Monday, June 15, 2020

யாழ் மாவட்டத்தை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து - எச்சரிக்கும் சுகாதாரத் துறை!

கொரோனா அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை காச நோயாளர் 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ் வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.

ஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. கடந்த 3 நூற்றாண்டு காலமாக உலகெங்கும் காச நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் காச நோயால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 1.1 மில்லின் சிறுவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகளாவிய ரீதியில் 2020 ஆம் ஆண்டு தொடக்கும் 2021 ஆம் ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப்படுவார்கள். இதில் 3 மில்லியன் மக்கள் தாங்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலே அந்த நோயுடன் வாழ்வார்கள். மேலும் ஒரு மில்லியன் மக்கள் எதிர்வரும் ஒரு வருடத்தில் உயிரிழக்க வேண்டி நேரிடலாம். எனவே காச நோய் தொடர்பான வழிப்புணர்வும், அதற்கான சிகிச்சையும் மிகவும் இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com