அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி
ஊரடங்கு உத்தரவு அமுலாகும் கொழம்பு கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச-தனியார் பஸ் வண்டிகளிலும், ரயில் வண்டிகளிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க இன்று தொடக்கம் அனுமதி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிக்கையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்றார்.
அதன் காரணமாக அநாவசியமான பயணங்களைத் பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள பொது போக்குவரத்து குறித்து அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச-தனியார் ஊழியர்கள் கடமைகளுக்குத் திரும்பத் தயாராகிறார்கள். இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை சீராக்குவது பற்றி கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
இங்கு எட்டப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், கடமைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி போக்குவரத்துச் சேவைகளை நடத்த முடியும். பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்.
இன்று தொடக்கம் ரயில் பயணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களும், பருவச் சீட்டுக்களும் விநியோகிக்கப்படும். அனுமதிப் பத்திரம் பெறும் பயணிகள் தமது நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமானது. பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment