Friday, January 29, 2021

ஐ.நா வில் இறந்தவர்கள் தொடர்பில் பேசினால் இருப்பவர்கள் தொடர்பில் எந்த சபையில் பேசுவது? கேட்கிறார் இனியபாரதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளால் முன்னாள் போராளிகள் தற்போது சிறைச்சாலையில் வாடுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இறந்தவர்களை தேடிச்செல்வதை விட உயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக அம்பாறை ஊடக அமையத்தில் கடந்த 25 அன்று விளக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த இனியபாரதி அவர்கள்:

நடைபெற்று முடிந்த யுத்தத்தில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் நடந்து முடிந்தவற்றை விட்டுவிட்டு தற்போது இருக்கின்ற முன்னாள் போராளிகளின் விடயங்கள் தொடர்பிலேயே இன்று பேசப்படவேண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று இறந்தவர்கள் தொடர்பில் பேசுகின்றனர். நான் இங்கு கேட்கும் கேள்வி யாதெனில் உயிருடன் இருக்கின்றவர்கள் தொடர்பில் எந்த சபையில் பேசுவது?

எனவே பழிவாங்கும் மனநிலையிலிருந்து விடுபட்டு முன்னாள் போராளிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவிபுரியக்கூடிய வேலைத்திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்போன்றவர்களை தங்களது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி போலிக்குற்றச்சாட்டுக்களையும் திட்டமிட்ட சதிகளையும் மேற்கொண்டு சிறையிலடைத்தது. இதன்போது பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டேன். அச்சந்தர்ப்பங்களில் முன்னாள் போராளிகள் பலரையும் பல்வேறு சிறைகளிலும் சந்தித்தேன். அவர்களது நிலைமை மோசமானது.

அவர்களது நிலைமையை சீர் செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மைத்திரபால சிறிசேன அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினுடனான உறவை முறித்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ச அவர்களை பிரதமராக நியமித்தார். அச்சந்தர்ப்பத்தில் ஆட்சியமைப்பதற்கு அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியை நாடினார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றுவதற்காக நேரடியாக களத்தில் இறங்கினர். நீதிமன்று வரை சென்றனர். இச்செயற்பாட்டை கைவிட்டு தங்களுக்கு உதவி புரிந்தால் சிறையிலடைக்கப்பட்டுள்ள அனைத்து போராளிகளையும் விடுவிப்பதாக மஹிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதிமொழி வழங்கினார். அவர்கள் முன்னாள் போராளிகளை விட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை கொடுத்தனர்.

இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முன்னாள் போராளிகள் தொடர்பான அக்கறை எவ்வாறானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றார் இனியபாரதி.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுகின்ற விடயம் இன்று ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும், ஆலையடிவேம்பு- திருக்கோவில் பிரதேசங்களுக்கான கல்வி வலயம் உருவாக்கி தரப்பட வேண்டும் என்று நான் அன்று மிக முக்கியமாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கோரி இருந்தேன்.கல்வி வலயத்தை உருவாக்கி தந்தேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெறுவதற்கு மிக வேகமாக செயற்பட்டேன். கல்முனையில் உள்ள புத்திஜீவிகளையும் சேர்த்து கொண்டு பாராளுமன்றத்துக்கு சென்றோம். அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேசினோம். எல்லோரும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு நாட்களுக்குள் பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படும் என்கிற உத்தரவாதத்தை உறுதிமொழியாக பெற்று கொண்டு திரும்பினோம்.

அது பாராளுமன்ற தேர்தல் காலம். நானும் அத்தேர்தலில் வேட்பாளராக நின்றிருந்தேன். இந்நிலையில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சில் மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கலாக தமிழ் பிரதிநிதிகள் குழு ஒன்று சென்று பசில் ராஜபக்ஸவை சந்தித்து இத்தேர்தல் முடிந்த பின்னர் வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துங்கள், அதற்கு முன்னர் செய்ய வேண்டாம் என்று சொல்லி தடை ஏற்படுத்தி விட்டார்கள்.

ஒரு இலட்சம் இளையோருக்கான வேலை வாய்ப்பு தமிழ் இளையோர்களுக்கு கிடைப்பது என்பது பெரும்பாலும் எட்டாக்கனியாகவே உள்ளது. மிக சொற்ப அளவில் மாத்திரம் தமிழ் இளையோர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுடன் பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் தமிழ் இளையோர்களுக்கு நியமனங்கள் கணிசமாக கிடைக்காமல் தடை ஏற்படுத்தி இருக்கின்றனரா? என்கிற நியாயமான சந்தேகம் எனக்கு உள்ளது. ஏனென்றால் எமது இளையோர்கள் அரச தொழில் துறைகளில் வேலை பெற்று விட்டால் கிணற்று தவளை நிலையில் இருந்து மீண்டு விடுவார்கள் என்கிற அச்சம் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment