ஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி!
வேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்கின்ற அருண் அம்பலவாணர் ஷோபா சக்தியின் இச்சா நாவல் மீது தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இவ்விமர்சனமானது ஷோபா சக்தியை மனவுளைச்சலுக்குள்ளாக்கியுள்ளதாக ஒப்பாரி வைக்கும் இலக்கியவாதிகள் எனப்படுவோர் அண்டை நாட்டிலுள்ள சண்டியன் ஒருவரை அழைத்துவந்து நட்சத்திரனுக்கும் அவரது விமர்சனத்தை பிரசுரித்த இணைய இதழுக்கம் மிரட்டல் விடுத்துள்ளனர். ஷோபா சக்திதான் அந்த கொன்றைக்கை கொடுத்தாரா என்பதும் தெரியாது.
தனது மிரட்டலை பதிவு செய்துள்ள ஜெயமோகன், „நட்சத்திரனின் விமர்சனத்தை பிரசுரித்த அனோஜன் என்பவரிடம் தனது எதிர்வினை எவ்வாறு அமையும் என்பதை கடுமையாக கூறிவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஊடக சுதந்திரத்திற்கு பகிரங்க சவால் விடுத்திருக்கும் ஜெயமோகனுக்கு அனோஜனின் கருத்துச் சுதந்திரத்தில் கைவைப்பதற்குள்ள அதிகாரம் என்ன?
நட்சத்திரனின் எழுத்துக்களை எவரும் பிரசுரிக்கக்கூடாது என கட்டப்பஞ்சாயத் தீர்ப்பளித்துள்ள ஜெயமோகன் கொடுத்துள்ள நிறுவல் : „இலக்கியம் பற்றிய எளிய புரிதல் கொண்ட எந்த இதழும் அந்த மனிதர் எழுதிய ஒரு வரியையேனும் பிரசுரிக்காது" என்பதாகும். அவ்வாறாயின் இலக்கியம் என்பதன் புரிதல் என்பது அதை யார் எழுதியுள்ளார் என்பதிலேயே தங்கியிருக்கின்றது என ஈழத்தமிழருக்கு வகுப்பெடுக்கின்றார் தமிழ் நாட்டின் தொப்புள்கொடிச் சண்டியன் ஜெயமோகன்.
யார் எழுதியிருக்கின்றார் என்பதல்ல விடயம். என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதுதான். ஷோபா சக்தி இலக்கிய திருட்டில் ஈடுபட்டுள்ளார் என டொக்கிமென்றி எவிடென்ஸ் சுடன் மக்கள் மன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றார் நட்சத்திரன். மன்று அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என குற்றச்சாட்டின் பிரதிகளை ஏற்று மக்கள் மன்றுக்கு சமர்பித்திருக்கின்ற அனோஜனுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஜெயமோகன் கூறும் அயோக்கித்தனமான காரணம் யாதெனின் நட்சத்திரன் „உளம் கலங்கிய நபராம்!"
சரி நட்சத்திரன் செவ்விந்தியன் „உளம் கலங்கிய நபராக" இருந்தாலும் மக்கள் மன்று அவரது கருத்துச் சுதந்தரத்தை மறுப்பதற்கு அதிகாரமற்றது என்பதுடன் ஷோபா சக்திக்கான பதிலளிக்கும் உரிமையை ஊர்ஜிதம் செய்வதற்கும் கடமைப்பட்டிருக்கின்றது. எனவே நட்சத்திரனால் வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படவேண்டும். வெறும் தனிநபர் வசைபாடல் என நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது. தனிநபர் வசைபாடல் என்று ஒப்பாரி வைக்கின்ற நபர்கள் எவ்வாறு அது தனிநபர் வசைபாடலாக அமைந்துள்ளது என்பதையும் ஷோபா சக்தி இலக்கிய திருட்டில் ஈடுபடவில்லை என்பதையும் தக்க ஆதாரங்களுடன் நிறுவவேண்டும்.
மேலும் „எவர் என்ன எழுதினாலும் சமூக ஊடகம் இடம்கொடுக்கும் என்பதனாலேயே எழுதுபவர்கள் அனைவரும் சமம் அல்ல. சாதனையாளர் சாதனையாளரே. கற்றவர் கற்றவரே. மற்றவர்கள் அவரவர் நிலைகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொண்டு மட்டுமே ஒரு பொதுப்பேச்சுத்தளத்திற்கு வரமுடியும்." எனக் குறிப்பிட்டுள்ளார் ஜெயமோகன்.
ஈழத்தமிழர்களின் இலக்கிய மேடையில் யார் முன்வரிசையில் அமரவேண்டும் என்பதை இந்தியாவிலிருந்து எந்தப்பயலும் பரிந்துரை செய்யவேண்டியதில்லை. ஈழத்தமிழர்கள் மத்தியில் சம அந்தஸ்த்து அபத்தமானது என்றும் தங்களது அடிவருடிகளையே முன்னணியில் வைக்கவேண்டுமமென்றும் ஜெயமோகன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். இந்தியாவின் மரபு ரீதியான அடிமை சாசனக்கோட்பாட்டை இலங்கையரும் கடைப்பிடிக்கவேண்டும் என ஜெயமோகன் வேண்டுவதால் அவர் தனது செவிப்பறைக்கான உத்தரவாதத்தை இழக்க நேரிடலாம் என்றும் காப்புறுதி செய்து கொள்வது சிறந்ததென்றும் கருதப்படுகின்றது.
அத்துடன் „எவரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் ஷோபா சக்தி சமகாலத் தமிழிலக்கியத்தின் தலையாய ஆளுமைகளில் ஒருவர். ஈழம் உருவாக்கிய இலக்கியப்படைப்பாளிகளில் முதன்மையான மூவரில் ஒருவர். ஜஅ.முத்துலிங்கம், மு.தளையசிங்கம்ஸ அதில் ஐயமே இல்லை. எவராயினும் அந்த இடத்தை அவருக்கு அளித்தபின்னரே மேலே பேசமுடியும். அவருடைய கிறுக்குத்தனங்கள்கூட அவ்வண்ணமே கருதப்படவேண்டும். அந்த மதிப்பு அடுத்த தலைமுறையினரிடம் இல்லை என்றால் அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஒருவகை தற்குறிகள்." என்கின்றார்
ஈழப்போர் சில படைப்பாளிகளை உருவாக்கியது என்பது உண்மைதான். ஆனால் அந்த படைப்பாளிகளால் மக்கள் எந்த பயனும் அடைந்தாக வரலாறு இல்லை மாறாக ஷோபா சக்தி போன்றோரின் வாழ்நாளுக்கான கஞ்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கஞ்சி தங்கு தடையின்றி கிடைப்பதனை உறுதி செய்வதற்காக ஷோபா சக்தி பல தளங்களை பாவித்துள்ளார். முதலில் புலி எதிர்ப்பு தளத்தில் நின்று புலிகள்; பாசிஸ்டுகள் என உரக்க கத்திய அதே வாயினால் தனது படைப்புக்களை, நட்சத்திரனின் வாதத்தின் பிரகாரம் குப்பைகளை சந்தையில் விடுவதற்காக அந்தர் பல்டியடித்து புலிகள போராளிகள் என்று கூலிக்கு மாரடிக்கும் மகா விசுவாமித்திரனாக மாறி நிற்கின்றர் ஷோபா சக்தி.
எனவே ஷோபா சக்தியை அல்ல எவரையும் எந்த இடத்தில் வைப்பது என்பது எங்கள் பொறுப்பு. ஜெயமோகன் இவ்விடத்தில் நவதுவாரங்களையும் அடைத்துக்கொள்வது சிறந்ததாகும்.
அத்துடன் நட்சத்திரன் மீது கல்லெறிந்த ஜெயமோகன் அவர் திருப்பி தாக்கும்போது பொந்தினுள் நுழைந்து கொள்ளாது வெளியே வந்து சமர் புரிதல் வீரம் என்று நம்புகின்றோம்.
0 comments :
Post a Comment