கொலைகாரர்கள் பாராளுமன்று வரும் கலாச்சாரத்தை நிறுத்துங்கள்! தேசிய அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை.
கருணாவின் அண்மைய கருத்தினால் சிங்கள மக்கள் மிகவும் கொதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கருத்து தொடர்பில் மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருணாவை நியாயப்படுத்த முனையும் மறுபுறத்தில் எதிர்கட்சிகள் யாவும் இவ்விடயத்தை வன்மையாக கண்டிப்பதுடன் மஹிந்த மீது சேறை வாரி இறைத்து வருகின்றது.
தமிழர்களை கொன்ற எங்களுக்கு வாக்கு போடுங்கள் என மஹிந்த சிங்கள மக்களிடம் வாக்குகளை கோருகின்ற அதே தருணத்தில் தனது உள்வீட்டுப்பிள்ளையான கருணாவை கிழக்கில் சிங்களவர்களை கொன்றேன் என வாக்கு சேகரிக்க அனுமதித்துள்ளார். மொத்தத்தில் இவர்கள் இன்று ஒட்டு மொத்த இலங்கை பிரஜைகளையும் கொன்றதை வைத்துத்தான் வாக்குக்கேட்கின்றனர் என அவர்கள் மக்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
கருணாவின் இப்பேச்சு தொடர்பாக உலக இலங்கையர் பேரவையின் ஸ்தாபகர் சுனில் சந்திரகுமார காரசாரமான பதிவொன்றினை இட்டுள்ளதுடன் கருணா போன்ற கொலைகாரர்கள் எவரும் பாராளுமன்று செல்ல முடியாத அரசியல் கலாச்சாரம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்க வேண்டுமென்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவு இவ்வாறு அமைந்துள்ளது:
கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்தானது இந்நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் விரும்புகின்ற சகல மக்களாலும் நிராகரிக்கப்படவேண்டியதாகும். கருணா வழங்கியுள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமானதாகும். தற்போது இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது யாதெனில் கருணா மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருணாவிற்கு வெள்ளைச்சாயம் அடிப்பதை நிறுத்தவேண்டும்.
1990 ம் ஆண்டு நிராயுதபாணிகளாக நின்ற 600-774 பொலிஸாரை திட்டமிட்டு கொலை செய்வதற்கு அன்றைய கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவே காரணமாகும். அன்றைய ஜனாதிபதி பிறேமதாஸ சரணடையுமாறு விடுத்த கட்டளைக்கு பணிந்து சரணடைந்து தமது உயிர்களை கொடுத்த பொலிஸாருக்கு இன்றுவரை நீதிகிடைக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டவேண்டியதாகும். கருணா நான்தான் கொன்றேன் என பேசும் இந்த இறுமாப்பு பேச்சினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள உளவியல் வேதனையை அரசு குறைத்து மதிப்பிட முடியாது. கருணாவின் இந்த கர்ஜிப்பானது முழு இராணுவத்தினரையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே மக்களின் பூ ரண நம்பிக்கையை வென்றுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் இவ்வாறான கொலைகாரர்கள் பாராளுமன்றுக்கு வருவதை நிறுத்தும் விதமான புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கம் வேண்டுமென நாட்டு மக்கள் சகலரும் எதிர்பார்கின்றனர்.
0 comments :
Post a Comment