யார் அவர், அவர் என்ன செய்கிறார்...? Who is she, What is he doing...?
பெயரால் அவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். இலங்கையில் ஐந்து முறை பிரதமராக இருந்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். மிக விரைவில் அவர் ஆறாவது பிரதமராகி தனது உலக சாதனையை தானே முறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
2020 பொதுத் தேர்தலில் இலங்கையின் முதலாவதும் மிகப் பெரியதும் என்று அறியப்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை சுடுகாட்டை நோக்கி வழிநடத்திய புகழிழந்த தலைவர் என்ற கண்டனத்துக்கு உள்ளாகிய தலைவரும் ரணில் விக்ரமசிங்கவே ஆவார். .
ஏதோ தட்டுத்தடுமாறி தேசியப் பட்டியல் மூலம் தேர்தல் முடிந்து சில மாதங்கள் கழிந்த பின்னரே பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கொண்டார் அவர். அவரது புதிய டீல் பற்றிய சில விஷயங்களை பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ரணில் விக்ரமசிங்கதான் ஆசியாவிலே இருக்கும் மிகத் திறமையான அரசியல் டீல்காரன் என்பது அவரை நன்கறிந்த பலருக்கும் தெரிந்த விடயம். பசில் ராஜபக்சவும் ஒரு நல்ல டீல்காரன் தான். ஆனால் வித்தியாசம் யாதெனில் அவருடைய டீல்கள் எவ்வளவு டாலர்கள் கைமாறுகின்றது என்பதைப் பொறுத்தே நிறைவேறும். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் டீல்கள் அதிகாரத்திற்காகவே நிகழும். அவரது புதிய டீல் ஆனது பலருக்கு தெரியாது ஆனால் மிகவும் ஆபத்தான டீல் ஆகும்.
இக்குறிப்பிட்ட டீல் இல் நான்கு தரப்பினர்கள் உள்ளனர். அமெரிக்கா, இந்தியா, மிலிந்த மொரகொட மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளடங்குவர். இந்த நகர்வுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. இந்த டீலுக்கான நகர்வு முதலில் ஆரம்பமானது 2002ம் ஆண்டிலாகும். அப்போது அதை Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) என்ற பெயரில் அது அழைக்கப்பட்டது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு இதனைச் நோக்கி செயற்படுவதற்கு போதிய காலம் அன்று இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா தன்னிடமிருந்த அதிகாரத்திக்கொண்டு அவரது அரசாங்கத்தை 2004 கடைசியில் கலைத்து தேர்தலொன்றை நடத்தினார். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சிறிதளவான ஆசனங்களின் எண்ணிக்கையில் தோல்வியடைந்ததால் எதிர்க்கட்சிக்கு தள்ளப்பட்டார். எனவே Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) திட்டத்தை அப்போது அவர் செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தார்.
2005ல் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததும் Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டமானது 2015-2019 ஆண்டு மைத்ரீபால - ரணில் ஆட்சிக்க் காலகட்டத்தில் MCC ஒப்பந்தம் என்ற பெயரில் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக அரசியல் கட்சிகள் , சிவில் அமைப்புகள், தொழில்சார் அமைப்புகள் கடுமையாகக் குரல் கொடுத்ததால் அதனை மீண்டும் கிடப்பில் போட நேர்ந்தது.
எனினும் 2019 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் உடதும்பர காஸ்ஸப்ப என்ற ஒரு பெளத்த பிக்கு சுதந்திர சதுக்கத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததோடு, அப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம் அந்த MCC ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டேன் என்ற எழுத்துமூல வாக்குறுதி ஒன்றையையும்கூட பெற்றுக்கொண்டார். அது அவர்களின் தேர்தல் அரசியலுக்கான சுத்துமாத்து வேலையாக இருந்தாலும் பெளத்த பிக்கு தெரிந்தோ தெரியாமலோ அதற்குள் அகப்பட்டார். அவருக்கு நாம் சொல்லக்கூடியது அன்று நிறுத்திய இடத்திலிருந்து உண்மையான உண்ணாவிரதத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகுங்கள் என்பதாகும்.
ரணில் விக்ரமசிங்க மட்டுமே இன்று அரசாங்கத்தின் ஒரே ஒரு மீட்பராக இருக்கின்றார். கடந்த சில நாட்களில் பாராளுமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் உற்று நோக்கும்போது அவரே இன்று அரசாங்கத்தின் ஆலோசர், கொள்கை வகுப்பாளர் மற்றும் இடைத்தரகர் ஆகிய மூன்று பாத்திரங்களையும் வகிப்பது தெளிவாகின்றது.
மே 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பொய்யாக சுயாதீனமாக இயங்கப்போவதாக கூறியவர்களுள் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உதவி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்படும்போது அவருக்கு வாக்களிக்கும்படி பா.உறுப்பினர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்தார் என பா.உறுப்பினர் இராசமாணிக்கம் வெளிப்படையாக கூறினார். இந்த இடத்தில் ரணில் ஒரு இடைத்தரகர் வேலையைச் செய்தார். ஆனால் அவரால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி என்னும் சமகி ஜன பலவேகய இனரால் கொண்டுவரவிருந்த நம்பிகையில்லாப் பிரேரணை பின்போடப்படுவதற்கு ரணில் தன் தலையீட்டை சய்தார். எவ்வாறாயினும் பல வாரங்களாக பின்போடப்பட்டு பின்போடப்பட்டு அது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டாலும், அது பற்றிய விவாதம் பின்போடப்பட்டதன் பின்னணியிலும் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். அவர் ஒரு காலமும் மகிந்த ராஜபக்ச ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்கப்பட அவர் அனுமதிக்கமாட்டார்.
MCC ஒப்பந்தத்தின் புதிய திட்ட வடிவம் 2021 ஆண்டு தொடக்கத்தில் மீளமைக்கப்பட்டது. Path Finder ( பாத்ஃபைண்டர்) நிறுவனத்தின் உரிமையாளரான, மிலிந்த மொரகொட இந்தியாவின் ஸ்ரீ லங்கா தூதுவராக நியமிக்கப்பட்டமை இந்த ரணில், அமெரிக்க இந்தியத் திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாகும். மிலிந்த மொரகொட என்பவர் அமெரிக்காவிற்கு மிகவும் நெருங்கியவர் என்பதோடு Regaining Sri Lanka (இலங்கையை மீட்டெடுப்போம்) திட்டத்தை உருவாக்கியவருமாவார்.
இத்திட்டத்தை நடைமுறப்படுத்துவதற்கான களத்தையும் சூழலையும் உருவாக்கிக்கொள்ளுவதற்கு ஏதுவாக, பாத்ஃபைண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை தளபதியான ஜெயநாத் கொலொம்பகே என்பவரை வெளியுறவு அமைச்சின் செயலாளராக பணியமர்த்தினர்.
அதன் பின்னர் இந்தியா திரை மறைவில் இருந்தபடி மிக்க கவனத்துடன் அமெரிக்க குடியுரிமை பெற்றவரான பசில் ராஜபக்சவை நிதி அமைச்சர் பதவிக்கு கொண்டுவருவதற்கு பெரும்பங்காற்றி அதை நிறவேற்றியது. இதன் மூலம் அவர்களின் எதிர்பார்ப்பு இலங்கையை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விலத்துவதாகும். ஆனால் இதற்கிடையே இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து கிடக்கிறது என்பதை இந்தியா நன்றாக புரிந்தே இருந்தது.
இப்போது இலங்கை பெரும் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. இலங்கையின் மொத்தக் கடன் தொகை 51 பில்லியன் டாலர்களாகும். அதில் 18.5 பில்லியன்கள் 2015-2019 ஆம் ஆண்டுக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடன்களாகும். அதில் இறையாண்மைப் பத்திரக் கடன்கள் (Sovereign bond loans) 51 பில்லியன் டாலர்களாகும். ஏனைய 6.5 பில்லியனானது இருதரப்பு அல்லது பல்தரப்பு (Bilateral and multilateral loans) கடன்களாகும்.
ஆனால் யாருமே இந்தக் கடன்கள் பற்றி பேசுவதில்லை. சஜித் பிரேமதாஸ , லக்ஷ்மன் கிரிஎல்ல, மற்றும் பொருளியல் கலாநிதி ஹர்ஷ த சில்வா, எரான் விக்ரமரத்ன போன்றவர்கள் சொல்லும் கதைகளின்படி இக்கடன்கள் அனைத்தும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தவறுகளால் குவிந்தவை என்பதாகும். இவர்கள் எல்லோரும் அன்றைய ரணில் அரசாங்கத்தில் இருந்த முக்கிய அமைச்சர்களாவர். அவர்கள் எல்லோரும்கூட இன்றைய இந்த பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே. அதே போல் 2015-2019 ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பாரிய நிதி ஊழலும் கூட இன்றைய நெருக்கடிக்கு பங்கு வகித்துள்ளது என்பதயும் கூறிவைக்க வேண்டியுள்ளது.
தற்போது இலங்கை கழுத்துவரை கடனில் மூழ்கிப்பொயுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக சகலதும் தயாராகி உள்ளது. ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவத்ற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடும். அதில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி ஏனைய சில கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு அமைச்சரவையை உருவாக்கலாம்.
பின்னர் வழக்கறிஞர்கள் சங்கம் முன்மொழிந்துள்ளத மாதிரியை ஒத்த வடிவிலான கட்டமைப்பில் அரசாங்கத்தின் எஞ்சிய இரண்டாண்டு காலத்தை கொண்டு நடத்தலாம். இலங்கைக்குள் அமெரிக்காவிற்கு அவசியமானவைகள் இவ்வளவு காலம் இந்தியாவுக்கு ஊடாக செயற்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், இனிமேல் ரனில் விக்கிரமசிங்கவுக்குவுக்கு ஊடாக நேரடியாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டின் அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான சில பணப் பங்கீடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவினால் வழங்கப்பட்ட, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டில் தற்போதுள்ள எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.
அந்த வகையில் அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எப்படியோ முன்னகர்திச் செல்லக்கூடும் . அதன்பிறகு, 2002 ஆம் ஆண்டு தன்னால் செய்ய முடியாமற் போனதை ரனில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்காக வெற்றிகரமாக அவர் செய்து முடிப்பார். அதன் பின்னர் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பது என்ற பெயரில் இந்திய அமெரிக்க ஆதிக்கமானது இலங்கையை விழுங்கிக் கொள்ளும். ரணில் விக்ரமசிங்க இலங்கையை மீழ முடியாத ஒரு பொறிக்குள் சிக்க வைத்துவிட்டு அவர் ஒய்வு பெறுவார். இனி இலங்கையை கோடானகோடி தேவர்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
சாந்த ஜெயரத்ன
முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர்
ஸ்ரீ லங்கா அபிவ்ருத்தி நிர்வாக நிறுவனம்
Sri Lanka Institute of Development Administration (SLIDA)
தமிழில் மனோரஞ்சன்
0 comments :
Post a Comment