப்பி விடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சற்று தொலைவில், பைஜாமா-குர்தா அணிந்த மற்றொரு நபர் நின்றிருந்தார். போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் இறந்துவிட்டனர். ஆனால், அதில் நின்றிருந்த நான்காவது நபரான ஆண், சம்பவம் நடந்த இடத்தில் இறந்து போனவர்கள் பட்டியலில் இல்லை. காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அவர் காணப்படவில்லை. யார் அந்த நபர்?
பிலிம் ரோலில் இருந்த முதலாவது போட்டோவே, இரு முக்கிய மர்மங்களை ஏற்படுத்தி விட்டது. லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே நின்றிருந்த பெண், மற்றும் அதே போட்டோவில் இருந்த ஆண் ஆகிய இருவரின் அடையாளமும் தெரியவில்லை என்பது முதலாவது மர்மம். அந்த ஆண், கொல்லப்பட்ட மர்மப் பெண்ணுடன் தொடர்புடைய நபரா? இது, இரண்டாவது மர்மம்.
கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த முதலாவது போட்டோவை ஹோல்டில் வைத்துக்கொண்டு, மற்றைய ஒன்பது போட்டோக்களையும் ஆராய்ந்தது சி.பி.ஐ.
இரண்டாவது போட்டோவில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் காட்சியளித்தனர்.
மூன்றாவது போட்டோவில் சினிமா இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் ஆதரவாளரும், காண்ட்ராக்டருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மூன்று போட்டோக்களும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தன.
நான்காவது போட்டோவிலிருந்து எட்டாவது போட்டோ வரையில், ராஜிவ் காந்தி வருகை, பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தது, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ராஜிவ் காந்திக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தது ஆகியவை காணப்பட்டன.
ஒன்பதாவது போட்டோவில், ராஜிவ் காந்தியிடம் கோகிலவாணி (கோகிலா) கவிதை வாசித்துக் காண்பிப்பது பதிவாகியிருந்தது. அது நடைபெற்ற ஓரிரு நிமிடங்களிலேயே குண்டு வெடித்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
அந்த வகையில், ராஜிவ் காந்தியை கடைசியாக உயிருடன் எடுக்கப்பட்ட போட்டோ, அந்த ஒன்பதாவது போட்டோதான்! இந்த போட்டோவில், பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் பெண், ராஜிவ் காந்தியை நோக்கி நகர்ந்து வந்தது தெரிந்தது.
பத்தாவது போட்டோ, குண்டுவெடிப்பையே காட்டியது.
ராஜிவ் காந்தியும், மற்றையவர்களும் உயிரிழந்த அந்த விநாடி, ஹரிபாபுவின் கேமராவில் பத்தாவது போட்டோவாகப் பதிவாகியிருந்தது. அந்த விநாடியில், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஹரிபாபுவும், அவரது கேமரா பதிவு செய்த அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.
மறுபுறம் உயிர் இழந்த ஹரிபாபு வீட்டில் விசாரித்தால் எதாவது உண்மை கிடைக்குதா என விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். இந்த வழக்கின் முதல் முடிச்சு ஹரிபாபு வீட்டில் அவிழும் என அப்பொழுது அவர்களுக்கு தெரியாது.
ராஜிவ் படுகொலையின் பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்.இன்ஸ்பெக்டர் அனுசியா பேட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த படுகொலை பற்றிய புரிதல் ஏற்பட உதவும்
தொடரும்...
0 comments :
Post a Comment