Tuesday, June 29, 2021

அரசியற் கைதிகள் என்பதற்கு ஆழ்ந்த பொருளும் பின்னணியும் தியாகமும் உண்டு. அனந்திக்கு வகுப்பெடுக்கின்றார் சுகன்.

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த கிறிமினல்கள் 109 பேர் கடந்த பொசன் போயா தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் புலிப்பயங்கரவாதிகள் சிலரும் அடங்கியிருந்த நிலையில், அவர்களை அரசியற் கைதிகள் என அழைப்பது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டுள்ள கிறிமினல்களை அரசியற் கைதிகள் என அழைத்த புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உரிமையாளருமான எழிலன் எனப்படுபவரின் மனைவியான வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு, சமூக விடுதலைப் போராளியும் கவிஞருமான சுகன், அரசியற் கைதிகள் எனப்படுவோர் யார் ? என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

அண்மையில் அரசால் விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிகளின் பிரமுகர்களை "அரசியல் கைதிகள் "என பத்திரிகைகள் எழுதுகின்றன . அம்மையார் அனந்தி சசிதரன் " அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தால் என்ன ? " என அரசையும் மக்களையும் ஊடகங்களூடாகக் கேட்கின்றார்.

அம்மணி !

உங்கள் கணவர் எழிலன் மக்களைச் சிறைவைத்து அடைத்து தப்பியவர்களைச் சுட்டு வெறியாட்டம் ஆடியபோது உங்கள் கணவரிடம் இந்தக் கேள்வியை அப்போது கேட்டிருந்தால் இன்று நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டிய நிலை வந்திராது.

இன்று அரசின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களும் இன்னும் விடுவிக்கப்படாதவர்களும் மக்களுக்கு இழைத்த கொடூரங்களுக்காக மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்தான். இவர்கள் அரசியற்கைதிகள் அல்ல மிகக் கொடூரமான பயங்கரவாதிகள் இவர்கள்.

இவர்கள் யுத்தக் கைதிகள்கூட அல்ல, இவர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 93 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 93 + 16 =109 கிரிமினல் கைதிகள் என்ற வகையில் அடங்குவார்களேயன்றி அரசியற்கைதிகள் அல்ல.

அரசியற் கைதிகள் என்பதற்கு ஆழ்ந்த பொருளும் பின்னணியும் தியாகமும் உண்டு. மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசியலை நிரந்தரமாக பேசியும் அதற்காக ஜனநாயக எதிர்ப்பு களங்களில் நின்று போராடியும், அதன் காரணமாய் கைது சிறை சித்திரவதை இவற்றை அனுபவித்தும் வருபவர்கள் அரசியற் கைதிகள்.

அரசியற் கைதிகள் தமது கைதிற்கு முன் பரவலாக மக்களால் அறியப்பட்டவர்கள். குறிப்பிட்ட அரசியற் கைதிகளை விடுதலை செய்யவேண்டி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நீதிமன்றங்களில் நியாயம் கோரும். அவர்களது அரசியலின் தரப்பிலிருந்து பேசாவிடினும் அத்தகைய அரசியலை செய்வதற்கு அவர்களுக்குரிய உரிமையை வலியுறுத்தும் .

அப்படிக் கைதுசெய்து வைத்திருப்பவர்களுடன் ஒரு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபடும். விடுவிக்கப்பட்டால் அவர்களைப் பொறுப்பேற்கும். இவர்களைப் பொறுப்பேற்பதற்கு சொந்த ஊரிலேயே எவரும் , எந்த அரசியற் பிரமுகரும் இல்லையென்பதே இன்றுள்ள நிலை.

மக்களால் மிகவும் வெறுத்தொதுக்கப்பட்ட நிலையிலேயே இன்று இவர்கள் நிலை உள்ளது. அரசு புனர்வாழ்வு அளித்து இவர்களுக்கான வாழ்வாதாரங்களை உருவாக்கினாலொழிய இவர்கள் எதிர்காலம் சூன்யமான நிலையிலேயே இன்றும் இருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com