Wednesday, July 29, 2020

தேர்தலுக்காக கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியமும் தெருவில் இறங்கி நாடகம் ஆடுகின்றது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிக்கும் பொருட்டான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ள கிழக்கு உயர்கல்வி மாணவர் ஒன்றியம். அதன் பொருட்டு அவர்கள் கடந்தகால் தேர்தல் அனுபவங்களை சமகாலத்துடன் ஒப்பிட்டு கையேடு ஒன்றினை விநியோகித்துள்ளனர். அக்கையேட்டில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான அரசியல்

எதிர்வருகின்ற பாராளுமன்ற (2020) தேர்தலானது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகின்றது. எமது இனத்தின் உரிமைகளையும் கடந்தகாலங்களில் கைவிட்டுப்போன அரசியல் அதிகாரங்களையும் மீளப்பெறுவதானால் எமது மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலை மிக கவனமாகவும், புத்திசாதுரியத்துடனும், பொறுப்புணர்வுடனும் அணுகவேண்டிய தேவை எழுந்துள்ளது.

அந்தவகையில் சுருக்கமாகவும், ஆழமாகவும், புள்ளி விபரங்களுடனும் தேர்தல் வாக்களிப்புகள் குறித்த கருத்து கணிப்புக்களுடனும் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்களை உங்களனைவரதும் பார்வைக்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

எமது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியமானது எந்தவொரு அரசியல் கட்சி சார்பானதோ, அன்றில் எந்தவொரு கட்சிக்கோ இனத்துக்கோ எதிரானதோ இல்லை என்பதை முதலில் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்கள் இழக்கப்பட்டுவிடக்கூடாதென்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த விளக்கக் கையேட்டை வெளியிடுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வீதம்

தமிழர்கள் -------75 வீதம்
முஸ்லீம்கள் ------ 24 வீதம்
சிங்களவர்கள் ---01வீதம்

.
இதனடிப்படையில் எமது மாவட்டத்துக்குரிய ஐந்து பிரதிநிதிகளில் நால்வர் தமிழர்களாகவும் ஒருவர் சகோதர இனத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதே பொதுவான நியதியாகும். ஆனால் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான பிரதிநிதித்துவங்களை நாம் இழந்து வந்திருக்கின்றோம்.

கடந்த பாராளுமன்றத்தில் மட்டக்களப்பில் இருந்த தேசிய பட்டியல் உட்பட்ட ஆறு உறுப்பினர்களில் மூவர் சகோதர இனத்தவராகவும் மூவர் தமிழராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்று லட்ஷம் வாக்குகளை கொண்ட தமிழர்கள் மூன்று ஆசனங்களையும் ஒரு லட்ஷம் வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் சகோதர இனத்தவர் மூன்று ஆசனங்களை பெறுகின்ற சூத்திரம் யாது? என சிந்திப்போமானால் தேசிய கட்சிகளின் பெயரில் அளிக்கப்படுகின்ற தமிழர் வாக்குகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதும் வாக்குரிமையை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் புத்திசாதுரியமாகவும் அளிப்பதனுடாகவும் எமது சகோதர இன மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தமக்காக பெற்றுவருகின்றனர். அதுமட்டுமன்றி தேசிய கட்சிகளின் தேசிய பட்டியல் ஆசனங்களையும் பெற்று கொள்கின்றார்கள்.

எமக்குரிய நியாயமான தமிழ் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்பட்டு வருவதற்கான காரணங்கள் யாது?

* வாக்களிப்புவீதம் மிகவும் குறைவாக இருத்தல் (தமிழர்கள் 60வீதம்/சகோதர இனம் 80வீதம் )
* நிராகரிக்கப்படுகின்ற வாக்கு வீதம் அதிகமாக இருத்தல் (தமிழர்கள் 8 வீதம்/ சகோதர இனம் 5வீதம் )
* யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதுப்புது போலி தேசியவாத கட்சிகளை நம்பி கிழக்கிலும் பல கட்சிகளாக பிரிந்து நின்று வாக்குகளை சிதறடித்தல் (தமிழர்கள் 8-10 கட்சிகள்/ சகோதர இனம் 2-3கட்சிகள்)
* தமிழர்கள் தென்னிலங்கை, பேரினவாத தேசிய கட்சிகளில் இணைந்து ஏமாறுவதனுடாக தமிழரின் வாக்குகளைக்கொண்டு சகோதர இனப் பிரதிநிதிகள் வெற்றிக்கு துணைபோதல். (டெலிபோன்,யானை,மொட்டு -----)

இந்நிலையில் எதிர்வரும் காலங்களிலாவது எமக்குரிய நான்கு பிரதிநிதித்துவங்களை நாம் உறுதிசெய்துகொள்வது எவ்வாறு? என்பது குறித்து நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் சகோதர முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டது போல எமக்குரிய பிரதிநிதித்துவத்துக்கும் மேலாக சிலவேளைகளில் ஐந்து ஆசனங்களையும் பெறுவதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு வசமாக்கிக்கொள்ள முடியும்? என்பவற்றையிட்டும் ஒரு சிறு ஆய்வினை செய்ய முனைகின்றோம்.

சகோதர இன வாக்குகளை அடிப்படையாக கொண்டு போட்டியிடும் கட்சிகள் (சுயேட்சை குழுக்கள் தவிர்த்து) மூன்று தரப்பாக போட்டியிருக்கின்றனர்.

1. முஸ்லிம்காங்கிரஸ் (மரம்)

இதில் ஏறாவூரை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நசீர், அலிசாஹிர் மெளலானா மற்றும் காத்தான்குடியை சேர்ந்த ஷிப்லி பாரூக் போன்றவர்கள் ஒண்றிணைந்துள்ளனர்

2.ஐக்கிய மக்கள் சக்தி (ஐக்கிய தேசிய கட்சி சஜித் அணி-டெலிபோன் )

ஒட்டமாவடியை அடிப்படையாக கொண்ட அமீரலி (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-றிசாட் பதியுதீன் தலைமையிலானகட்சி ) சஜித் அணியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் காத்தான்குடியை சேர்ந்த அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்துள்ளது.

3.ஐக்கிய சமாதான கூட்டமைப்பு (வண்ணாத்தி பூச்சி)

ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் காத்தான்குடி ஹிஸ்புல்லாவுடன் இணைந்து போட்டியிடுகின்றார்.(இது பஷீர் சேகுதாவுத் தலைமையில் பதிவு செய்யப்பட்ட புதிய கட்சி. தமிழ் வாக்குகளை அடிப்படையாக கொண்டு போட்டியிடும் கட்சிகள்(சுயேட்சை குழுக்கள் தவிர்த்து) ஏறக்குறைய பத்து தரப்பாக போட்டியிடுகின்றனர்.

1.தமிழ் அரசுக் கட்சி
2.தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
3.பொதுஜன பெரமுன
4.தமிழர் விடுதலை கூட்டணி
5.தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
6.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
7.ஈழவர் ஜனநாயக முன்னணி
8.ஐக்கிய தேசிய கட்சி
9. தேசிய மக்கள் சக்தி
10.முன்னிலை சோஷலிச கட்சி

இதில் முஸ்லீம் காங்கிரஸ் தவிர்ந்த ஹிஸ்புல்லா அணியும் அமீரலி அணியும் தந்திரமாக சில தமிழர்களையும் தமது வேட்பாளர் பட்டியலில் இணைத்துள்ளனர். ஹிஸ்புல்லா அணியில் இரண்டு தமிழர்களும் அமீரலி அணியில் ஐந்து தமிழர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதனுடாக ஒரு சில ஆயிரம் தமிழ் வாக்குகளையாவது பெற்று தமது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே முஸ்லீம் தலைமைகளின் உள்நோக்கமாகும்.

மறுபுறத்தில் தமிழ் வாக்குகள் பிரிக்கப்படுவதால் நமது பிரதிநிதித்துவங்கள் சிறு வாக்குகள் வித்தியாசத்தில் இழக்கப்படும் அபாயங்களை நாம் எதிர் கொள்ளநேரிடும். இது போன்ற நிகழ்வுகள் கடந்தகாலங்களில் நடந்தேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கன.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு தமிழர்களின் வாக்குப்பலத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட சில தீய சக்திகளால் பல சுயேற்சை குழுக்கள் தமிழ் இளைஞர்களை இணைத்து களத்தில் இறக்கப்பட்டுள்ளன எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. அவர்களாலும் தலா சிலநூறு வாக்குகள் வீதம் ஆயிரக்கணக்கான வாக்குகள் பிரிக்கப்பட்டு வீணடிக்கப்பட்டு தமிழர் பிரதிநிதித்துவங்களை பலவீனமடையச்செய்யும் சதிகள் அரங்கேறுகின்றன.
இன்றைய நிலையில் அரசியல் தலைவர்களும் கட்சிகளும் கொண்டுள்ள நிரந்தர வாக்கு வங்கிகள், கடந்தகால தேர்தல்களில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள், மற்றும் தற்போதைய களநிலைமைகளில் உருவாகியுள்ள மாற்றங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து கணிப்பிட முயலுகின்றோம்.

இதுவரையான தேர்தல்களை அடிப்படையாக கொண்டு இத்தேர்தலில் எதிர்பாக்கக்ககூடிய வாக்களிப்பு முறைமையை கீழே தருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டவாக்காளர் தொகை

தமிழ் வாக்காளர்கள்---------308,883 பேர்
முஸ்லீம் வாக்காளர்கள் --- 100,925 பேர்
மொத்த வாக்காளர்கள்--- 409,808 பேர்

தமிழரின் வாக்களிப்பு முறைகள் பற்றிய அவதானம்

தமிழர்களின் வாக்குகளை எடுத்துக்கொண்டால் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் ஏறக்குறைய 309,000 ஆகும். ஆனால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளினிமித்தம் சென்றுள்ளவர்கள் மற்றும் வாக்களிக்க விருப்பமற்றவர்கள், முதியோர்கள் என்று ஒரு லட்ஷத்துக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதில்லை. கடந்தகால தேர்தல்களை நோக்குமிடத்து தமிழர்களின் சராசரி வாக்களிப்பு சராசரி 60 வீதமாகும். அதாவது ஏறக்குறைய 40 வீதமான மட்டக்களப்பு தமிழ் வாக்காளர்கள் தமது வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுவதில்லை என கடந்தகால புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.. அதனடிப்படையில் இத்தேர்தலில் ஏறக்குறைய 123,000 தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கப்போவதில்லை என எதிர்பார்க்க முடியும்.

அதனடிப்படையில் தமிழர்கள் தமது 309,000 வாக்குகளில் (60 வீதம்) ஏறக்குறைய 186,000 வாக்குகளையே அளிப்பார்கள். அதேபோல தமிழர்களின் வாக்களிப்பில் சராசரி 8 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்படுவது வழமையாகும். அதனடிப்படையில் அளிக்கப்படும் 186,000 வாக்குகளில் ஏறக்குறைய 15,000 வாக்குகள் நிராகரிக்கப்படும். ஆகவே தமிழ் கட்சிகளிடையே அங்கீகரிக்கப்பட்டு பகிரப்படப்போகும் செல்லுபடியான வாக்குகள் 171,000 மட்டுமேயாகும்.

முஸ்லிம்கள் தமது 101,000 வாக்குகளில் ஏறக்குறைய (80 வீதம்) 80,800 வாக்குகளை அளிப்பார்கள். அதேபோல முஸ்லிம்களின் வாக்களிப்பில் சராசரி 4 வீதமான வாக்குகள் மட்டுமே நிராகரிக்கப்படுவது வழமையாகும். அதனடிப்படையில் அளிக்கப்படும் 80,800 வாக்குகளில் ஏறக்குறைய 3,200 வாக்குகள் மட்டுமே நிராகரிக்கப்படும். ஆகவே முஸ்லீம் கட்சிகளிடையே அங்கீகரிக்கப்பட்டு பகிரப்படப்போகும் செல்லுபடியான வாக்குகளாக 77,600 இருக்கும். அத்தோடிணைந்து 2,000 தமிழ் வாக்குகளும் சேருமிடத்து 79,600 வாக்குகளாக முஸ்லீம் கட்சிகளின் வாக்கு வங்கி அமையும்.

இன்றைய நிலையில் யார் யார் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்பதையிட்டு சற்று கவனம் கொள்வோம்.

முதலில் முஸ்லிம்களை பொறுத்தவரையில் மூன்று அணிகளும் சம பலம் கொண்டவையாகும். அதாவது மூன்று அணிகளிலும் கடந்த காலங்களில் அமைச்சர்களாகவும் நீண்ட கால அனுபவம் மிக்கவர்களாகவும் உள்ளனர். அதேபோல தத்தமக்கான நிரந்தர வாக்குவங்கிகள் கொண்டவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

ஹிஸ்புல்லா 22,000 வரையான வாக்குகளை பெறமுடியும். அதேபோல அவருடன் இணைந்திருக்கின்ற பஷீர் சேகுதாவுத் ஊடாக சுமார் 4,500 வரையான வாக்குகளையும் இரு தமிழ் வேட்பாளர்களும் தலா 250 வாக்குகளை பெற்றாலும் மொத்தமாக 27,000 வாக்குகளை ஹிஸ்புல்லா அணியினரால் பெறமுடியும்.

அதேபோல முஸ்லீம் காங்கிரஸ் அணியானது ஏறாவூரில் 20,000 வாக்குகளையும் காத்தான்குடியில் 5,000 வாக்குகளையும் ஓட்டமாவடி பிரதேசத்தில் 5,000 வாக்குகளையும் தாண்டி செல்லுவது இம்முறை கடினமாகலாம். ஆகவே முஸ்லீம் காங்கிரசின் வாக்கு வங்கியானது 30,000 என்பதாக மட்டுப்படுத்தப்படும்.

அதேபோல அமீரலியின் வாக்குவங்கி ஏனையவர்களைப்போல குறிப்பிடும்படியாக இல்லை. காரணம் கடந்த தேர்தலில் அவர் பெற்றுக்கொண்ட வாக்குகளில் பட்டிருப்பு கணேசமூர்த்தியினுடாக கிடைத்த 9000 தமிழ் வாக்குகளும் அடங்கும். அதனை கொண்டே அவர் பாராளுமன்ற பதவியை கைப்பற்றினார். தற்போது கணேசமூர்த்தி அவருடன் இன்மையால் அந்த வாக்குகள் அதாவது ஐக்கியதேசிய கட்சியின் வாக்குகள் அவருக்கு கிடைப்பது அரிது. மேலும் தனியாக ரணில் தலைமையிலான யானை சின்னத்தில் வேறாக தமிழர்கள் போட்டியிடுவதால் தமிழ் வாக்குகளை கொண்டு அமீரலி கடந்த முறை பெற்றுக்கொண்ட வாக்குகளை இம்முறை எதிர்பார்க்க முடியாது.

ஆனாலும் தன் முயற்சியில் என்றும் தளராத விக்கிரமதித்தனாக அமீரலி இம்முறை ஐந்து தமிழர்களை தன்னோடு இணைத்துக்கொண்டுள்ளார். அதில் அவரோடு இணைந்து போட்டியிடுகின்ற பாஸ்டர் லோகநாதன் ஊடாக 500 வாக்குகளும் ஏனைய நால்வர் ஊடாக தலா 250 வாக்குகளும் அமீரலி பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உண்டு. எனவே 1500 தமிழ் வாக்குகள் அமீரலி தலைமையிலான சஜித் அணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அத்தோடிணைந்து அவருக்குரிய 12500 வாக்குகளும் அவருடன் இணைந்து போட்டியிடுகின்ற காத்தான்குடியை சேர்ந்த அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குரிய 7000 வாக்குகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆக மொத்தமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் போகின்ற வாக்குகள் 21,000 ஆக இருக்கலாம்.

இறுதியாக
செல்லுபடியாகும் தமிழ் வாக்குகள் - 171,000
செல்லுபடியாகும் முஸ்லீம் வாக்குகள் -77,600
செல்லுபடியாகும் மொத்தவாக்குகள் 247,600
கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையிலான எதிர்பாக்கக்கூடிய வாக்களிப்புக்கள்

முஸ்லீம் அணிகள்
முஸ்லீம் காங்கிரஸ் ------------------ ------------ 30,000
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு----------------27,000
ஐக்கிய மக்கள் சக்தி ------------------------------- 21,000
சுயேற்சை குழுக்கள் ---------------------------------1,600
மொத்தம் (2000 தமிழ் வாக்குகள் உட்பட)--79,600

தமிழ் அணிகள்


தமிழரசு கட்சி --------------------------------72,000
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ---72,000
பொதுஜன பெரமுனை---------------------10,000
தமிழர் விடுதலை கூட்டணி------------- -5,000
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி--------- 4,000
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்----1,000
ஈழவர் ஜனநாயக முன்னணி ----------- 1,000
ஐக்கிய தேசியக்கட்சி -----------------------2,000
தேசிய மக்கள் சக்தி --------------------------- 500
முன்னிலை சோஷலிச கட்சி ---------------300
சுயேற்சை குழுக்கள் ----------------------- -1,200
முஸ்லீம் கட்சிகளுக்கு 2,000
மொத்தமாக -----------------------------------171,000

இந்த செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் ஐந்து வீதத்துக்கு குறைவான வாக்குக்களை கொண்ட கட்சிகள் போட்டியிலிருந்து தள்ளிவைக்கப்படும். அப்படி நோக்குகின்றபோது 247600 வாக்குகளில் ஐந்து வீதம் வாக்குகள் 12,350ஆக இருக்கும். அதன்படி முன்னணியில் நிற்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் தமிழரசு கட்சியும் தவிர்ந்த ஏனைய கட்சிகள் எதுவும் ஐந்து வீத வாக்குகளுக்கு மேல் அதாவது 12,350 வாக்குகளுக்கு மேல் பெறுவதற்கான சாத்தியப்பாடு இல்லை. அந்தவகையில் ஏனைய எட்டு கட்சிகளுக்கும் அளிக்கப்படப்போகின்ற வாக்குகள் அனைத்தும் வீணானவையே ஆகும். பொதுஜனபெரமுனை உட்பட தேறாத கட்சிகள் அனைத்தும் வாக்குகளை பிரித்து வீணடிக்கின்ற வேலையை மட்டுமே செய்யப்போகின்றன.

அப்படி நோக்கினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் வாக்குகளில் அதாவது 171,00 ல் வீணாக போகின்ற 27,000 வாக்குகளை கழித்து வருகின்ற 1,44,000 வாக்குகள் மட்டுமே தமிழர்களுக்கான ஆசனங்களை தீர்மானிக்கின்ற வாக்குகளாக இருக்கும். இந்த வாக்குகளே தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சம அளவில் பங்கிடப்படப்போகின்றன. அதனடிப்படையில் தமிழரை அடிப்படையாக கொண்ட கட்சிகளில் முன்னணிக்கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்பனவே ஆசனங்களை பெறத்தகுதியானவையாக அமையும்.

இவையிரண்டும் தவிர மொட்டு போன்ற தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளுக்கும் வழங்கப்படப்போகின்ற 27,000 வாக்குகள் வீணடிக்கப்படப்போகின்றன. இந்த வீணான வாக்குகள் அனைத்தும் தமிழ் வாக்காளர்களுடையது என்பதுதான் வேதனைக்குரியது.

முடிவாக சகோதர இன கட்சிகளை பொறுத்தவரையில் அவர்களது அணிகள் வாக்குகளை வீணாக்குவதில்லை. அளிக்கப்படப்போகின்ற தங்களுக்குரிய ஏறக்குறைய 80,000 வாக்குகளை மூன்றாக பிரித்து மூன்று அணிகளும் தலா 20,000-30,000 வரையான வாக்குகளை எடுக்கும் வாய்ப்புகளே அதிகம். முஸ்லிம்களிடத்தில் ஐந்து வீதத்துக்கும் குறைவான வாக்குகளை எடுத்து வீணடிக்கும் கட்சிகள் ஒரு போதும் தனித்து நின்று வாக்குகளை பிரிக்கும் வேலையை செய்வதில்லை. இரண்டு அல்லது மூன்று சம பலம் கொண்ட அணிகளாகவே கூட்டுச்சேரும். இம்முறை ஐந்தாவது ஆசனத்தை யார் பெற்றுக்கொள்வது என்கின்ற போட்டியே இந்த மூன்று அணிகளிடையே நிலவும். ஆனாலும் வழமைக்கு மாறாக சகோதர இன கட்சியினர் இம்முறை மூன்று அணிகளாக பிரிந்து நிற்பதனால் அவர்கள் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சந்தர்ப்பங்களும் உருவாக்கலாம். இதனை பல சகோதர இன ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் இருபது ,முப்பது ஆயிரம் வாக்குகள் பத்தாயிரமாகவும் ஐயாயிரமாகவும் நாலாயிரமாகவும் மற்றும் சில்லறைகளாகவும் தென்னிலங்கை தேசிய பேரினவாத கட்சிகளுக்கும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு வீணடிக்கப்படும். அவை போக எஞ்சியுள்ள ஒன்றரை லட்ஷம் வாக்குகளே பெறுமதி மிக்கதாக மாறும். இத்தொகையானது சம அளவில் வெற்றிவாய்ப்பை தட்டிச்செல்லக்கூடிய முன்னணியிலுள்ள இரு கட்சிகளுக்கும் கிடைக்கும். அதாவது இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு 60,000-80,000 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 60,000- 80,000 வாக்குகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்தவாக்குகள் 88,557 ஆகும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எடுத்த வாக்குகள் 42,407 ஆகும். இதனடிப்படையில் தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கொள்ளும் பாரிய சரிவையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கண்டுவரும் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ளும்போது இவ்விரு கட்சிகளும் ஒரு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதலாம் இரண்டாம் இடங்களை பெறுமென பரவலாக நம்பப்படுகின்றது.

எண்ணிப்பாருங்கள் தமிழர்களே!


உரிமை உரிமை என்று போர் முரசு கொட்டியவர்கள் நாங்கள். யுத்தத்தின் பெயரில் எத்தனையோ கொடுமைகளை அனுபவித்தவர்கள் நாங்கள். கோடான கோடி சொத்துக்களையும் பல்லாயிரம் சொந்தபந்தங்களை உரிமைப்போராட்டத்தில் இழந்தவர்கள் நாங்கள். ஆனால் இன்றோ இந்த சாதாரண வாக்குரிமையை கூட புத்திசாதுரியமாக பயன்படுத்தத் தெரியாத கையாலாகாத சமூகமாக பலவீனப்பட்டு நிற்கின்றோம்.

எமது 309,000 வாக்குகளில் சுமார் 123,000 வாக்குகள் ஒவ்வொரு தேர்தல்களிலும் அளிக்கப்படாமலேயே போகின்றது. அளிக்கப்படுபவற்றிலும் 27,000 (இது குறைந்தபட்ஷ கணக்கு சிலவேளை இம்முறை கூடவும் இருக்கலாம்.) வாக்குகள் சில்லறை கட்சிகளுக்கு இடப்படுவதன் ஊடாக வீணடிக்கப்படுகின்றன. எஞ்சுகின்ற ஏறக்குறைய 144,000 வாக்குகளே பிரயோசனப்படுத்தப்படுகின்றன. இத்தகைய பாரிய இழப்பினை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் கண்டு வந்திருக்கின்றோம்.

இவையெல்லாம் எத்தகைய மடத்தனமாக காரியங்கள் என்பதையிட்டு எமது புத்திஜீவிகள் கவனம் கொள்வது குறைவாகவேயுள்ளது. இந்த சமூக அவலத்தையிட்டு எந்தவொரு கற்றோர் குழாமும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படியே அது பற்றி சிந்திப்பவர்கள் கூட தத்தமக்குள் விரக்தியை கொட்டித்தீர்ப்பதோடு சமாதானப்பட்டுக்கொள்கின்றார்கள்.

எனவேதான் கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய நாங்கள் ஜனநாயகம், வாக்குரிமை, மக்கள் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை கற்பதோடு கடந்து செல்லாமல் களத்தில் இறங்க தீர்மானித்தோம். எம்மால் முடிந்தளவு எமது மக்களுக்கு வாக்குரிமையின் மகத்துவத்தை புரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அவாக்கொண்டோம். அதன்பயனாகவே இத்தேர்தலில் நாம் உடனடியாக கவனம் கொள்ள வேண்டிய மேற்படி விடயங்களை இவ்விளக்க கையேட்டின் ஊடாக உங்கள் அனைவரதும் கவனத்துக்கும் கொண்டுவர விரும்புகின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com