Sunday, June 28, 2020

ஆயுத வன்முறையில் ஈடுபட்டோர் பாராளுமன்று செல்லமுடியாது. ஜேவிபி க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சேனாதிபதி.

இலங்கையில் ஆயுதவன்முறையில் ஈடுபட்டோர் பாராளுமன்று செல்வது தடுக்கப்படவேண்டும் என்றும் அதன்பொருட்டு ஜேவிபி என்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியினர் பாராளுமன்று செல்வதை தடுக்கும் பொருட்டு தனது சொந்தப்பணத்தில் 50 மில்லியன் ரூபாவினை செலவு செய்யவுள்ளதாக அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணியின் அதிகாரியாகவிருந்து படையை விட்டு விலகியவர் மேஜர் சேனாதிபதி. இலங்கையில் தற்போது அவன்காட் என்ற கடற்கொள்ளையர்களை தடுக்கும் மற்றும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தை நிறுவியுள்ள அவர் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளதுடன் இலங்கைக்கு பெரிதும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிஷங்க சேனாதிபதியின் வியாபாரத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுபாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்தபோது உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டுக்களை ஜேபிவி முன்வைத்துவருகின்றது. இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு சவால்விடுக்கும் நிஷங்க சேனாதிபதி நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்துவிட்டு இது தொடர்பாக பேசுகையில் :

ஜேவிபியினர் தங்களது பிரச்சாரங்களின்போது அவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்யவுள்ளனர் என தெரிவிக்கட்டும், ஆனால் நான் அந்த பிரச்சார மேடைகளின் முன்னே சிறு மேடையொன்றை அமைத்து அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை தெரிவிக்கவுள்ளேன். இதற்காக சில வீடியோக்களை நான் பயன்படுத்தவுள்ளேன். அவர்கள் கடந்த காலங்களில் மக்களின் கை கால்களை வெட்டியுள்ளனர், மக்களை கொலை செய்துள்ளனர், அரச சொத்துக்களை நாசம் செய்துள்ளனர் என்றார்.

வடகிழக்கிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக ரெலோ, புளொட் என்ற இரு ஆயுத வன்முறையில் ஈடுபட்ட குழுக்களும் , ஈபிடிபி , ஈபிஆர்எல்எப் , ரிஎம்விபி , சிறிரெலோ , தமிழர் மகா சபை ஊடாக கருணா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களும் பாராளுமன்று செல்வது தடுக்கப்படவேண்டுமா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com