ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு* தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது. அங்கஜன்
மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு இன்றை உயர்நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனநாயக முறைப்படி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தையும் தேர்தல் ஆணையாளார் மகிந்த தேசப்பிரியவினால் ஜூன் மாதம் 20ம் திகதி அறிவிக்கப்ட்ட பொதுத்தேர்தலுக்கான வர்தகமானி அறிவித்தலையும் சாவலுக்கு உட்படுத்தி ஜனநாயகத்தை விரும்பாதவர்களால் உயர் நீதிமன்றத்தில் வழங்கு தாக்கல் செய்யப்பட்மையை யாவரும் அறிந்ததே! நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை சாதகமாக பயன்படுத்தி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தென்னிலங்கை மற்றும் மலையக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இவர்கள் நாட்டு மக்களையோ அல்லது நாட்டில் பரவியுள்ள வைரஸ் தாக்கத்தை எண்ணியோ கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரவில்லை. தமது அரசியல் இருப்புக்களை தக்க வைத்து கொள்வதற்கும் நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களினது கொரோனாவை கட்டுப்படுத்துவது உட்பட செயற்திறன் மிக்க பல்வேறு செயற்பாடுகளை பாராளுமன்றத்தின் ஊடாக கட்டுப்படுத்துவதே அவர்களது நோக்கமாக காணப்பட்டது.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான எம். ஏ. சுமத்திரன் மக்களின் ஜனநாயக பண்பியல்புகளை இழுத்தடிப்பு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் எதிர்நோகும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனை தொடர்பில் நீதிமன்றம் சென்று தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் தென்னிலங்கை ஆதரவு சக்திகளுடன் இணைந்து மக்களின் உரிய காலப்பகுதியில் பிரயோகிக்கப்படும் வாக்குரிமையை மழுங்கடிக்க முற்பட்டனர்.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் சூழலிலும் கூட தமது பாராளுமன்ற பிரதிநிதிதுவத்தை மக்களுக்காக துறக்காது அரச வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்க தமிழ் மக்கள் பங்கர்களிலும் மரத்தடிகளிலும் பதுங்கி இருந்த காலங்களை பற்றி சற்றுமே சிந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தவறினர்.
கடந்த வடக்கு மாகாண சபையில் தமக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனவும் வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக கூறி தமிழ் மக்களுக்கு வடக்கு மாகாணசபை தேர்தல் ஏற்புடையது அல்ல என கூக்குரலிட்ட கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டி வெற்றி பெற்றிருந்தனர். இவ்வாறு ஆட்சியை பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தியை கூட முன்னெடுக்காத நிலையில் ஓதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்லும் நிலையே உருவானது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாண சபைகளும் உரிய காலப்பகுதி நிறைவடைந்த பின் கலைக்கப்பட்டு அதன் ஆட்சி அதிகாரங்கள் மாகாண ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கலைக்கப்பட்ட மாகாணசபை தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகளை தடுக்கும் முகமாக அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முண்டு கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சியில் பங்காளர்களாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து உரிய நேரத்தில் தேர்தலை நடாத்த ஒத்துழைக்காது நீதிமன்றம் வரை சென்று தடைகளை ஏற்படுத்தினர். அவ்வாறே 2020இல் நடைபெற தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலையும் குழப்பும் நோக்கில் மக்களின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தையே அடகு வைக்க பல்வேறு வழிகளில் முயன்ற சகல முயற்சிகளும் தற்போது தோல்வியில் முடிவடைந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் நடக்காவிட்டால் தான் வழக்கு போட வேண்டும் ஆனால் இங்கோ தேர்தல் நடாத்தக்கூடாது என்றுதான் வழக்கு போடுகின்றனர்.
தமிழ் மக்களுக்காக எந்த நிலையிலும் தமது பாராளுமன்ற ஆசனங்களை தூக்கியெறியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தமிழ் மக்கள் தம்மை எதிர்வரும் தேர்தலில் தூக்கியெறிந்து விடுவார்களோ என்ற அச்சமே காரணம் என எண்ண தோன்றுகிறது.
ஆகவே உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்றம் கலைக்கப்ட்டமையையும் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்ட்ட தேர்தல் திகதியை சாவலுக்கு உட்படுத்தியும் தொடுக்கப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மீறல் மீதான வழக்குகள் பத்து நாட்களாக ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளால் இருபக்க சமர்பணங்களையும் கேட்ட அறிந்த பின் குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமலேயே தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தமை ஜனநாயகத்தை உண்மையாக விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என அங்கஜன் மேலும் தெரிவித்தார்.
- அங்கஜன் இராமநாதன் ஊடக பிரிவு -
(02/06/2020)
0 comments :
Post a Comment