Wednesday, March 2, 2022

ரஸ்ய-உக்ரேன் மோதலில் அமெரிக்கா எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகின்றதாம் என சீனா பேச்சுக்கு அழைக்கின்றது.

உக்ரேனில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Dmitry Kuleba உடன் நேற்று செவ்வாய்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சீன வெளிவிவகார அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், இருநாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள யுத்தசூழ்நிலைமைகளுக்கு சுமுகமான தீர்வொன்றை காண்பதற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இருதரப்பினரையும் சீனா வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் போரை தவிர்ப்பதையும், பொதுமக்கள் உயிரிழப்பை தடுப்பதையும் பிரதான இலக்காக கொண்டு அமையவேண்டும்மென Wang Yi வலியுறுத்தியுள்ளதாக மேலும் அச்செய்தியில் அழுத்துறுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய நிலைமைகள் தொடர்பாக கருத்துரைத்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin சீனா உக்கிரேனுடனான பேச்சுக்களுக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளதாக தெரிவித்துள்ளமையானது, சீனா இருநாடுகளுக்குமிடையே மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் பிரதமர் Volodymyr Zelensky சீனப்பிரதமர் Xi Jinping உடன் பேசினாரா என இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, 'இல்லை' என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin மறுக்கவில்லை என்பது இங்கு முக்கியமானதாகும். ஐரோப்பிய ஒன்றியித்துடன் இணைவதற்கான விண்ணப்பத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கையொப்பமிட்ட மறுபுறத்தில் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கான சாத்தியப்பாடுகளை உக்ரைன் தேடிவருவதையும் உணரமுடிகின்றது.

போர் ஆரம்பமான முதல் நாளே இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக தொடர்பு கொண்ட உக்ரைன் பிரதமர் Volodymyr Zelensky, புடின் உடன் பேசுமாறு மோடியை கோரியிருந்த செய்திகளும் வெளியாகியிருந்தது. அந்தவேண்டுகோளுக்கு நரந்திரமோடி எவ்வித வினையுமாற்றாத நிலையில் இன்று Volodymyr Zelensky சீனாவை தொடர்பு கொண்டிருப்பது, நரேந்திரமோடி மீதான அதிருப்தியை வெளிக்காட்டுவதாக அமைவதுடன், இந்தியா ஐ.நா வில் தனது நிலைப்பாட்டை வெளிக்காட்டாமை தொடர்பாக மேற்கு ஊடகங்கள் கேலி செய்துள்ளமையை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

இதேநேரம் ரஷ்யப்படைகள் உக்ரேனை நோக்கி அனுப்பப்பட்டபோது இந்த நிலைக்கான சூத்திரதாரிகள் அமெரிக்காதான் என குற்றம் சுமத்திய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்களில் ஒருவரான Hua Chunying "உக்ரேய்னுக்கு ஆயுதங்களை வழங்குவதன் ஊடாகவும் அந்நாட்டை நேட்டோ நாடுகளுடன் இணைத்துக்கொள்வது தொடர்பாக தீவிரமாக யோசனை செய்வதூடாகவும்" , "அமெரிக்கா எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுகின்றது" எனச் சாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com