எந்த தேரருக்கும் வாக்களியாதீர்! கலாநிதி வலவாஹெங்குனவெவே தேரர் போர்க்கொடி. யோகேஸ்வரனுக்கு வாக்களிக்கலாமா?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு பௌத்த மதகுருவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என இலங்கையர்கள் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதாக மிகிந்தலை ரஜமகா விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனவெவே தம்ம ரத்ன தேரர் மவ்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வரலாற்று நெடுகிலும் இதுவரை பாராளுமன்றிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு பிட்சுவும் பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக எந்தவொரு பங்களிப்பும் செய்யவில்லை எனவும் அவர்கள் தங்களது தனிப்பட்ட சுகபோகங்களுக்காகவே பாராளுமன்றம் செல்கின்றார்கள் எனவும் அவர்கள் தனிப்பட்ட வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள முந்தியடிப்பது கவலைக்கிடமான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்சத்திற்கான கொடியை கீழே தள்ளிவிட்டு பௌத்த சீருடைக்கும் பௌத்த மதத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்துகின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடமளிக்கவே கூடாது. பௌத்த மதகுருமார்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டியது ஆள்பவர்களுக்கு உபசேதம் பண்ணுவதே தவிர அரசியலுடன் தொடர்புற்று, பாராளுமன்றம் சென்று சுகபோகங்களில் மூழ்குவதல்ல என்றும், அறிவார்ந்த மக்கள் இதில் மிகக்கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் பட்டியலில் இடமோ அன்றில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்று செல்வதற்கு பிக்குகளுக்கு சந்தர்ப்பமோ வழங்கவேண்டாம் என முப்பீடங்களையும் சேர்ந்த மகா நாயக்க தேரர்கள் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஒன்றிணைந்து கோரியிருந்தபோதும் சில பிக்குகள் இந்த வேண்டுதலுக்கு செவிசாய்க்காது தனியாக கட்சியொன்றை அமைத்து தேர்தலில் தனியான பயணம் செல்ல முற்படுவது வன்மையாக கண்டிக்கத் தக்க செயலாகும் என தம்ம ரத்தன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புத்த தர்மத்தின் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவைகளைச் செய்துவரும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள், மாதாந்தம் மகா சங்கத்தினரை அணுகி, பிரச்சினைகள் பற்றி அளவளாவி வருகின்ற பின்னணியில், அர்த்தமற்ற முறையில் அரசியலில் பங்குகொள்வதற்கு பிக்குமார் முன்வருவது மஞ்சள் கொடிக்கும் பௌத்த தர்மத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் செயலன்றி வேறில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மதகுருக்கள் பாராளுமன்று செல்வது பொருத்தமற்றது அறமற்றது என பௌத்த தேரர்களுக்கு எதிராக பௌத்த தேரர்களே போர்க்கொடி தூக்குகின்றபோது, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எவ்வித பயனுமற்ற பூசாரி ஒருவரை இரு முறை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பாராளுமன்றுக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment