Wednesday, May 19, 2021

புளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சுகளாக இருக்கின்ற இக்கொலைகள் தொடர்பில் அ வ்வியக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தங்களது அனுபவங்களை எழுதி வருகின்றனர். இந்த மௌன விரத கலைப்பின் வழியே தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும் , உமா மகேஷ்வரனின் விசுவாசியாகவுமிருந்து சங்கிலி எனப்படும் கந்தசாமியின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவருமான அஷோக் தனது அனுபவங்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

அஷோக்கின் பதிவில் அவ்வியக்கத்தின் பெண்களணியின் முக்கிய உறுப்பினரான ரீட்டா என்பவர் பாண்டி என்பவரால் கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னிக்கப்பட முடிமயாத இக்கொடுஞ்செயல் தொடர்பான தொடர் விவாதத்தின் பொருட்டு அஷோக்கின் பதிவினை இங்கே முழுமையாக பதிவு செய்கின்றோம்.

எமது போராட்ட வாழ்வு, கசப்பான அனுபவங்களையும் -வேதனைகளையும் கொண்டிருந்தபோதிலும், இந்த வாழ்வுதான், எம் சிந்தனைகளையும், எம் திசையையும் வளமாக்கியதென்பதை நாம் எப்போதும் மறக்கமுடியாது.

அரசியல்- சமூக மனிதனாக, எம் பலரை புடம் போட்டதில் போராட்ட வாழ்விற்கு நிறைய பங்குண்டு.

நான், தமிழ் ஈழமக்கள் விடுதலைக்கழகம் என்ற 'புளொட்டின்' மத்திய குழு உறுப்பினராகவும், தள மாணவர் அமைப்பினதும், தொழிற்சங்க அமைப்புக்களினதும் பொறுப்பாளராகவும் இருந்தேன்.

புளொட்டில் நடைபெற்ற அனைத்து தவறுகளுக்கும், நான் தார்மீக பொறுப்பினை ஏற்றுக்கொள்பவனாகவும், அவற்றிற்கு பொறுப்பு கூறவேண்டியவனாகவும் இருக்க வேண்டுமென்பதை, ஏற்றுக்கொண்டே வந்துள்ளேன். ஆனால், பல தவறுகளுக்கு உடந்தையானவர்கள் புகலிடம் வந்த பின், தங்களது பிழைப்புவாத- வணிக மயப்பட்ட அயோக்கியதனங்களால் சகல சௌபாக்கியங்களும் பெற்ற பின், இன்று இவர்களுக்கு, தங்களின் இத்தகைய பிழைப்புவாத செயற்பாடுகளை மறைப்பதற்கு ,அரசியல் சமூக அடையாளம் ஒன்று தேவையாக இருக்கின்றது.

எந்தவித அரசியல் - சமூக முற்போக்கு நலன்களின் மீதோ , மக்கள் மேம்பாட்டிற்குரிய எந்த செயற்பாடுகளும் இன்றி, "பொருளாதாரமே" தம் வாழ்வு என்று எண்ணி வாழும் இவர்களுக்கு, புளொட்டை விட்டால் வேறு அடையாளம் கிடைப்பது அரிதாகின்றது.

எனவே ,புளொட் அடையாளத்துக்கு ஊடாக தங்களைப் புனிதப்படுத்த, ஏனைய தோழர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றனர்.

உண்மையில், நான் கடந்த கால கசப்பான கொடும் துயர்கொண்ட நினைவுகளை மறக்கவே முயன்றுவருகின்றேன்.அவை எனக்கு மனச் சிக்கல்களையும், உளச்சோர்வையும் தருபனவாக இருக்கின்றன. எனது இயக்க வரலாற்றை எழுதும்படி பல தோழர்களும்- நண்பர்களும் வற்புறுத்துகின்றபோதெல்லாம், அவற்றை தவிர்த்தே வந்துள்ளேன்.

வரலாறு என்பது, உண்மையோடும் - நேர்மையோடு இருத்தல் வேண்டும் ,இருண்ட பக்கங்களை மறைத்தல் என்பது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் என்பது எனது எண்ணமாக இருந்தது.

அத்தோடு, என் வரலாற்றை எழுதுவதானால் இருண்ட பக்கங்களிலிருந்து தொடங்காமல், முதலில் புளொட்டின் ஆரோக்கியமான பக்கங்களிலிருந்து தொடங்க வேண்டுமென்றே எண்ணியிருந்தேன் . இன்று, நேசன் போன்ற பேர்வழிகளின் திட்டமிட்ட அவதூறுகளும்- பொய்களும் புனைவுகளும், என் வரலாற்றை இருண்ட காலங்களில் இருந்து தொடங்க நிர்பந்தித்துள்ளது.

இருண்ட துயர்கொண்ட பக்கம் - 01 தோழி ரீட்டா மீதான பாலியல் வல்லுறவு.

புளொட் தலைமையின் அராஜக போக்குகளினாலும், படுகொலைகளினாலும், தன்னிச்சையான போக்குகளினாலும் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளினால் , பின் தளத்திலும் -தளத்திலும் பல தோழர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

தளத்திற்கு பொறுப்பாக இருந்த மத்திய குழு உறுப்பினர்களான நானும், தோழர்கள் குமரன், முரளி ,ஈஸ்வரன் ஆகிய நாலுபேரும் வெளியேறுவதில்லையெனவும், உள்ளிருந்தே உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுப்பதெனவும் உறுதியாக இருந்தோம்.

நாம் வெளியேறும் பட்சத்தில் எம்மால் பின் தளம் இந்தியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம். அத்தோடு இத்தோழர்களையும் ,தளத்தில் எம்மை நம்பி போராட்டத்திற்கு வந்த தோழர்களுக்கு பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் நிற்கவேண்டியது எமது தலையாய கடமை என உணர்ந்தோம்.

எனவே, புளொட்டின் மாணவர் அமைப்பு ,தொழிற்சங்க அமைப்புக்கள் ,மகளீர் அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் போன்றவற்றின் எமக்கு நம்பிக்கையான தோழர்களோடு, புளொட்டிற்குள் நாங்கள் நடாத்த முயலும் உட்கட்சி போராட்டம் பற்றியும், இது தொடர்பாக ஒரு தள மகாநாடு நடாத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசித்தோம். அனைவரும் உறுதியோடும் நம்பிக்கையோடும் எம் பக்கம் இருந்த காரணத்தினால், இதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யத் தொடங்கினோம்.

புளொட்டின் தளஇராணுவப் பொறுப்பாளராக உமா மகேஸ்வரனினால் ,மென்டிஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். எனினும் ,மென்டிசுக்கும் உமா மகேஸ்வரன் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தன.

நாங்கள் நடத்தப்போகும் தள மகாநாடு பற்றி மென்டிசோடு உரையாடியபோது, தான் இதில் நேரடியாக சம்பந்தப்பட விரும்பவில்லை என்றும், உட்கட்சி போராட்டத்திற்கும்- தள மகா நாட்டை நடத்துவதற்கும் தான் மறைமுகமாக புரண ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்தார்.

இக் காலகட்டத்தில், யாழ்ப்பாண மக்கள் அமைப்பின் பொறுப்பாளர்களாக இருந்தவர்களில் நேசனும் , ஜீவனும், மற்றும் பாண்டி என்பவரும் புளொட்டைவிட்டு வெளியேறியிருந்தனர்.

இவர்களைப்போல், வேறு சில தோழர்களும் வெளியேறி இருந்தனர் .எனினும், ஏனைய அனைத்து தோழர்களும் தள மகா நாட்டை நடாத்தி புளொட்டை சீரமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருந்தனர்.

தளத்திலிருந்த நாங்களோ, தள இராணுவப் பொறுப்பாளராக இருந்த மென்டிசோ இந்த வெளியேற்றங்களுக்கு எந்தவிதத்திலும் தடையாக இருந்ததில்லை.

நேசனும், ஜீவனும் ,பாண்டியும் வெளியேறிய சில நாட்களின் பின், மகளீர் அமைப்பில் வேலை செய்யும் தோழி ரீட்டா, கண்களும்- கைகளும் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றின் மூலம் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.

கொடுமையான இந்த சம்பவம் ,எங்கள் மத்தியில் கடும் தாக்கத்தை கொடுத்தது.

கடத்தி, பாலியல் வல்லுறவு செய்த கொடியவர்களில் ஒருவர் நேசன், ஜீவனோடு வெளியேறிய பாண்டி என்பது, அவரின் குரல் மூலம் தோழி ரீட்டாவினால் அடையாளம் காணப்பட்டது.

வெளியேறிய பாண்டி மீது, கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறிவிடுவதாக பெண்கள் அமைப்பைச்சேர்ந்த தோழிகள் அனைவரும் கூறினர். அத்தோடு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கடும் மன உளைச்சளோடும் ,பயத்தோடும் காணப்பட்டனர் .

எமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதன் பின்னர், இராணுவப் பொறுப்பாளரான மென்டஸ் இந்த கொடிய செயலுக்கு காரணமான பாண்டியை கைது செய்யவேண்டுமென்பதில் தீவிரமானார். பாண்டியோடு, நேசனும், ஜீ வனும் வெளியேறிருந்தமையால் இவர்களும் தேடப்படலானார்கள்.

தோழி ரீட்டா உடல் ரீதியாகவும் , உளரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தார். யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடமை ஆற்றிய புளொட் அமைப்பிற்கு நெருக்கமான வைத்தியர் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்ட தோழி ரீட்டா ,சில மாதங்களின் பின் அவரின் குடும்பத்தினரால் பிரான்சிற்கு அனுப்பப்பட்டார்.

இதன் பின்னான காலங்களில், என் வாழ்வும் -சோகங்களும் பலதையும் மறக்கச் செய்திருந்தன. சில காலங்களில் பின் , அகதியாய் நான் பிரான்சில் தஞ்சம் புகுந்தேன். சில வருடங்களுக்கு முன், யாழ்ப்பாணத்தில் புளொட்டிற்கு உதவி செய்த குடும்பமொன்றின் நட்பு இங்கு கிடைத்தது. ஒரு நாள், அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தேன். உரையாடலின்போது புளொட்டில் இருந்த ரீட்டாவை எனக்கு தெரியுமாவென வினவினர் .

நான் மறந்துவிட்டதாக நினைத்திருந்த தோழி ரீட்டாவும், அந்த கொடுந்துயர் நிகழ்வும் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது. நான் தெரியுமென்றும், எப்படியிருக்கிறார்கள் எனவும் சுகம் விசாரித்தேன். ரீட்டா தங்களின் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பதாகவும், திருமணமாகிய சில காலங்களில் கடுமையான மனசிதைவுக்கு உட்பட்டதாகவும், தற்போது குடும்பமும் பிரிந்துபோய் ,தற்போது மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன். சில காலங்களில் பின், இக் குடும்பத்தினர் வேறொரு நாட்டிற்கு இடம் மாறியதினால் ,தோழி ரீட்டாவைப் பற்றி அறிய முடியவில்லை . நானும் மறந்திருந்தேன். சமீபத்தில், ஒரு நண்பர் ஊடாக செய்தி அறிந்தேன். தோழி ரீட்டா கடும் மனச் சிதைவினால் ஆரோக்கியம் அற்று காலமாகிவிட்டதாக.

இதுதான் எமது போராட்டம், தோழர்கள் மூலம் பெற்றுத்தந்த விடுதலை.. !

1 comment:

  1. அசோக் கண்ணா ரிட்டா அக்காவுக்கு நேர்ந்ததாக நீங்கள் கூறும் விடயம். உண்மையாகவே இருந்தால் தமிழில மாணவர் பேரவையின் தீவிர செயற்பாட்டளாராக இருந்தவன் என்ற வகையில் மிகவும் வருத்தமடைகிறேன். ஆனாலும் இந்த விடயத்தை கூறுவதற்கு 34 வருட காலம் நீங்கள் உறங்கி கொன்டு இருந்தது அதை விட வேதனையாக இருக்கின்றது உங்களுடன் நன்கு பழகியவர் என்ற வகையிலும் என்னோடு நட்பாக நீங்கள் பழகியவன் என்ற வகையிலும் உங்களுக்கு சில விசயங்களை கூற விரும்புகின்றேன். அண்ணா நீங்கள் தமிழில மக்கள் விடுதலை கழகத்தின் (plots) மத்திய செயற்குழு உறுப்பினராக செயற்பட்ட காலங்களில் தழிழில மாணவர் பேரவைக்கு உங்களை பொருப்பாளராக யார் நியமித்தது ஆனாலும் செல்வி அக்காவின் விசுவாசத்துடன் நம்பிக்கை வைத்திருக்கின்ற நான் உங்களை தாக்க விரும்பவில்லை தனி மனித வாழ்வில் ஒழுக்கசிலராய் இருந்த உங்களுடன் பழக கிடைத்தது கொடையாகவே கருதுகின்றேன். தளத்திற்கு தமிழனும் பின் தளதத்திற்கு அசோக்கும் (நீங்கள் இல்லை) இருந்த காலங்களில் தளத்திற்கும் பின் தளத்திற்கும் தமிழில மாணவர் பேரவையின் தொடர்பாடலாகவும் பொறுப்பாளராகவும் இருந்தவன் நான் என்பதை நீங்கள் மறந்திருக்கலாம். பின் தள மாநாட்டில் உங்களின் உசுப்பேத்தலில் பரந்தன் ராஜனை உங்கள் கைவசமாக்கி ; பெரிய செந்தில் , சின்ன செந்தில் பாபுஜி போன்ரோரை கையக படுத்தி இயக்கத்தை சிதைக்க வைத்ததை ஒத்து கொள்ளுங்கள் உங்களை தேடி வந்து சங்கிலியன் என கூறபட்ட கந்தசாமி உங்களை சுட்டாரா அல்லது நீங்கள் வெள்ளை கலர் காரிலே உமா மகேஸ்வரன் , வாசுதேவா, கண்ணன் போன்ரோரை போட்டு தள்ள வந்த நேரம் பாதுகாப்பு கடைமையில் இருந்த போராளிகள் எதிர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் உங்கள் தொண்டையில் குண்டு பாய்ந்து நீங்கள் வைத்திய சாலையில் அனுமதித்த போது முதல் முதலாக வந்து பார்த்தவன் நான் என்பதை மறந்து விட்டீர்களா! தமிழில மக்கள் விடுதலை கழகத்தை சிதைத்த பெருமைக்குரியவனாகிய நீங்கள் எத்தனை கொலைகளுக்கு நீங்கள் சம்மந்தம் இதை அறியாதவர்கள் பலர் இருக்கின்றனர் என்னை போன்று சிலர் இருக்க தான் செய்கின்றனர். ஜென்னி அக்கா எழுதிய கழகத்தின் என் சாட்சியம் என்ற ஒரு விடயத்தில் என் அன்புக்கும் மரியாதைக்கும் என்று உரித்தான செல்வி அக்காவின் சில விசயத்தை குறிப்பிட்டு இருந்தார் அண்ணா தயவு செய்து உண்மைகளை உரத்து கூறுங்கள் 14 ஆயிரம் போராளிகளை கொன்டு இருந்த தமிழ மக்கள் விடுதலை கழகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி சீரழித்த ஒரு துரோகியாக அசோக் என்று கூறப்படும் யோகன் கண்ணமுத்துவை உங்கள் வீட்டு கண்ணாடியில் நின்று பாருங்கள் உங்களுக்கு புரியும் நீங்கள் யார் என்று கண்ணாடி பேட்டிக்குள் பதுங்கி கொண்டு கல் எறிய வெளிக்கிட்டால் பாதிப்பு யாருக்கென்பது உங்களுக்கு நன்றாகவே புரியும் என்றென்றும் உங்கள் அன்பு தோழன் எஸ் . எஸ் கணேந்திரன் ( வாசுதேவாவின் மருமகன்)

    ReplyDelete