Sunday, May 30, 2021

இலங்கையில் நாங்கள் யார்? – ஹட்டன் பிரவீனா

இலங்கை என்றால் இந்த உலகமே அறிவது வடகிழக்கு யுத்தத்தையும் யாழ்ப்பாணத்தவரின் வேறுபட்ட தமிழையும் தொனியையும் தான். அதையும் கடந்து இந்தியத்தமிழர் எனும் பெயரில் மலைகளுக்குள் சிக்குண்ட மலையகத்தமிழரெனும் இந்திய வம்சாவளித் தமிழரின் வரலாற்றை யாரும் திரும்பிப் பார்க்க நினைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்தியர்களுடன் நான் உரையாடல்களில் ஈடுபடுகையில் நீங்கள் இலங்கையர் என்பதை நம்பவே முடியவில்லை; “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் வருவது போல இலங்கைத் தமிழ் தென்படவில்லையே என்கின்றனர். நானும் பலருக்கு விளக்க முற்படினும் என்னால் ஓரிரு வரிகளில் எங்கள் வரலாற்றை வரையறுக்க இயலவில்லை என்பது உண்மை. இவ்வாறு அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாயடைத்துப் போகும் எங்களின் கோலமும் தான் என்ன?

இந்த உலகமே அதிகம் பேசியது வடகிழக்குத் தமிழரைப்பற்றித்தான். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தான் ஈழத்தமிழர் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் அதிர்வுகள் சற்று குறைந்திருக்கிறது. ஈழம் என்பது இலங்கை என அனைவராலும் கருதப்பட்டாலும் ஈழம் என்பது இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தையே குறிக்கும். ஈழத்தமிழர் எனும் வரையறைக்குள் நாங்கள் ஒருபோதும் அடங்குவதில்லை; அடக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதுமில்லை. நாங்கள் இலங்கைத் தமிழரா என்றால் அதுவும் இல்லை; எங்களது பிறப்புச்சான்றிதழ்களில்தான் ඉන්දියානු දෙමළ (இந்தியத்தமிழர்) என்று தெளிவாக அச்சுபொறிக்கப்பட்டுள்ளதே! அப்போது நாங்கள் யார்?

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத்தொழிலாளர்களும், அவர்களது வம்சாவளியினரும் “மலையகத்தமிழர்” எனும் பகுப்புக்குள் உள்ளடக்கப்பட்டாலும் இவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள் என்பதனால் “இந்தியத்தமிழர்” மற்றும் “இந்திய வம்சாவளித்தமிழர்” என்ற பகுப்புக்களுக்கே பொருத்தமானவர்களாவர்.

1820-1840 வரையான காலப் பகுதியில் தென்னிந்தியாவில் சாதிக்கொடுமையுடன் பஞ்சமும் ஓங்கி நின்றது. மக்கள் பட்டினியால் செத்து மடிந்த இந்த அவலமான சூழ்நிலையை பிரித்தானியர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அம்மக்களைக் கூலித்தொழிலாளர்களாக இலங்கையின் கண்டி சீமைக்கு அழைத்து வந்தனர். 1815 இல் கண்டி இராஜ்ஜியத்தைக் கைப்பற்றியிருந்த பிரித்தானியரின் ஆதிக்கம் மலையகமெங்கும் தழைத்தோங்கியது. பொருளாதார மற்றும் சாதித்துவ விடுதலை பெறுவதற்காக இந்திய மக்களும் பிரித்தானியனின் பசப்பு வார்த்தைகளை நம்பி இலங்கையை வந்தடைந்தனர். “தேயிலைக்கடியில் தேங்காயும் மாசியும் கிடைக்கும்” என்று நம்பிவந்த மக்களே இவர்கள். இது இடம்பெயர்வு என்பதைக்காட்டிலும் இது ஒரு வகையான புலப்பெயர்வேயாகும். இன்று வரை ஈழத்தமிழரின் புலப்பெயர்வைப் பற்றிப் பேசும் சர்வதேசம் ஏன் இந்த புலப்பெயர்வைப் புறக்கணித்தது?

அங்கிருந்து வந்த மக்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, நுவரெலியா, புஸ்ஸல்லாவை போன்ற பல்வேறு இடங்களிலும் தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டதோடு அடர்ந்த வனங்களையும் பெருந்தோட்டங்களாக மாற்றினர். சுரங்கங்களைக்குடைந்து ரயில் பாதைகளை உருவாக்கினர். மலைகளைக்குடைந்து சாலைகளை உருவாக்கினர். மழையிலும் வெயிலிலும் புழுப்பூச்சிக்களுக்கு கடியுண்டு பசியிலும் பட்டினியிலும் நாளுக்கு 12 மணி நேரம் வலுக்கட்டாயத்தில் உழைத்தார்கள். மலையகத்தமிழர் எனக்கூறப்படும் இவர்களே இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச்சுமந்தனர். ஆனால், இலங்கையர்கள் இவர்களை கள்ளத்தோணி, வடக்கத்தியான், தோட்டக்காட்டான், பறத்தமிழன் என்றெல்லாம் பல வசைச்சொற்களைக் கூறி இழிவுபடுத்தி, இந்திய வம்சாவளித்தமிழரை நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமென எண்ணினார்கள்.

மலையகத்தமிழரின் சோக வரலாறு வெளித்தெரியாமல் புதையுண்டு போனது. இது இலங்கையர், இந்தியர் இரு தரப்பினராலும் பேசமறுக்கப்படும் சோகக்கதை. இவர்களது நடைப்பயணத்தின் போது பலர் இறந்து போயினர். தோணிகளில் அதிகம் பேரை ஏற்றிச்சென்றதால் பல பேரை கடல் காவுகொண்டது. இலங்கைக்கரையைச் சேர்வதற்கு முன்னாலேயே பலநூறு இந்தியத் தமிழர்கள் மாய்ந்து போயினர். வரும் வழியிலும் வந்து குடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான துயரங்களை எதிர்க்கொண்டனர். இவ்வாறு துயர்சுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் மலையகத்தமிழர் என்றும் இந்திய வம்சாவளித்தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தமிழகத்திலிருந்து தமிழர்களுடன் தெலுங்கர், மலையாளிகளும் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிறுபான்மையினராக இருந்த காரணத்தினால் அவர்களும் தமிழ்பேசக்கற்று தமிழராகவே உருமாறினர்.

உரிமையற்று வாழ்ந்த இவர்களுக்கு 1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வழங்கப்பட்டபோதிலும் பின்னரே கொண்டுவரப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் மற்றும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஆகிய பிரஜாவுரிமை சட்டங்களால் அவ்வுரிமையும் பறித்துக்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் இந்திய வம்சாவளித்தமிழர்கள் இந்தியாவிற்கே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒரு தொகையினர் விரும்பி வெளியேறினர். லட்சக்கணக்கானோர் வெளியேறிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலர் இந்தியாவிற்கே நாடு கடத்தப்பட்ட அவலமும் வரலாற்றில் இருக்கிறது. இது தொடர்பாக மலையக இலக்கியங்களில் பதிவாகியிருக்கின்றமையைக் காணமுடியும். 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமை சட்டத்தின் படி இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் இலங்கைக் குடியுரிமைக்கு உரித்துடையவரென்று வரையறுக்கப்பட்டது. போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பலர் “நாடற்றவர்” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின் பெருமளவு இந்தியத்தமிழரை இலங்கையிலிருந்து வெளியேற்ற இலங்கை அரசு முயற்சித்தது. இதன்படி 525,000 பேரை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இச்சமயம் இந்தியக்குடியுரிமை பெறுவோர், இலங்கைக்குடியுரிமை பெறுவோர், நாடற்றோர் என இவர்கள் மூன்றாகப் பாகுபடுத்தப்பட்டனர். 1958ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் பிரகாரமே நாடற்றவர்களாகக் கருதப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அதன்பின்பே இவர்கள் “நாடற்றவர்” என்ற பதத்திலிருந்து விடுபட்டனர். அவ்வகையில் தோட்டப்புற மக்களும் வாக்குரிமை பெற்று இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றனர்.

இன்னும் மலையக வரலாற்றையும் இந்திய வம்சாவளித்தமிழரின் சோகக்கதையையும் கூறமுற்படின் பலநூறு பக்கங்களில் எங்கள் வலிகள் பதிந்துகொண்டே செல்லும். கல்லுமுள்ளாகவும் காடுமேடாகவும் குன்றும் குழியுமாக கிடந்த மலைநாட்டை தங்கள் வியர்வையால் செதுக்கி அழகிய வளமிகு பூமியென மாற்றியதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையையும் பொருளாதாரத்தையும் விருத்தி செய்து கொடுத்த எங்கள் முன்னோர்களாகிய இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களைக் கடந்தனர் என்பது சொல்லொணாத்துயராகும். ஆயினும், 21ஆம் நூற்றாண்டில் இன்றுவரை இந்நிலைமை முற்று முழுதாக மாறவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மைதான்.

இப்படிப்பட்ட எங்களை ஏன் இந்த உலகமே மறந்து போனது! எங்களுக்கு இலங்கைக்குடியுரிமை இருக்கிறது என்பது மட்டும் தானே நிதர்சனம். எம் இளைஞர்கள் ஊடகத்துறைத் தொழிலுக்கு விண்ணப்பித்தால் நேர்முகத்தேர்வில் இந்தியத்தமிழ் பேசுவதால் நிராகரிக்கப்படும் கொடுமை இன்றுவரை நடந்துகொண்டுதானே இருக்கிறது. வடகிழக்கு யுத்தத்தின் கோரத்தில் அங்குமிங்கும் அலையோடித் திரிந்த பலபேருக்கு இந்த மலையகம் புகலிடம் கொடுத்து வாழ்வுமளித்தது. அவர்கள் நன்கு கல்வி கற்று தொழில் புரிந்து கைநிறைய சம்பாதித்து பலவருடகாலமாக மலையகத்தின் மடியில் கிடந்தார்கள். ஆனால் இன்றோ யுத்தம் நிறைவடைந்துவிட்டது என அனைவரும் தாய்மண்ணுக்கே திரும்பிவிட, எம் மக்கள் மாத்திரம் இன்னும் தேயிலைச்செடிகளுக்கு உயிரூட்டிக்கொண்டு தோட்டக்காட்டான்களாகவே தேயிலை மலைகளில் அடிமைகளாய்…

நன்றி.

No comments:

Post a Comment