Saturday, January 9, 2021

தமிழ் சமூகத்திலுள்ள பிற்போக்குத்தனங்களை கடந்து டான் ரீவி இனவாதத்திற்கு தீனி போடுகின்றதா?

டான் தமிழ் ஒலியில் இடம்பெறும் அந்தக்காலம் இந்தக்காலம் என்ற நிகழ்சியில் அண்மையப் பதிவொன்று ஒன்று பாரிய விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கின்றது. இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் மீது வைக்கப்படும் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உரம் சேர்ப்பதாக அந்நிகழ்வு அமைந்திருந்தாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களின் மூடநம்பிக்கைகள் மற்றும் கைவிட மறுக்கப்படும் பிற்போக்கு தனமான சமூகக்கட்டமைப்புக்களை கடந்து சென்று முஸ்லிம் சமூகத்தின் இனவிருத்தி தொடர்பில் டான் தொலைக்காட்சி பேச முற்படுவது இனவாதத்திற்கு தீனிபோடுவதாக அமைந்துள்ளதாக மோகனா என்ற அரசியல் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் த னது விமர்சனத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

DAN TAMIL OLI அந்தக்காலம் இந்தக்காலம் என்கிற நிகழ்ச்சியில் மலையக ஊடகவியலாளர் கிருஷ்ணா அவர்கள் முஸ்லீம சமூகத்தைப் பற்றிய கூறிய சர்ச்சைக்குரிய கருத்து சம்மந்தமாக பெரும்பாலான தமிழ் முற்போக்காளர்கள் மெளனமாக கடந்து சென்றிருக்கின்றனர்.

2090 இல் இலங்கையின் சனத்தொகை பற்றி சம்பிக ரணவக அவர்களின் புத்தமொன்றில் எழுதப்பட்டிருந்ததாக எந்த விஞ்ஞான ஆய்வுமற்ற கற்பனையான இனவெறுப்பு பிரசாரம் ஒன்றை 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்கிற ரீதியில் எந்த குற்றவுணர்வுமற்று ஓர் ஊடகவியலாளர் பேசிச் சென்றிருப்பது கண்டனத்திற்குரியது.

இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு 2011 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. 2012 உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட சனத்தொகை மதிப்பீடடின் படி சிங்களவர் 74.9% வீதமாகவும் முஸ்லீம்கள் 9.2% வீதமாகவும் இருக்கின்றனர்.

9.2% சதவீதமாக இருக்கும் முஸ்லீம்களின் சனத்தொகை சிங்களவர்களை மீறிச் செல்லும் என்று கூறுவதற்கு எந்த விஞ்ஞான அடிப்படையாவது இருக்க முடியுமா? இப்படி சிரச, தெரண, ஹிரு டிவிக்காரர்கள் போல இனவெறுப்பு பிரசாரம் தமிழ் ஊடகங்களிலிர்ந்த்ம் வெளிப்படுவது வருத்தத்திற்குரிய விடயம். நிற்க , அந்த நிகழ்ச்சியில் தமிழ் சமூகத்தில் திருமண வயது தள்ளிப் போவதற்கான காரணங்களைப் பற்றி பேசியிருந்தார்கள்.

தமிழ் இளைஞர் , யுவதிகளின் திருமணம் தள்ளிப் போவதற்கான பிரதான காரணங்களான சாதியையும் ஜாதகத்தையும் பற்றி ஒருவரும் பேசவில்லை. தமிழ் திருமண சேவைப் பக்கங்களைச் சென்று பார்த்தால் இந்த அப்பட்டமான சாதியவாதத்தைக் காணலாம். 40 வயது மணகனுக்கோ/மணமகளுக்கோ கூட வரண் தேடும் போதும் உயர்குல வெள்ளாளர், முக்குலத்தோர் என்று வெட்கமில்லாமல் விளம்பரம் செய்திருப்பார்கள்.

தாலிப்பொருத்தம், யோனிப்பொருத்தம் என பத்து பொருத்தங்களில் எத்தனை பொருந்திப் போகிறது என்று கணிப்பிட்டு திருமண சம்மந்தங்களை மறுக்கும் தமிழ் சமூகத்தின் கேவலமான மூடநம்பிக்கைகளைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் ஏன் பேசவில்லை?

மேலும் தமிழ் சமூகத்தில் உழைக்கும் வர்க்கம் இளம் வயதில் திருமணம் செய்வதும் , நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் இப்போதும் இருக்கிறது. மலையக தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் மூன்று , நான்கு குழந்தைகள் இருப்பது மலையகத்தை சேர்ந்த ஊடகவியலாளருக்கு தெரியாமற் போனது ஆச்சரியம் தான். அரச வேலையையும் , அழுக்கு படியாத வெள்ளைச்சட்டை உத்தியோகங்களையுமே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்ட மத்தியதர வர்க்க இளைஞர்கள் தான் முப்பது வயதிற்கும் மேல் திருமணத்திற்காக காத்திருக்கிறார்களே ஒழிய உழைக்கும் வர்க்கத்தில் அந்த நிலைமை இல்லை.

மத்தியதர வர்க்க இளைஞர்களை வைத்துக்கொண்டு அபத்தமாக நிகழ்ச்சி நடத்தினால் கூட பரவாயில்லை ; இன்னொரு இனத்தின் மீது கீழ்த்தரமான வெறுப்பை சர்வசாதாரணமாக உமிழ்ந்து விட்டு செல்வதும் அதை மெளனமாக கடந்து செல்வதும் அருவருக்கத்தக்க கேவலமான செயல்.

முதலில் தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதி இழிவையும் சாதகம் என்கிற மூட நம்பிக்கைக்கும் எதிராக பேசுங்கள், அதன் பின் தமிழ் இளைஞர்களுக்கும் சீக்கிரமாக திருமணம் நிகழும்.

தவிர முஸ்லீம் சமூகத்தில் திருமணமான பெண் தாய் வீட்டோடு இருப்பதும் மணமகன் மாமியார் வீட்டில் இருப்பதும் சாதாரணமானது. தாய் , சகோதரிகளுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழும் பெண்களின் வேலைச்சுமை குறைவதும் , குழந்தை வளர்ப்பில் கிடைக்கும் அனுசரணையும் அவர்களை குழந்தை வளர்ப்பின் அழுத்தங்களைக் குறைத்திருக்கிறது.

இதே தமிழ் சமூகத்தில் திருமணமானால் மாமியார் வீட்டில் இருப்பது கெளரவக் குறைவாகப் பார்க்கப்படுவதும் , பெண்களை மாமியார் வீட்டோடு அல்லது தனிக் குடித்தனமாக இருக்க வேண்டும் என்பது எழுதாத விதியாக இருக்கிறது. குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு சொல்லவொண்ணாத அழுத்தங்களை தமிழ் பெண்கள் சந்திக்கிறார்கள். வேலைக்கு போகும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் எதிர்நோக்கும் சிக்கல்கள் பல இருக்கின்றன.

நிறைய குழந்தைகளைப் பெற வேண்டும் என்கிற ஆண்கள், மாமியார் வீட்டோடு இருந்து பெண்களுக்கான வேலைச் சுமையை குறைக்க முற்படுவார்களா? மத்தியதரவர்க்கத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு போனால் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும் என்கிற பொருளாத அழுத்தங்களும் பெரும்பாலான ஆண்கள் , பெருநகரங்களுக்கோ , மத்திய கிழக்கு நாடுகளுக்கோ இடம்பெயர்ந்து குடும்பத்தை விட்டுவிட்டு உழைப்பில் ஈடுபடவேண்டிய அவசியத்தை தந்திருக்கும் இந்த சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பு பற்றியோ ஏன் பேசத் தோன்றவில்லை? மாதம் ஒருமுறையோ , வருடம் ஒரு முறையோ சில நாட்களுக்கு பிள்ளைகள் , மனைவியுடன் இருக்கும்படியாக குடும்ப அமைப்பைச் சிதைத்து வைத்திருப்பது எது? இந்த நிலைமையில் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள முடியுமா? குடும்பங்களிலிருந்து ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் கசப்பான வாழ்க்கையை அளித்திருக்கும் இந்த முதலாளித்துவ பொருளாதார முறை தான் இப்படி குடும்ப அமைப்பைத் திட்டமிட வைக்கிறது என்கிற புரிதலாவது நிகழ்ச்சி செய்த ஊடகவியலாளருக்கு இருக்குமா?

திருமணம் தள்ளிப் போவதும் , அதற்கு திருமணத்திற்கு ஆகும் செலவுமட்டுமே காரணம் என்பதும் தானா குடும்பத்தின் குழந்தைகள் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது?

முன்விரோதத்தினாலோ , தனிமனித காழ்ப்புணர்ச்சியாலோ அல்ல, திறந்த மனதுடன் ஒரு விவாதத்திற்காக சகோதரர் Krrishna Krishna வை அழைக்கிறேன். முஸ்லீம் சமூகம் பற்றிய உங்கள் இனவெறுப்பு பேச்சிற்கு அந்த சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு , இந்தசுயவிமர்சனத்திற்கான உரையாடலைத் தொடரலாம். அல்லது என்னை unfriend செய்துவிட்டு கடந்தும் போகலாம்.


No comments:

Post a Comment