Saturday, June 5, 2021

கொரோணா தொற்றின் பின்னால் ஒழிந்து நின்று நாட்டின் எஞ்சியுள்ளவற்றையும் அரசு விற்கின்றாதாம். சாடுகின்றது ஜேவிபி

மக்கள் பெரும்தொற்றுக்கு உள்ளாகி வீடுகளுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எஞ்சியுள்ள சில நிலங்களை விற்க முற்படுகின்றது, பொருத்தமானதும் உறுதியானதும் நடவடிக்கைகள் மேற்கொண்டு கொரோணவிலிருந்து மக்களை காக்க தவறுகின்றது, சேதன பசளை விடயத்தில் மக்களை ஏமாற்றி அவற்றை பிறிதொரு மாபியாக்களின் கையில் கொடுக்க முற்படுகின்றது, கப்பல் விடயத்தில் மீன்பிடித்தொழிலை நம்பியிருக்கும் மக்களை நிர்கதியாக்கியுள்ளது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசை நோக்கி அள்ளி வீசுகின்றது ஜேவிபி.

கடந்த 2021.05.30 ம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் மேற்காண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அவர் அங்கு பேசுகையில் தெரிவித்தமை வருமாறு:

கொவிட் பெருந்தொற்று காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பயணத் தடைகள் விதிக்கப்பட்டதன் மூலமாக கொவிட் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த இருந்த எதிர்பார்ப்பின் பெறுபேறுகளைப் பார்த்தால் புலப்படுவதில்லை. தொற்றாளர்கள், இறப்புகள் மற்றும் பெருந்தொற்றின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய தீர்மானங்ளை மேற்கொள்வதில்லை. அந்த உரிய வழிமுறைகளை உரிய நேரத்தில் எடுத்திருந்தால் இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கமாட்டாது. வைரஸைக் கட்டுப்படுத்த இருக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முறைப்படி செயலாற்றவும் இல்லை.

தற்போதுள்ள தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பத் தருணத்திலேயே இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. சனவரி 05 ஆந் திகதி மற்றும் 07 ஆந் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வந்தார். இந்தியாவிலிருந்து தடுப்பூசிகளை வழங்குகையில் இலங்கையை முதன்மை நாடாகக்கருதி வழங்கத் தயாரென வெளியுறவு அமைச்சர் கூறினார். எனினும் ஒரு நாடு என்றவகையில் ஏதேனும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை. இந்தியா எமக்கு கொடுக்க முன்வருகையில் அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. அதனால் கொடையளிப்பாக வழங்கப்படவிருந்து தயாராகி இருந்தவற்றையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி இலங்கைக்கு பொருத்தமானதென சனவரி 22 ஆந் திகதியே அங்கீகரிக்கப்பட்டது. திரு. லலித் வீரதுங்க தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் அலுவல்களுக்காக நியமிக்கப்பட்டதாக கூறினாலும் பல மாதங்கள் கழிந்தன. இத்தகைய பின்னணியிலேயே தற்போது தடுப்பூசி நெருக்கடி உருவாகி உள்ளது. எம்மைவிட பொருளாதாரம் பலவீனதாக உள்ள மொரோக்கோ போன்ற நாடுகளில்கூட சனவரி 21 ஆந் திகதியாகும்போதே இந்த தடுப்பூசி பெறப்பட்டிருந்தது. மியன்மார் 37 இலட்சத்தை பெற்றுக்கொண்டிருந்தது. பங்களாதேஷ் 70 இலட்சத்தைப் பெறறுக்கொண்டிருந்தது. பங்களாதேஷ் போன்ற நாடுகள் சனவரி ஆரம்பத்திலேயே அனுப்பற் கட்டளையைப் பிறப்பித்து சனவரி 21 ஆந் திகதியளவில் பெற்றுக்கொண்டிருந்தன. நாங்கள் இன்னமும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் வெற்றிபெறவில்லை. தற்போது பணம்செலுத்திக்கூட பெறவழியில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மே மாத நடுப்பகுதியில் நாட்டில் அரைவாசிக்கு தடுப்பூசி வழங்கி நிறைவுசெய்வதாக கூறினார்கள். தற்போதுகூட அவ்விதமான கதைகளைத்தான் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. கிடைத்த தடுப்பூசிகளும் சரியான வகையில் மக்களுக்கு கிடைப்பதில்லை. முதலாவது 06 இலட்சம் பேருக்கு வழங்கி இண்டாவது மருந்துவேளையை வழங்க மிகுதி கையிருப்புத் தொகையை எடுத்துவைக்கவில்லை. முதலாவது மருந்துவேளையைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்ச்சியாக அபயாராமயவிற்கு இரண்டாவது மருந்துவேளையை பெற்றுக்கொள்வதற்காக திரண்டார்கள். கொரோனா அனர்த்தத்தைப் பொருட்படுத்தாமல் பெருந்தொகையானோர் ஒன்றுதிரண்டாலும் தடுப்பூசி கிடைக்கவில்லை. தடுப்பூசி வேலைத்திட்டம் தோல்விகண்டுள்ளதெனக் கூறவேண்டியநிலை தேரருக்கும் ஏற்பட்டது. அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கடதாசி துண்டுக்காக தடுப்பூசிகளை வழங்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்களுக்கு கட்டுப்படாமல் பெரும்பாலான இடங்களில் சுகாதார உத்தியோத்தர்கள் செயலாற்றி வருகிறார்கள்.

பயணத்தடைகளின் மத்தியில் நாட்டின் பொருளாதாரம் பற்றி மாத்திரமே அரசாங்கம் நோக்குகின்றது. பெரும்பாலான ஆடைத்தொழிலகங்கள் இயங்கிவருகின்றன. தொழிற்சாலைகளில் 1,000, 1,500 பேர் வேலை செய்வதால் பாரிய ஆபத்தொன்று நிலவுகின்றது. கடந்த சில தினங்களில் பெருந்திரளான ஆடைத்தொழிலக பெண் ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகினர். ஒருசில ஆடைத்தொழிலகங்கள் அவர்களின் செலவில் பி.சீ.ஆர். பரிசோதனைகனை செய்துகொடுக்க முன்வந்தன. அரசாங்கம் அந்த நிலைமையைத் தடுத்தமையால் தொற்றாளர்கள் குறைவாகவே பதிவாகினர். பயணத்தடை விதிக்கப்படமுன்னர் இனங்காணப்பட்ட 2,500 – 3,000 வரையான தொற்றாளிகளின் எண்ணிக்கையே இன்றும் நிலவுகின்றது. அப்படியானால் இந்த பொறியமைப்பின் பாரிய பலவீனங்கள் புலப்படத்தக்கதாக விளங்குகின்றது.

கமக்காரர்கள், தொழில் முயற்சியாளர்கள் நிர்க்கதி நிலையுற்று இருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஒருசில தீர்மானங்கள் காரணமாக நிலைமை பாரதூரமானதாகி இருக்கின்றது. காலையில் பொருளாதார நிலையங்களை திறப்பதாக கூறியதும் கமக்காரர்கள் மரக்கறிகளை கொண்டுவருகிறார்கள். ஆனால் பொருளாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திறக்குமாறு கூறவில்லையென மாலையில் அரசாங்கம் கூறுகின்றது. மொத்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஆனால் சாமான்களை வாங்க எவருமே இல்லை. உண்மையைக் கூறுவதாயின் இந்த செயற்பாங்கு எந்தவோர் இடத்திலும் முறைப்படி இயங்குவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5,000 கொடுப்பதாக அரசாங்கம் வலியுறுத்திக் கூறுகிறது. ஆனால் எந்தவோர் இடத்திலும் அமுலில் இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக விளைச்சலை சந்தைப்படுத்திக்கொள்ள இயலாமல் கமக்காரர்கள் பசளை இறக்குமதியை நிறுத்தியமையால் மற்றுமொரு சுற்றில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சேதனப் பசளை இடுதல் சம்பந்தமாக எந்தவிதமான வாதமும் கிடையாது. ஆனால் சேதனப் பசளையை கமக்காரர்களுக்கு வழங்குகின்ற ஒரு வேலைத்திட்டத்துடன்தான் இரசாயனப் பசளை இறக்குமதியை நிறுத்தவேண்டும். ஆனால் அத்தகைய வேலைத்திட்டமொன்று கிடையாது. தற்போது தேயிலை வளர்ப்பும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. மாலைதீவு போன்ற நாடுகளில் மரக்கறி ஏற்றுமதி செய்தவர்களின் உற்பத்தி சீரழிந்தமையால் அந்த சந்தையையும் நாங்கள் இழந்து இந்தியா ஆக்கிரமித்து உள்ளது. அரசாங்கம் ஏற்றுக்கொண்ட எந்தவொரு நிறுவனமும் சேதனப் பசளை பற்றிய எந்தவிதமான ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவில்லை. கமக்காரன் அவசியமான சேதனப் பசளையை எங்கிருந்து வாங்குவது? எமது நாட்டில் இல்லாவிட்டால் இறக்குமதி செய்யுமாறு சனாதிபதி கூறுகிறார். 46 அங்கத்தவர்களைக்கொண்ட சேதனப்பசளை செயலணியொன்றை தாபித்துள்ளார். பல்வேறு துறைகளைச்சேர்ந்த பேராசிரியர்களும் பல்வேறு துறைகளைச்சேர்ந்த தொழில்வாண்மையாளர்களும்கூட இருக்கிறார்கள். தொழில்முயற்சிகளுடன் தொடர்புடையவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீரவும் இருக்கிறார். வெளிநாடுகளில் எங்கிருந்து சேதனப் பசளையைக் கொண்டுவரப் போகிறார்கள்? சீனாவிலிருந்து. சீனாவின் நகர்சார் குப்பைகூளங்களை கொண்டுவரப் போகிறார்கள். அவை சேதனப் பசளைகள் அல்ல. அப்புறப்படுத்தகின்ற நகர்சார் குப்பைகூளங்களில் யூரியா ஸ்பிறே பண்ணி சேதனப் பசளை என்றவகையில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். சேதனப் பசளை வழங்குவதன் மறைவில் இருந்துகொண்டு கொரோனாவின் மத்தியில் மற்றுமொரு திருட்டுத்தனமான தீத்தொழிலை தொடங்கப்போகிறார்கள். எமது சூழலுக்கு, மண்ணுக்கு பொருத்தமற்ற சேதனப் பசளை எனக்கூறி வேறோரு நாட்டிலிருந்து அப்புறப்படுத்துகின்ற நகர்சார் குப்பைகூளங்களுக்கு யூரியா தெளித்து கொண்வரப்படுகின்றவற்றை எவ்விதத்திலும் அனுமதிக்க இயலாது. அந்த பாவச்செயலை இந்நாட்டின் கமக்காரர்களுக்கு புரியவேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறுகிறோம். இரசாயனப் பசளையால் ஏற்படுகின்ற அழிவுக்கு இரண்டாம் பட்சமாக அமையாத அழிவு இதனூடாக இடம்பெறுகின்றது.

தமது போக்கிரிகள் வளையத்தைச் சேர்ந்தவர்களைப்போட்டு புதிய பிஸ்னஸ் ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கான மாபியாவொன்றும் கொரோனாவின் மத்தியில் இயங்கிவருகின்றது. அவற்றுக்கான தீர்மானங்கள் அவசரஅவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சேதனப் பசளையை இலங்கையில் உற்பத்தி செய்யவும், அதற்கு அவசியமான தரநியமங்களை அமைக்கவும் எமது நாட்டில் அதற்கான இடையீடொன்று ஜப்பானின் சேதனப் பசளை பாவனை சார்ந்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசளைப் பிரச்சினையை ஒரு கைக்கருவியாக்கிக்கொண்டு மற்றுமொரு மாபியாவுக்கு வழிசமைக்க வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். சுற்றாடலுக்குப் புரிந்துள்ள சேதம் போதும்.

அதேவேளையில் எங்கேயோ போகின்ற கப்பலொன்று நச்சுத்தன்மைவாய்ந்த கொள்கலன்களுடன் இலங்கைக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தீப்பற்றியதும் அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் றோஹித அபேகுணவர்தன வீம்புவார்த்தை பேசினார். நைட்ரிக் அமிலம் தீப்பிடித்தவேளையில் நீரைத் தெளித்து தீயை அணைக்கப்போய் பாரிய அழிவினை ஏற்படுத்தினார்கள். அதனால் அண்மைக்காலத்தில் இலங்கைக்கு எற்பட்ட மிகப்பெரிய கடல்மாசுபாடு இதனால் ஏற்படுத்தப்பட்டது. அந்த சேதத்தை மேலும் பல வருடங்களில் ஈடுசெய்ய இயலாது. கடலுக்கடியில் பவளப்பாறைகள் வரை அழிவடைந்துள்ளன. நீர்கொழும்பில் இருந்து ஹிக்கடுவ வரையான கரையோரத்துண்டு மாசடைதலுக்கு இலக்காகி உள்ளது. நீர்கொழும்பு கடனீரேரியிலும் இரசாயனப் பொருட்கள் கலந்து மீன்கள் இறக்கின்றன.

கொரோனா காரணமாக மீன்பிடித் தொழிலை இழந்த மக்கள் இந்த கப்பல் காரணமாக மென்மேலும் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளார்கள். இந்த மீனவர்களுக்கு ரூ.5,000 வழங்குவதாக அமைச்சர் சேமசிங்க கூறினார். அழிவடைந்த வலைகளையும் கருவிகளையும் ரூ. 5,000 இற்கு வாங்கிவிட இயலாது. பயணத்தடைகள் நீக்கப்பட்டதும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வலைகளும் கருவிகளும் கிடையாது. அனைத்துமே இந்த கப்பலின் இரசாயனப் பொருட்கள் காரணமாக அழிவடைந்துவிட்டன. ரூ. 5,000 எனும் சொச்சத்தொகையைக்கொடுத்து தப்பித்துக்கொள்ளவேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தளவுக்கு மிகப்பெரிய கடல் மாசபாடு நேர்ந்துள்ளது. பெருந்தொகையான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவேளையில் அமைச்சர் வாசுதேவ ஏதாவது ஒருதொகை கிடைப்பதாக கூறினார். அரசாங்கம் அந்தளவு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. ஏதாவது ஒரு தொகை கிடைக்குமாயின் அனைத்துமே நாசமாகினாலும் பரவாயில்லை என்ற நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

உலகில் எந்தவொரு கப்பலும் மற்றுமொரு நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கையில் அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கும். கப்பலில் இருப்பவர்கள் யார், என்ன இருக்கின்றன, எத்தனை கொள்கலன்கள் இருக்கின்றன, இரசாயனப் பொருட்கள் மற்றும் வேறு பண்டங்கள் யாவை, கப்பலின் பணியாளர் எண்ணிக்கை யாது, எக்காலப்பகுதிக்குள் துறைமுகத்திற்கு வருவது போன்ற அனைத்து தகவல்களையும் அந்நாட்டுத் துறைமுகத்திற்கு வழங்கவேண்டும். இப்போது அது தெரியாது என அமைச்சர் கூறுவாராயின் அது தேசிய பாதுகாப்பிற்கு பாரதூரமான பிரச்சியனையாகும். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்யது அரசாங்கத்தின் பிரதானமான கடமையாகும். அதனை அரசாங்கம் முழுமையாகவே தவறவிட்டுள்ளது. இது அண்மையில் இடம்பெற்ற இரண்டாவது கப்பல் விபத்து ஆகும். கப்பலில் உள்ள பண்டங்கள் அழிவடைந்தால் காப்புறுதிக் கம்பெனியிடமிருந்து கப்பல் கம்பெனிக்கு நட்டஈடு கிடைக்கும். அதனால் எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கிடைக்கமாட்டாது. எமது நாட்டின் வான்படையை , கடற்படையை ஈடுபடுத்தி மேற்கொண்ட செயற்பொறுப்புக்கு ஏற்புடைய செலுத்துதல் மாத்திரமே கிடைக்கும். சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதம் பற்றிய சரியான மதிப்பீடு சகிதம்தான் அரசாங்கம் இந்த பிரச்சினையை நோக்குதல் வேண்டும். கொரோனா நிலைமைக்குள் இந்த கப்பலுக்கு வர இடமளித்து செய்துகொண்ட மற்றுமொரு முட்டாள்த்தனமான வேலைதான் இது. இப்போது நேரிடவேண்டிய சேதம் ஏற்பட்டுவிட்டது.

நாட்டு மக்களுக்கு பயணத்தடைகளை விதித்திருக்கையில் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் வியத்தகு அவசரத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. இந்த அவசரம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் காட்டப்பட்டிருந்தால் எங்கள் நாடு இந்த அனர்த்தத்தில் வீழ்ந்திருக்கமாட்டாது. இவையனைத்தும் நடந்துகொண்டிருக்கையில் மே மாதம் 05 ஆந் திகதி அமைச்சரவைக்கு வழமைபோல நாட்டின் வளங்களை சொச்சத்தொகைக்கு விற்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. செலென்திவா இன்வெஸ்ட்மன்ற் பிரைவேட் லிமிரெட் முதலீடுகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி எனும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் உட்பொருள் யாதெனில் செலென்திவா எனும் நிறுவனம் பொது திறைசேரியின் 100% பங்கு உரிமை கொண்டதாக அமைக்கப்படுவதாகும். அதன் பின்னர் செலென்திவா கம்பெனியுடன் இணைந்த மற்றுமொரு கம்பெனி அமைக்கப்படும் ஸ்பெஷல் பர்பஸ் வெஹிகல் என புதியதாக அமைக்கப்படுகின்ற கம்பெனியின் 49% பங்குகள் செலென்திவா கம்பெனிக்கு உரிமையாக்கப்படும். இந்த கம்பெனி ஊடாக நாட்டின் வளங்கள் விற்கப்படுவது முழுமையாகவே மேற்கொள்ளப்படும். அமைச்சரவைப் பத்திரத்தின் 2.4 பிரிவில் அது பற்றி முழுமையாக குறிப்பிடப்படுகின்றது.” மேற்சொல்லப்பட்ட நிர்வாகக் கம்பெனியின் சொத்துக்களின் பங்குகளில் 49% வரை முதலில் விடுவிக்கப்படுவதோடு அதன் நிர்வாகத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் தடுத்துவைக்கும்பொருட்டு விடுவித்த பங்குகளில் பெரும்பான்மைப் பங்குகள் செலென்திவா கம்பெனியால் வகிக்கப்படும்.” அதைப்போலவே 6 வது பிரிவில் “நீண்டகாலக் குத்தகை உரிமை அல்லது முகாமைத்துவ உரிமையை மாத்திரம் பிரத்தியேக உரிமையாளரொருவரிடம் கையளிக்கின்ற மாற்றுவழியைக் கடைப்பிடிக்கவும் செலென்திவா நிறுவனம் எதிர்பார்க்கின்றது, “ அதைப்போலவே 7 வது பிரிவில் “மிகவும் பொருத்தமான மூலதன கட்டமைப்பினை அடைவதற்காக கடன் அல்லது சரக்குமுதலை பொதுவாக விற்பனை செய்தல் ஆகிய இரண்டுக்கிடையில் பொருத்தமான வழிமுறையைப் பயன்படுத்தி அவசியமான நிதியங்கள் ஆக்கிக்கொள்ளப்பட உள்ளது.”

அதைப்போலவே “புதிய இணைந்த கம்பெனியின் பங்குகளை விநியோகிக்க அல்லது முதலில் செலுத்த செலென்திவா நிறுவனத்தினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் பரஸ்பர இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ள இயலும்.” எனக் கூறப்பட்டுள்ளது. எமது நாட்டில் வணிகரீதியாக மிகவும் பெறுமதிவாய்ந்த 1.7 ஏக்கர் காணியைக்கொண்ட கிறேன்ட் ஒரியன்டல் ஹோட்டல், 0.75 ஏக்கர் நிலப்பகுதியில் அமைந்துள்ள கபூர் கட்டிடம், 1.5 ஏக்கர் நிலப்பகுதிகொண்ட வெளிநாட்டு அமைச்சுக் கட்டிடம், 0.18 ஏக்கரில் அமைந்துள்ள பிரதம தபால் அலுவலகம், 1.37 ஏக்கரில் அமைந்துள்ள சீனோர் றெஸ்டுரன்ற் ஆதனம், 05 ஏக்கர்களைக்கொண்ட வோட்டர்ஸ் எஜ் கலப்பு அபிவிருத்தி எனப்படுகின்ற 11 ஏக்கர்களை விற்கத் தயார்நிலை காணப்படுகின்றது. அதைப்போலவே காங்கேசன்துறையில் அமைந்துள்ள சர்வதேச இணைப்பாக்க நிலைய நிலப்பரப்பு விற்பனைக்காக விடப்பட்டுள்ளது. எஸ்.பி.வீ. எனும் கம்பெனி இந்த விற்பனை செயற்பாங்கிற்காகவே உருவாக்கப்படுகின்றது. மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்கீழ் அனைத்து வரிச்சலுகைகளும் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் அவ்வாறுதான் சீனாவுக்கு கொடுக்கப்படுகின்றது. அதற்கு இணைான ஒரு நிலைமையே இதன் மூலமாகவும் வருகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலை சம்பந்தமாக தனிவேறான அமைச்சரவைப் பத்திரமொன்று இருக்கின்றது. அதுவும் மே 05 ஆந் திகதி கொரோனாவுக்குள்ளே கொண்டுவந்த ஒன்றாகும். மக்கள் மரண பீதியில் வாழ்கின்ற நிலைமையில் காணிகளை விற்பனைசெய்ய அமைச்சரவைப் பத்திரம் போடப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர்களை விற்று கிடைக்கின்ற பணத்தைக்கொண்டு களுத்துறையில் சிறைச்சாலையொன்றை அமைக்கப்போகிறார்கள். 30.6 பில்லியனைப்பெற எதிர்பார்ப்பதாக தெளிவாக குறிப்பிடப்படுகின்றது. 99 வருடங்கள், 198 வருடங்கள் என்ற காலப்பகுதிக்காக கொழும்பு நகரத்தின் பெறுமதிவாயந்த காணிகளை பிரத்தியேக கம்பெனிக்காரர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். ஐக்கிய தேசிய கட்சி விற்பவற்றையும் மீண்டும் எடுப்பதாக அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறியது. ஆனால் வந்ததும் உடனடியாக ஷெங்கிரில்லா ஹோட்டலுக்கு பின்னால் இருக்கின்ற காணியை சிங்கப்பூருக்கு விற்றார்கள். போர்ட் சிட்டி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுகையிலேயே அதற்கு இணையானதாக அமைச்சரவைப் பத்திரமொன்றை அங்கீகரித்துக் கொண்டார்கள். இந்த பாதையை அமைப்பது இந்த நாட்டின் வறிய மக்களுக்காகவா? இது பாரிய அநியாயம்.

சேனையை பாதுகாத்திடத்தான் வெருளியை நாட்டியதாக டை-கோர்ட் போட்டு காட்டுகிறார்கள். கொழும்பு வணிக நகரத்தின் காணிகளைப் பாதுகாத்திட செலென்திவா கம்பெனியை அமைக்கப்போவதாகக்கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒரு புறத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பதில் கிடையாது. அதன் மத்தியில் காணிகளை விற்கிறார்கள். மறுபுறத்தில் எங்கேயோ போகின்ற கப்பல்களை வரவழைத்து சுற்றாடலை நாசமாக்குகிறார்கள். பசளை கொண்டுவருவதை நிறுத்தி விவசாயிகளை பிரச்சினைக்குள் தள்ளிவிட்டு சேதனப் பசளை கொண்டுவருவதற்காக தனிவேறான மாபியாவை அமைக்கப் போகிறார்கள். முழுநாட்டு மக்களும் பிரச்சினைமீது பிரச்சினைக்குள் விழுந்து விட்டார்கள். எனவே இந்த அரசாங்கத்தின் முட்டாள்த்தனமான மற்றும் போக்கிரிகளை பாதுகாக்கின்ற தவறான கொள்கைக்கு எதிராக கவனத்தைச் செலத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதற்காக விழித்தெழுங்கள், எழுந்து வாருங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்........

போர்ட் சிட்டி சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டதும் உடனடியாக கொழும்பில் உள்ள காணிகளை விற்பதற்கான அமைச்சரவைப் பத்திரங்களை கெண்டுவருகிறார்கள். இவையிரண்டுக்கும் இடையில் இடைத்தொடர்பு உள்ளதென்பது மிகவும் தெளிவாகின்றது. திடீரென மக்கள் வங்கி தலைமையகம் அமைந்துள்ள இடம் மாற்றமடைவது, கிறேன்ட் ஒரியன்டல் ஹோட்டல், ஹில்டன் ஹோட்டல், பேரே வாவி சார்ந்த காணிகள், விஜேவர்தன மாவத்தையிலுள்ள காணிகள் துறைமுக நகரத்திற்கு இழுக்கப்பட்டு சீனக் கம்பெனியின் விருப்பு வெறுப்புகளுக்கு இவற்றையும் கொடுத்துத் தீர்ப்பதற்காகத்தான் தயாராகி வருகிறார்கள். அமைச்சரவைப் பத்திரம் மே 17 ஆந் திகதியே அங்கீகரிக்கப்படுகின்றது. போர்ட் சிட்டி சட்டம் 18 ஆந் திகதியே பாராளுமன்றத்திற்கு வருகின்றது, 20 ஆந் திகதி அங்கீகரித்துக் கொள்கிறார்கள். துறைமுக நகரச் சட்டம் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டதும் உடனடியாக அதனைச்சார்ந்த காணிகளை கம்பெனிகளுக்கு வழங்கவும் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரித்துக் கொள்ளப்படுகின்றது.

டொலர் வருவதற்கு இருந்த பிரதான வழிவகை எமது ஏற்றுமதியாகும். அதைப்போலவே ஏனைய விவசாய ஏற்றுமதிகள். பசளை இன்றி அவை வீழச்சியடைந்துள்ளன. எமது விவசாய உற்பத்திகளிலிருந்து அந்நிய செலாவணி ஈட்டப்பட இருந்த வழிவகைகள் வீழ்த்தப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தொழில்களிலிருந்து கிடைத்த வருமானமும் வீழத்தப்பட்டுள்ளது. தேசிய வளங்களை விற்காமல் நியாயமானவகையில் டொலர்களைத் தேடிக்கொள்ள இயலுமை நிலவுகையில் தீப்பற்றிய கப்பல்களிலிருந்து டொலர்களை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அரசரங்கம் வங்குரோத்து நிலைக்கு இலக்காகி இருக்கின்றது. அத்தகைய டொலர் நாட்டுக்குத் தேவையில்லை. எமது உற்பத்திகளிலிருந்து டொலர்களை ஈட்டுவதற்கான வழிவகைகள் இருக்கையில் எமது உற்பத்திகளை அழித்து சுற்றாடலையும் நாசமாக்கி பெறுகின்ற டொலர்கள் மக்களுக்கு பயனுள்ளவையாக அமையமாட்டாது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் தோழர் விஜித ஹேரத்

(ஊடக சந்திப்பு – மக்கள் விடுதலை முன்னணி – 2021.05.30 பத்தரமுல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com