கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளி என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிப்பு
கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளி என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, திருவையாறு கிராமத்தில் உள்ள விவசாயி வதனமோகனின் தோட்டத்தில் உள்ள வெற்றிலைத் தாவரத்தில் வெட்டுக்கிளி உள்ளதாக இன்று காலை தமக்கு தகவல் கிடைத்ததாகக் கூறிய கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், உடனடியாக குறித்த இடத்திற்கு தாமும், மாகாண விவசாயப் பணிப்பாளர், விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டதாகக் கூறினார்.
குறித்த வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளியா? இல்லையா? என்பது தொடர்பாக உறுதிப்படுத்துவதற்காக பிராந்திய பூச்சியியலாளர் அவர்களிடம் குறித்த வெட்டுக்கிளியின் புகைப்படத்தினை அனுப்பி காண்பித்ததாகவும், அதற்கு அவர் இது சாதாரணமாக காணப்படும் வெட்டுக்கிளி என தமக்கு அறியத்தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் விவசாயிகள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்பதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இவ்வாறான வெட்டுக்கிளிகள் காணப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதி விவசாய போதனாசிரியருக்கு தெரியப்படுத்துமாறும், அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள்தானா என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொன்னையா அற்புதச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment