சுமந்திரன் சொல்லத் தவறிய கதை சொல்கின்றார் றுசாங்கன்.. !
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் சரியானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை என சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவிட்டார் என்று எல்லோரும் நெருப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவரது இந்தக் கருத்துப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் - அவருக்கு எதிராக அதிகளவிலும், ஆதரவாக சிறியளவிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதில் எவருமே சுட்டிக்காட்டாத சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றையே நான் இங்கு கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.
இந்த வாதப் பிரதிவாதங்களில் நண்பர் ஒருவரின் பதிவில், ஆயுதப் போராட்டம் ஆயிரக்கணக்கான உயிரிழிவுகள், அங்கவீனங்கள், காணாமல்போதல்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள், சனத்தொகைச் சரிவு, பொருளாதார சிதைவு, கல்வி வீழ்ச்சி, நிலங்கள் இழப்பு, இராணுவ முகாம்களின் பெருக்கம் என்று ஏராளம் துன்பங்களையே இறுதியில் விட்டுச்சென்றிருக்கின்றது என்கின்ற ஒரு யதார்த்தமான அவதானத்தை வெளியிட்டிருந்தார்.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் இழப்புக்கள் அதிகம் என்பதை மறுக்க முடியாது.
வீம்புக்கு வேண்டுமானால் தமிழரின் பிரச்சினையை, வீரத்தை உலகறியச் செய்யவில்லையா என்று கேட்டாலும், சரி உலகறிந்து கண்டபலன் என்ன என்ற கேள்விக்கு பதிலேதும் உண்டா?
சரி, ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, இல்லையோ, அதன் பாதகமான அம்சங்களுக்கான பழியை அவ்வளவு இலகுவாக புலிகள்மீதும், அதன் தலைவர் பிரபாகரன்மீதும் சுமத்திவிட்டுத யாரும் இலகுவாகத் தப்பிக்கொண்டுவிட முடியுமா?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் ஆயுதமேந்துவதற்கான பின்னணியில் இருந்த “எய்தவர்களை“ வசதியாக மறந்துவிட்டு, “அம்புகளை” நோவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
சேர் பொன் இராமநாதன் காலத்திலேயே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கிடைத்த வாய்ப்புக்களைத் தவறவிட்டுவிட்டு,தமிழ்க் காங்கிரஸ் அமைத்து 50க்கு 50 என்று பேரம் பேசியும், அரசுடன் இணைந்து அமைச்சுக்களைப் பெற்றும் அரசியல் செய்து வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்னெடுத்த அரசியல் வழிமுறையையும் நிராகரித்துவிட்டு, ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்குப் போட்டியாக வாக்கு வங்கியைக் கவரும் வகையில், ஆங்கிலத்தில் Federal Party(சமஷ்டிக் கட்சி) என்று தேசியளவில் காட்டிக்கொண்டு, தமிழில் தமிழரசுக் கட்சி என்று தமிழர்களின் மனதில் தனிநாட்டுக் கனவை முதலில் வளர்த்துவிட்டு வாக்கள்ளியவர் செல்வநாயகமே.
இவரது இந்த தேர்தல் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்ட அணுகுமுறையை மேலும் விரிவாக்கி, வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி, தனிநாடுதான் ஒரே தீர்வு என்று தமிழ் இளைஞர்களின் இரத்தத்தைச் சூடேற்றி ஆயுதமேந்தத் தூண்டியவர் அமிர்தலிங்கமே.
இடையில், மாநகரசபை முதல்வராக யாழ் நகரில் அதிக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட அல்பிரட் துரையப்பா எங்கே தமக்கு அரசியல் ரீதியான போட்டியாக வளர்ந்துவிடுவாரோ என்று, பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் வழிபாடியற்றும்போது அவரைப் போட்டுத் தள்ளும்படி பிரபாகரனைத் தூண்டியவர்கள் இந்த வேட்டி அரசியல்வாதிகளே.
சாத்வீகம் தோற்றதால்தான் ஆயுதமேந்தினோம் என்கிறார்களே, சாத்வீக வழியில் அப்படி என்னதான் பெரிதாகப் போராடினார்கள்?
அப்படியே போராடியிருந்தாலும், சாத்வீக வழியில் போராடிய எந்தத தலைவர் தானே ஆயுதமேந்தினார்...?
ஆயுதமேந்திய எந்தத் தலைவர் முன்னதாக சாத்வீக வழியில் போராடியிருந்தார்....?
எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், எந்த நிலையிலும் விட்டுக்கொடாமல் சாதீவகப் போராட்டம் நடாத்திய காந்தியின் வழியில் ஒரு அங்குலமேனும் இந்த வேட்டித் தலைவர்கள் ஏதும் முயன்றிருக்கிறார்களா....?
குறுக்கு வழியில் தேர்தல் வாக்குவேட்டைக்காக தமிழரசு, தமிழீழம், ஆயுதப் போராட்டம் என்று வாய்வீரம் பேசி, இரத்தத் திலகமிட்டு இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டிய “எய்தவர்களை“ விட்டுவிட்டு, இவர்களால் தூண்டப்பட்டு ஆயுதமேந்தி அதற்கு இறுதி வரையில் உண்மயாக இருந்து தம்முயிர்களையே மாய்த்த “அம்புகளை” ஏன் நோவான்?
பிரபாகரன், சிறிசபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பாலகுமார் என்று நீண்டுசெல்லும் இந்த “அம்புகளிடம்”, தாம் சரி என்று நம்பிய ஒன்றுக்காக தம்மையே அர்ப்பணித்த நேர்மை இருந்ததல்லவா?
உண்மையான அர்த்தத்தில் பார்த்தால், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுலைக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குவேட்டைக்கான வாய்வீச்சாக அறிவிக்கப்பட்ட ஆயுதப்போராட்டக் கூச்சலால் உந்தப்பட்டு இளைஞர்கள் ஆயுதமேந்த, பிராந்தியத்தில் தலையீடு செய்த அமெரிக்காவை ஓரங்கட்ட, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் பூகோள அரசியலின் பிராந்திய நகர்வுகளுக்காக அந்த இளைஞர்களை அண்டை நாடான இந்தியா மேலும் வளர்த்துவிட்டு பயன்படுத்திக்கொண்டது என்பதே நடந்தேறியது.
இந்த ஆயுதப் போராட்டம் தவறானது என்று வாதிட்டால், அதற்கான பொறுப்பை இன்று மிதவாத வேடம் பூண்டிருக்கும் தலைவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவர்களுடன் ஒரு அங்கமாக இருந்துகொண்டு, இது ஏதோ அவர்களுக்குச் சம்பந்தமில்லாத “பெடியள்“ விட்ட தவறு என்று அவர்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தையல்லவா சுமந்திரன் செய்திருக்கிறார்?
ஆயுதப்போராட்டம் உண்மையில் தீமையாகத்தான் முடிந்தது என்ற முடிவுக்கு வந்தால், “அம்புகளை” விட்டுவிட்டு, “எய்தவர்களை” அம்பலப்படுத்தவேண்டும்.
அதைச் செய்தால், “நெஞ்சில் உரமும், நேர்மைத் திடமும் கொண்ட“ ஒரு அரசியல்வாதியாக தன்னை நிரூபிக்க இது அவருக்கு ஒரு சந்தர்ப்பம்!.
றுசாங்கன் கோடீஸ்வரனின் முகப்புத்தகப்பதிவு..
இயக்கங்கள் வெறும் அம்பு என்பது றுசாங்கனின் கருத்தாகும்.
எவ்வாறாயினும் எந்த தமிழ் இயக்கங்களும் விடுதலைப் போராளுகளுக்குரிய பண்புகளை கடைப்பிடிக்கவில்லை என்பதும் அவர்கள் வெறும் வன்செயலாளர்களாகவே செயற்பட்டார்கள் என்பதும் வரலாறு கண்ட உண்மை.
0 comments :
Post a Comment