வீடுகளிலிருந்து சமய வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்
இலங்கை இராணுவத்திற்கு உட்பட்ட புனானை, கந்தக்காடு மற்றும் டொல்பின் ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் நேற்றையதினம் வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று காலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதால் கடந்த வருடங்களைப் போன்று வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்பில்லை என தெரிவித்த இராணுவத் தளபதி வீடுகளிலிருந்து சமய வழிபாடுகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த அவர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கமைய டொல்பின் ஹோட்டலிலிருந்து 77 பேர், புனானையிலிருந்து 23 பேர், கந்தக்காட்டிலிருந்து 27 பேர் என பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 127 பேர் வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 5,188 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்த, இராணுவத் தளபதி தற்போது 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,819 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முற்பகல் வரை கடற்படையைச் சேர்ந்த 342 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடற்படையினர் அனைவரும் தங்களது முகாமிற்கு திரும்பியுள்ளதால், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் கடற்படை முகாமிற்கு வெளியிலிருந்து எந்தவொரு கடற்படையினரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment