Wednesday, March 17, 2021

இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு-சிறிமதன்

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.

குறிப்பாக இலங்கையில் மாத்திரமின்றி தென்தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிக்கான ரசிகர்கள் ஏராளம். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, இலங்கை வானொலியின்; தமிழ்ச்சேவை நிகழ்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்களும் இருந்தன.

அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் 'பொங்கும் பூம்புனல்' நிகழ்ச்சியில் இனிமையான உள்நாட்டுப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நாட்கள் நினைவை விட்டு நீங்காதவை.

அதாவது காலையில் சுப்ரபாதமாகவும் இரவு தூங்கப்போகும்போது கேட்கும் தாலாட்டாகவும் இருந்தது இலங்கை வானொலிதான். அவர்களது வாழ்க்கையோடு ஒன்றிணைந்து கலந்து வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது இலங்கை வானொலி என்பதை மறுக்கவே முடியாது.

அரச வானொலிகளில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலி வரலாறு, பின்னரான காலத்தில் தனியார் வானொலிகளும் வரலாற்று களத்தில் இடம்பிடித்திருந்தன. தனியார் வானொலிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, 2 தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான தமிழ் தனியார் வானொலிகளே காணப்படுகின்றன.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் வானொலிகள் பல தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாக கொண்டு இன்றளவும் பயணித்து வருகின்றது. ரசிகர்களை கவரும் நோக்கிலான நிகழ்சிகளோ அல்லது சமூகம் சார்ந்த நிகழ்சிகளோ இல்லாமல் வெறும் கேளிக்கை நிகழ்வுகளை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளன.

தனியார் வானொலிகள் தங்களுக்குள்ளான வர்த்தக போட்டியை மையமாக கொண்டு இன்று பரிசு என்ற போர்வையில் மக்களுக்கு பணம் கொடுத்து தங்களது வானொலியை கேட்கவைக்கின்றார்கள்.

இலங்கையில் தற்காலத்தில் தனியார் வானொலிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது இணைய வசதியுடன் ஒரு தொலைபேசி இருந்தால் உடனே ஒரு ஒன்லைன் ரேடியே உருவாக்கலாம் என்ற வசதி வந்துவிட்டது.

எது எப்படியாகினும் எத்தனை வானொலிகள் உருவாகினாலும் மக்களுக்கு சமூகம் சார்ந்த நிகழ்சிகளை வழங்ககூடிய வானொலிக்கான வெற்றிடம் இன்றளவும் காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் அறிவிப்பாளர்கள் என்றால் சிறந்த குரல்வளம், சரளமான மொழியாற்றல், படைப்பாற்றல், நகச்சுவை உணர்வு, குரல் கட்டுப்பாடு, மொழி உச்சரிப்பு போன்றனவே பிரதான தகமைகளாக கருதப்பட்டன. ஆனால் இன்றைய வானொலி அறிவிப்பாளர்களுக்கான தகுதி ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது, பிறமொழி கலப்புக்களை உச்சரிப்பது, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் நேரலைகள் செய்வது போன்றனவே இன்றைய அறிவிப்பாளர்களுக்கான பிரதான தகுதிகளாக காணப்படுகின்றன.

மகிழ்வூட்டல், அறிவூட்டல், அறிவுறுத்தல், தெரிவித்தல், விலையாக்கல் ஆகியன வானொலியின் இன்றியமையாத இலக்குகளாகும்.

நீண்ட நேரம் பார்த்தால் கண் வலிக்கும்! பேசினால் வாய் வலிக்கும்! முகர்ந்தால் மூக்கு வலிக்கும்! நடந்தால் கால் வலிக்கும்! எழுதினால் கை வலிக்கும்! ஆனால் எவ்வளவு நேரம் கேட்டாலும், காது வலிக்காது! ஏனெனில் அது வலிமையுடையது. மனிதனின் இரண்டு காதுகளும் இரு வேறு திசைகளை நோக்கி இறைவன் படைத்திருப்பதன் நோக்கமே நல்ல செய்திகளையும், தகவல்களையும், அருளுரைகளையும், இனிய பாடல்களையும், எளிய உரையாடல்களையும் உள்வாங்கி மூளைக் கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்!

ஆனால் இன்றைய வானொலிகள் பல பக்கச்சார்பான செய்திகள், மக்களை எரிச்சலூட்டும் நிகழ்சிகள், என்பனவற்றை வழங்குகின்றன அதனைவிடவும் நிகழ்ச்சிகளை விட விளம்பரங்களே இன்று வானொலிகளை அதிகளவு அலங்கரிக்கின்றன.

எண்ணற்ற மக்களின் தனிமையைப் போக்கும் உற்ற நண்பனாக, அறிவுரை அருளும் ஆசானாக, மகிழ்வூட்டும் பல்வகை நிகழ்ச்சிகளைக் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் கலைஞனாக, பன்னாட்டுச் செய்திகளையும், தகவல்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்கும் தெரிவிப்பியல் வல்லுனராக, பல்பொருள்களின் தரத்தையும், திறத்தையும் அறியும் வகையில் எளிய நடையில், இனிய முறையில் எடுத்துச் சொல்லும் பன்முகப் பரிமாணம் மிக்க பல்கலை வித்தகனாக விளங்குவதுதான் வானொலி! அதை சரியான முறையில் தனக்கென உரிய பாணியில் வெளிப்படுத்திய பங்கு இலங்கை வானொலியையே(ரேடியோ சிலோன்) சாரும்.

வானொலியின் இன்றியமையாத நோக்கமே மக்களின் மனமகிழ்ச்சிக்கும், உடல் நலத்திற்கும், உள்ள வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், புத்தெழுச்சிக்கும் பல்வகை நிகழ்ச்சிகளைப் பாங்குடன் வழங்க வேண்டும் என்பதுதான். அதேபோல் ஒரு தேசத்தின் குரலாக, நாட்டின் குரலாகச் செயல்படும் ஒப்பற்ற ஊடகமாக இலங்கை வானொலிகள் திகழவேண்டும் என்பதுதான் தமிழ் வானொலி இரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

-சிறிமதன்

No comments:

Post a Comment