Monday, August 3, 2020

கோத்தாவின் மூன்று முகங்கள் பற்றி விபரிக்கின்றார் கேணல் ஹரிகரன்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மூன்று முகங்கள் உள்ளன என அதை இலங்கை ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார் இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கேர்னல் ஆர்.ஹரிஹரன்.

இலங்கையில் ஆகஸ்ட் 5 இல் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது.

முதல் காரணம் கொரோனா தாக்கத்தால் தேர்தல் திகதி ஏற்கனவே இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு வாக்குப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்ஷ அரசியல் குடும்பத்தின், இலங்கை பொதுஜன முன்னணி கட்சி, நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான, இலங்கை சுதந்திரா கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் ஓரங்கட்டி முன்னிலையில் நிற்கிறது. ராஜபக்ஷ கட்சியே, ஆட்சியை கைப்பற்றலாம் என்பதே, பலரின் எதிர்பார்ப்பு.

மூன்றாவது, அரசியலில் அதிகம் பங்கு பெறாத, கோட்டாபய ராஜபக்சே, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இந்த தேர்தல், அவர் எதிர் கொள்ளும் முக்கியமான அரசியல் சவாலாகும். இதுவே, அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிறது.

இலங்கை அரசியல் சட்டப்படி, விகிதாசார வக்காளிப்பு முறையில், தேர்தல் நடத்தப்படும். ஒவ்வொரு வாக்காளருக்கும், இரண்டு வாக்குகள் உள்ளன. அதன்படி, நாட்டில் உள்ள, 162 இலட்சத்துக்கு சற்று அதிகமான வாக்காளர்கள், 225- உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்திற்கு, 196 உறுப்பினர்களை நேரடி வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுப்பர்.

மீதி உள்ள, 29 இடங்கள், வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அளிக்கும், இரண்டாம் வாக்கின் விகித அடிப்படையில், அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். கட்சிகள் ஏற்கனவே பட்டியலிட்டபடி, தமக்கு கிடைத்த இடங்களை நிரப்புவர்.

தேர்தல் குறிக்கோள்


இந்த தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் குறிக்கோள் ஒன்றே; தன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டணி, ஒட்டு மொத்தமாக, மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான், அரசியல் சட்டத்தில் உள்ள, 19 மற்றும் 13ம் சட்டத் திருத்தங்களை அவர் விலக்க முடியும்.

இந்த, 19ம் சட்டத் திருத்தம், தன்னிச்சையாய் செயல்பட்டு வந்த, ஜனாதிபதியின் செயல்முறை அதிகாரங்களை குறைத்து, அவற்றை பாராளுமன்றின் கட்டுப்பாட்டில் ஓரளவு கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம், கடந்த இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டது. அதுபோல, 13ம் சட்டத் திருத்தம், சிறுபான்மையினருக்கு அதிகாரப் பங்கேற்பை அதிகரிக்க, மாகாண சபை அமைப்பை ஏற்படுத்தியது.

அது, 1987-ல், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்போதைய ஜனாதிபதி, ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்டது. ஆகவே, கோத்தாபயவின் குறிக்கோள், வெற்றி பெற்றால், பலமான பாராளுமன்றம் பெரும்பான்மையின் உதவியுடன், ஜனாதிபதி இழந்த செயல் முறை அதிகாரங்களை மீட்கவும், மாகாண சபை அமைப்புகளை நீக்கிவிட்டு, கொழும்பு அரசின் கையை பலப்படுத்த, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கவும் முயற்சி எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

கோத்தாபயவின் அரசியல் முகம்

இப்போதைய ஜனாதிபதி, இலங்கை இராணுவத்தில் கேர்னலாக ஓய்வுபெற்ற, நந்தசேன கோத்தாபய, 71, மற்ற அரசியல் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஏனெனில் அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், கட்சி அரசியலில் நாட்டம் காட்டவில்லை. இராணுவத்திலிருந்து விடுப்பு பெற்ற பின், அமெரிக்க குடிமகனாக மாறிய கோத்தாபய, அவர் அண்ணன் மகிந்தா, 2004-ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பின், நாடு திரும்பி, மகிந்த அரசில், பாதுகாப்பு துறை செயலரானார்.

இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய, முந்தைய மகிந்த ஆட்சியின் போது, பாதுகாப்பு துறை செயலராக செயல்பட்டார். அதனால், இலங்கை இராணுவம் நடத்திய, நான்காம் ஈழப்போரில் கண்ட வெற்றி, கோட்டாபயவுக்கு பெரும் புகழை அளித்தது. அதுவே, ஜனாதிபதி தேர்தலில், இலங்கையின் பெரும்பான்மை மக்களான, சிங்களர்கள் பேராதரவுடன் வெற்றி பெற காரணமாயிருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷ, அரசியல் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், அரசியலில் திளைத்த அவரது மற்ற ராஜபக்ஷ சகோதரர்களை போல, அவருக்கு அரசியல் ஈடுபாடு இல்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் பிரவேசம், தந்தை, டான் ஆல்வின் ராஜபக்ஷ, 1947 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியுடன் துவங்கியது. அவர் தொடர்ந்து, 18 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, 1967ல் காலமானார். அவருடைய மூத்த மகன், சமல் ஜயந்த, 78, முன்னாள் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றியவர்.

அடுத்தவர், 75- வயதான மகிந்தவின் அரசியல் பயணம், 1970-ல், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக ஆரம்பித்தது. அவர், இரு முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மூன்றாம் முறையாக ஜனாதிபதியாக தேர்தலில் தோற்றாலும், இன்றும் இலங்கை அரசியலில் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படுகிறார்.

கோட்டாபயவின் தம்பி, பசில் ரோஹன, 69, நீண்ட காலமாக, அதாவது, 26 வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டு உள்ளார். இடையே, உட்பூசல் காரணமாக, இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்தாலும், மகிந்தவுக்கு உதவியாக எப்போதுமே செயல்பட்டவர். பத்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும், மகிந்த ஆட்சியில் அமைச்சராகவும் அனுபவம் பெற்றவர்.

தற்போது, மகிந்த தலைமையில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் செயலராக உள்ளார். ராஜபக்ஷ குடும்ப அரசியலின் மூன்றாவது தலைமுறை, மகிந்த ராஜபக்ஷவின் மகன், நாமல், பாராளுமன்ற உறுப்பினராக, 2010-ல் தேர்ந்தெடுத்த பின் துவங்கியுள்ளது. கோட்டாபய, கடந்த ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த பின் தான், தன் அமெரிக்க குடியுரிமையை விலக்க விண்ணப்பித்தார்.

ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் எடுத்த பல முடிவுகள், அவருக்கு அரசியல் தலைவர்களை விட, அவருடன் ஒத்துப் போகும் இராணுவ அதிகாரிகளிடமும், திறமையான அரசு ஊழியர்களிடமும், அதிக நம்பிக்கை உண்டு என்பதை காட்டுகின்றன.

கோட்டாபயவுக்கு நடைமுறை அரசியலிலோ அல்லது அதன் அங்கமான, கட்சி உட்பூசல்களிலோ, அதிக ஈடுபாடு கிடையாது. அவர் பேச்சு, அரசியல் முலாம் பூசப்படாமல், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். இதனால், கூட்டணி அரசியல் பிரச்சினைகளை சமாளிக்க, அதில் கைதேர்ந்த மகிந்தவின் உதவி, கோத்தாபயவுக்கு எப்போதுமே தேவைப்படும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, கோட்டாபயவின் அரசியல் முகம், ராஜபக்ஷ குடும்ப அரசியல் முகத்தின் பிரதிபலிப்பே என்று கூறலாம். இருந்தாலும், செயலளவில், கோத்தாபய தன் தனித்தன்மையை காட்டி வருகிறார்.

தேரவாத புத்த முகம்

கோட்டாபயவின் இரண்டாம் முகம், தேரவாத புத்த மதம் சார்ந்தது. அதிபரின் பெயர் கொண்ட, அரசர் கோட்டாபய, மூன்றாம் நுாற்றாண்டில், அனுராதபுர அரசை, 13- ஆண்டுகள் ஆண்டவர். அவர் ஆட்சியின் போது, தேரவாத புத்தத்தை நிலை நாட்ட, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரின், தேரவாத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்துக்காக, 60 புத்த பிக்குக்களை நாடு கடத்தினார்.

இப்போதைய, ஜனாதிபதி கோட்டாபயவின் பதவியேற்பு விழா, அனுராதபுரத்தில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் அரசன், எல்லாளனை வீழ்த்திய சிங்கள அரசன், துட்டகைமுனு நிறுவிய துாபியின் கீழ் நிகழ்ந்தது. அப்போது பேசிய கோட்டாபய, தன் வெற்றிக்கு, சிங்கள புத்த மக்கள் தந்த பெரும்பான்மை ஆதரவே காரணம் என்று குறிப்பிட்டார்.

அப்போது அவர், ஒளிவு, மறைவு இல்லாமல், தன் ஆழ்ந்த புத்த மத கலாசார பின்னணியை குறிப்பிட்டு, மற்ற மதங்களை மதித்தாலும், நாட்டின் அடிப்படையான, தேரவாத சிங்கள புத்த கலாசார பின்னணியை பின்பற்றப் போவதாக கூறினார். இதனால், அவருக்கு சிங்கள புத்த மதத்தினரின், பெரும்பான்மை ஆதரவு தொடர்ந்து வரும் என்பதில் சந்தேகமில்லை.

இருந்தாலும், கோட்டாபயடன் பழகிய பலரின் கருத்துபடி, அவர் இனவாதி அல்ல. அப்படி இருந்தாலும், புத்த மதத்தை முன்னிலைப் படுத்தியே அவர் ஆட்சி நடத்துவார் என்று, பெரும்பாலானோர் நம்புகின்றனர். இதற்கு அவர் எடுத்துள்ள பல முயற்சிகளை மேற்கோள் காட்டலாம்.

இராணுவ முகம்

கோட்டாபயவின் மூன்றாம் முகத்தை, இராணுவ முகம் என்று கூறலாம். அரசியல் மற்றும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தடுமாறும் சிவில் நிர்வாகத்தின் மீது, கட்டுப்பாடான வழிமுறைகளுடன் இயங்கி வரும் இராணுவத்தினருக்கு அதிக மதிப்பு கிடையாது. கோட்டாபயவும் இதே எண்ணமுடையவர் என்று தோன்றுகிறது. ஏனெனில், கோத்தாபயவின் மூன்று முகங்களில், இராணுவ முகமே, அதிக முடிவுகளை எடுப்பதாக கூறலாம். அவர் ஆட்சிக்கு வந்த பின் எடுத்த முடிவுகளில், இராணுவ வழிமுறைகளின் தாக்கம் தெரிகிறது.

முக்கியமாக, தற்போது அவர் ஆணையின்படி, அரசின், 31 அங்கங்கள், பாதுகாப்புத் துறையின் செயலர், முன்னாள் இராணுவ ஜெனரல் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் காவல் துறை, எஸ்.ஐ.எஸ்., என்று கூறப்படும் அரசு நுண்ணறிவு சேவை, குடியேற்ற துறை, குடியுரிமை பதிவு துறை, தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை அடங்கும். சொல்லப் போனால், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், கிழக்கு இலங்கையில் புராதன புத்தமத சின்னங்களை பாதுகாக்க, அமைக்கப்பட்ட குழு கூட, ஒரு முன்னாள் இராணுவ ஜெனரலின் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டுக்கான, தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளின் தலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி பணிக்கான, மத்திய குழுவின் தலைமை ஆகியவற்றுக்கு, தற்போது பணிபுரியும் அல்லது முன்னாள், இராணுவ உயர் அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, ஜனநாயக அரசியலமைப்பை ஓரளவு ஓரங்கட்டிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ஆட்சி செய்வார் என்ற அரசியல் கருத்து நிலவுகிறது.

கோட்டாபயவின் மூன்று முக தேர்தல் பங்களிப்பு, எவ்வளவு துாரம், அவர் வெற்றிக்கு உதவும் என்பதை, ஆகஸ்ட் 5 இல் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்குமா என்பதற்கு விடை அளிப்பது எளிதல்ல. ஏனெனில், இலங்கை அரசியலில், தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளின் நாடகத்தின் முதல் அங்கமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com