Monday, March 8, 2021

சர்வதேச பெண்கள் தினத்தில் சக ஊழியருக்கு நீதிகேட்டு பிரதேச செயலரை திணறடித்த கிராமசேவகர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீச்சுக்கல்முனை கிராமசேவையாளராக கடமைபுரியும் பெண் கிராமசேவை உத்தியோதித்தர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியொன்று இடம்பெற்றிருந்தமையும் அது தொடர்பான விசாரணைகளை கிடப்பில்போட்டு குற்றவாளியை காப்பாற்றுவதற்காக மண்முனை வடக்கு பிரதேச செயலர் முனைந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் வைரலாகியிருந்தது.

குறித்த பெண்ணுக்கு நியாயம் வேண்டி மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளோ , சமூக சேவகர்கள் என தங்களை அழைத்துக்கொள்கின்றவர்களோ அன்றில் பெண்ணுரிமை அமைப்புக்களோ முன்வரவில்லை என சாடப்பட்டுவரும் நிலையில் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் நீதிக்கான கேள்விக்கணைகளை தொடுத்து திணறடித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் சக கிராமசேவகரான செல்வி கிறிஸ்ரினா.

இன்று பிரதேச செயலகத்தில் கிராம சேவகர்களுடனான சந்திப்பின்போதே செல்வி கிறிஸ்ரினா வாசுதேவனின் போலிவேஷத்தை கலைதெறிந்துள்ளார். பாதிப்புக்குள்ளான கிராமசேவகருக்கு நீதிதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது பிரதேச செயலரின் கடமை என கிறிஸ்ரினா வலுயுறுத்தியபோது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நழுவிச்செல்ல முற்பட்ட வாசுதேவனை நிறுத்திவைத்து தாமதிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நிதிக்கு சமமானது என எடுத்துரைத்துள்ளதுடன் குறுகிய காலத்தினுள் சக ஊழியருக்கு நீதி கிடைக்கப்பெறவேண்டும் எனவும் இடித்துரைத்துள்ளார்.

அலுவலகத்தில் பட்டப்பகலில் இடம்பெற்ற மேற்படி பெண் மீதான வன்செயலுக்கெதிராக குரல்கொடுக்க வக்கற்ற அரசியல் கட்சிகள் இன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியிருப்பது நகைப்புக்கிடமானதாகும். பெண்கள் மீதான வன்முறையாளனை தனது அதிகாரத்தை கொண்டு காப்பாற்ற முனையும் வாசுதேவன் அரசியல் கட்சிகளால் ஆசீர்வதிக்கப்படுவதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

தண்டனைகளிலிருந்து தன்னை தப்புவித்துக்கொள்வதற்காக வாசுதேவன் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வியாளேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் சரணாகதியடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாசுதேவன் பிரதேச செயலாராக நியமனம் பெற்றதிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்களையும் மோசடிகளையும் அவர் கடமை புரிந்த பிரதேசங்களிலிருந்து மக்களால் எவ்வாறு துரத்தியடிக்கப்பட்டுள்ளார் என்ற வரலாற்றையும் பரிசீலிப்பது சிறந்ததாகும் என இலங்கைநெட் சிபார்சு செய்கின்றது.

குறித்த பெண்மீதான வன்முறை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்தி கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பில் பெண் கிராம சேவை உத்தியோகித்தருக்கே பாதுகாப்பு இல்லை! சாதாரண பெண்களின் கதி என்ன?

நேர்மைக்கு மகுடம் பெற்ற வாசுதேவனின் நிர்வாகத்தின் கீழ் கடமை புரியும் கணவனை இழந்த கிராம சேவகரிடம் அவரது மேலதிகாரி ஒருவர் சில்மிசத்திற்கு சென்றுள்ளதுடன் அச்சம்பவத்தினை மூடிமறைப்பதற்கு வாசுதேவன் முயன்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலரான வ.வாசுதேவனால் தனக்கு தேவையான கிராம சேவகர்களை தனக்கு தேவையான இடங்களில் அமர்த்திக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தின் பிரகாரம் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை 181 டீ பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயான திருமதி தனுஜா ஜெயகுமார் கடந்த 1.01.2021 அன்று மேற்படி பிரிவில் கடமையேற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அலுவலக பரிசோதனை என்ற போர்வையில் வீச்சுக்கல்முனை கிராம சேவகரின் அலுவலகத்திற்கு சென்ற நிர்வாக கிராம சேவை உத்தியோகித்தர் சிதம்பரப்பிள்ளை புண்ணியமூர்த்தி குறித்த பெண் கிராம சேவகருடன் கடமை நேரத்தில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை உரியமுறையில் விசாரணை மேற்கொள்ளாது குற்றவாளியை காப்பாற்றுவதற்கு வாசுதேவன் முயன்றுவருவதாக அறியமுடிகின்றது. (நிர்வாக கிராம சேவை உத்தியோகித்தர் என்பது குறித்த பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து கிராம சேவகர்களையும் நிர்வகிக்கும் பதவியாகும்)

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அலுவலக பரிசோதனை என்றபெயரில் சென்ற நிர்வாக கிராம உத்தியோகித்தர், காரியாலயத்தில் தனது மேலாடைகளை களைந்து வைத்துவிட்டு குறித்த பெண் கிராம சேவகருடன் ஆபாசமாக பேச முற்பட்டபோது, தனுஜா காரியாலயத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஏமாற்றத்துடன் பிரதேச செயலகத்துக்குச் சென்ற புண்ணிமூர்த்தி தான் அலுவலக பரிசோதனைக்காக சென்றபோது குறித்த கிராம அலுவலகர் காரியாலயத்தில் இருக்கவில்லை என பிரதேச செயலருக்கு முறையிட்டுள்ளார்.

புண்ணியமூர்த்தியின் முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச செயலாரான வாசுதேவனால் கிராமசேவையாளரான தனுஜா ஜெயகுமாரிடம் காரியாலயத்திலிருக்காமைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் பிரதேச செயலகத்திற்கு சென்ற தனுஜா ஜெயக்குமார் உதவி பிரதேச செயலரான திருமதி பிரசாந்தனிடம் ஒர் பெண் என்ற அடிப்படையிலும் தனக்கு நேர்ந்தவற்றை எடுத்துக்கூறியதுடன் நிர்வாக கிராம உத்தியோகித்தர் புண்ணியமூர்த்தி தன்னை தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேச முற்பட்ட ஒலிப்பதிவுகளையும் சமர்பித்துள்ளார்.

இதனடிப்படையில் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு குறித்த நேரம் தனுஜா ஜெயகுமார் அலுவலகத்தில் இருந்துள்ளதை உறுதி செய்த உதவி பிரதேச செயலாளர் தனது அறிக்கையையுடன் புண்ணிமூர்த்தி தவறாக நடந்து கொள்ள முற்பட்டமைக்கு ஆதாரமான ஒலிப்பதிவுகளையும் பிரதேச செயலரான வாசுதேவனிடம் சமர்ப்பித்துள்ளார்.

புண்ணிமூர்த்தி பெண் கிராம சேவகரிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டமை மற்றும் பொய் முறைப்பாடு செய்தமைக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் வாசுதேவன் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றவாளியை காப்பாற்ற முனைந்து வருவதாகவும் தான் சமர்ப்பித்த அறிக்கையை கிடப்பில் போட முனைவதாகவும் உதவி பிரதேச செயலாளர் பிரசாந்தன் தனக்கு நெருக்கமான வட்டாரங்களின் காதில் போட்டுள்ளார். அவ்வாறாயின் ஸ்தாபன விதிக்கோவையின் XLVII 1.4 ற்கு கட்டுப்பட்டு உயரதிகாரிகளுக்கு முறையிடவேண்டியது தங்களின் கடமையல்லவா என கோரப்பட்டபோது, வாசுதேவன் ஓர் 'நூதனக் கள்வன்' , அவன் காலத்திற்கு காலம் பதவியேற்கின்ற அரச அதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செம்பு தூக்கிக்கொண்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கின்றான். இந்த தறுதலையுடன் என்னால் மோதமுடியாது இடமாற்றம் ஒன்றை எதிர்பார்த்து இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனது அதிகாரங்கள் அனைத்தையும் புடுங்கி தன்னை ஒரு நிர்வாக உதவியாளர் நிலையிலேயே வாசுதேவன் வைத்துள்ளான் என்றும் அழுது புலம்பியுள்ளார்.

இவ்விபரங்கள் சமூக வலைவலைத ;தளங்களில் உலாவ தொடங்கிய பின்னர், வாசுதேவன் தானே குறித்த அலுவலருக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரசாந்தனிடம் அறிவுறுத்தியதாகவும் பிரசாந்தனின் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் புண்ணியமூர்த்தியை இடமாற்றம் செய்வதற்கு அரச அதிபரின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்றும் பழியை அரச அதிபர் மீது சுமத்திவருவதாக அறிய முடிகின்றது.

எது எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்களில் விபரம் வெளியானமையால் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாசுதேவன் நிர்பந்திக்கப்பட்டார் என்பது சமூகவலைத்தள போராளிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஆனால் ஒரு கிராம சேவகருக்கே தனது காரியாலயத்திலிருந்து கடமையை மேற்கொள்ள முடியாத நிலைகாணப்படும்போது சாதரண பெண்களின் கதி என்ன என்ற நிலை இங்கு காணப்படுகின்றது. மட்டக்களப்பில் பெண்களின் வாக்குகளை இலக்குவைத்து தேர்தலில் குதித்திருந்த அரசியல்வாதிகள் எங்கே? பெண்ணுரிமை பேசும் என்ஜிஓ க்கள் எங்கே? என்கின்ற கேள்விகள் இங்கு பலமாக எழுகின்றது.

No comments:

Post a Comment