இலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்! பீமன்.
யாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற தீயநோக்குடனும் திட்டமிட்டு நடப்பட்ட நச்சுக்கல்லொன்று துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா அவர்களின் காலப்பகுதியில் பிடிங்கியெறியப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். இக்கைங்கரியம் பேராசிரியர் சிறிசற்குணராசா அவர்களின் காலத்தில் இடம்பெற்றதென்பது சிறப்பம்சமாவதற்கு காரணம் யாதெனில் அவர் புலிகளின் தீவிர விசுவாசியாகவும் ஆதரவாளனாகவும் செயற்பட்டவர்.
இவ்விடயத்தினை பேராசிரியர் மேற்கொள்வதற்கு பிரதான காரணங்களாக : முதலாவது - குறித்த நினைவுக்கல்லானது மூவின மாணவர்களும் பயிலுகின்ற ஒரு பல்கலைக்கழகத்திலே குற்ற உணர்வுகளை, இனரீதியான தீய சிந்தனைகளை, வன்செயலை, வெறுப்புணர்வை, பழிவாங்கும எண்ணத்தை தூண்டக்கூடியதாகவும் மாணவர்களிடையே இருக்கக்கூடிய அந்நியோன்னியத்தை காலத்திற்குகாலம் குலைக்கக்கூடியதாகவும், அரசியல் முரண்பாடுகளை தோற்றவிக்ககூடியதாகவும் அமையலாம் என்ற நோக்கில்
இரண்டாவது - அரசிடம் அல்லது அரச உயர் பீடத்திடமிருந்து நேரயாகவோ அன்றில் மறைமுகமாகவோ வந்த அறிவுறுத்தல் அல்லது கட்டளை
மூன்றாவது - மேற்கூறிய முதலாவதும் இரண்டாவதும் கலந்த ஒரு கூட்டு முடிவினால் அமைந்திருக்கலாம்.
முதலாவது காரணத்திற்கான சாத்தியக்கூறுகள் மிகச் சொற்ப்பம் அல்லது அடியோடு இல்லையென்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் இயங்குதல் எவ்வாறானது, அந்த இயங்குதலின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?, எந்த நோக்கத்துடன் அவர்கள் இயங்குகின்றார்கள்? அவர்களின் வியூகங்கள் யாது? என்கின்றவற்றை நன்கே அறிந்து வைத்துள்ள பேராசிரியர் கல்லில் கைவைத்தால் தான் ஒரே இரவில் துரோகியாக்கப்படுவேன், தனது கல்விநிலை அந்தஸ்த்து, கற்பித்தலால் பெற்றுக்கொண்ட கௌரவம் யாவும் நந்திக்கடலில் மூழ்கடிக்கப்படும் என்பதை உணராதவராக இந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது.
எனவே இரண்டாவது அல்லது முன்றாவது காரணங்களே முடிவுக்கான மூலகாரணமாக அமைந்திருக்கக்கூடும்.
எடுக்கப்பட்ட முடிவு தீர்க்கதரிசனமானது. காரணம் இக்கல்லின் இருப்பால் ஒருநாள் முரண்பாடுகள் வெளிப்படும், அதிலிருந்து ஊற்றெடுக்கக்கூடிய இரத்த ஆறானது இலங்கையின் சகல நகரங்களையும் ஊடறுத்துச் செல்லவும் கூடும். ஆகவே பிடுங்கியெறியப்பட்ட அந்த நச்சுக்கல்லை மீண்டும் அங்கே வைத்துக்கொள்ள இலங்கை அரசு எடுத்துள்ள முடிவானது அயோக்கியத்தனமானது, வன்செயலுக்கான வழிகளை அரசு தடுக்க மறுக்கின்றது, வன்செயலில் குளிர்காய முனைகின்றது என்கின்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசின்மீது நேரடியாகச் சுமத்துகின்றேன்.
மேலும் இவ்விடயத்தில் உபவேந்தரை இலங்கை அரசு அப்பட்டமாக காட்டிக்கொடுத்து நட்டாற்றில் விட்டுள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயம் எவரால் எடுக்கப்பட்ட முடிவு என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கவில்லை, மாறாக எடுக்கப்பட்ட முடிவின் பலாபலன்கள் என்ன என்பதை மக்கள் முன்வைத்து அச்செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்றியிருக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பிலிருந்து இலங்கை அரசு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது.
இவ்வாறு இலங்கை அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டியுள்ளது. இடம்பெற்று முடிந்த யுத்தத்தில்கூட தங்களுடன் தோழோடு தோழ் நின்ற பல தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள அனுபவங்களை நாம் பதிவு செய்துள்ளோம்:
பல்கலைக்கழகத்திலிருந்த கல்லை அகற்றுமாறு அரசின் உயர் பீடத்திலிருந்து தனக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல் அல்லது அழுத்தத்தின் பேரிலேயே தான் அந்த முடிவுக்கு வந்ததாக தற்போது நேரடியாகவும் இதற்கு முன்னர் நண்பர்களிடம் மறைமுகமாகவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த அறிவுறுத்தல் அல்லது அழுத்தம் எங்கிருந்து வந்தது என காட்டிக்கொடுக்கவில்லை. அது அவரது பேரறிவின் பண்பாக இருக்கலாம். பேராசிரியர் தனக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என காட்டிக்கொடுக்காதபோது, அதே பண்பினை அவருக்கு உத்தரவு பிறப்பித்தவர்களும் கடைப்பிடித்திருக்கவேண்டும்.
கட்டளையை ஏற்று அதனை உடைத்தெறிந்த பின்னர், அவரது கையாலேயே அதற்கு அடிக்கல் நடவைத்தது இலங்கை அரசின் மிகவும் கீழ்த்தரமான செயலாகும். அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும். இந்த காட்டிக்கொடுப்பும் கறிவேப்பிலை பாவனையும் பேராசிரயருடன் இறுதியானதாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் குறித்த கல் எந்த சூழ்நிலையிலும் அல்லது நிபந்தனையிலும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு பொருத்தமற்றதாகும். எனவே அது அங்கு மீண்டும் நிறுவப்படுவதற்கு அனுமதி மறுக்கப்படவேண்டும்:
0 comments :
Post a Comment