நேற்றைய தினம் (ஜனவரி 28) காலமான இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்கள் 1960 ஆம் ஆண்டு முதலாவது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற தனது ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய தன்னுரை கீழே தரப்பட்டுள்ளது. இந்த உரை அன்றைய காலகட்டத்து ஈழத்து தமிழ் இலக்கியப் போக்கினையும், ஜீவாவின் இலக்கியக் கோட்பாட்டினையும் துல்லியமாக எடுத்தியம்புகிறது.
எண்ணமும் எழுத்தும்
சிறுகதை எழுதுவதென்பது குப்பை மேட்டுக் கீரையைப் பிடுங்கி கறி சமைக்கும் விவகாரமல்ல! – அது பிரசவ வேதனை!...
என் மனதிற்குப் பிடித்தமான பொன்மொழி இது.
இத் தொகுதியில் வெளிவரும் அநேக கதைகள் குப்பை மேட்டிலே மலர்ந்தவை, கூளாங் கற்களுக்கிடையே வளர்ந்தவை. இன்று உங்கள் முன் புத்தக வடிவில் கறியாகப் பரிமாறப்படுகிறது. ருசித்துப் பாருங்கள்…
எழுதுவது என் தொழிலல்ல. இலக்கியம் செய்து ஒரு சிலரின் போகாத பொழுதையும், அத்துடன் சேர்த்து என் பொழுதையும் ஒரு வழியாகப் போகச் செய்வதும் என் பொழுதுபோக்கல்ல.
தொழில் செய்வதுதான் என் தொழில். அதுதான் என் வாழ்க்கை, என் சகலமுமே அதுதான்.
அப்படியானால் நான் எழுத்தாளனே இல்லையா?
வேண்டுமானால் இதைப் பின்னால் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஈழத்தின் - என் தாய்த் திருநாட்டின் - விடுதலைக்குப் பின்பு, சுதந்திரத்துக்குப் பின்னர், தேசத்தில் பல புதிய புதிய பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. இது இயற்கையும் கூட. ‘சுதந்திரத்தை யார் அனுபவிப்பது?’ என்று தொடங்கி இனப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை ஈறாகப் பலப்பல கருத்து மோதல்கள், எண்ணச் சிதறல்கள் நாட்டில் ஒரு புதிய விழிப்பை, ஒருவகைப் பரபரப்பை, உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அதன் எதிரொலிகள் காலாகாலத்தில் இலக்கியத்திலும் பிரதிபலித்தன.
ஈழத்து இலக்கியம் தனக்குத்தானே தூண்டுகோலாக அமைந்தது. இலங்கை இலக்கிய வட்டம் புதுப்போக்கில் சிந்திக்க ஆரம்பித்தது.
•
ஆரம்ப காலத்தில் மெத்தப் படித்த ஒரு குறுகிய வட்டாரத்தின் செல்லப்பிள்ளையாக – நோஞ்சான் குழந்தையாக - இருந்த இலக்கியம் நாளாவட்டத்தில் ‘தமிழ் சட்டம்பி’ மார்களின் தோளுக்குத் தாவி, சிறிது காலம் அங்கேயே தூங்கி வழிந்து கொண்டிருந்தது. ஆசியாவிலும், இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும், குறிப்பாக ஈழத்திலும் ஏற்பட்ட புதுப் புதுப் பிரச்சினைகளிலும், போராட்டங்களிலும், தேசியச் சிக்கல்களிலும் தொழிலாளி வர்க்கம் முக்கிய கேந்திர பாத்திரம் வகிக்க வேண்டிய நியதி ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாததுங் கூட. இந்த உந்துதல்கள் உற்சாகமாக இலக்கியத்தைப் பாதித்த போது – இலக்கியமும் ‘தமிழ் சட்டம்பி’ மார்களின் தோளிலிருந்து தொழிலாளிகளின் கரங்களுக்கு மாறி புதிய ஊட்டம் பெற்றது, புதிய செழிப்புடன் வளர்ந்தது. அந்த வளர்ச்சிக் கட்டத்தில் - நான் எழுத்தாளனானேன்!
ஆசிரியர் என்ற பெயரை அடைத்துக் கொண்டிருக்கும் நான் என்றுமே கடற்கரை மணலையோ, பூங்காவனத்தின் நிழலையோ, அல்லது மாபெரும் ஹோட்டல் மாடி அறையையோ தேடிச் சென்று இச் சிறுகதைகளைச் சிருஸ்டித்தது கிடையாது. அதற்குரிய நேரமும் எனக்கில்லை - இருந்ததில்லை. இருந்தும் நான் எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன்!
பொழுதைப் போக்கத் தெரிந்த ஒரு சிலர், இக் கதைகளில் சிலவற்றைப் படித்துவிட்டு, மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், முகத்தைச் சுழித்தும் இருக்கிறார்கள். ‘சீ! வாசிக்க அருவருப்பாக இருக்கிறது. படிக்கக் கூடச் சகிக்கவில்லை!’ என்று வாய்விட்டுச் சொல்லித் தங்கள் மனவெறுப்பை வெளிக் காட்டிவர்களுமுண்டு. ‘சாதாரண ‘இது’கள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்கள் தமிழ் மரபுப்படி எப்படி இலக்கிய புருசர்களாகலாம்? என்பது இவர்களது வாதம். ‘இது, ஈழத்து இலக்கியப் பண்புக்கு முழுதும் முரணானதே’ என்பது இவர்களது குற்றச்சாட்டு.
இவர்களைப் பற்றி – வாழ வக்கற்ற ‘இது’ களைப் பற்றி – அவர்களது ஆசாபாசங்களை, விருப்பு வெறுப்புகளை, உணர்ச்சிகளை, உள்ளக் குமுறல்களை ஏன் அவர்களது பலவீனங்களை, சின்னத்தனங்களை எல்லாம் பாத்திர உருக்கொடுத்து இலக்கிய மேடையில் நடமாட வைத்ததில் அவர்களுக்கு என்மேல் வெறுப்பேற்படுவதற்குப் பதிலாக, நான் சிருஸ்டித்து உலவவிட்ட இப்பாத்திரங்களின் மேல் அருவருப்படைகிறார்கள்.
போகட்டும்! - இவர்களில் ஒருவன்தான் நான் என்பதைப் புரிந்து கொண்டும், என்மேல் அருவருப்படையாமல் என் பாத்திரங்களின்மேல் அருவருப்படைகிறார்களே –
நான் பாக்கியசாலியேதான்!
இவர்களுக்கு இன்றும் மாபெரும் கவலையொன்று மனத்தை வாட்டுவதுண்டு. ஆறுமுக நாவலர் ‘பெருமான்’ அவர்களோ அல்லது சேர்.பொன்னம்பலம் இராமநாதன் ‘துரை’ அவர்களோ ஒரு சிறுகதை – பெயருக்கென்றாலாவது ஒரேயொரு கதை எழுதவில்லையே என்று தாங்க முடியாத மனக்கவலை – நெஞ்சத்தை அரிப்பதுண்டு.
காரணம் - தங்களைத் தாங்களே சுய விளம்பரம் பண்ண, தங்கள் இலக்கிய சாம்ராட் தனத்திற்கு அதையொரு விளம்பர சாதனமாகப் பயன்படுத்தி இருக்கலாமல்லவா?
பாவம்! – அவர்கள் ஒரு சிறுகதை கூடச் சிருஸ்டிக்கவில்லையே!
நான் இவர்கள் மயங்கும் கற்பனை உலகத்தைப் படைப்பவனல்ல. அல்லது கற்பனை உருவம் கற்பித்து ‘கலை – கலை’ என்று கூத்தாடுபவனுமல்ல. அல்லது வர்க்க முரண்பாடுகள் என்ற அடிப்படை உண்மையைப் போர்த்து மேவி, ஜாலவித்தை காட்டி வயிறு வளர்க்கும் சொற்சிலம்பமாடியுமல்ல. எனது கதைகள் பெரிய வீட்டுப் பென்னாம் பெரிய மனிதர்களின் வாழ்க்கை ஓவியங்களோ என்று ஐயுறுபவர்கள் கடைசியில் ஏமாறத்தான் செய்வார்கள்.
நான் வாழ்வை, வாழ்வின் உண்மையை நேர் நின்று நோக்கினேன். கண்களைக் கூசிக் குலுக்காமல் பார்த்தேன். கண்களால் கண்டதை, காதுகளால் கேட்டதை, மனத்தால் உணர்ந்து புரிந்து கொண்டவைகளை – அச் சம்பவங்களை – கதைகளாக்கி உங்கள் மத்தியில் பாத்திர உருக் கொடுத்து நடமாட விட்டிருக்கிறேன். நான் வாழாத, நான் பார்க்காத உலகத்தைக் கருப் பொருளாக்கி, கதை செய்து உங்கள் முன்னால் உலவவிட்டு வேடிக்கை காட்டவில்லை. - அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை!
எனது கதைகளில் வரும் பாத்திரங்கள் இன்றைய மனிதர்கள், வாழ்வுக்காக வாழ்வுப் போராட்டம் நடத்துபவர்கள், நல்லெண்ணமும், மனிதப் பண்பும், தன்மானமும் மனிதாபிமானமும் கொண்டவர்கள், உணர்ச்சி வசப்பட்டவர்கள், உங்களையும் என்னையும் போன்றவர்கள். அதே நேரத்தில் குறைபாடுகளை மறைக்காதவர்கள், வரட்டுக் கௌரவம் பாரதவர்கள், போலி நாகரிக நடிப்பு நடிக்காதவர்கள். திட்டவட்டமாகச் சொன்னால், நாளைய மனிதர்களை உருவாக்கும் இன்றைய மனிதர்கள்! நாளையப் புதிய சமுதாயத்தின் இன்றையப் பிரதிநிதிகள்!
இவர்களை - இவர்களின் ஆசாபாசங்களை, போராட்டங்களை, உணர்ச்சிக் குமுறல்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொண்டும் புரிந்து கொண்டதை வெளியில் காட்டிக் கொள்ளாதவர்கள் - நடிப்பவர்கள், சில இரண்டும் கெட்டான் பேர்வழிகள் - நம்மில் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தம்மீதும் நம்பிக்கையில்லை, இந்த உலகத்தின் மீதும் நம்பிக்கையில்லை, தம்முடன் தாமாக வாழும் இந்தப் பாமர மனிதர்கள் மேலும் நம்பிக்கையில்லை!
மாறாக, அவர்களின் உரிமைக் குரலைக் கேட்டு கேலி செய்கிறார்கள், கிண்டல் பண்ணுகிறார்கள், சிரித்துச் சிரித்து வேடிக்கை பண்ணி, மற்றவர்களையும் தங்கள் ‘முஸ்பாத்தி’யில் கலந்து கொள்ள அழைக்கிறார்கள்.
இவை என் கதைகளல்ல. மாட்டுக்காரன், ஓட்டுக்காரன், ரிக்சாக்காரன், தபால்காரன், கார்க்காரன், தமிழ்ச் சட்டம்பி, பத்திரிகை நிருபர், துறைமுகத் தொழிலாளி ஆகியோரின் - கதைகள்தாம் இவை. இவர்களுடன் இவர்களாக, ஈழநாட்டில் இவர்களுடன் சமதையாக, இவர்கள் வாழும் காலத்துடன் ஒன்றாக வாழ்ந்தால் உங்கள் இலக்கியப் பெருமை என்னாவது? உங்கள் இலக்கியப் பண்பாடு, மரபு, பாரம்பரியம், வழிவழி வந்த சோம்பேறிச் சுகவாழ்வு, இன்பப் பொழுது போக்கு எல்லாமே மண்ணுடன் மண்ணாய்ப் பாழாய்ப் போவதா என்ன?
- அப்புறம் உங்கள் காலத்திற்குத்தான் என்ன இலக்கிய சரித்திர மதிப்பு உண்டு? கதைகளைப் படைத்து விட்டேன்.
‘வெண்புறா’ என்ற கதையைத் தவிர ஏனைய கதைகள் அத்தனையும் இலங்கை மக்களின், குறிப்பாகத் தொழிலாளி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்பட்டவையே. முற்று முழுதாக ஈழத்துப் பாத்திரங்களே. அவர்களது பேச்சுக்களே. அவர்களது உணர்ச்சிக் குமுறல்களே.
ஒரு தேசத்தின் தொன்மையை, நாகரிகத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை பூரணமாகத் தெரிந்து கொள்வதற்குச் சிலாசாசனங்களையோ செப்பேடுகளையோ தேடித் தோண்டி ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பார்கள், புதைபொருள் ஆராய்ச்சி வல்லுனர்கள்.
வாழும் மக்களின் சரித்திரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அறிந்து கொள்வதற்கு உதவி செய்வன இலக்கியங்களே. சிறுகதைகள் இந்த அவசர யுகத்தில் தங்கள் வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் செய்து முடித்து விடுவதில் அசகாய சூரத்தனம் கொண்டு மிளிர்கின்றன.
எனது கதைகளை, ஈழத்து பாமர மக்களின் - உழைப்பாளி மக்களின், தொழிலாளிகளின் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்ளக்கூடிய சாளரமாக எண்ணிப் பயன்படுத்த விரும்புபவர்கள் தாராளமாகச் சாளரத்தின் மூலம் நன்றாகப் பாருங்கள். பயன்பெற விரும்பாதவர்கள் தயவு செய்து யன்னலை மறைக்காதீர்கள். ஏனெனில் வருங்கால உலகம் நான் சிருஸ்டித்து உங்கள் மத்தியில் உலவவிட்ட இவர்களின் - ‘இது’களின் - உலகமாகத்தான் மிளிரப் போகின்றது. அந்த ஜீவநாதம் அதோ கேட்கின்றதே –
கடைசியாக –
இக்கதைகளில் தண்ணீரும் கண்ணீரும், வெண் புறா, இவர்களும் அவர்களும், கொச்சிக் கடையும் கறுவாக்காடும், ஆகிய கதைகள் ‘சுதந்திரன்’ இதழிலும், செய்தி வேட்டை ஈழகேசரியிலும், காலத்தால் சாகாதது, தீர்க்கதரிசி, சிலுவை, முற்றவெளி ஆகிய கதைகள் ‘சரஸ்வதி’யிலும், ஞானம் ‘கலைமதி’ ஆண்டு மலரிலும் வெளிவந்தவை. அதன் அதன் ஆசிரியர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. சில கதைகளில் சிறுசிறு திருத்தங்கள் செய்துள்ளேன் - அவ்வளவுதான். கரும்பலகை தொகுதிக்காகவே சேர்க்கப்பட்ட கதை.
நான் விரும்பும், என்னை நேசிக்கும் நண்பர்களின் ஆக்கபூர்வமான ஊக்கமே இந்த நூல். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக இந்தக் கட்டத்தில் நினைத்து, நன்றிப் பெருக்கால் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவர்கள்தான் எனது சர்வகலாசாலை. ஆரம்பத்திலிருந்து பிரதி எடுத்து உதவி செய்த மாணவ நண்பன் த.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு எனது மனமுவந்த நன்றி என்றும் உரியது.
இக் கதைகளத் தொகுத்து புத்தக உருவத்தில் வெளியிட ஊக்கமெடுத்து உழைத்து, இன்று அழகிய புத்தக வடிவில் உங்கள் முன் சமர்ப்பிக்கும் ‘சரஸ்வதி’ ஆசிரியர் திரு.வ.விஜயபாஸ்கரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
60, கஸ்தூரியார் வீதி
டொமினிக் ஜீவா
யாழ்ப்பாணம்
No comments:
Post a Comment