மாரடைப்புக் காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 55 வயது. சுகயீனம் காரணமாக கொழும்பு தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானதாக. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் மருதுபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர் பல முக்கிய பதவிகளையும் பொறுப்புக்களையும் வகித்து வந்தவர்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற ஆறுமுகன் தொண்டமான், 1990 ஆம் ஆண்டு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார்.
1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் மலையக மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் அயராது உழைத்து வந்தார்.
0 comments :
Post a Comment