7 மணித்தியாலங்களின் பின்னர் சிஐடி யிலிருந்து வெளியேறினார் கருணா. நீதிமன்று அதிரடி உத்தரவு.
ஆனையிறவுத்தாக்குதலின் போது 2000-3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றொழித்ததாக புலிகளின் முன்னாள் தாக்குதல் தளபதிகளின் முக்கியஸ்தரான கருணா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவரிடம் இன்று 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
இன்றுகாலை 10 மணிக்கு சிஐடி யில் தனது வக்கீல் சகிதம் ஆஜரான கருணாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்கிவிட்டு சிஐடி யிலிருந்து வெளியேறியபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா, தான் இலங்கை இராணுவத்தினரையோ அன்றில் அரசையோ பலவீனப்படுத்தும் அல்லது அசௌகரியப்படுத்தும் நோக்கில் அக்கருத்தினை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேற்படி கருத்திற்கு எதிராக கருணாவின் அரசியல் எதிராளிகள் பலர் அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர். குறிப்பாக புலிகளின் பினாமிக்கட்சி என்று குறிப்பிடப்படுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியின் வக்கீல் மணிவண்ணன் இந்நாட்டின் இராணுவத்தினரை கொன்றொழித்த புலிகளின் தளபதியின் இக்கூற்றானாது வெறும் கருத்து கிடையாது இது புலிகள் மேற்கொண்ட கொலைகளுக்கான குற்ற ஒப்புதல் வாக்குமூலமாகும். எனவே அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கவேண்டும் அரசை வேண்டினார்.
இதனை தொடர்ந்து ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை சேர்ந்த ஹெடிகல்லே விமலசார தேரர கொழும்பு மேலதிக நீதிமன்றில் மேற்படி கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸாரை பணிக்குமாறு வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவினை விசாரணை செய்த கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, கருணா அம்மான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து உள்ள வீடியோவை வைத்து விசாரணை செய்யும்படி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேநேரத்தில் குறித்த கருத்தினை பிரசுரித்த ஊடகங்கள் அவ்வீடியோ பதிவுகளை வழங்குமாறு மன்றை உத்தரவிடக்கோரியிருந்தது சிஐடி. இதற்கான உத்தரவை மன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ளது.
மேலும் கடுவெல நகர சபையின் உறுப்பினரான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் மனித உரிமைகள் மீறல் வழக்கொன்றை இன்று கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதுடன் கருணாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் அவர் மீது வழக்கு தொடர்ந்து அவரை சட்டத்தின் முன்நிறுத்த கோரியுள்ளார். இவர் தனது வழங்கில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் கருணா ஆகியோரை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment