இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சீன-விரோத பிரச்சாரத்திற்கான ஆதரவை அதிகரிக்கின்றது. P. T. Sampanthar
இலங்கையின் பிரதான தமிழ் பாராளுமன்றக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கடந்த நவம்பர் மாதம், கட்சியின் தூதுக்குழு வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்க தலமையிலான சீன-விரோத பிரச்சாரத்தில் தன்னை மேலும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீண்ட கால இனவாதப் போரைத் தொடர்ந்து 'மனித உரிமைகள்' மற்றும் 'நல்லிணக்கம்' சம்பந்தமான பிரச்சினைகளில் வாஷிங்டனின் அக்கறையே இந்த சந்திப்பிற்கான வெளிப்படையான காரணம் ஆகும். உண்மையான காரணம், பெய்ஜிங் உடனான உறவுகளை முறித்துக் கொள்ளவும் மற்றும் வாஷிங்டனின் புவிசார் மூலோபாய நலன்களை முழுமையாக ஆதரிக்கவும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான அமெரிக்க அழுத்தத்தை தீவிரப்படுத்துவதே ஆகும்,
ஏனைய தமிழ் கட்சிகளாலும் மற்றும் ஊடகங்களாலும் எதிரொலிக்கப்படும் சீனா மீதான தமிழ் கூட்டமைப்பின் சமீபத்திய கண்டனங்கள், மோர்னிங் இணையத் தளத்தில், ஜனவரி 8 அன்று வெளியான சுமந்திரன் உடனான ஒரு நீண்ட நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கையில் சாத்தியமான சீன திட்டங்கள் மற்றும் முதலீடுகள் பற்றி கேட்கப்பட்ட போது, 'சீனர்கள் வடக்கு அல்லது கிழக்கில் வரவேற்கப்படுவதில்லை,' என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பட்டமாக அறிவித்தார்.
சீனத் தூதுவர் குய் சென்ஹொங், டிசம்பர் நடுப்பகுதியில் வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமைக்கு பிரதிபலிக்கும் வகையிலேயே சுமந்திரனின் கருத்து இருந்தது. இந்தப் பகுதியில், சீன முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது. பொதுவாக, ஒரு வழக்கமான நிகழ்வாகக் கருதப்படும் இந்த விஜயத்துக்கு, தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் இத்தகைய ஆத்திரமூட்டும் விதத்திலான பதில், ஒருபுறம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கும் மறுபுறம் சீனாவிற்கும் இடையே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழ் கூட்டமைப்பின் 'அரசியல் தேடலானது” 'சீனர்களுக்கு மிகவும் அந்நியமான' “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையிலானது,” அதனாலேயே வடக்கு மற்றும் கிழக்கில் சீனா தலையீடு செய்வதை தான் எதிர்த்ததாக சுமந்திரன் கூறினார். அந்தப் பகுதியில் சீனாவின் செல்வாக்கு, அரசியல் உரிமைகளுக்கான 'முன்னேற்றத்தைத் தடுக்கும்' என்று அவர் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு 'தென் சீனக் கடலில் அமைந்திருக்கவில்லை,' அது, இந்தியக் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது, ஆகையால், 'சீனாவின் பாதுகாப்பு பற்றிய நியாயமான கவலைகள் பற்றியவை அல்ல... என்று தொடர்ந்த அவர், 'வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவுக்கு இடம் கொடுப்பது இந்தியாவுக்கு விரோதமான செயல்' ஆகும் என்றார்.
சுமந்திரனின் வாய்ச்சவடால், சீனாவிற்கு எதிரான வாஷிங்டன் மற்றும் டெல்லியின் ஆக்ரோஷமான பிரச்சாரத்தின் எதிரொலியாகும். 'ஜனநாயகம்' மற்றும் சீனாவின் 'மனித உரிமை மீறல்கள்' பற்றிய அமெரிக்காவின் போலிக் கவலையை வெளிக்காட்டும் அதேவேளை, புலம்பெயர்ந்தோர் மீதான தனது கொடூரமான அடக்குமுறை உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான அதன் சொந்த அடக்குமுறைகளை பாசாங்குத்தனமாக மூடி மறைக்கின்றது.
தென் சீனக் கடல் பற்றிய சுமந்திரனின் குறிப்பு, சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான ஆத்திரமூட்டல்களின் ஒரு முக்கிய அங்கத்தை எதிரொலிக்கிறது. பெய்ஜிங்கை, அதன் 'சட்டவிரோதமான' தென் சீனக் கடல் உரிமை கோரல்களுக்காக அமெரிக்கா கண்டனம் செய்வதுடன் 'கப்பற் பயணத்துக்கான சுதந்திரம்' என்ற சாக்குப்போக்கில், சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புகிறது.
அமெரிக்க போர்க்குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் அதிகரித்துவரும் தாக்குதல்கள், அதேபோல், காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் மோடி அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் அது முஸ்லீம்-விரோத உணர்வுகளை தூண்டுவதையும் சுமந்திரன் புறக்கணிக்கிறார்.
அதன் கொல்லைப்புறமாக கருதும் வடக்கு மற்றும் கிழக்கில், சீனாவின் வருகை சம்பந்தமான இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய கவலைகள், சீன செல்வாக்கு தொடர்பாக நீண்டகாலமாக நிலவும் எதிர்ப்பின் ஒரு பகுதியாகும்.
இந்தியா, இந்த இலட்சியங்களை முன்னெடுக்கும் வகையில், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா தலைமையிலான நாற்கர இராணுவ கூட்டணியில் (QUAD) இணைந்து சீனாவிற்கு எதிரான முன்னணி நாடாக மாறியுள்ளது. தன் பங்கிற்கு, பெய்ஜிங் மற்ற தெற்காசிய நாடுகளுடன் தனது சொந்த உறவுகளை கட்டியெழுப்ப முற்படுவதன் மூலம் இந்த நகர்வுகளை எதிர்கொள்ள முற்பட்டுள்ளது.
'மனித உரிமைகள் அடிப்படையிலான அரசியல் உரிமைகளுக்காக' போராடுவதாக தமிழ் கூட்டமைப்பு கூறுவது ஒரு ஏமாற்று வேலையாகும். இந்த முதலாளித்துவக் கட்சியின் முக்கிய அக்கறை, தமிழ்த் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள் அல்ல, மாறாக அமெரிக்காவையும், இந்தியாவையும் மற்றும் அவர்களின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் அடிமைத்தனமாக அரவணைத்துக்கொள்வதன் மூலம், தமிழ் உயரடுக்கிற்கு சலுகைகளைப் பெறுவதே ஆகும்.
இலட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 30 ஆண்டுகால யுத்தத்தை, அமெரிக்காவும் இந்தியாவும் அங்கீகரித்துள்ளன. மே 2009 இல் முடிவடைந்த இரத்தக்களரி மோதலின் இறுதி மாதங்களில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் ஏராளமான மனித உரிமை மீறல்கள் பற்றிய கவலைகளை வாஷிங்டன் எழுப்பத் தொடங்கியது.
இந்தக் கவலைகளுக்கும் மனித உரிமைகளை காப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாறாக, பெய்ஜிங்கில் இருந்து அதனைத் தூர விலக்கி வைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா இந்தப் பிரச்சினையை சுரண்டிக்கொண்டது. இந்த நோக்கத்திற்காக வாஷிங்டன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பல தீர்மானங்களுக்கு ஆதரவளித்தது. இதுவும் ஏனைய சூழ்ச்சிகளும் தோல்வியடைந்தபோது, 2015ல் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக அமர்த்துவதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கையை அது திட்டமிட்டது.
மஹிந்த இராஜபக்ஷவின் இளைய சகோதரர் கோட்டாபய இராஜபக்ஷ 2019 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பணப்பற்றாக்குறையை எதிர்கொண்ட அவரது அரசாங்கம், மீண்டும் நிதி உதவிக்காக பெய்ஜிங்கை நோக்கித் திரும்பியதை அடுத்து, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகள் 'மனித உரிமைகள்' பிரச்சாரத்தை மீண்டும் புதுப்பித்தன. 2021 மார்ச் மாத அமர்வில் நிறைவேற்றப்பட்ட, போர்க் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் மற்றொரு யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்துக்கு வாஷிங்டன் ஆதரவளித்த்து. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அமெரிக்காவின் நகர்வுகளை ஆதரித்தன.
'இந்தியாவால் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பகிர்வை ஏற்பாடு செய்ய முடிந்தால்... அது பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டைத் தடுக்க முடியும்' என்று தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி வலையமைப்பிற்கு டிசம்பர் 27 அன்று சுமந்திரன் அளித்த பேட்டியில், அறிவித்தார்.
சீனாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்துகொண்டுள்ளன. சீனா, 'உலகின் பொலிஸ்காரனாக தன்னை மாற்றிக்கொள்ள' முயற்சிப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சமீபத்தில் அறிவித்ததுடன், புலிகளுக்கு எதிரான கொழும்பின் போருக்கு சீனா ஆதரவு வழங்கியதையும் சுட்டிக்காட்டனார்.
போரின் போது பெரும் இராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கிய சீனா, இலங்கையை அதன் முக்கிய கடனாளி நாடாக மாற்றியுள்ளது,” என்று அறிவித்த அவர், கொழும்புக்கு எதிரான அமெரிக்க சார்பு யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை எதிர்த்ததற்காக பெய்ஜிங்கை விமர்சித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும் உள்நாட்டுப் போருக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா வழங்கிய ஆதரவை இழிந்த முறையில் மூடி மறைக்கிறது.
அத்தோடு நிற்காமல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனும் சீனாவிற்கு எதிரான மற்றும் இந்திய ஆதரவு பிரச்சாரத்தை தழுவிக்கொண்டனர்
இந்த முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையே உள்ள தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு சேவை செய்கின்றன.
சுமந்திரனின் குற்றச்சாட்டுகள் மற்றும் சீனாவிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பதிலளித்த சீனத் தூதுவர் குய் ஸென்ஹோங், ஜனவரி 9 அன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், வடக்கிற்கான தனது விஜயம் 'பொருளாதார முதலீடுகள் தொடர்பானது, இந்தியாவிற்கு எதிரானது அல்ல' என்று கூறினார். “யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் உள்ள ஒரு நகரம். இது வேறு எந்த நாட்டினதும் தெற்கில் உள்ள நகரம் அல்ல, ஏன அவர் சுட்டிக்காட்டினார்:
இந்த அபிவிருத்திகள், பிராந்தியத்தில் ஆழமடைந்துவரும் புவிசார் அரசியல் போட்டி மற்றும் இலங்கையை வாஷிங்டன் மற்றும் புதுடில்லியின் கோரிக்கைகளுக்கு இணங்க வைக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அவை, தமிழ் தேசியவாத கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு சீரழிவையும் மற்றும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான பேரழிவுகரமான இராணுவ மோதலின் அபாயத்தையும் கூர்மையான வெடிப்பை நோக்கி கொண்டு வருகின்றன.
தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளை இந்த முதலாளித்துவ அமைப்புகளால் வெற்றிகொள்ள முடியாது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியப் போராட்டத்தின் மூலம், ஒடுக்கப்பட்டவர்களை ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான போராட்டத்தில் வழிநடத்தி, சர்வதேச போர் எதிர்ப்பு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அவை வென்றெடுக்கப்பட முடியும். இந்த முன்னோக்கிற்காக போராடும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
உலக சோசலிச வலைத்தளத்திலிருந்து
0 comments :
Post a Comment