சிறீதரனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : சிவசக்தி ஆனந்தன்
புதிய ஆட்சியாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ இல்லை. இதற்கென சின்னமும் இல்லை.
அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எவ்வாறு தடை செய்யமுடியும். நகைச்சுவை நடிகர் வடிவேல் நகைச்சுவைக்காக கிணற்றைக் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்யுமாறு கூறுவார்.
பதிவுகளே இல்லாத கட்டமைப்பொன்றினை தடைசெய்வதாக கூறுவது அதுபோன்று தான் உள்ளது.
அடுத்ததாக அவர் தமிழரசுக்கட்சிக்கு பதிலாக கூட்டமைப்பென கூறிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். தமிழரசுக் கட்சியைக் கூட எந்தவொரு அடிப்படையிலும் அரசாங்கம் தடைசெய்யாது.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சமஷ்டிக் கட்சியாக தமிழரசுக்கட்சி இருந்தாலும் தாம் பிரிவினையைக் கோரமாட்டோம். சமஷ்டி பிரிவினை இல்லையென்று சத்தியக்கடதாசி உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டாகிவிட்டது.
மேலும் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்ததைப் போன்று இம்முறையும் முண்டு கொடுப்பதற்கு தயாராகி விட்டது.
ஆகவே தமக்கு ஆதரவாக ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக உள்ள அரசியல் தரப்பினை ஆட்சியாளர்கள் தடைசெய்வார்களா?
எனவே இத்தகைய கருத்துக்கள் அனைத்துமே தேர்தல் வெடிகுண்டுகளே. அவருடைய கட்சியின் பேச்சாளர் விடுதலை போராட்டத்தினை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டபோது அமைதிகாத்தமையால் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி தொடர்ச்சியாக பேசிவந்ததோடு புலிகளின் தளபதிகளில் ஒருவரின் மைத்துனராக இருக்கும் ஒருவரே மௌனமாக இருந்துவிட்டாரே என்ற அதிருப்திகளும் மக்கள் மத்தியில் உண்டு.
ஆகவே அவையனைத்தையும் திசை திருப்பவே திடீரென ராஜபக்ஷவினர் மீது சீறியிருக்கின்றனர். எனது கடந்தகால அவதானிப்புக்களின் அனுபவத்திலிருந்து தேர்தல் நெருங்கும் தருவாயில் விசாரணைக்கும் அவர் அழைக்பப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த காலத்தில் அவ்வாறான நிகழ்வும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே சற்று ஆழமான கரிசணை செலுத்தினீர்கள் என்றால் அதன் பின்னணி உங்களுக்கும் புரியும் என்றார்.
0 comments :
Post a Comment