விக்கினேஸ்வரனின் கட்சி வடக்கிற்கு ஒரு கொள்கையும் கிழக்கிற்கு ஒரு கொள்கையையும் கொண்டுள்ளதாம். சாணக்கியன்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் கட்சி வடக்கில் ஒரு கொள்கையினையும் கிழக்கில் ஒரு கொள்கையினையும் கொண்டு செயற்பட்டுவருவதாக மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்ட கருத்தினை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் :
வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரின் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடமாகாணத்தில் தமிழ் தேசியத்தினை வலியுறுத்தியுள்ள நிலையில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அபிவிருத்தியை முன்னிறுத்திவருகின்றனர். ஒரு கட்சி வடமாகாணத்தில் ஒரு நிலைப்பாட்டுடனும் கிழக்கு மாகாணத்தில் ஒரு நிலைப்பாட்டுடனும் எவ்வாறு போட்டியிடமுடியும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
இவ்வாறான கட்சிகளைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இந்தக் கட்சிகளின் சின்னம் என்ன என்பது கூட மக்களுக்குத் தெரியாது. இக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் அவராகவே தனது சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்கின்றார். இதை பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு வேட்பாளர் தனது வாகனத்திலிருந்து இறங்கி அவராகவே அவருடைய சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டுசெல்வது அனைத்து வேட்பாளர்களுக்கும் அவமானமாகும்.
நான் முதலில் ஒரு தவறைச் செய்து அதை உணர்ந்துவந்து தமிழ் தேசியம் தான் தேவை என்பதை உணர்ந்து என்னுடைய ஆயுட்காலம் முழுவதும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவனாக நான் இருக்க விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்றேன். ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்டளவு நிதியை வாங்கி இம்முறையும் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம்.
இம்முறை உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை நீங்கள் கேட்க வேண்டும். என்னைப் பற்றி ஒரு சிலர் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்த்தால் வடமாகாண முதலமைச்சர் கட்சியின் ஒருசிலரும் மட்டக்களப்பிலுள்ள ஒரு சிலரும் விமர்சித்திருக்கின்றார்கள். என்னைப் பற்றி அவர்கள் கூறும் விமர்சனங்களை பார்த்தால் அவர்கள் எவ்வாறு தங்கள் கட்சிகளில் போட்டியிடுகின்றனர் என்பதுஎனக்குத் தெரியவில்லை. வடமாகாண முதலமைச்சர் அவர்கள் தமிழ்த் தேசியம் பற்றி ஒருசில கருத்துகள் சொல்லியிருந்தாலும் அவருடைய மகள் திருமணம் செய்திருப்பது வாசுதேவ நாணயக்கார அவர்களின் மகனையாகும். வாசுதேவ நாணயக்கார என்பவர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வலதுகையாவார். கோட்டாபய ராஜபக்ச அவர்களின் இடதுகையாவார்.
2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு மகிந்த ராஜபக்ச அவர்களை முன்னின்று மீண்டும் பதவிக்கு கொண்டுவர அயராது உழைத்த நால்வரில் முக்கியமான ஒருவர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.இந்த வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்திதான் இந்த விக்னேஸ்வரன். இவரது கட்சி எவ்வாறு தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்யமுடியும்? அவர் எவ்வாறு என்னை விமர்சனம் செய்யமுடியும்?
முதலில் உங்கள் வடமாகாணத்தில் உள்ள கொள்கையினையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள கொள்கையினையும் தெளிவாக மக்களிடம் சொல்லுங்கள். வடமாகாணத்திற்கு ஒரு கருத்தினையும் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு கருத்தினையும் சொல்லவேண்டாம். வடகிழக்கினை பிரித்துப்பார்க்கவேண்டாம்.
நீங்கள் வடக்கு மக்களை ஏமாற்ற ஒரு கொள்கையும் கிழக்கு மக்களை ஏமாற்ற ஒரு கொள்கையும் கொண்டுசெய்வது மக்கள் மத்தியில் பல சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment