தோழர் சுந்தரத்தின் நினைவு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) நினைவு நாள் இன்று.
இடதுசாரி அமைப்புகளின் "தொழிலாளி",'ஜனசக்தி' (கு.வினோதன்) போன்ற பத்திரிகைகளுக்குப்பின் போராட்டக்களங்களின் ஒரு திருப்பமாய் புதிய பாதை எனும் பத்திரிகை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று.
சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரன் பணிப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
"துரோகத்தின் பரிசு " என கொலைக்கு நியாயம் சொல்லி உரிமைகோரிய துண்டுப்பிரசுரம் புலிகளால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
இங்கே சுடவேண்டாம்
வாசலைப்பார்த்து கதிரை போடப்பட்ட சித்திரா அச்சகத்தில் ஒருவர் அச்சகத்தின் உள்ளே வர உள்ளே கதிரையில் இருந்த சுந்தரம் வந்தவரைப்பார்த்துச் சிரித்திருக்கிறார். சுட்டவனை சுந்தரத்திற்கு நன்கு தெரிந்திருக்கவேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார் அச்சக உரிமையாளரான மரியதாஸ் மாஸ்ரர் . அந்த அதிர்ச்சியிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் மரியதாஸ் மாஸ்ரர் வாழ்க்கைமுழுதும் மீளவில்லை .
அவர் வறுமையின் பின்னணியில் வாழ்பவர் ,போலீஸ் அவர் அச்சகத்தை மூன்று மாதங்களுக்கு மேலாக மூடியது .பின்னர் திறக்க அனுமதி கொடுத்தது .ஒரு உள்ளூர் ஆலோசனையின்பேரில் சுந்தரத்தை வைக்கல் பொம்மையில் உருவம் செய்து அருகில் உள்ள ஞானம் ஸ்ரூடியோ சந்தியில் அவலச் சாவடைந்த உயிர்களுக்குச் செய்யும் சில “களிப்பு” வகைகள் செய்து சுந்தரத்தின் பாவனை உயிர் அவ்விடத்தில் கொளுத்தப்பட்டது .
மரியதாஸ் மாஸ்ரருக்கு பின்னர் எவ்வித அச்சக வேலைகளும் வராமல் நின்றுபோனது .தனது மகளை அவர் வீட்டு வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பமுயன்றார் . அவர் நண்பர்கள் ஓரிருவர் அவருக்கு அச்சக ஓடர்களை எடுத்துத்தர பெரிதும் முயன்றனர் ,எதுவும் வாய்க்கவில்லை ,அவர் நண்பர் ஒருவர் “இங்கே சுடவேண்டாம் !” என ஒரு அறிவித்தல் வைக்கச் சொல்லி அவரை மன உழைச்சலில் இருந்து மீட்க முயன்றார் .பின்னர் அச்சகம் மூடப்பட்டது .
ரஸமோனிய காலம்
சுந்தரத்தின் கொலையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு .அமிர்தலிங்கத்திற்கு “நோக்கம் இருக்குமா ?” என ஒரு பலமான அல்லது லேசான அபிப்பிராயம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது .
அவரது புதியபாதை அரசியல் நிலைப்பாடுகள், அமிர்தலிங்கம் மீதான கடும் வெளிப்படையான விமர்சனம் என்பவை இவற்றிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது ,இதனுடன் துரையப்பா கொலை பின்னணியும் சேர்த்து நோக்கப்படுகிறது .
அமிர்தலிங்கம் சுந்தரத்தின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார் ,ஆனால் சுந்தரத்தை தனக்குத் தெரியாது நேரில் பார்த்ததில்லை என அவைக்கு தெரிவித்திருக்கிறார் .பின்னொரு தகவலின்படி திருமதி மங்கையற்கரசி அவர்கள் பிரபாகரன் காலில் விழுந்து அழுததாகவும் இன்னொரு கதை உண்டு ,ஆனால் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தின்மீதான வெற்றிகரமான முதலாவது தாக்குதல் பிரபாகரனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் அப்படி ஒரு தாக்குதலை பிரபாகரனும் செய்வதற்கு முயன்று பார்த்திருக்கலாம் எனவும் அதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இராணுவ வல்லமை சுந்தரத்திற்கே உண்டு எனவும் ,புலிகளில் இத்தகைய தகுதிநிலை சுந்தரத்திற்கு மட்டுமே உண்டு எனவும் பிரபாகரன் சுந்தரத்தைச் சுடுவதற்கு இதுவே காரணமாக இருந்தது எனவும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது .
சுந்தரத்தின் தந்தை இராமலிங்கம் சதாசிவம் ஆசிரியர், தாயார் கணபதிப்பிள்ளை பசுந்தரம். அம்மாவின் பெயரைத்தான் இயக்கப் பெயராக வைத்தார் . அவருக்கு மணி ,பாபு என்றழைக்கப்படும் இரு சகோதரர்கள் ,சகோதரிகள் இருவர். மாமன் இராசரத்தினம் பிரபல ஓவியர், மணி அவர் வழியில் ஓவியர்.
மறதியின் கணத்தில்
போலீஸ் அச்சகத்தை மூடி அங்கிருந்த அனைத்து தஸ்தாவேஜுகளையும் நூல்களையும் அச்சுவேலை விபரங்களையும் தனது ஆய்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அங்கு நுஹ்மானின் பலஸ்தீனக் கவிதைகள் ,மற்றும் செங்கை ஆழியானின் புவியியல் சூழலியல் நூல்கள் இருந்தன , போலீஸ் ஒரு முன்நிபந்தனை மரியதாஸ் மாஸ்ரருக்கு விதித்தது .
அங்கிருந்த நூல்களின் பெயர்களிற்குரியவர்களை அவரே போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து நிறுத்தவேண்டும் ,செங்கை ஆழியான் பல தயக்கங்களினூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது நிலையை போலீஸ் அதிகாரிகளுக்குப் புரியவைத்தார் .
பேரா .எம் ஏ .நுஹ்மானின் பலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்ப்பை ஒரு இளம் போலீஸ் அதிகாரி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் .
போலீஸ் அதிகாரி நுஹ்மானைக்கேட்டார் ” இதிலிருந்து சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்லவருகிறீர்கள் ?” கைலாசபதி கூட இப்படியொரு கேள்வியை இலக்கியத்தளத்தில் அப்போது கேட்டிருக்கமுடியாது என ஈழக் கவிதைச் செல்நெறிகள் பற்றிஆய்ந்த ஒரு ஆய்வு மாணவர் அப்போது கருத்து வெளியிட்டார் .
புதியபாதை எப்போதும் இடதுசாரிகள் தமது அச்சு வேலைகளை செய்யும் வேறொரு அச்சகத்திலேயே அடிக்கப்பட்டுவந்தது . அந்த அச்சகத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாய் இந்த ஒரு இதழ் மட்டும் சித்திரா அச்சகத்தில் அடிப்பதற்கு மரியதாஸ் மாஸ்ரரால் ஒப்புக்கொள்ளப்பட்டது . அதுவும் முன்னரான அந்த அச்சகத்தின் பேரிலேயே .
மரியதாஸ் மாஸ்ரர் ஏழாலையைச் சேர்ந்தவர் .இப்போது அவர் நிலை என்ன எனத்தெரியவில்லை .மறதியின் தளத்திலேயே எப்போதும் இயங்கும் வரலாற்றின் இருண்ட ஒரு மடிப்பில் மரியதாஸ் மாஸ்ரருக்கும் ஒரு இடம் இருக்கும்தான் இல்லையா ?
சுந்தரமும், சந்ததியாரும் சிங்கள நூல்களை வாசிக்கவும், மொழி அறிவு பெறவும் சிங்கள மொழியை சுளிபுரத்தில் டாக்டர் தம்பையா என்பவரிடம் 70’இல் கற்றனர். மார்க்சிய நால்களையும், அதன் யதார்த்த நடைமுறைகளை தோழர் கே ஏ சுப்பிரமணியத்திடமும் – விவாதங்களின் மூலம் கற்றுக் கொண்டனர். சிறிதுகாலம் சுந்தரம் புத்தளத்தில் பாதுகாவலராக வேலைசெய்திருக்கிறார் .பின்னர் 1974 மட்டில் இந்தியாவிற்குப் படிக்கப்போன நாளில் வீட்டில் வறுமை நிலவியது ,வயதிற்கு வந்த அவரது மூத்த சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் சுந்தரத்திற்கும் படிப்புச் செலவுகளிற்கு பணம் தேவையாக இருந்தது , சுந்தரத்தின் தாயார் பசுந்தரம் தனது தாலிக்கொடியை கச்சதீவிற்கு போன அவரது உறவினரிடம் கொடுத்தனுப்பியபோது சுந்தரம் அத் தாலிக்கொடியை கச்சதீவில் பெற்றுக்கொண்டார் , அதை விற்று தனது படிப்பு தேவைகளை நிறைவேற்றி படிப்பை முடித்து 1977 இல் கொழும்பு வந்து கொழும்பில் இயக்கத்தொடர்புகள் ஏற்படுகிறது , பின்னர் காந்தீயம் அமைப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் .மலையக மக்களுக்கான மறுவாழ்வுப்பணியில் அவர் தீவிரமாக ஈடுபடுகிறார் .
சுமார் ஆறுமாத இடைவெளிகளில் இடையிடையே வீட்டிற்கும் அவர் வந்துசெல்கிறார் . யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே நடைபெறும் தமிழ்வகைப்பட்ட தனிநபர் தீவிரவாத நடவடிக்கைகளில் சுந்தரமும் பங்குகொண்டதாக போலீஸ் கருதுகிறது , 1979 இல் அவரது தந்தையரையும் மைத்துனரையும் போலீஸ் கைதுசெய்து யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் வைத்திருந்தது .
அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த 1981 ஜூன் மாத இறுதி நள்ளிரவொன்றில் வீட்டில் உணவு முடிந்துவிட்ட நிலையில் அன்று அவருக்காக அயல் வீட்டில் வாங்கிவந்த உணவை அவர் தனது வீட்டில் இறுதியாக உண்டார் .
மரங்கள் அசைந்தாடும் அந்த இரவை ஒரு பதட்டத்துடன் கண்காணித்தபடி அவர் தாயிடமிருந்து அந்த உணவைப் பெற்றுக்கொண்டார் .
அவர் கடைசித் தங்கச்சி தனக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கித்தரச்சொல்லி சுந்தரத்திடம் அப்போது கேட்டிருக்கிறார் . ” கொஞ்ச நாள் பொறு ! நான் பிரச்சனையில் இப்போ இருக்கிறேன் ,உனக்கு வாங்கித்தாறேன் !” என சுந்தரம் தனது தங்கச்சிக்கு சொல்லியபோதிலும் அவரால் எப்போதும் தனது தங்கச்சிக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கிக்கொடுக்க முடிந்ததில்லை .
அவர் மூத்த சகோதரி வீட்டின் நிலையை அப்போது அவருக்கு சொல்லியிருக்கிறார் , “அங்கை இருக்க வீடில்லாமை சனங்கள் இருக்கு ! உங்களுக்கு இருக்க ஒரு வீடாவது இருக்கு !” என சுந்தரம் பதில் சொன்னார் .
சுந்தரம் சுடப்பட்டநிலையில் அவரது பால்ய உயிர் நண்பர் ஜெர்மனியில் இருந்து சுந்தரத்தின் இறுதிச்சடங்குகளுக்கான பணத்தை அனுப்பி அவரது செலவிலேயே சுந்தரத்தின் இறுதிக்கிரியைகள் மற்றும் தொடர்ந்த காரியங்கள் நடந்தன . சுந்தரத்தின் குடும்ப வறுமையை தன்னால் இயன்றவரை போக்கி நின்றார் அந்த ஜெர்மன் நண்பர் .இடையிடையே தன்னால் இயன்றவரை அவர்கள் குடும்பத்தினருக்கு காசு அனுப்பிக்கொண்டிருந்தார் , சுந்தரத்தின் இன்னொரு உயிர் நண்பர் அவரது கடைசித் தங்கச்சியை சீதனம் எதுவும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார் .
சுந்தரத்தின் நினைவாக அவரது விசுவாசமான தோழரான பாலமோட்டை சிவம் ,தன்னை “சண்முகம் ” என பின்னர் பேரிட்டு அழைத்துக்கொண்டதோடு தனது நெஞ்சிலும் சுந்தரத்தைப் பச்சை குத்திக்கொண்டார்.
புதியபாதை வகுத்து மக்கள் புரட்சி வெல்வதற்கு முன்னோடியாய் உழைத்த ஒரு முதன்மைப் போராளி கொல்லப்பட்ட குறிப்பை இந்த நாற்பதாண்டுகள் ஒவ்வொரு தருணத்திலும் காட்டி நிற்கின்றது.
அவலச்சுவை தவிர்ந்த வேறெதையும் ருசித்திராத தமிழ் அரசியலில் சுந்தரத்தின் தொடக்கமும் முடிவும் எப்போதும் ஏக்கத்துடனும் நிராசையுடனும் நினைவெழுந்தபடியே இருக்கும்.
சுகனின் முகப்புத்தகத்திலிருந்து
0 comments :
Post a Comment