Saturday, June 6, 2020

தமிழர் அரசியல் பலவீனம் TNA!

TNA கூட்டமைப்பு தமிழர் அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் செயற்படும் அரசியற் சக்தியாகக் உள்ளது இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு இல்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக TNA மாறியிருப்பதை காணலாம்.

மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தை உருவாக்கும் விதமாகவே கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. செயற்பாடுகளும் அப்படித்தான். இதனால், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு கட்டமைப்பாக அது மாறிவிட்டது. ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக உள்முரண்களையும் மோதல்களையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகி விட்டது.

2009 இற்குப் பிறகு அது மெல்ல மெல்ல உடைந்து இப்பொழுது முற்றாகவே உடைந்து சிதறி விடும் இறுதிக் கட்ட நிலைக்கு வந்துள்ளது. முதலில் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகியது. பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) விலகியிருக்கிறது. மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கூடப் பல்லைக் கடித்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அநேகமாக அவையும் பிரிந்து செல்வதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது.

TNA கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது உள்ளரங்கில் நெருக்கமும் பிணைப்பும் விசுவாசமும் உள்ள ஒரு அமைப்பாக இருக்கவில்லை. வெளியே ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு உள்ளது என்ற தோற்றப்பாடு மட்டுமே தெரிந்தது. உள்ளுக்குள் இடைவெளிகளும் ஒவ்வாமை, ஒட்டாமைகளுமே நிலவின.

இது புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இதை உள்ளூர விரும்பினார்கள். காரணம், தாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்கும் போருக்கும் முன்னரணாகவும் தடை நீக்கியாகவும் மட்டும் TNA கூட்டமைப்பு இருந்தாற் போதும் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்தது. மற்றதெல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர்.

அதற்கப்பால் இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது, எதையும் சாத்தியமாக்க இயலாது என்பது புலிகளின் எண்ணம். இரட்டைக்கோபுர தாக்குதலின் விளைவுகளினால் புலிகளுக்கு அன்றைய நிலையில் கூட்டமைப்பு அவசியமாக இருந்தது. புறக்கணிக்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஆகவே, தமக்கு ஏற்றவகையில் கூட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் புலிகள் எடுத்திருந்தனர்.

இதற்கு கூட்டமைப்பினுள்ளே இடைவெளிகளும் உள்முரண்கள் இருப்பதும் நல்லது எனப் புலிகள் எண்ணியிருந்தனர். அதனால்தான், கூட்டமைப்பை இறுக்கமான – வலுவானதொரு கட்டமைப்பாக்குவதற்கோ அல்லது அப்படியான நிலையில் கூட்டமைப்பு உருவாகுவதற்கோ புலிகள் இடமளிக்கவில்லை.

புலிகளின் வீழ்ச்சியோடு நிலைமைகள் முற்றாகவே மாறின. கூட்டமைப்பின் அடித்தளம் சிதையத் தொடங்கியது. இந்தக் குறைபாடுகளின் திரட்சியான விளைவுகளே கூட்டமைப்பைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அது இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குமே இப்போது வலுவானதோர் அரசியல் அணி அவசியமாகியிருக்கின்றது. செயல் வல்லமையுடையதோர் அரசியல் தலைமை இல்லை.

மக்கள் அளித்துள்ள ஆணையை மீறிச் செயற்படுவதாகக் கூறப்படுகின்ற ஒரு கூட்டு அரசியல் அணி அவசியமில்லை. அதனையும் கடந்து தமிழ் மக்களுக்கு எதிர்கால அரசியல் குறித்தும், வளமான எதிர்காலம் குறித்தும் நம்பிக்கையை ஏற்படுத்த வல்லதோர் அரசியல் அணியே இன்றைய அவசியத்தேவை என்பதே தமிழ் மக்களுடைய அரசியல் ரீதியான ஏக்கமாகும். இறுதியில் ஈழத்தமிழர் அரசியலில் வடக்கில் மிஞ்சப்போவது கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா மாத்திரமே.....!!

அன்று வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களுடைய தாயகம் என்ற நிலையில் வலுவானதாக இருந்தது. சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், தமிழ் மக்கள் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற பல பிரதேசங்கள் தனித்துவமான தமிழ்ப்பிரதேசங்களாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை.

கிழக்குத் தமிழரின் நிலை மலையகத்தமிழர் போல் மிகமோசமானதாக அமையும்.!!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com