Tuesday, June 23, 2020

குணா கவியழகனின் கஞ்சிக்குள் மண்ணை தூவுகின்றனர்!

பாசிஸ பாசறையில் வளர்ந்தவர் குணா கவியழகன். இவர் தனது கற்பனை திறனினால் பன்னெடுங்காலமாக புனை கதை கூறி தமிழ் மக்களை பாசிஸத்தை ஏற்கப்பண்ணி வருகின்றார். கடந்த சில காலமாக அவர் புலிகள் அமைப்பு உலக நாடுகளால் அழிக்கப்பட்டதாகவும் அதற்கான காரணம் யாதெனின் புலிகளின் வளர்ச்சி உலக போராட்ட உதாரணங்களுக்கு சவாலாக அமையும் என்ற பயத்தினாலாகும் என்றும் சோதிடம் கூறியுள்ளார்.

புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களதும் பணத்தை இலக்குவைத்து , அவர்களை குசிப்படுத்தி பணம்பண்ணும் நோக்கில் குணா கவியழகனால் எழுதப்படும் மற்றும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அவ்விமர்சனங்களில் சிலவற்றை வாசகர்களின் கவனத்திற்கு விடுகின்றோம்.

சுகனின் பதிவு


அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை வந்துவிடக்கூடாது என்ற உறுதியான முடிவில் இலங்கை அரசிற்குச் சார்பாக போரிற் தோற்றுத் தனது அரசியற் தந்திரோபாயத்தை நிலைநாட்டினார் பிரபாகரன் என முன்னர் கருத்துச்சொன்ன குணா.கவியழகன் தற்போது தென்னாசியப் பிராந்தியத்தில் போராட்டம் முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாது என தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

இதை எதிர்கொள்ளக் கொரோனாவாலும் முடியாதென்பதே இன்றுள்ள கள நிலவரம். ஏன் சர்வதேசத்திற்கு விரிக்காமல் தெற்காசியாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தவேண்டும் என கேட்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

உண்மையில் இந்த ஈழத் தமிழர் என்ற இனத்திற்குக் கிடைத்த சர்வதேச ஆதரவைப்போல் உலகில் வேறெந்த இனத்திற்கும் கிடைத்திருக்கமுடியுமா என்பதே சந்தேகம் . சந்தேகமென்ன உண்மையும் அதுதான்.
சர்வதேசம் ஒரு குறைந்தபட்ச அரசியற்தீர்வைப் புலிகள் எட்டுமிடத்து அதற்கான அனைத்து வளங்களையும் வழங்கத் தயாராக நின்றன. இவ்வளவு ஈடுபாட்டை சர்வதேசம் வேறெந்த அமைப்புகளிற்கும் வழங்கியிருக்கவில்லை.

ஒரு விடுதலை இயக்கம் செய்திராத அத்தனை கொடூரங்களையும் கடந்து அதைக் கருத்திற்கெடுக்காது ஒரு சமாதானத் தீர்வை நோக்கிப் புலிகள் நகரவேண்டிய அவசியத்தைச் சர்வதேச ராஜ தந்திரிகள் அனைவருமே வலியுறுத்தியிருந்தார்கள். இது பாலசிங்கத்திற்குத் தெரியும். பிரபாகரன் அதற்கு உடன்படான் என்பதே ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் பேசுபொருளாகவிருந்தது.

ஆக மிஞ்சிப்போனால் அற்ப காரணங்களைச் சொல்லிக் குழப்பும் இந்த பரிதாபத்திற்கு ஈழத் தமிழர் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் முட்டாள்கள் என்றும் சர்வதேசம் ஒரு எழுதப்படாத முடிவிற்கு வந்திருந்தது.
இதன் நீட்சியாகவே 27 சர்வதேச நாடுகள் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தியிருந்தது. புலிகளின் இந்த அழிவைச் சர்வதேசம் முன்னரே கணிப்பிட்டிருந்தது. சர்வதேசத்தின் பிரச்சனை புலிகளுக்குள் அகப்பட்ட மக்கள் குறித்தாகவேயிருந்தது.

இறுதி நாட்களில் பிரபாகரனின் பிரச்சனை அமெரிக்கா கப்பல் கொண்டுவருமா என்பதாகத்தான் இருந்தது என போரின் முடிவு குறித்து விவாதித்த ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இது குறித்த பிரபாகரனுக்கும் கே.பி யிற்கும் நடந்த உரையாடலில் "கே.பி. அம்மாவாணைச் சொல்லு ! அமெரிக்கா கப்பல் கொண்டு வருமா ? " எனக் கேட்டதாகவும் அதற்குக் கே.பி. "கப்பலோடை ஹெலியும் வந்து உங்களை ஏற்றிக்கொண்டு போகும் ! " எனப் பதில் சொன்னதாக ஒரு பதிவு உண்டு.

கே.பி. காஸ்ரோவிடம் கேட்ட அந்த 300 மில்லியன் டொலரை கே.பியிற்குக் கொடுக்க காஸ்ரோ மறுத்ததாலேயே பிரபாகரன் அண்ட் கோ வெள்ளைக் கொடியைத் தூக்கவேண்டி வந்தது என முடிவுறாப் பஞ்சாயத்து இப்போதும் விவாதத்தில் உண்டு. இவ் விடயத்தில் காஸ்ரோவைக் குற்றம் சொல்வோரும் உண்டு கே.பி.யைக் குற்றம் சொல்வோரும் உண்டு.

குணா! உங்களுடைய இயக்கத்தின் முடிவே இன்னும் துலக்கப்படாத மர்மமாக இருக்கிறது. இதில் சாதிய நிலைப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து இயக்கத்தின் மீது விழுந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் முடிவு சொல்வது ஒரு முரண்நகை என உங்களுக்குத் தோன்றவில்லையா ?/

நித்தியின் பதிவு

குணா கவியழகன் அவர்களின் காணொளியைக் கேட்டேன். உங்களின் முன்பகுதி விளக்கம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தென் ஆசியப்பிராந்தியத்தில் சமூக அமைப்பு சாதிய அமைப்பாக இருக்கிறது என்றும், ஒரு சமூக போராட்டம் என்று வருகிறபோது ஒரு போராட்டத்திற்கு முன்மாதிரியாக விடுதலைப்புலிகளின் போராட்டம் role model ஆக, அதாவது முன்மாதிரியாக வந்துவிடக்கூடாது என்று அரசியல் அதிகாரம் நினைக்கிறது என்று பூர்வாங்க கருத்தினை முன்வைக்கிறீர்கள்.

குணா, நீங்கள் கதை எழுதுகிறவர். நீங்கள் மிகுந்த கற்பனை உலகிலேயே வாழ்கிறீர்கள் போலிருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட்டம் லட்சக்கணக்கான உயிர்களைக்காவுகொண்டு , மிகப்பெரும் ராணுவ வலிமைக்குப்பின் மிகமிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட வரலாறு கொண்டது. அந்த வரலாற்றைப்படிக்கிறவர்கள் , இவ்வளவு உயிரைப்பலி கொடுத்து , ஒன்றுமே மிஞ்சாமல் , முன்னிருந்த நிலமையைவிட, மோசமான நிலைக்கு மக்களைத்தள்ளிவிட்டு, தாங்களும் அழிந்து போன கதையிலிருந்து என்ன போராட்ட ஊக்கம் பெறுவார்கள் என்று எனக்குத்தெரியவில்லை.

உங்களுக்கே அந்த சரித்திரம் அப்படி ஒரு போராட்ட உணர்வை இன்று தந்ததுண்டா? அதிலும் போர் முடிந்து, கை ,கால் இழந்து , அங்கஹீனர்களாய் , சாப்பிடவும் வழியின்றி, சமூகத்தாலும் கணக்கில் கொள்ளப்படாத முன்னாள் போராளிகள் எந்தப் போராட்ட முன்மாதிரிகளாய் திகழ்கிறார்கள்?

உண்மையில் இந்தப்போராட்டவரலாற்றை போட்டுக்காட்டினால், நீங்கள் கூறும் தென் ஆசியப்பிராந்தியத்தில் போராட்டப்பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டார்கள்.. நாட்டிலும் மாவீரர் தினங்கள் உயிர் நீத்தாருக்கான அஞ்சலியாக மட்டுமே, உயிர் துறந்த தங்கள் பிள்ளைகளின் கல்லறைகளில் தாய்மார்கள் நெஞ்சு வெடிக்க அழும் சோகக்காட்சியை உறையவைப்பதாக மட்டுமே கொண்டுள்ளன என்பதை நீங்கள் அறியவில்லையா? பழைய வீர சாகசங்களை நினைவு படுத்தி கட்டுரைகள் எழுதி, நாம் அமைதி காண்பதைத்தவிர, செயலில் அதனை role model ஆக முன்னெடுக்க ஈழத்தில் இன்று தயார் நிலையில் இருப்பவர்கள் யார்? வெளிநாடுகளுக்குத் தப்பி வந்துவிட்டவர்களை நீங்கள் கணக்கில் எடுக்கும் கற்பனையில் இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்தது, உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளிலிருந்து விசாரணையை ஆரம்பிக்கலாம் என்று புலிகள் கோரியதாக எங்கும் ஆதாரம் இல்லை. 1994 ஒக்டோபர் 11ஆம் திகதியிடப்பட்டு அரச சார்பில் பாலபட்டபெந்தி புலிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை அனுப்பியிருக்கிறார். அதில்,

1)அத்தியாவசியப்பொருட்களின் போக்குவரத்து-மிகக்குறைந்த விலையில் இப்பொருட்களின் விநியோகம்
2)மின்சார விநியோகம், வீதிகள், நீர்ப்பாசன வசதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகளின் சீரமைப்பு
3)யாழ்ப்பாண நூலகத்தின் புனர்நிர்மாணம்
4)போர் நிறுத்தத்திற்கு வழி செய்யும் வகையில் பகைமை நடவடிக்கைகளை நிறுத்துவது பற்றி ஆராய்தல்
5) மற்றும் முக்கிய அம்சங்கள்.
ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தைகள் இந்த ஒழுங்கில் சீராக நடைபெற்றதாக இரு தரப்பும் அறிக்கையிட்டுள்ளன.

இப்பேச்சு வார்த்தையில் விடுதலைப்புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ் நூல்நிலைய அழிவு குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க விசாரணைக்குழுவை நிறுவுவதென அரச தரப்பு இணக்கம் தெரிவித்தது. நூல்நிலையத்தை மீளக்கட்டித்தரவும் அரச பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர் என்றும் புலிகளின் அறிக்கை கூறுகிறது. நூல்நிலையத்தை அரசு மீளக்கட்டித்தருவதற்கு புலிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பேச்சு வார்த்தை மேசையில் மிகத்தெளிவாக இவை பேசப்பட்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே நூலகத்தின் புனர்நிர்மாணம் இடம்பெற்றுள்ளது. புலிகள் நூலகக்கட்டிடத்தை மீளக்கட்டியமைக்க விரும்பவில்லை என்று பிரச்சாரம் செய்வதோ, சந்திரிகா வந்து நூலகத்தைத் திறந்துவைத்து தன்னை சமாதானத்தேவதையாக நற்சாட்சிப்பத்திரம் பெற்றுவிடுவார் என்பதால்தான் அதனை புலிகள் விரும்பவில்லை என்பதிலே உண்மை இல்லை. நூலகக்கட்டிடத்தை திறந்து வைக்க நீங்கள் வரவேண்டும் என்று புலிகள் கும்பிட்டுக் கேட்டிருந்தாலும் சந்திரிகா வந்திருக்க மாட்டார். இந்த புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்பதெல்லாம் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சந்திரிகா யாழ் வந்து நூலக ribbon ஐ வெட்டிவைக்க சம்மதித்திருப்பார் என்று சொல்வதற்கில்லை.

ஜெயதீஸ்வரனின் பதிவு

புலிகளை சர்வதேச நாடுகள் யாவும் இணைந்துதான் அழித்தது என்று தொடர்ந்தும் கதை விடுற புலியழகனுகளுக்கு மீண்டும் ஒருமுறை கூறுகின்றேன். புலிகள் வெறும் „பப்படம்"

புலி என்ற பப்படத்தை இறுக்கிப்பிடித்து நொருக்குவதற்கு இலங்கை இராணுவத்திடம் முழுப்பலமும் இருந்தது. ஆனால் புலிகளை வைத்தே தமிழ் மக்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்தை சிதைக்கவேண்டுமென்ற இழி சிந்தனையில் கடந்த கால அரசுகள் புலிகளை ஒரு வரையறைக்குள் வைத்திருந்தது. சில சந்தர்ப்பங்களில் பணம் மற்றும் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து போஷித்தது. அவர்களின் கணிப்பீடும் சரியாகவே இருந்தது. புலிகள் அரசுக்கு எதிராக போராடியதைவிட தமிழ் மக்களை அடக்கியாள்வதற்கே தங்களது சகல வளங்களையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பது வரலாறு.

மஹிந்த அரசாங்கம் கூட ஏனைய அரசுகள்போல் புலிகளை வளரவும் விடாது அழியவும் விடாது தொடர்ந்தும் தமிழ் மக்களை சிதைத்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அவ்வாறு செய்யாமைக்கான காரணம் மஹிந்த அரசிற்கு தமிழ் மக்கள் மீதான அக்கறை என்று எடுத்துக்கொள்ளவேண்டாம்.

காரணம் இதுதான். புலிகள் என்று பெயர் சூடிக்கொண்ட கூலிப்படைக்கு பணத்தை கொடுத்து தமிழ் மக்களின் வாக்குரிமையை சூறையாடி 2005 ம் ஆண்டு தேர்தலில் சிம்மாசனம் ஏறினார் மஹிந்தர். ஆனால் புலிகள் கோரிய ஏகபிரதிநிதித்துவத்தை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை. ஏனெனில் அது உலக ஜனநாயகத்திற்கு முரணானது, சவாலானது, கீழ்தரமானது. அதற்கு மேலாக ஏகபிரதிநிதித்துவத்தை அங்கீகரித்துவிட்டு சிங்கள மக்களிடம் அவரால் வாக்கு கேட்டு போகமுடியாது.

ஏக பிரதிநிதித்துவ கோரிக்கையை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்குவந்து வேறு எதையாவது கேள் தருகின்றேன் என்றார் மஹிந்தர். பிரபாகரனோ, விளையாட்டு துப்பாக்கியைக்கண்ட முரட்டுப்பையன் ஒருவன் தாயார் அதை வாக்கி கொடுக்காததால் கடை வாசலில் விழுந்துபடுத்து வழிப்போக்கர்களுக்கும் கடையின் வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு செய்வதுபோல் அடம்பிடித்துக்கொண்டு மாவிலாற்றுக்கு குறுக்கே படுத்தான்.

மாவிலாற்று அணையிலிருந்து பிரபாகரனை தூக்கி முள்ளிவாய்காலுள் அமிழ்த்தவில்லையாயின் , 2010 தேர்தலில் தமிழர் அனைவரும் ரணிலுக்கு வாக்களித்து தன்னை வீட்டுக்கு அனுப்புவர் என்பதை உணர்ந்த மஹிந்தர், புலிகளுக்கு வேட்டு வைத்தால் சிங்களமக்களின் வாழ்நாள் மன்னனாகலாம் என்ற முடிவுக்கு வந்தார். கட்டளை பிறந்தது. நிறைவேற்றினார் பொன்சேகா.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது கமரோன், மிலிபான்ட், யசூசி அக்காசி, எரிக்சொல்கைம் என சர்வதேச தலைவர்கள் அனைவரும் யுத்தத்தை நிறுத்து என்றார்களா? அல்லது புலியை அடித்து முடி என்றார்களா?

வரலாற்றை ஒருமுறை படி புலியழகா. உனக்கு எங்கே அந்த வரலாறு விளங்கப்போகின்றது, உனது இரத்தத்தில் ஓடுவது பாசிஸத்தின் எச்சில்முள் தின்றுவளர்ந்த இரத்தமல்லவா? அந்த இரத்தம் உன் உடம்பில் ஓடும்வரை நீ ஜனநாயக வெறுப்பை மக்கள் மத்தியில் விதைப்பாய்;..

உழைத்து தின் சிலவேளை உனது இரத்தம் சுத்திகரிப்பாக சாத்தியம் உண்டு...

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com