இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும், தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று 26.07.1957 அன்று பண்டாரநாயக்கவுக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தப் பிரகாரம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்காக வடக்கு கிழக்கில் பிராந்திய சபைகள் அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அந்த ஒப்பந்தமே வரலாற்றில் “பண்டா – செல்வா” ஒப்பந்தம் எனக் குறிப்பிடப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விபரங்கள் வருமாறு:
1. பிராந்திய சபைகளின் எல்லைகள் - சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும்.
2. வட மாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளாகவும் அமையும்.
3. மாகாண எல்லைகளையும் தாண்டி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் ஒன்றிணைவதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிராந்திய சபை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இடமிருக்கும். இரண்டு அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகளுக்கு பொதுவான நோக்கங்களும், அவை சேர்ந்து செயற்படவும் சட்டத்தில் இடமிருக்கும்.
4. பிராந்திய சபை உறுப்பினர் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்கு தொகுதி நிர்ணயக் குழுவோ, குழுக்களோ அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பிராந்திய சபையின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் - பிராந்திய சபைத் தலைவராவதற்குத் தகுதி பெறுவது பற்றி ஆலோசிக்கப்படும்.
5. அதிகாரங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டு சட்டத்தில் வயைறுக்கப்பட வேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடித்துறை, வீடமைப்பு, சமூகசேவை, மின்சாரம், தண்ணீர்த் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளடங்கலாக குறிப்பிட்ட விடயங்கள் - பிராந்திய சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டுமென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும்.
6. குடியேற்றத்திட்டங்களைப் பொறுத்தவரை, தமது அதிகார எல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டிய குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய ஆட்களைத் தெரிவு செய்வதும் பிராந்திய சபைகளின் அதிகாரத்துக்குட்பட்டதாகவும் இருக்குமென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது கல்லோயா அபிவிருத்திச் சபையினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின் நிலை ஆராயப்பட வேண்டியது.
7. சட்டமூலத்தில் பிரதேச சபைகளையொட்டி உள்ளுராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை மாற்றித் தேவையான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு அவ்விதிகள் திருத்தப்படும்.
8. பிராந்திய சபைகளுக்கு மத்திய அரசாங்கம் மொத்தமாக நிதி வழங்கும். அத்தொகை பற்றி கணக்கிடப்பட வேண்டிய கொள்கைகள் பின் ஆராயப்படும். பிராந்திய சபைகளுக்கு வரி விதிக்கவும், கடன் வாங்கவும் அதிகாரமிருக்கும்.
ஒப்பம்: எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க (இலங்கை பிரதமர்)
ஒப்பம்: எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தலைவர், இலங்கை தமிழரசுக்கட்சி)
திகதி: 26.07.1957
•
பாருங்கள், தமிழர்களுக்கு எவ்வளவு அதிகாரங்கள் உள்ள பிராந்திய சபைகள் அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிராந்திய சபைகள் ஒன்றிணைந்து (வடக்கு கிழக்கு இணைப்பாக) செயற்படவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இப்பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்கின்ற முஸ்லீம் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு (உள்ளக சுயாட்சி) வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டால், பிராந்திய சபைகளைப் பிரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, காணி அதிகாரம், வரிவசூலிக்கும் அதிகாரம், கடன் பெறும் அதிகாரம், முழுமையான பிராந்திய அபிவிருத்தி அதிகாரம் என்பன கூட வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு உடன்படிக்கையை “பண்டாரநாயக்க தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார்” என்று சொல்லி ஐ.தே.க. பௌத்த குருமார் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்தது. இந்த இடத்தில் பண்டாரநாயக்கவின் கரங்களைப் பலப்படுத்தியிருக்க வேண்டிய தமிழரசுக் கட்சியினர் சும்மா குந்தியிருந்து வேடிக்கை பார்த்தனர்.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் முயற்சியால் ஜே.ஆர். – ராஜீவ் ஒப்பந்தத்தின் மூலம் இன்னொரு அதிகாரப் பகிர்வாக மாகாண சபைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது, “அதிகாரம் போதாது” எனக்கூறி அதையும் தமிழ் தலைமை நிராகரித்தது. பிரோமதாசவும் புலிகளும் இணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை இயங்கவிடாமல் முடக்கியபோது அதையும் தமிழ்த் தலைமை வேடிக்கை பார்த்து நின்றது.
அதுமட்டுமா, 2000 ஆண்டில் ஏறத்தாழ சமஸ்டிக்கு நிகரான தீர்வுத்திட்டம் ஒன்றை சந்திரிகா குமாரதுங்க முன்வைத்தபோது தமிழ்த் தலைமை ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவாதக் கட்சிகளுடன் இணைந்து அதையும் நடைமுறைப்படுத்தவிடாமல் குழப்பியது.
இப்படி வந்த நல்ல தீர்வுத் திட்டங்கள் எல்லாவற்றையும் சிங்கள இனவாத சக்திகளுடன் சேர்ந்து நின்று குழப்பிய வங்குரோத்துத் தமிழ் தலைமை, இன்று “மாகண சபைகளை ஒழிக்க விடமாட்டோம்” என போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இவர்களது இந்த தமிழின விரோத நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டாவது எமது தமிழ் மக்கள் கண் திறக்கமாட்டார்களா?
No comments:
Post a Comment