Monday, June 15, 2020

யஸ்மின் சூகாவிடம் ஒரு பில்லியன் நட்டஈட்டை கோருகின்றார் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சலே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் (ஐ.டி.ஜே.பி) நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சுகாவுக்கு அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சட்டத்தரணி பசன் வீரசிங்க ஊடாக டீ.எச்.எல் கூரியர் சேவை மூலம் லண்டனில் உள்ள யஸ்மின் சூகாவின் முகவரிக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் தலைமையகத்திற்கும் குறித்த அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுரேஸ் சலே உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த மே 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெரலாக பதவி உயர்வு பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் யஸ்மின் சுகா கடந்த ஜூன் முதலாம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுரேஸ் சலே உள்ளிட்ட அதிகாரிகளை விமர்சித்திருந்தார்.

எல்.டி.டி,ஈ காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய டொக்டர் துரைராஜா வரதராஜா என்பவரை 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் கைது செய்து சுரேஸ் சலே உள்ளிட்டவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியாதாக சூகா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி யஸ்மின் சூகா தமக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையின் மூலம் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சலே இந்த நட்ட ஈட்டை கோரியுள்ளார்.

பதினான்கு நாட்களுக்குள் தமக்கான நட்ட ஈட்டை செலுத்தப்படாவிட்டால், ஐ.டி.எல்.பி (ITLP) என்ற இணையத்தளத்தின் மூலம் யஸ்மின் சுகா வெளியிட்ட அவதூறு அறிக்கைக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும் சுரேஸ் சலே தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com